இளவரசன் நினைவாக....

கொலையா? தற்கொலையா? தர்மபுரி இளவரசனின் கோரச் சாவு எப்படி நிகழ்ந்தது? கொலை என்றால் செய்தது யார்? தற்கொலை என்றால் தூண்டியது யார்? இந்த வினாக்களுக்குக் கூர்மையும் நேர்மையுமானதொரு புலனாய்வினால்தான் விடை காண முடியும். எனவேதான் இந்த வழக்கு நடுவண் புலனாய்வு அமைப்பிடம் (சி.பி.ஐ) ஒப்படைக்கப்பட வேண்டும் என்று இளவரசனின் பெற்றோரும் உற்றாரும் மற்றோரும் கோருகின்றனர். சமூக விருப்புவெறுப்புகள் முனைப்புடனிருக்கும் இப்போதைய சூழலில் மாநில அளவிலான புலனாய்வு அமைப்புகளால் இந்தப் பணியைச் செவ்வனே செய்ய இயலுமா? என்ற ஐயம் எழுவது இயல்பே.

தமிழக அரசின் சார்பில் முதலமைச்சர் அறிவித்துள்ள நீதி விசாரணை உண்மையை வெளிக்கொணரப் பயன்படாது. கொலையா? தற்கொலையா? என்பதையும் அதற்குக் காரணமானவர்களையும் காரணமானவற்றையும் கண்டறியப் புலனாய்வினால்தான் முடியும், நீதி விசாரணையால் முடியாது என்ற எளிய உண்மைகூட முதலமைச்சருக்குத் தெரியாமல் போனது ஏன்? அல்லது தலித் மக்களும் சனநாயக ஆற்றல்களும் இளவரசனின் சாவு குறித்துக் கொண்டுள்ள மன வெப்பம் தணியும் வரை காலங்கடத்தும் உத்தியாகத்தான் நீதி விசாரணை அறிவிக்கப்பட்டுள்ளதா?

தமிழக அரசு நீதி விசாரணை நடத்தட்டும். அந்த விசாரணை இளவரசன் சாவு குறித்து மட்டும் நடத்தப்படாமல், இளவரசன் – திவ்யாவின் காதல் திருமணம் தொடங்கி – திவ்யாவின் தந்தை நாகராசன் தற்கொலை – மூன்று தலித் குடியிருப்புகள் மீது நடத்தப்பட்ட வன்கொடுமைத் தாக்குதல் (கலவரம் அன்று) – இளவரசனிடமிருந்து திவ்யாவைப் பிரிக்க நடந்த முயற்சிகள் – உயர் நீதிமன்ற வழக்கு நீதிபதி அந்த வழக்கைக் கையாண்டவிதம் – திவ்யாவின் முரண்பட்ட வாக்குமூலங்கள் – காவல்துறையின் பங்கு – இவை அனைத்திலும் சாதி சார்ந்த வழக்குரைஞர்களின் பங்கு – இவர்களுக்குப் பின்னிருந்து இயக்கிய சாதிச் சங்கங்கள், சாதிக்கட்சிகள் – இளவரசனின் சாவுக்கு இட்டுச் சென்ற காரணிகள் - என்று எல்லாவற்றைப் பற்றியும் முழுமையாகவும் விரிவாகவும், ஆனால் விரைவாகக் குறிப்பிட்ட கால வரம்புக்குள் விசாரிக்கட்டும். காதல் திருமணங்களையும், சாதி மறுப்புத் திருமணங்களையும் பாதுகாப்பதற்கான வழிமுறைகளைப் பரிந்துரைக்கட்டும். அப்படியொரு நீதி விசாரணைக்கு அரசு ஆணையிட்டால் வரவேற்போம்.

இளம்பெண் திவ்யா தந்தையை இழந்து, காதல்-கணவனையும் இழந்து தவிக்கும் பெருந்துயரத்துக்கான பழி காதலை எதிர்க்கும் சாதி வெறியையே சாரும். சாதிமீறிக் காதலித்த குற்றத்துக்காக உயிர்கள் பலியிடப்படுவது இந்த நாட்டில் புதிய செய்தியன்று. ஆனால் சாதி வெறியோடு சாதி சார்ந்த அரசியல் பதவி வெறியும் சேர்ந்து திவ்யா – இளவரசன் காதலுக்குப் பகையாக முளைத்து விட்டதுதான் இவ்வளவு கொடிய முடிவு ஏற்படக் காரணமாகி விட்டது.

     தலித் இளைஞன் வன்னியப் பெண்ணைக் காதலித்து மணப்பதை நாடகத் திருமணம் என்று கொச்சைப்படுத்திய பா.ம.க நிறுவனர் மருத்துவர் இராமதாசின் மேடை வசனத்தை இளவரசனின் உயிர்ப்பலி பொய்ப்பித்துக் காட்டி விட்டது. வன்னியப் பெண்ணைக் காதலித்து மணக்கும் தலித்தின் கையை வெட்டச் சொன்ன காடுவெட்டி (கை வெட்டி, கால் வெட்டி., தலை வெட்டி?) குருவின் வன்முறைப் பேச்சுதான் இளவரசனின் உயிரைப் பறிக்க உந்துதலாயிற்று எனலாம். இராமதாசு வகையறாக்கள் இப்போதாவது வருந்தட்டும், வருந்தித் திருந்தட்டும். இல்லையேல் தமிழக அரசியலில் தலையெடுக்க முடியாதபடி இவர்கள் தனிமைப்படுத்தப்படுவார்கள். இவர்கள் அணிசேர்க்கத் துடிக்கும் தலித்தல்லாத பிற சாதியினர் மட்டுமல்ல, இவர்களின் சொந்தபந்த வன்னிய மக்களே இவர்களைப் புறக்கணிக்கும் நிலை வரத்தான் போகிறது.

     காதல் திருமணங்களுக்கும், சாதி மறுப்புத் திருமணங்களுக்கும் ஆதரவும் பாதுகாப்பும் ஊக்கமும் தரும் கொள்கையை இந்திய அரசும் தமிழக அரசும் வெளிப்படையாக அறிவித்துச் செயலாக்க வேண்டும். சனநாயக, சமூகநீதி ஆற்றல்களும் காதல் திருமணங்களையும் காதல் இணையரையும் சாதி வெறி வன்செயலர்களிடமிருந்து பாதுகாப்பதை ஒரு செயல்திட்டமாகவே கொண்டு இயங்க வேண்டும். வருண–சாதியமைப்பைக் கட்டிக்காக்கும் இறுதிப் பண்பாட்டு அரண் சொந்த சாதிக்குள் மணம் புரிந்து கொள்ளும் அகமண முறையே என்று அம்பேத்கர் கூறியதை நினைவிற்கொண்டு, சாதியொழிப்பில் காதலுக்கும் சாதிமறுப்புத் திருமணங்களுக்கும் உள்ள பெரும்பங்கினை உள்வாங்கி, இவற்றைக் காக்கவும் வளர்க்கவும் தமிழ்த் தேசியச் சமூகநீதி ஆற்றல்கள் தனிக் கவனம் செலுத்த வேண்டும்.

     முழுச் சிக்கலையும் தலித்துகளுக்கும் தலித்தல்லாதாருக்கும் இடையிலான வன்மோதலாகவும், தலித்தல்லாதார் அனைவரையும் தலித்துகளின் பகைவர்களாகவும் சித்திரிப்பது தலித்துகளைத் தனிமைப்படுத்தும் சாதி வெறியர்களின் சதித் திட்டத்துக்கே துணை புரியும். தலித்தியம் என்பதன் சாரம் சாதியொழிப்பே தவிர பிற சாதியினரை ஒழிப்பதன்று. தலித்துகள் தலித்தல்லாத சமூகநீதி, சனநாயக ஆற்றல்களோடு கொள்கையடிப்படையில் ஒன்றுபடுவதே சாதிவெறியர்களைத் தனிமைப்படுத்தப் பயன்படும் என்பதை உணர்ச்சிவயப்பட்ட நிலையிலும்கூட மறவாமலிருப்பதே நன்று.

     பண்பாட்டுத் தளத்தில் காதலும் சாதி மறுப்புத் திருமணமும் செழித்து வளர வேண்டுமானால் பொருளியல் தளத்திலும் அரசியல் களத்திலும் அடைய வேண்டிய மாற்றங்களை மறந்து விடலாகாது. இந்த மாற்றங்களைத் தலித்துகள் மட்டும் தனித்துச் சாதித்து விட இயலாது என்பது எளிதில் விளங்கும். சேரக் கூடாதவர்களுடன் சேருவது அறிவீனம். சேர வேண்டியவர்களுடன் சேராமலிருப்பது பலவீனம்.

     காதல் என்பது தமிழர் வாழ்வியல் கூறுகளில் ஒன்று. காதலைப் போற்றாத தமிழ்த் தேசியம் தமிழ்த் தேசியமே அன்று. அன்பின் வழியது உயிர்நிலை. ஆண் – பெண் அன்பின் ஆக்க வடிவமே காதல். காதலால் தமிழ் வளர்ப்போம். தமிழால் காதல் வளர்ப்போம். சாதி கொன்ற காதல் உயிர்த்தெழும்.

     அது சாதியைக் கொன்று இளவரசன்களுக்கும் திவ்யாக்களுக்கும் நீதி செய்யும்.

- தியாகு, பொதுச் செயலாளர், தமிழ்த் தேசிய விடுதலை இயக்கம்.

Comments

4 comments

4
Sudalaimanian
தமிழ் தேசியம் பேசும் தயாகு அவர்கள், அனைத்து சாதிகளும் தங்களுக்குள் வேற்றுமைப் பாராட்டாமல் ஒற்றுமையாக ஓரணி நின்று தமிழராய் போராட வேண்டும் என ஆசைப்படுகிறார் என்பது தெரிகின்றது. சாதிகளுக்குள்ளான ஒற்றுமையை ஏற்படுத்துவதற்கு என்ன செயல் திட்டம் வைத்துள்ளார் என்றுதான் தெரியவில்லை. இதற்காக ஏதாவது சாமிக்கு வேண்டுதலை செய்ய வேண்டுமா அல்லது ஏதாவது யாகம் செய்ய வேண்டுமா? கூறினால் நங்களும் கலந்து கொள்ள தயாராக உள்ளோம். அனைத்து சாதியினரும் பறையர் சாதியினரை 2000 ஆண்டுகாலமாக கீழ் சாதியாக இருப்பதாக உளப் பூரிப்புடன் நம்புகின்றீர்கள். ஆனால் பறையர் இனத்தவர் ஆரம்ப காலங்களில் மேல் சாதியாக இருந்தனர் என்பதற்கான ஆதாரங்களுடன் எழுதினால் தங்களைப் போன்ற மார்க்சிய அறிஜர்கள் சாதியப் பெருமிதம் பேசுவது தவறு என அரிவுரை கூறுகின்றீர்கள். ஒரு பிற்படுத்தப்பட்ட சாதிப் பையன் ஒரு பிற்படுத்தபபட்ட சாதி பெண்ணை காதலித்து மனம் புரிந்தால் இவ்வளவு தகறாறு நடந்திருகாது அல்லவா. முதலில் தாழ்தப்பட்ட சாதியினரின் சாதிய பெருமிதங்களை அங்கீகரித்து பிற சாதியாரும் ஏற்றுக் கொள்ள முயற்ச்சி செய்யுங்கள். அவர்களின் உண்மையான சாதிய பெருமிதங்களை ஏற்றுக்கொள்ள மறுக்கும் மார்க்சிஸ்டுகளின் செயலும் ஒருவகையான சாதி வெறியே.
ilayaraja
அய்யா தியாகு அவர்களே, அரசியலுக்கு நீங்க வழிகாட்டுங்க, இளைங்கர்களுக்கு நீங்கள் வாழ்கைகோ,காதலுக்கோ வழிகாட்டியாக இருக்காதிங்க.
Sudalaimanian
சாதிய இழிவுகளைத் தாங்கிக்கொண்டு, தோழர் தியாகு அவர்களின் வழிநடத்தலை ஏற்று தமிழ்த் தேசியத்திற்காக போராட வேண்டுமா இளையராஜா அவர்களே. தியாகு அவர்களின் தமிழ் தேசிய அரசியல் தங்களுக்கு ஏற்றதாக இருக்கலாம். எங்களை முதலில் மனிதனாக வாழ அனுமதியுங்கள். பின்னர் நாங்கள் தமிழராவதா ? அல்லது இந்தியனாவதா ? என்பதை முடிவு செய்து கொள்கிறோம்.
Raghava Raj
ஐயா தியாகு அவரது விருப்பத்தை சொல்கிறார்;அது மிகவும் நல்ல விருப்பம் தான்;ஆனால் அதை எப்படி அடைவது? அதற்கொரு செயல்திட்டம் தேவையல்லவா ? அதைத் தான் ஐயா சுடலைமணியன் வினவுகிறார்.தாழ்த்தப்பட்டோர் அல்லது ஒடுக்கப்பட்டோர் எந்த வார்த்தையை பயன்படுத்தினாலும் சரி,பறையர் சாதிசமூகத்தினர் இரண்டாயிரம் ஆண்டுகாலமாக இப்போது போல ஒடுக்கப்பட்ட நிலையில் தான் இருந்தார்களா ? அல்லது அவர்கள் ஒரு காலகட்டத்தில் மேல்சாதியாக அல்லது ஒடுக்கப்பட்ட சாதியாக அல்லாமல் இருந்தார்களா ? இவ்வாறு அவர்கள் ஒடுக்கப்பட்ட சாதியினராக அல்லாமல் அல்லது மேல் சாதியினராக இருந்தார்கள் என்று யாராவது கல்வெட்டு,இலக்கிய,வரலாற்று சான்றுகள் ஏதாவது முன்வைத்தால் மற்றவர்கள்,(நடுநிலையாள்ர்கள்,மார்க்ஸிஸ்ட்கள் என்றெல்லாம் சொல்லிக்கொள்வோர்) அவற்றை பரிசீலிக்க வேண்டுமல்லவா ? இல்லை....வேண்டாமா ? பறையர் சாதிசமூகத்தினர் இப்போதைய காலகட்டத்தில் ஒடுக்கப்பட்ட சமூகத்தினராகத் தான் இருக்கின்றனர்; அதற்காக ஈராயிரம் ஆண்டுகாலமாக அவர்கள் இதே நிலைமையில் தான் இருந்தார்கள் என்று பல்வேறு ஆதாரங்களுக்கும் எதிராக மீண்டும் மீண்டும் கூறிக்கொண்டிருப்பது எப்படி சரியாகும் ? முன்வைக்கப்படும் கல்வெட்டு,இலக்கிய,வரலாற்று சான்றுகளை பரிசீலிக்க வேண்டாமா ?.....பரிசீலிக்க கூடாதா ? நான் சொல்லவருவது வேறொன்றுமில்லை; வரலாறு (தெரிந்த வரலாறு தான் ) முழுமையாக முன்வைக்கப்படட்டும்;அதிலிருந்து வருங்காலத்தை உருவாக்க முயற்சிப்போம் !

Leave a comment

Fields marked with * are required.

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.