எதிர்காலம் குறித்து நம்பிக்கையூட்டும் மாணவர் போராட்டங்கள் தமிழக அரசியலில் ஆளுமை செலுத்திய இரண்டு மாதங்கள் கழித்து திரும்பவும் சாதி வெறியர்கள் அரசியல் மையத்தைக் கைப்பற்றியுள்ளனர். பாமக-வின் அப்பட்டமான சாதி வெறி, காதல் எதிர்ப்பு, காதலர் கொலை ஆகியவற்றைக் கண்டு தமிழ்நாடே திகைத்துக் கிடக்கிறது. இப்படியெல்லாம் கூட ஒரு அரசியல் கட்சி பேசவும், நடக்கவும் முடியுமா என அனைவரும் அதிர்ச்சியடைந்துள்ளனர். இக்கட்டுரை 'மக்கள் தலித் இயக்கங்களும் - ஃபோர்டு பவுண்டேசன் தலித் இயக்கங்களும்' என்ற எனது கட்டுரையின் தொடர்ச்சியாக பாட்டாளி மக்கள் கட்சியின் தோற்றம், வளர்ச்சி, நோக்கம், பின்னிருந்து இயக்கிய சக்திகள் குறித்து எழுதப்பட்டுள்ளது.

இரண்டு மாதங்களுக்கு முன்பு தமிழ்நாடெங்கும் - குறிப்பாக சென்னையில் பா.ம.கவின் சாதி வெறிக்கு எதிராக பரவலாக கண்டனக் கூட்டங்கள் நடந்தது நினைவிருக்கும். இப்படியான பல கூட்டங்களிலும், ஊடக நிகழ்வுகளிலும் அ.மார்க்ஸ், இரவிக்குமார் போன்றவர்களும் மேடையேறினர்; பா.ம.க-வின் செயலைக் கண்டு நிலைகுலைந்து போய்விட்டதாக நடித்தனர்; கோபமடைவதாக காட்டிக் கொண்டனர்.

anbumani_ramadoss_gkmani_guru

இதே பின்நவீனத்துவ கும்பல்தான் 20 ஆண்டுகளுக்கு முன்பு பாமகவை வளர்த்து விட்டவர்கள்; அதற்கு முற்போக்கு முகமூடியை அணிவித்து தோள்களில் சுமந்து திரிந்தவர்கள்.

‘ஒடுக்கப்பட்ட மக்களே ஒன்று சேருங்கள்’ என்ற முழக்கத்தோடு 1989 பாதியில் தோன்றிய பாமக-வை நாடு உடனடியாக நம்பவில்லையாம். துடிதுடித்து போய்விட்டனர் பின்நவீனத்துவவாதிகள். தீண்டாமைக் கொடுமை எதிர்ப்பு, பிற்படுத்தப்பட்ட மக்களிடம் உயர்சாதி உணர்வு எதிர்ப்பு, தலித் முதல்வர் என பாமக புரட்சிகர பாதையைக் கண்டுபிடித்து விட்டது என்று பின்நவீனத்துவவாதிகள் நாடெங்கும் தண்டோரா போட்டனர். இதுகுறித்து விரிவாகவும், ஆதாரங்களோடும் புதிய சனநாயக வெளியீடான “சாதி- ஆதிக்க அரசியலும், அடையாள அரசியலும்” என்ற நூலில் கூறப்பட்டுள்ளது. பு.ச - வை பிடிக்காதவர்கள் 15.11.91ல் வெளிவந்த - அ.மார்க்ஸ் & இரவிக்குமார் கும்பலின் - நிறப்பிரிகை 4வது இதழைப் பார்த்துக் கொள்ளலாம். இந்த இதழில் வெளிவந்த ராமதாஸின் பேட்டியையும் கேள்விகளையும் பார்த்தாலே பா.ம.க.வை வளர்த்தெடுக்க இவர்கள் காட்டிய அக்கறை புரியும். நிறப்பிரிகையில் வெளிவந்த ஒரே தமிழக அரசியல் கட்சித் தலைவரின் பேட்டி இதுதான். பா.ம.கவின் சிந்தனையாளர் குழுவில் கல்யாணி, பழமலை, கருணா மனோகரன் போன்ற பின்நவீனத்துவ ஆதரவாளர்கள் இடம் பெற்றிருந்தனர். இந்தக் கூட்டணிதான் பா.ம.கவை தமிழகமெங்கும் கொண்டு சென்றது.

'கம்யூனிஸ்டுகளால் சாதியை ஒழிக்க முடியாது; கம்யூனிஸ்டு மட்டுமல்ல, யாராலும் சாதியை ஒழிக்க முடியாது' என அடையாள அரசியல் பேசிய அ.மார்க்ஸ் வகையறாக்கள்தான் 'பாமக சாதியை ஒழிக்கும்' என ஊரெங்கும் பேசினார்கள்.

இன்று இதே கோஷ்டிகள்தான் கம்யூனிஸ்டுகளின் மேடைகளில் ஏறி பாமக-வை வசைபாடுகிறனர். பாமக-வை மக்களிடம் கொண்டு சேர்த்ததில் தங்களுக்கிருந்த பங்கு குறித்தோ, அதன் தவறுகள் குறித்தோ எந்த சுயவிமர்சனமும் இவர்களிடமில்லை; துளியளவு குற்ற உணர்வுமில்லை.

இப்போது நமக்கு முன் இரண்டு கேள்விகள் எழுகின்றன.

1.            பாமக முதலில் சரியாக இருந்து இப்பொழுதுதான் சீரழிந்துவிட்டதா?

2.            பாமகவை மதிப்பிடுவதில் நமது அல்ட்ரா அறிவுஜீவிகள் தவறிழைத்து விட்டார்களா?

3.            இரண்டுக்கும் இல்லை என்பதே பதில் என்னும் பட்சத்தில் எதற்காக இப்படி ஒரு கட்சி வட தமிழகத்தில் உருவானது? இதனால் பலனடைந்தவர்கள் யார்?

பாமக கறந்த பாலல்ல. அது மக்களின் நலனிலிருந்து தோன்றிய கட்சியுமல்ல. அதேபோல், அயோக்கியனை அடையாளம் காண முடியாத அளவுக்கு பின்நவீனத்துவவாதிகள் அப்பாவிகளுமல்ல. அவர்கள்தான் மார்க்சியத்துக்கே மாற்று கண்டுபிடித்தவர்களாயிற்றே!

‘ஒடுக்கப்பட்ட மக்களே ஒன்று சேருங்கள்’ எனக் கூச்சலிட்ட பாமக ஒடுக்கப்பட்ட அனைத்து மக்களுக்காகவோ, வன்னிய மக்களுக்காகவோ கூட எப்போதும் உருப்படியாய் எதுவும் செய்ததில்லை.

•             நெய்வேலி நிலக்கரி சுரங்கங்களுக்கு நிலத்தைக் கொடுத்துவிட்டு இன்றுவரை முறையான இழப்பீடு இல்லாமல் தவிக்கும் மக்கள்

•             வீரப்பன் விவகாரத்தில் சின்னா பின்னமாக்கப்பட்டவர்கள், கொல்லப்பட்டவர்கள், பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டவர்கள்

•             பிழைப்பு தேடி பெங்களூருக்கும், மும்பைக்கும் சென்று கொத்தடிமைகளானவர்கள்.

•             சுமங்கலி திட்டம் என்ற பெயரில் இன்றைக்கு கோவை திருப்பூர் மில்களில் கொத்தடிமைகளாக உள்ள சிறுமிகள்.

•             வீரப்பன் விவகாரத்தில் தற்போது தூக்கு கயிறுக்கு அருகிலிருக்கும் நான்கு பேர்

•             கொச்சி முதல் பெங்களூரு வரையிலான எரிவாயு குழாய் பதிப்பில் பாதிப்படையும் விவசாயிகள்

•             சென்னை உட்பட வடமாவட்டங்கள் அனைத்திலும், பன்னாட்டு நிறுவனங்களிடமும், அமைச்சர்கள் - அதிகாரிகளிடமும் நிலத்தை பறிகொடுக்கும் மக்கள்.

இவர்களில் பெரும்பாலானோர் வன்னியர்கள். இம் மக்களின் வாழ்வாதாரப் பிரச்சினைகளான மேற்கூறப்பட்டவைகளுக்காக ஒரு கோடி வன்னியர் கூட்டத்தை பாமக எப்போதும் நடத்தியதில்லை; ஒரு துரும்பைக் கூடக் கிள்ளிப் போட்டதில்லை. சாதிமறுப்புத் திருமணங்களுக்கு எதிராக அது தற்போது எடுத்திருக்கும் ‘விஸ்வரூபத்’தைப் பாருங்கள் - இந்தக் கட்சியின் நோக்கம் உழைக்கும் வன்னிய மக்களுக்காகப் போராடுவது அல்ல என்பது தெளிவாகப் புரியும்.

பாமக ஆரம்பத்திலும் சரியானதாக இருக்கவில்லை. இப்போதும் அது சரியானதற்காக இயங்கவில்லை.

அப்படியெனில் ஏற்கனவே மக்கள் யுத்தக் கட்சியும், இரண்டு பொதுவுடமைக் கட்சிகளும் வலிமையாக இருந்த வடதமிழகத்தில் ஜாதி வெறியர்களுக்கு முற்போக்கு முகமூடியிட்டு ஏன் பின்நவீனத்துவ வாதிகள் ஆதரிக்க வேண்டும்?

பாமகவை ஆதரிக்க பின்நவீனத்துவவாதிகள் செய்த தகிடுதத்தங்களைப் பார்ப்போம்.

•             தலித் இளைஞர்களை நக்சல்பாரி உட்பட அனைத்து கம்யூனிஸ்ட் கட்சிகளில் இருந்தும் வெளியேறச் சொன்னவர்கள் பின்நவீனத்துவவாதிகள். ‘ஒடுக்கப்பட்ட மக்கள் அனைவருக்கும் ஒரே கட்சி என்பது தவறு’ என வாதிட்டவர்கள் இவர்கள். ‘சாதி என்பது சமூக அடையாளம், எனவே தலித்துகளுக்கு தனி அமைப்பு வேண்டும்’ என்று கூறி தலித்தியத்தை வளர்த்து விட்டவர்கள் இவர்கள். பிறகெப்படி தலித்துகளும், பிற்படுத்தப்பட்டவர்களும் ஒடுக்கப்பட்டவர்களும் ஒரே பிரிவினர் என ஒத்துக்கொண்டார்கள்? ‘ஒடுக்கப்பட்ட மக்களே ஒன்று சேருங்கள்’ எனக் கூச்சலிட்டார்கள்?

•             நக்சல்பாரி இயக்கங்கள் உட்பட அனைத்து கம்யூனிஸ்ட் கட்சிகளைக் காட்டிலும் பாமக அனைத்து மக்களையும் ஒருங்கிணைக்கும் என்பதற்கு கொள்கை விளக்கம் ஏதாவது இவர்களிடம் இருந்ததுண்டா?

இவைகளுக்கு எந்தவகையிலும் நாம் நேரடியான பதிலைப் பெறமுடியாது. ஆனால் அன்றைய காலகட்டத்தில் வட தமிழ்நாட்டின் சமூக மற்றும் அரசியல் சூழலை உணர்ந்து கொண்டால் இதற்கான பதிலை அடைந்துவிடமுடியும்.

வட தமிழகத்தின் தாது வளங்களும் அரசியல் சூழலும்

1.            இப்பகுதிகள் எங்கும் இயற்கை வளங்கள் நிறைந்து கிடக்கின்றன. நெய்வேலி, ஜெயங்கொண்டம் என அள்ள அள்ளக் குறையாத நிலக்கரி செல்வம்; விலை உயர்ந்த கற்களை கொண்ட மலைகள்; மலையோடு கூடிய வளமிக்க காடுகள்; சேலத்தையொட்டி விரியும் இரும்புத்தாது வளம்; ஆறும்.ஏரிகளுமான நீராதாரம்; இதையொட்டிய ஆற்றுமணல் வளம் என உள்நாட்டு முதலைகள் முதல் பன்னாட்டு முதலைகள் வரை கொள்ளையடிப்பதற்கான வளங்கள் குவிந்த பகுதி வடதமிழ்நாடு. கூடவே குறைந்த கூலிக்கு அதிக உழைப்பைக் கொடுக்கும் நிலையில் உள்ள எளிய மக்களாகிய மனித வளம்.

2.            சாதி சமூகமான தமிழ்நாட்டில் மிகப் பெரும்பான்மை மக்களான ஆதிதிராவிடர்களும், வன்னியரும் தொடர்ச்சியாக வாழும் நிலப்பரப்பு வட தமிழ்நாடு. இரு சமூகங்களும் மேல்-கீழ் சாதிகளாக அறியப்பட்டாலும் மேல்சாதி எனக் கூறிக் கொள்ளும் வன்னியரில் பெரும்பாலானோர் ஏழைகளே. ஆகவே வர்க்க அடிப்படையில் எளிதாக ஒன்றுகூடும் வாய்ப்புடைய மக்களைக் கொண்ட, புரட்சித் தீயை பற்றவைத்து பரவச் செய்யும் வாய்ப்புடைய பகுதி வடதமிழ்நாடு.

3.            ஆகவே இங்கு மனித குலத்தின் விடுதலைக்கான தத்துவமான கம்யூனிசமும், கம்யூனிஸ்ட் கட்சியுமே செல்வாக்கு செலுத்தியது. தமிழ்நாட்டின் பிற பகுதிகளில் வளர்ந்த தி.க. –தி.மு.க உட்பட திராவிட இயக்கங்கள் கூட வட தமிழ்நாட்டில் செல்வாக்கு பெறவில்லை.

4.            1957 வரை கம்யூனிஸ்ட் கட்சி(CPI) தமிழக சட்டசபையில் எதிர்க்கட்சியாக விளங்க வட தமிழ்நாடு தான் காரணம். கம்யூனிஸ்ட் கட்சியானது பலவாறாக பிரிந்துவிட்ட இன்றைய நிலையிலும் தேர்தலில் போட்டியிடும் CPI, CPM கட்சிகளுக்கு வட தமிழ்நாடு பலமான பகுதியாக உள்ளது.

5.            1967ல் வசந்தத்தின் இடி முழக்கமென தோன்றிய நக்சல்பாரி இயக்கமும், இங்கே செல்வாக்கோடு வளர்ந்தது. 1980 வரை இயக்கத்தின் செல்வாக்கு குறிப்பாக மக்கள் யுத்தக் கட்சியின் செல்வாக்கு அளவிட முடியாதது. இந்தக் காலகட்டத்தில் மக்கள் யுத்தக் கட்சியின் தலைமையில் நிலப்பிரபுக்கள், கந்துவட்டிக் காரர்கள் உள்ளிட்ட அனைத்து சுரண்டல்காரர்களையும் மக்கள் எதிர்த்துப் போராடி குறிப்பிடத்தக்க வெற்றிகளை ஈட்டினர். தோழர் பாலன் தலைமையில் வன்னிய இளைஞர்கள் இரட்டைக் குவளைகள் இருந்த தேநீர்க் கடைகளை உடைத்து நொறுக்கினர். உறவினர்களாகவும், நண்பர்களாகவும், அண்டை வீட்டார்களாகவும் இருந்த மக்கள் விரோதிகளை அழித்தொழிப்பதில் புரட்சிகர இயக்கத்தில் இணைந்து கொண்ட வன்னிய இளைஞர்கள், தாழ்த்தப்பட்ட மக்களோடு இணைந்து நின்றனர். அந்த வீரஞ்செறிந்த இளைஞர்களை சாதிப்பெயர் கொண்டு குறிப்பிடுவது மாபெரும் குற்றம் என்றாலும் இன்றுள்ள நிலைமைகளின் காரணமாக இதைச் செய்ய வேண்டியுள்ளது. முப்பது ஆண்டுகளுக்குப் பிறகு இன்று நாயக்கன் கொட்டாய் அருகிலுள்ள ஒரு கிராமத்தில் சாதிமறுப்புத் திருமணம் செய்து கொண்ட பத்து தம்பதியர் இருக்கின்றனர் என்றால் இந்த வீரஞ்செறிந்த போராட்டங்களும் ஒரு காரணம்.

6.            புரட்சி இயக்கத்தின் வளர்ச்சியைக் கண்டு நடுங்கித்தான் அன்றைய முதல்வர் எம்.ஜி.ஆர், தேவாரம் என்ற போலீஸ் மிருகத்தை கட்டவிழ்த்து விட்டார். பாலன், கண்ணாமணி என 50க்கும் மேற்பட்ட தோழர்கள் கொல்லப்பட்டனர். 1980களில் வட தமிழ்நாடெங்கும் காவல் துறை சாம்ராஜ்யம் நடைபெற்றது. இணைந்து போராடியது போலவே அடக்குமுறைகளையும் சித்திரவதைகளையும் ஆதிதிராவிட மக்களும், வன்னிய மக்களும் இணைந்தே எதிர் கொண்டனர்.

7.            அத்தனை அடக்குமுறைகளையும் தகர்த்தெறிந்துவிட்டு இயக்கம் 1983-84களில் புதுப்பாய்ச்சலை அடைந்தது. இருந்த போதிலும் தொடர்ச்சியான பிளவுகள் மக்கள் இயக்கத்தைச் சிதறடித்தன. முதலில் மக்கள் யுத்தக்குழுவிலிருந்து தோழர் தமிழரசன் வெளியேறி தமிழ்நாடு பொதுவுடைமைக் கட்சி (தமிழ்நாடு விடுதலைப்படை)யை உருவாக்கினார். பின்பு இயக்கம் திரும்பவும் பிளவுண்டு மக்கள் யுத்தக்குழு(போல்சுவிக்) தோன்றியது.

a_marx_310ஆளும் வர்க்கங்கள் தாங்கள் நக்ஸலைட்டுகளை அடக்க, பட்ட பாட்டிலிருந்து பல பாடங்களைக் கற்றுக் கொண்டன. அவை நக்ஸல்பாரிப் புரட்சியாளர்களை மட்டுமல்லாமல் சி.பி.ஐ, சி.பி.எம் போன்ற ஆயுதப் போராட்டத்தைக் கையிலெடுக்காத பொதுவுடமைக் கட்சிகளையும் எதிரியாகவே பார்த்தன. இக்கட்சிகளின் வலிமையான தொழிற்சங்கங்கள், அர்ப்பணிப்புள்ள தோழர்கள் காரணமாக இயற்கை வளங்களையும் மக்களையும் சுரண்ட இடையூறாக இருந்த இந்தக் கட்சிகளும் ஒழித்துக் கட்டப்பட வேண்டிய தொல்லை என்றே ஆளும் வர்க்கங்கள் கருதின. இன்றும் மணல் கொள்ளைகளுக்கும் காவல்துறை பாலியல் பலாத்காரங்களுக்கும் எதிராக முன்னிற்பவர்கள் இந்த இரண்டு கட்சிகளையும் சேர்ந்த தோழர்கள்தான். தவிர நக்ஸலைட்டுகள் எங்கிருந்து வந்தார்கள் என்பதை இருதரப்பினரும் (நக்ஸலைட்டுகளும் சிபிஎம்மும்) ஒப்புக் கொள்ள மறுத்தாலும் ஆளும் வர்க்கங்கள் மறக்கவில்லை.

எனவே எல்லாப் பிரிவுகளையும் சேர்ந்த கம்யூனிஸ்டுகளை வட தமிழகத்திலிருந்து ஒழித்துக் கட்டும் நடவடிக்கையின் இரண்டாவது பாகம் தான் பா.ம. க. மூன்றாவது பாகம் விடுதலைச் சிறுத்தைகள். இதற்கான அரசியல் தத்துவார்த்த அடிப்படையை வழங்கியவர்கள் பின்நவீனத்துவவாதிகள்.

கம்யூனிச எதிர்ப்பு அரசியல் நடவடிக்கை

வட தமிழகத்து மக்களை சாதிரீதியாக பிளவு படுத்துவதுதான் கம்யூனிச அபாயம் திரும்பவும் தலைதூக்காமல் செய்யும் வழி என்பதை ஆளும் வர்க்கங்கள் புரிந்து கொண்டதற்கு அடையாளம்தான் பின்நவீனத்துவ வாதிகள் பாமகவுக்கு கொடுத்த ஆதரவு.

தனி இட ஒதுக்கீடு கேட்டு வன்னியர் சங்கம் நடத்திய போராட்டம், வன்னியர்களை கம்யூனிஸ்டுகளின் செல்வாக்கிலிருந்து பிரிக்க சரியான வழியை ஆளும் வர்க்கங்களுக்குக் காட்டியது. வன்னியர் சங்கம் பாமகவாக மாறியது. அதற்கு முற்போக்கு முகமூடி அணிவிக்கப்பட்டது.

பின்னவீனத்துவ வாதிகளின் வழிகாட்டலில் ‘நானும் ஒரு நக்ஸலைட்தான்’ என்று ராமதாஸ் தொடர் கட்டுரை எழுதினார். தலித் விடுதலைக்காகவே பிறந்து வந்தது போலக் காட்டிக் கொண்டார். பா.ம.க ஆட்சியைப் பிடித்தால் தலித்துதான் அடுத்த முதல்வர் என்று முழங்கினார். தலித் எழில்மலைக்கு மத்திய அமைச்சர் பதவி வழங்கினார். வட தமிழ்நாட்டின் பொதுவுடமைப் பாரம்பரியத்திற்கு எதிராகப் போனால், தான் குப்பைக் கூடைக்குள் வீசப்படக்கூடிய ஆபத்து உள்ளது என்பதை அவர் நன்கு உணர்ந்திருந்தார் என்பதை இந்த வீர வசனங்கள் காட்டுகின்றன. இல்லாவிட்டாலும் கற்றுத் தர பின்னவீனத்துவ வாதிகள் இருக்கிறார்கள் அல்லவா?

வன்னிய மக்களில் ஒரு சின்னஞ்சிறிய பிரிவு நடுத்தர வர்க்க மக்களின் பிரதிநிதியாக இருந்த டாக்டர் ‘ஐயா’ இவ்வாறு ‘கோடிக்கணக்கான’ வன்னிய மக்களின் ‘குலதெய்வ’மாக்கப்பட்டு விட்டார்.

நக்சல் வேட்டை என்று வெளிப்படையாக அரசு நடத்திய படுகொலைகள் குறித்து அனைவரும் அறிந்துள்ளோம். ஆனால் கம்யூனிச எதிர்ப்பு நடவடிக்கை என்பது வெறும் மனித வேட்டை மட்டுமல்ல, அது தத்துவ அரசியல் அமைப்பு பணி என்பதையும் உள்ளடக்கியது. அதனை அரசு தீவிரமாக செய்து வந்தது என்பதே நாம் இன்றுவரை கவனத்தில் கொள்ளாத விசயமாகும்.

கம்யூனிச எதிர்ப்பு தத்துவ – அரசியல் பணியில் இந்திய அமெரிக்கக் கூட்டும், அதில் ஃபோர்டு பவுண்டேசனின் பாத்திரமும், இவ்வாறான அரசின் நடவடிக்கைகளுக்கு அடியாள் சேவகம் புரிந்த இந்திய அளவிலான குள்ளநரிகளின் பட்டியலும் நாம், நமது முந்தைய கட்டுரையான “மக்கள் தலித் இயக்கங்களும்-ஃபோர்டு பவுண்டேசன் தலித் இயக்கங்களும்” என்ற கட்டுரையில் விளக்கியிருந்தோம். இப்படி அரசின் அடியாள் படைகளில் ஒரு பிரிவு தான் அ.மார்க்ஸ் குழு என்பதையும் உணர்த்தியிருந்தோம்.

இந்த அ.மார்க்ஸ் குழுவினர்தான் தமிழ்நாட்டில் குறிப்பாக வட தமிழ்நாட்டில் நக்சல்பாரி இயக்கங்களை ஒழிப்பதற்கான அரசின் அடியாள் பணியில் அரசியல் நடவடிக்கைகளை மேற்கொண்டவர்கள். முதலில் இவர்கள் வர்க்கப் போராட்டம், வர்க்க ஒற்றுமை, வர்க்க அரசியல் ஆகியவற்றின் மீது அவநம்பிக்கையை விதைத்தார்கள். சாதிகளுக்கிடையில் இணக்கம் சாத்தியமில்லை என்று கூச்சலிட்டனர். சாதி என்கிற அடையாளத்தைப் பாதுகாத்தனர். சாதி அடையாள அரசியலைத் திணித்தனர். நக்சல்பாரி அமைப்புகள் கட்டி வைத்திருந்த மக்கள் ஒற்றுமையை சீர்குலைத்தனர். அடையாள அரசியலின் கீழ் மக்களே பிளவுபடுங்கள் என மூலைக்கு மூலை முழங்கினர்.

அதன் தொடர்ச்சியாக நக்சல்பாரி இயக்கங்களில் அணிதிரண்டு வந்த வன்னிய மக்களை திசை திருப்ப பாட்டாளி மக்கள் கட்சியைப் பயன்படுத்தினர். தாழ்த்தப்பட்ட மக்களை திசைதிருப்ப இவர்களுக்கு அம்பேத்கர் எனும் அடையாளம் தேவைப்பட்டது. அது போலவே வன்னிய உழைக்கும் மக்களை – நீண்ட கால கம்யூனிச பாரம்பரியமுடையவர்களை திசை திருப்ப காரல்மார்க்சும், கூடவே பெரியாரும் தேவைப்பட்டனர்.

அதே நேரத்தில் இரண்டு மக்கள் பிரிவினரிடையிலும் நேரெதிரான இரண்டு அரசியல் முழக்கங்களை முன்வைத்தனர். தாழ்த்தப்பட்ட மக்களிடம் “அடையாள அரசியலின் கீழ் மக்களே பிளவுபடுங்கள்” என முழங்கினர். வன்னிய மக்களிடம் “ஒடுக்கப்பட்ட மக்களே ஒன்று சேருங்கள்” எனப் பசப்பினர்.

அப்பட்டமான இந்த அரசியல் அயோக்கியத்தனத்தைத்தான் இன்றுவரை இயக்கங்கள் புரிந்து கொள்ளவில்லை. தங்களுக்கு எதிராக திட்டமிடப்பட்டு பாமக வளர்த்து விடப்படுகிறது என்று புரியாத இயக்கங்கள், குறிப்பாக மக்கள் யுத்தக் கட்சியின் RYL, பாமகவோடு சேர்ந்து தொடர் கூட்டு இயக்கங்களை மேற்கொண்டது. புரட்சிகர இயக்கங்களின் பலவீனத்தைப் புரிந்துகொண்ட பின்நவீனத்துவவாதிகள் ‘பகையாளி குடியை உறவாடிக் கெடு’ எனும் பார்ப்பன சூழ்ச்சியோடு கூட இருந்தே குழி பறித்தனர்.

ஆக அரசின் நோக்கம் நிறைவேறியது. அதுவரை இருந்த தாழ்த்தப்பட்டோர் மற்றும் வன்னிய உழைக்கும் மக்களுக்கிடையிலான ஒற்றுமை தகர்க்கப்பட்டது. அவர்களின் ஒற்றுமையை நிறுவிய பொதுவுடமை இயக்கங்கள் மக்களிடமிருந்து தனிமைப்படுத்தப்பட்டன..

மக்களுக்கான போலி இயக்கங்களாக பாமகவும், விடுதலைச் சிறுத்தைகளும் நிறுவப்பட்டுவிட்டன. இன்றுவரை புரட்சிகர இயக்கங்கள் தலை தூக்க முடியாமல் செய்யப்பட்டுவிட்டது. சி.பி.ஐ, சி.பிஎம் கூட பெருமளவு பலவீனப்படுத்தப் பட்டுவிட்டன.

பா.ம.க.வின் பசுமைத் தாயகம்

அரசியல் கட்சிகள் டிரஸ்டுகள் வைத்து உள்நாடு, வெளிநாட்டிலிருந்து பணம் பெறுகின்றன. கட்சி உறுப்பினர்கள் சிலர் என்.ஜி.ஓ நடத்தி பணம் பெறுகின்றனர். வெளிநாட்டு அரசுகள் மற்றும் உளவுத்துறைகளோடு சில கட்சிகள் தொடர்பு கொண்டுள்ளதாக குற்றங்கள் சாட்டப்படுகின்றன. ஆனால் ஒரு என்.ஜி.ஓ வைத்து அப்பட்டமாக கட்சிக்கு இணையான முக்கியத்துவத்தை அதற்குத் தருவது பா.ம.க ஒன்றுதான். எந்த இடத்தில் பா.ம.க முடிந்து பசுமைத் தாயகம் தொடங்குகிறது என்பதே சந்தேகத்திற்கிடமாக உள்ளது.

உதாரணத்திற்கு டாக்டர் ‘ஐயா’வின் சிகரெட் - மது எதிர்ப்பு. இது பசுமைத் தாயகம் என்.ஜி.ஓ.வின் ஒரு புராஜெக்ட். என்.ஜி.ஓக்களின் புராஜெக்டுகள் எப்போதும் இலவசமாகச் செய்யப்படுவதில்லை. ‘ஐயா’ குடும்பத்தின் பசுமைத் தாயகம், பவுண்டேஷன் வோர்ல்ட் லங் பவுண்டேஷன் (World Lung Foundation - WLF) என்ற புகையிலைக்கு எதிரான அமைப்பிலிருந்து நிதியுதவி பெறுகிறது. முக்கியமாக சென்னையில் புகைப்பழக்கத்தை ஒழிக்க இவ்வமைப்பு பசுமைத் தாயகம் பவுண்டேஷனுக்கு நிதியுதவி அளித்து வருவதாக WLF வெப்சைட் கூறுகிறது. இந்த WLF, அமெரிக்காவின் 7வது பெரும் பணக்காரரும், நியூயார்க்கின் மேயராக இருந்தவருமான மைக்கேல் பொளூம்பெர்க்கின் தொண்டு நிறுவனத்திலிருந்தும், பில் அண்ட் மெலிண்டா கேட்ஸ் பவுண்டேஷனிலிருந்தும் நிதியுதவி பெறுகிறது. இத்தனைக்கும் இளைய ‘ஐயா’ மத்திய சுகாதார அமைச்சராக எல்லாம் இருந்தார். மக்கள் நலத்தைப் பேண அரசு அமைப்புகளை வலிமைப்படுத்துவதை விட்டுவிட்டு சந்தேகத்திற்குரிய தன்னார்வத் தொண்டு நிறுவனங்களின் பின் ஓடுவது இந்தியர்களின், தமிழர்களின், வன்னியர்களின் நலனுக்கு உகந்ததா? நாட்டின் ஜனநாயக அமைப்புகளுக்கு சட்டதிட்டங்களுக்கு வெளியே இயங்கும் இத்தகைய என்.ஜி.ஓக்களை ஊட்டி வளர்ப்பது நல்லதா என்று ‘ஐயா’தான் விளக்க வேண்டும்! இத்தகைய தொடர்புகள் உள்ளவர்கள் தனியார்மயத்திற்கு எத்தகைய சேவை செய்யக் கூடியவர்களாக இருப்பார்கள் என்பதை நாம் எளிதாகப் புரிந்து கொள்ளலாம் அல்லவா?

ரஜினி, பாபா படம் வெளிவரும்போது ஒரு கூட்டத்தில் வீரப்பனை அழிக்க வேண்டும் என்று பேசினார். படம் வெளிவந்ததும் பா.ம.க பொங்கியெழுந்தது. சூப்பர் ஸ்டார் பின்வாங்கி ஒளிந்து கொண்டார். தமிழுணர்வாளர்கள் வீரப்பனுக்காகத்தான் ‘ஐயா’ ரஜினியை இந்தப் பாடுபடுத்துகிறார் என்று நினைத்து புளகாங்கிதமடைந்தனர். படத்தில் புகைப்பிடிக்கும் காட்சிகள் இருப்பதால்தான் தமது கட்சியினர் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர் என்றார் ‘ஐயா’. ‘ஐயா’ பொய் சொல்கிறார் என்று உணர்வாளர்கள் நினைத்துக் கொண்டனர். ‘ஐயா’ மறுக்கவில்லை. அதேவாரம் மது ஒழிப்புப் பேரணி நடத்தினார். உண்மையான ‘ஐயா’, வீரப்பன் பங்காளி ‘ஐயா’தான் என்று சொல்லப்பட்டது.

மக்களுக்கு வீரப்பன்; நிதியுதவியாளர்களுக்கு சிகரெட், மது எதிர்ப்பு. ‘ஐயா’வின் திறமையே திறமை.

‘ஐயா’ வீரவேசத்துடன் தாமிரபரணி, கோகோகோலா பேக்டரியை எதிர்த்தார். பசுமைத் தாயகம் World Water Forum நிகழ்வுகளில் கலந்து கொண்டது. World Water Forum கோகோகோலா நிறுவனத்திடமிருந்து நிதியுதவி பெறுகிறது என்பது குறித்து ‘ஐயா’விடம் யாரும் கேட்கவுமில்லை; ‘ஐயா’ சொல்லவுமில்லை.

பசுமைத் தாயகத்தின் இணையதளம் முற்றிலும் ஆங்கிலத்தில் உள்ளது. ’ஐயா’வின் தமிழ் பற்று..?அதையெல்லாம் பார்த்துக் கொண்டிருந்தால் பார்க்க வேண்டியவர்கள் எப்படி இணைய தளத்தைப் பார்ப்பார்கள்? அப்படி இணைய தளத்தை யார் பார்க்கிறார்கள்? அதிலென்ன சந்தேகம் தமிழ் தெரியாத, ஆங்கிலம் தெரிந்தவர்கள்தான்!

பாமகவின் பிறப்பே பின்நவீனத்துவவாதிகளின், ஏகாதிபத்திய ஆதரவாளர்களின் உதவியோடு என்பதைப் புரிந்து கொண்டால் இந்த விபரீதமான புராஜெக்ட் அரசியலில் நமக்கு ஆச்சரியம் ஏற்படாது.

தமிழக அரசியலில் பா.ம.கவின் சிறப்பிடம்

பார்வார்டு பிளாக், கொங்கு முன்னேற்றக் கழகம், மூவேந்தர் முன்னேற்றக் கழகம், புதிய தமிழகம், முதலியார், பிள்ளைமார் கட்சிகள் எல்லாம் அடைந்த கதியைப் பாருங்கள்! ஆளும் வர்க்கங்களும், பெரிய அரசியல் கட்சிகளும் இத்தகைய சாதிவாரி, பகுதிவாரி அமைப்புகளை வரவேற்பதில்லை. ஒரு பூட்டுக்கு பல சாவிகள் இருப்பதை அவை விரும்பாததே காரணம்.

ஆனால் பாமகவும், விடுதலைச் சிறுத்தைகளும் ஆளும் வர்க்க எடுபிடிகளாக தங்களை நிலை நிறுத்திக் கொண்டுள்ளன. புதிய தமிழகமும், கொங்கு முன்னேற்றக் கழகமும் சந்தித்ததைப் போன்ற கட்சி அமைப்பின் மீதான தாக்குதல்களை இக் கட்சிகள் சந்திக்கவில்லை. காரணம் இந்தக் கட்சிகள் பலவீனமடைந்தால் தாலாட்டித் தூங்கவைக்கப்பட்ட கம்யூனிச சாத்தான் திரும்ப எழுந்துவிடலாம் என்ற பயம் ஆளும் வர்க்கங்களுக்கு இருப்பதுதான்.

பாட்டாளி மக்கள் கட்சியின் சாதனைகள்

முற்போக்கு முகமூடி போட்டுக் கொண்டே இந்தக் கட்சி, தான் சார்ந்துள்ளதாகக் கூறும் வன்னிய மக்களுக்கு பேரழிவுகளை விளைவித்தது. பாமக வளர்ச்சி பெற்ற இந்த இருபதாண்டு காலத்தில்தான் விவசாயம் கடும் வீழ்ச்சி கண்டது. வன்னிய விவசாயிகள் வாழ்விழந்து குழி தோண்டவும், கட்டடம் கட்டவும் பெங்களூருக்கும், சென்னைக்கும், மும்பைக்கும், கோவைக்கும் கூட்டம் கூட்டமாக இடம் பெயர்ந்தனர்; பெருநகர பிளாட்பாரங்களில் தஞ்சமடைந்தனர். புறக்கணிக்கப்பட்ட விவசாயத்திற்கு எதிராக விவசாயிகளுக்கு ஆதரவாக ஒரு கோடி வன்னிய மக்கள் கூட்டம் நடத்தப்படவில்லை. பதிலாக என்.ஜி.ஓ. அமைத்து ஏகாதிபத்திய சேவை செய்கிறது பாமக.

a_marx_thiruma_nallakannu_6

பெரியார், அம்பேத்கார் முகமூடி போட்டுக் கொண்டே பண்பாட்டு மட்டத்தில் வன்னிய சமூகத்தை அதல பாதாளத்தில் தள்ளியது பாமக. கிராமங்களில் பிற்போக்கு நிலப்பிரபுத்துவ சாதீய உறவுகளை பலப்படுத்தி முற்போக்கு இயக்கங்கள் தலைகாட்டமுடியாமல் செய்தது. பல்லாண்டுகள் முயன்று பெற்ற பெண்ணுரிமைகளை, பெண் சொத்துரிமையை, விருப்பப்பட்ட வாழ்க்கைத் துணையை அடையும் உரிமையை மறுக்கும் அளவிற்கு பண்பாட்டு மட்டத்தில் பேரழிவை ஏற்படுத்தியுள்ளது. போர்க்குணங் கொண்ட வன்னிய ஆண்கள் மகள்களுக்கும், சகோதரிகளுக்கும், மனைவிகளுக்கும் காவல்காரர்களாக மாறிப் போயினர்.

திருமாவளவனோடு கைகோர்த்துக் கொண்டே வடதமிழகத்தின் இருபெரும் சமூகங்களையும் அடியோடு பிளக்கும் நயவஞ்சகத்தைச் செய்தது. தலித்துகளுக்கு எதிரான கொடுமைகளைக் கட்டவிழ்த்துவிட்டது. தலித்துகளின் இடப் பெயர்வால் வன்னிய சமூகமே அதற்குப் பலியுமானது. தற்போது மற்ற ஆதிக்க சாதி வெறியர்களை வன்னியர்களுக்கு நண்பர்களாக்குவதாக பம்மாத்து காட்டி வருகிறது.

பின்னவீனத்துவம்-பாமக-புரட்சிகர இயக்கங்கள்

பின்நவீனத்துவம் என்பது தனிநபர் சிக்கலல்ல. அது புரட்சிகர இயக்கங்களை எதிர்க்கும் கோட்பாட்டுச் சிக்கல். அதே போல் பின்நவீனத்துவாதிகளின் செயல்பாடுகள் எதுவும் நேர்மையானதல்ல. அது பொதுவுடமை இயக்கங்களுக்கு எதிராக திட்டமிட்டு செயல்படுத்தப்படும் - அரசு மற்றும் ஏகாதிபத்திய ஆதரவு தன்னார்வத் தொண்டு நிறுவனங்களின் நடவடிக்கையாகும். இதனை கண்ணும் கருத்துமாக செயல்படுத்த வேண்டிய தேவை அரசுக்கு இருக்கிறது. ஆகவே அரசு அதற்கேற்ற வலைப்பின்னலோடு தனது கடமையை நிறைவேற்றி வருகிறது.

அரசின் நடவடிக்கையில் பின்நவீனத்துவவாதிகள் நேரடியாகவும் பங்கேற்கலாம். அல்லது ஏதோ ஒரு கண்ணியின் மூலம் இயக்கப்படலாம். ஆனால் எந்த விதத்தில் பங்கேற்றாலும் அவர்களின் செயல்பாட்டின் விளைவுகள் என்னவென்று அவர்களுக்கு நன்கு தெரியும். ஆகவே அறியாமையால் செய்கிற நிகழ்வாக அதைக் கருதவே முடியாது.

கெடுவாய்ப்பாக சில இயக்கங்கள் இன்றுவரை பின்நவீனத்துவவாதிகளை மாற்றுக் கருத்துக் கொண்ட ஜனநாயக சக்திகளாகவே கருதுகின்றன. இதற்குக் காரணம் இயக்கங்களின் அரசு குறித்த கொள்கை பலவீனமேயாகும். அரசு என்பது ஓர் ஒடுக்குமுறைக் கருவி என எல்லா இயக்கங்களும் ஒப்புக்கொள்ளும். இதன்பொருள் துப்பாக்கி உள்ளிட்ட கருவிகளின் செயல்பாடு என்றே கொள்ளப்படுகிறது. ஆனால் அரசு துப்பாக்கியின் மூலம் ஒடுக்குவதற்கு முன்பு மக்களை கருத்தியல் அடிப்படையில் அணியப்படுத்தி வைத்திருக்கிறது என்பதை இயக்கங்கள் போதுமான அழுத்தத்தோடு பார்ப்பதில்லை. ஆதலால்தான் தத்தவார்த்த தளத்தில் அரசின் செயல்பாடுகளும், அதற்கான அரசின் தத்துவ அடியாட்களும் குறித்து கவலைப்படுவதில்லை. அந்த வகையில் பின்நவீனத்துவம் குறித்தும், அதன் கேடுகள் குறித்தும் இயக்கங்கள் போதுமான அளவு சிந்திக்கவில்லை.

அரசு குறித்த கோட்பாடு புரிதலின்மைதான் இயக்கங்களை இன்றுவரை சீரழித்துக் கொண்டிருக்கிறது. S.O.C, மக்கள் யுத்தம் (போல்சுவிக்) போன்ற அமைப்புகள் பின்நவீனத்துவாதிகளை புறக்கணித்தே வருகின்றன. இருந்த போதிலும் தேவையான உக்கிரத்துடன் இந்த தத்துவார்த்தப் போர் நடத்தப் படவில்லை. போதுமான ஆய்வுகளோ வெளியீடுகளோ இல்லை. தம்மை பாதுகாத்துக் கொள்ளும் ஓர் எச்சரிக்கை உணர்வுதான் இவ்வமைப்புகளிடம் உள்ளது. ம.க.இ.க.வின் தற்போதைய வெளியீடுகளில் இப்பிரச்சினை குறித்து பேசப்படுவது வரவேற்கத்தக்கது. பின்னவீனத்துவ வாதிகள் - பாமக தொடர்பை முதலில் அம்பலப்படுத்தியது ம.க.இ.க.தான்.

ஆனால் இதுகுறித்து துளியளவும் கவலைப்படாமல் தம்மை மேலும் மேலும் சிக்கலுக்குள்ளாக்கிக் கொண்ட அமைப்பு மக்கள் யுத்தக்குழுதான். இது மாவோயிஸ்ட் கட்சியாக மாறிய பின்னரும் தொடரவே செய்தது. தங்களை எந்த பின்நவீனத்துவவாதிகள் மக்களிடமிருந்து தனிமைப்படுத்தினாரோ, எதன் மூலம் பலவீனமடையச் செய்தனரோ, எதன் ஊடாக இரவீந்திரன் - சிவா – நவீன்பிரசாத் என ஒப்பில்லா தோழர்களை பலிகொடுக்க நேர்ந்ததோ, அந்த பின்நவீனத்துவவாதிகளோடு இவ்வமைப்பு தோழமை பாராட்டியது. பலியான தோழர்களின் நினைவேந்தல் நிகழ்வுகளில் இவர்களை பங்கேற்க வைத்து கௌரவப்படுத்தியது. ஏகாதிபத்தியத்தின் சுரண்டல் முறைகளை உள்ளும் புறமும் நன்கறிந்த தோழர் கோபட் காந்தை(அரவிந்த்) போன்ற மாபெரும் அறிவுஜீவிகளைத் தனது மையக் குழுவில் கொண்டிருந்த மாவோயிஸ்ட் கட்சியின் தமிழகப் பிரிவு இவ்வாறு நடந்து கொள்வது வேதனையானது.

மாவோயிஸ்ட் தோழர்கள் சிந்திய இரத்தத்தில்தான் பின்நவீனத்துவவாதிகள் தங்களது கறைகளைக் கழுவினார்கள். மாவோயிஸ்ட் அமைப்பின் ஆசியில்தான் பின்நவீனத்துவவாதிகள் தங்களை முற்போக்காளர்களாக காட்டிக் கொண்டார்கள். மாவோயிஸ்டின் அருள் பெற்றவர்களை பிற இயக்கங்கள் தள்ளிவிடமுடியுமா? வேறு வழியில்லாமல் எல்லோரும் போட்டி போட்டுக்கொண்டு அவர்களை அரவணைத்துக் கொண்டிருக்கின்றனர்.

ஆனால் இங்கு ஒரு புரட்சிகர கட்சி உருவாகி விடக்கூடாதென அரசு விழிப்புடன் இருப்பது குறித்தோ, அதை முளையிலேயே அழித்துவிட அரசு துடிப்பது குறித்தோ, அரசின் அடியாளாக பின்நவீனத்துவவாதிகள் செயல்பட்டிருப்பது குறித்தோ இந்த இயக்கங்களுக்குக் கவலையில்லை.

ஆதலால்தான் சாதிவெறிக் கட்சியான பாமகவை எதிர்ப்பதற்கு பாமகவை வளர்த்துவிட்ட சதிகாரர்களையே இயக்கங்கள் மேடையேற்றுகின்றன. இவர்கள் எப்படி பா.ம.கவின் தோற்றம், பின்னணி குறித்து நேர்மையான பார்வையை முன்வைப்பார்கள்? பாமகவிற்கான உண்மையான எதிர்ப்பு என்பது அதன் நதிமூலத்தைத் தேடிப் போவதும் அம்பலப்படுத்துவதும்தான்.

'வன்னியர்கள் நக்சலைட்டுகள் ஆகாமல் நாங்கள்தான் தடுத்து நிறுத்தினோம்' என்று காடுவெட்டி குரு சித்திரா பவுர்ணமி விழாவில் பேசினார். அற்புதமான உண்மை. அன்று பொதுவுடமைவாதிகளை ஒழித்துக்கட்ட அவர்களைவிட முற்போக்கு வேடம் போட வேண்டி வந்தது; போட்டார்கள். இன்று அவர்கள் திரும்பவும் தலைதூக்காமல் தடுக்க தங்கள் சாதியைச் சுற்றி ஒரு கோட்டை கட்ட ஜாதிக் காவலர்கள் வேடம் போடுகிறார்கள். முற்போக்காளர்களின் நட்பைப் பேண (அப்போதுதானே முதுகில் குத்த முடியும்) பின்நவீனத்துவவாதிகள் ‘பாமக எதிர்ப்பு’ வேடம் போடுகிறார்கள். யார் வேண்டுமானாலும் என்ன வேடம் வேண்டுமானாலும் போடுவார்கள் – நாம் கண்களை மூடிக் கொண்டிருந்தால்!

- குணா, தேசிய முன்னணி இதழ் குழு (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)

Pin It