தேரடிக்கே வந்து சேர்ந்து விட்டது பாட்டாளி மக்கள் கட்சியின் தேர். சாதிய அடையாளத்துடன் ‘வன்னியர் சங்க’மாகத் தொடங்கி, இடையில் சிறிது காலம் அரசியலுக்காகப் ‘பாட்டாளி மக்கள் கட்சி’ என்னும் வேடந்தரித்து, மீண்டும் 'ஒரு கோடி' வன்னியர் குடும்பங்களை ஒருங்கிணைக்கும் முயற்சியில் இறங்கி இருக்கிறது.

marakanam_riot

இந்த ஆண்டும் 25.04.2013 அன்று மாமல்லபுரத்தில் சித்திரை முழுநிலவு விழாவை பா.ம.க. நடத்தியது. கடந்த ஆண்டில் இதே விழாவில் காடுவெட்டி குரு பற்ற வைத்த சாதித் தீப்பொறி, அடுத்த சில மாதங்களில் தருமபுரியில் கோரத்தாண்டவம் ஆடித் தீர்த்தது. அந்தக் காயங்களே இன்னும் ஆறாத நிலையில், இந்த ஆண்டு தீப்பந்தங்களை தாழ்த்தப்பட்ட மக்களை நோக்கி எறிந்திருக்கின்றனர். மருத்துவர் ராமதாசு, கோ.க.மணி, அன்புமணி, காடுவெட்டி குரு இவர்கள் போதாதென்று, இவர்களோடு புதிதாகக் கை கோர்த்திருக்கும் தேசிய பார்வர்டு பிளாக் பி.டி.அரசகுமார் என பேசிய அனைவரும், வெளிப்படையாகவே தாழ்த்தப்பட்ட மக்களுக்கு எதிராகப் பேசினர். அம்மக்களின் அரசியல் சக்தியாக வளர்ந்து கொண்டு வரும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் மீதும், தாழ்த்தப்பட்ட மக்களின் உரிமைகளுக்காகக் குரல் கொடுத்துவரும் பெரியாரியவாதிகளின் மீதும், பொதுவுடைமைவாதிகளின் மீதும், இன்னபிற முற்போக்கு சக்திகளின் மீதும் வெறுப்பைக் கக்கினர். அநாகரிகமான சொற்களால் வசைபாடினர்.

காடுவெட்டி குருவின் சொற்பொழிவை, அவருடைய வீட்டினரே மீண்டும் கேட்க விரும்ப மாட்டார்கள். கடந்த முறை பேசிய தன்னுடைய பேச்சை மீண்டும் ஒரு முறை அங்கே கூடியிருந்த வன்னிய சமூகத்து இளைஞர்களுக்கு வலுவாக நினைவூட்டினார். ‘நாங்கெல்லாம் விவசாயம் பாக்கிறவங்க. எங்க வீட்ல, மண்வெட்டி, கடப்பாரை, அருவா இதெல்லாந்தான் இருக்கும். நாங்க என்ன அவங்கள மாதிரி மோளம் அடிக்கிற சாதியா? மோளம் அடிச்சிட்டு உக்காந்திருக்க...’- இன்னும் எழுதமுடியாத தரக்குறைவான பேச்சு அது. சாதிக்கெதிரான செயல்பாடுகளில் தீவிரமாகச் செயல்பட்டு வருகின்ற, பெரியாரின் கருஞ்சட்டைத் தொண்டர்களையும், திராவிடர் கழகத் தலைவர் வீரமணியையும் அவன், இவன் என்று ஏக வசனத்தில் சுட்டினார். ‘கருப்புச் சட்ட போட்டா நீங்கல்லாம் பெரிய அறிவாளின்னு நென‌ப்பா, நீங்க என்ன பெரிய புரட்சியாளர்களா, நீ என்ன செஞ்சி கிழிச்சிருக்க’ - இதெல்லாம் காடுவெட்டி பேசிய சாதிவெறிப்பேச்சின் ஒரு பகுதி.

தேவர் சாதியின் பிரதிநிதி என்று சொல்லிக் கொள்ளும், பி.டி.அரசகுமார் என்பவர், ‘எங்கூட பேட்டியில உக்காந்தவன் சொல்றான், 2000 ஆண்டுகளாக அடங்கிக் கிடந்தவங்க, இப்ப நிமிர ஆரம்பிச்சிருக்காங்கன்னு’. தருமபுரி வன்முறைக்குப் பிறகு, அனைத்துத் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும் கலந்து கொண்டு, தலித் மக்களின் பிரதிநிதியாக வலுவான வாதங்களை முன்வைத்தவர், திராவிடர் இயக்கத் தமிழர் பேரவையின் பொதுச்செயலார் பேரா. சுப.வீரபாண்டியன். அவரைத் தான் இப்படிக் குறிப்பிட்டிருக்கிறார் அரசகுமார்.

‘பத்திரிகை நண்பர்கள், எங்கள் சமூகத்து மக்களுக்குப் படிக்கிற ஆற்றல், பத்திரிகை படிக்கிற சக்தி குறைந்திருக்கிறது என்ற தைரியத்தில்தான் எழுதிக் கொண்டிருக்கிறார்கள். இப்போதிருக்கும் வன்னியனும், தேவனும், கவுண்டனும் முழுமையாகப் படிக்கத் தொடங்கிவிட்டார்கள்’ என்பதைச் சொல்லிக் கொள்கிறேன் என்று வாக்குமூலம் கொடுக்கிறார் அரசகுமார்.

ஆசிரியர் வீரமணி, பேராசிரியர் சுபவீ ஆகியோரையும், கருஞ்சட்டைத் தொண்டர்களையும் தரக்குறைவாகப் பேசிய குரு மற்றும் அரசகுமாரின் பேச்சு ‘தீட்டிய மரத்திலேயே கூர் பார்ப்பது’ போன்றது.  இப்போது நாங்கள் முழுமையாகப் படிக்கத் தொடங்கிவிட்டோம் என்று அரசகுமார் பெருமைப்படுவதற்குப் பின்னால், பெரியாரின் தன்னலமற்ற உழைப்பு இருக்கிறது. திராவிட இயக்கமும், கருஞ்சட்டைப் படையும் மட்டும் இல்லாமல் போயிருந்தால், காடுவெட்டியும், அரசகுமாரும், அருவாளும் கையுமாக அலைந்து கொண்டிருந்திருப்பார்கள். இப்படி மேடையேறி பேசியிருந்திருக்க மாட்டார்கள். நீங்கள் கொண்டாடும் உங்கள் ‘இளவரசன்’ அன்புமணி நாடாளுமன்றத்திற்குள் நுழைந்திருக்க முடியாது.

நோபல் பரிசு பெற்றவர்கள் நான்கு பேர் ‘சின்னய்யா’ அன்புமணிக்கு நண்பர்களாம்! உங்களின் சாதிவெறியைக் கண்டால், உங்களிடம் நட்பு பாராட்டியதற்கு அந்த நான்கு அறிஞர் பெருமக்களும் வெட்கமும், வேதனையும் அடைவார்கள், பாவம்.

பக்தி வந்தால் புத்தி போகும் என்றார் பெரியார்; ‘சாதி வந்தால் சகலமும் போய்விடும்’ போலத் தெரிகிறது.

மருத்துவர் ராமதாசு சொந்த மாநிலத்திற்குள்ளேயே பல இடங்களில் நுழைய முடியவில்லை. மாவட்ட நிர்வாகமே தடைவிதித்துள்ளது. அதோடு அவர் தலைமையிலான சாதிவெறியர்களின் கூடாரமான, அனைத்து சமுதாயப் பேரமைப்பு நடத்தும் கூட்டங்களுக்கும் கடும் எதிர்ப்புகள். எனவே இந்த மாநாட்டு மேடையை, தங்களின் சாதி வெறியைக் காட்டுவதற்கு நன்கு பயன்படுத்திக் கொண்டனர் என்றுதான் சொல்ல வேண்டும்.

‘தம்பி, திருமாவளவனை முதலமைச்சர் ஆக்கியே தீருவேன்’ என்றவர், மேடைகளில் கைகோர்த்து நின்றவர், சேரிக்குள் சென்று சமத்துவம் பேசிய மருத்துவர் ராமதாசுக்கு இன்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் பெயரைச் சொல்வதற்கே அசிங்கமாகவும், வெட்கமாகவும் இருக்கிறதாம். அந்தக் கட்சியினரை பொறுக்கிகள் என்றும், ரெளடிகள் என்றும், அந்தக் கும்பலின் தலைவன் என்று தொல்.திருமாவளவனையும் அநாகரிகமாகப் பேசினார். ஊரெங்கும் அம்பேத்கர் சிலைகளைத் திறந்து வைத்தவர், தன் மனத்திற்குள் சாதிவெறியைப் போட்டு பூட்டி, இத்தனை ஆண்டுகளாக அடைகாத்து வந்திருந்திருக்கிறார் என்பதையே அவருடைய இந்தப் பேச்சு காட்டுகிறது. அத்தனையும் அரசியலுக்காக அவர் அணிந்திருந்த முகமூடிகளே என்பதும் தெளிவாகிறது.

அரசியலில் தன்னுடைய சாயம் வெளுத்துப்போன நிலையில், தன்னுடைய சொந்த சமூகத்து மக்கள் மத்தியிலேயே செல்வாக்கை இழந்துவிட்ட நிலையில், மீண்டும் சாதி சாயத்தைப் பூசிக்கொண்டு, இதர பக்கவாத்தியங்களையும் இணைத்துக் கொண்டு மேடையேறி இருக்கிறார். அப்பாவி மக்களின் சாதி உணர்வைக் கொளுத்திவிட்டு, அதில் குளிர்காய நினைக்கும் இந்த சமூக விரோதிகளை, சாதி நோயைப் பரப்பும் கிருமிகளைக் கைது செய்து, பொதுவாழ்க்கையில் இருந்தே அப்புறப்படுத்த வேண்டும்.

marakanam_dalit_636

சாதிப் படிநிலைகளைக் கட்டிக்காக்கும் பகவத் கீதையை ‘முட்டாளின் உளறல்’ என்றார் மாமேதை அம்பேத்கர். அப்படிப்பட்டதுதான் மாமல்லபுர மாநாடும். இவர்களின் நோக்கம் ஒன்றே ஒன்றுதான் - தாழ்த்தப்பட்ட மக்களை அடக்கி ஒடுக்கிவிட வேண்டும். அதற்காக என்னென்ன நச்சுக் கருத்துகளைப் பரப்ப முடியுமோ அத்தனையையும் செய்துவிடுவது. யாரெல்லாம் சாதி என்னும் மலக்குழிக்குள் விழுந்து கிடக்கிறார்களோ அவர்களையும் ஒருங்கிணைத்துக் கொள்வது.

இந்திய அரசியல் சாசனம், உயர்சாதிகளின் ஒடுக்குமுறைகளில் இருந்து, தாழ்த்தப்பட்ட மக்களைச் சிறிதளவாவது காக்கும்பொருட்டு, சில சட்டப் பாதுகாப்புகளை வகுத்துத் தந்திருக்கிறது. தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவரான அண்ணல் அம்பேத்கர்தான் அரசியல் சாசனக் குழுவின் எழுதுகோலாக இருந்து சட்டங்களை வடித்துத் தந்தவர் என்றபோதும், இன்றளவும் அந்த மக்களைப் பாதுகாக்க சட்டம் சேரிக்குள் வருவதில்லை என்பதே நடைமுறை உண்மையாக இருக்கிறது.
 
குறிப்பாகத் தாழ்த்தப்பட்ட மக்களின் பாதுகாப்பிற்காகவே உருவாக்கப்பட்ட வன்கொடுமைத் தடுப்புச் சட்டம், இதுவரை எத்தனை தாழ்த்தப்பட்ட மக்களுக்கு நீதி வழங்கியிருக்கிறது? இப்படி ஒரு சட்டம் இருக்கிறது என்பதையும், அதை எப்படித் தங்கள் பாதுகாப்புக்குத் துணைக்கு அழைப்பது என்பதையும் எத்தனை தாழ்த்தப்பட்ட மக்கள் அறிந்து வைத்திருக்கிறார்கள்? உண்மைநிலை இப்படி இருக்க, இருக்கின்ற ஒரு சட்டத்தையும், திருத்த வேண்டும், நீக்க வேண்டும் என ராமதாசு தலைமையிலான கூட்டம் கூப்பாடு போடுகிறது.

அப்படியே சில இடங்களில் வன்கொடுமைத் தடுப்புச் சட்டம் தவறாகப் பயன்படுத்தப் பட்டிருக்கிறது என்றால், அது யாரால், யாருக்குச் சாதகமாகப் பயன்படுத்தப்பட்டிருக்கிறது என்பதைப் பார்த்தால் உண்மை புலப்படும். சில முதலாளிகளும், ஆதிக்க சமூகத்தினரும், விவரம் தெரியாத தாழ்த்தப்பட்ட மக்களில் சிலரை வைத்து, தங்களுடைய வியாபார எதிரிகளைப் பழிவாங்கும் நோக்கில் இந்த வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தைப் பயன்படுத்தி வருவதாகத் தெரிகிறது.

ஒரு வேளை தாழ்த்தப்பட்ட மக்களில் சிலர் இச்சட்டத்தைத் தவறாகப் பயன் படுத்துவார்களேயானால், அது கண்டிக்கப்பட வேண்டியது என்பதில் ஐயமில்லை. தங்களின் தன்மானத்தைக் காக்கவும், வாழ்நிலையை மேம்படுத்திக் கொள்ளவும் இச்சட்டம் கேடயமாகப் பயன்படக் கூடியது என்கிற விழிப்புணர்வை, அம்மக்களிடம் அவர்களின் தலைவர்கள் ஏற்படுத்த வேண்டியது அவசியம். அதைவிட்டுவிட்டு, ஒட்டுமொத்தமாகக் கண்ணை மூடிக்கொண்டு வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தை நீக்க வேண்டும்; திருத்த வேண்டும் என்று சொல்வது ஏற்புடையதன்று. உண்மையைச் சொன்னால், அந்தச் சட்டம் சரியான முறையில் செயல்படுத்தப்படவில்லை.

வன்கொடுமைத் தடுப்புச் சட்டம் 1989இல் கொண்டுவரப்பட்டிருந்தாலும், 1995 முதலே இச்சட்டம் நடைமுறைக்கு வந்திருக்கிறது. அன்றிலிருந்து அதாவது 1995 முதல் 2001 வரை, ஆறு ஆண்டுகளில் ஒரு வழக்கு கூட இச்சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்படவில்லை என்கிறது ஒரு களஆய்வு (வன்கொடுமைகளும் சட்ட அமலாக்கமும் - எம்.ஏ.பிரிட்டோ, டாக்டர் அம்பேத்கர் பண்பாட்டு ஆய்வு மய்யம், மதுரை, பக்.57,192).

அப்படியானால், அந்த 6 ஆண்டுகளில், சாதியின் பேரால் நாட்டில் எந்த ஒரு இடத்திலும் ஒரு வன்கொடுமை கூட நடைபெறவில்லையா? இந்தப் பிரிவின் கீழ் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்வதற்கே மிகப் பெரிய போராட்டம் நடத்த வேண்டியிருக்கிறது என்பதே நடைமுறை உண்மை.

‘இச்சட்டப்பிரிவு நடைமுறையில் ஓர் அழகு சாதனமே’ என்கிறது நீதிபதி புண்ணையா ஆணையத்தின் அறிக்கை. இந்நிலையில் வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தைத் திருத்த வேண்டும் என்ற பேச்சுக்கே இங்கு இடமில்லை. முடிந்தால், அச்சட்டம் அதிகாரிகளால் நேர்மையாக நடைமுறைப்படுத்தப்படுகிறதா என்பதைக் கண்காணிக்க, ஓர் ஆய்வுக் குழுவை அமைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மாநில அமைதிக்கு ஊறு விளைவிக்கக் கூடிய வகையில் செயல்படும் பா.ம.க.வின் செயல்பாட்டை தமிழக அரசியல் தலைவர்கள் கடுமையாகக் கண்டித்திருப்பது ஆரோக்கியமானது. தமிழக முதலமைச்சர் ஜெயலலிதாவும், சட்டமன்றத்திலேயே ராமதாசு கூட்டத்தினருக்கு எச்சரிக்கை விடுத்ததுடன், மரக்காணத்தில் கலவரத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவித் தொகையையும் அறிவித்திருப்பது வரவேற்கப்பட வேண்டிய ஒன்று. மாமல்லபுரத்தில் காவல்துறையைக் கடுமையாக விமர்சித்து ராமதாசு பேசியதன் பின்விளைவே முதல்வரின் கடுமையான அறிக்கையும், எச்சரிக்கையும். இந்தக் கடுமையை தருமபுரி வன்முறையின் போதே காட்டியிருந்தால், மரக்காணம் வன்முறையையும், இழப்புகளையும் தடுத்திருக்கலாம். இருப்பினும், இதுவரை தாழ்த்தப்பட்ட மக்களின் மீதான வன்கொடுமைகள் பற்றியோ, தாக்குதல்களைப் பற்றியோ எதுவும் பேச முன்வராத முதல்வர் ஜெயலலிதா, இப்போதாவது சாதி வெறியர்களைக் கண்டித்திருப்பது பாராட்டுக்குரியதே.

இந்த நேரத்தில் முற்போக்கு சக்திகள் ஒன்றுதிரள வேண்டியது காலத்தின் கட்டாயம். இதை பா.ம.க. - விடுதலைச் சிறுத்தைகளின் பிரச்சினையாக குறுக்கிவிடக் கூடாது. சமூகநீதிக்கு எதிரான சாதியத்தின் அறைகூவலாகப் பார்க்கப்பட வேண்டும். பெரியாரின் மண்ணில் மீண்டும் சாதியம் தலைதூக்க ஒருநாளும் அனுமதிக்க முடியாது. வடக்கே வன்னியர், தெற்கே தேவர், மேற்கே கவுண்டர் என்று சாதிய அடிப்படையில் தமிழ்நாட்டைக் கூறுபோட்டுக் குளிர்காய நினைப்பவர்களின் எண்ணத்தை முறியடிப்போம்.

ஏற்கனவே பார்ப்பனியத்தால் வர்ணங்களாக பிரிக்கப்பட்டு, சாதிகளாக அடுக்கப்பட்டிருக்கிறோம். பெரியார், அம்பேத்கர் ஆகியோரின் தொடர்ந்த போராட்டங்களால், சாதியக் கோட்டையின் இறுக்கத்தில் தளர்வு ஏற்பட்டிருக்கிறது. மக்கள் தொகையில் நான்கில் ஒரு பகுதியினராக இருக்கும் பட்டியல் வகுப்பினரும், பழங்குடியினரும் இப்போதுதான் தமக்கான உரிமைகள் இனங்காட்டப்பட்டு, முன்னேற்றப் பாதையில் முதல் அடி வைக்கத் தொடங்கியிருக்கின்றனர். இதற்கே ஒரு நூற்றாண்டு தேவைப்பட்டிருக்கிறது. அந்த உழைப்பை, முயற்சியை பின்னுக்கு இழுக்கின்ற வேலையை யார் செய்தாலும், அவர்களைப் பொதுத்தளத்திலிருந்து அப்புறப்படுத்துவதே நம்முடைய முதல் வேலைத்திட்டமாக இருக்க வேண்டும். அதற்குத் தாழ்த்தப்பட்ட மக்களிடையேயான ஒற்றுமையும், தலைவர்களின் அணிசேர்ப்பும் இன்றைய உடனடித் தேவையாக இருக்கிறது.

ராமதாசு கூட்டியிருக்கும் சாதித் தலைவர்களின் கூட்டம் பெண்களுக்கும், அவர்களின் முன்னேற்றத்திற்கும்கூட எதிரானது. சொத்துக்காக காதல் நாடகத் திருமணம் என்று சொல்வதும், எனவே பெண்களுக்குச் சொத்துரிமை தேவையில்லை என்பதும் பெண்களுக்கு எதிரான ஆணாதிக்கப் போக்காகும். பெண்கள் சமூகத்தையே இழிவுபடுத்தி வரும் இந்தக் கூட்டத்தை, அரசியல் தளத்திலும், சமூகத் தளத்திலும் ஒட்டுமொத்த பெண்களும் புறக்கணிக்க வேண்டும்.

மருத்துவர் ராமதாசு வன்னியர் சமூகத்திற்கே உயிர்க்கொல்லி நோய் என்பதையும், தன் சொந்த சாதி மக்களையே தன் குடும்ப நலத்திற்காகப் பலிகொடுக்கத் தயராகிவிட்டார் என்பதையும் அந்தச் சமூகத்தினர் உணர வேண்டும். சாதித் தலைவர்களால் தவறாக வழிநடத்தப்படும் வன்னிய சமூகத்தின் இளையதலை முறையை மீட்டெடுக்கப் பெரியாரிய, அம்பேத்கரிய, மார்க்சிய சக்திகள் முன் முயற்சி எடுக்க வேண்டும். இந்த நேரத்தில் மட்டும் பேசிவிட்டுப் போகின்ற காரியமன்று. மீண்டும் சாதியத்திற்கெதிரான தொடர் நடிவடிக்கைகளும், போராட்டங்களும், பரப்புரைகளும் முன்னெடுக்கப்பட வேண்டும்.

எவ்வாறாயினும் தருமபுரியும் மரக்காணமும் நிகழ்ந்திருக்கக் கூடாதவை, இனிமேலும் நிகழக் கூடாதவை என்பதை நினைவில் நிறுத்துவோம்.

- இரா.உமா

(படங்கள் நன்றி: தி ஹிந்து)

Pin It