சாதி மறுப்புத் திருமணங்கள் - பா.ம.க.வின் கனவும், சிறுத்தைகளின் சிக்கலும் - பகுதி 3

ஒவ்வொரு கிராமத்திலும் தாழ்த்தப்பட்ட மக்களில் சிலர் இட ஒதுக்கீட்டின் மூலம் அரசு வேலை வாய்ப்பைப் பெற்று பொருளாதார ரீதியில் தம்மை மேம்படுத்திக் கொள்ளத் துவங்கினர். அதோடு ஏராளமான தாழ்த்தப்பட்டவர்களும் கல்வி கற்க ஆரம்பித்தனர். இவர்களில் பெரும்பாலோர் தமது முன்னோர்கள் செய்த விவசாய கூலி வேலைகளை கைவிட்டு நகர்ப்புறங்களில் வேலைதேடிக் கொண்டனர். இவ்வேலை வாய்ப்புகள் ஒப்பீட்டளவில் கிராமப்புற விவசாய கூலி வேலையை விட மேம்பட்ட தன்மை உடையவைகளாயினும் பெரும்பாலும் பார்ப்பனிய எல்லைகளை கடந்தது அல்ல. எவை எல்லாம் கடினமானதும் ஆதிக்க சாதிகளால் இழிவானவைகளாகவும் கருதுப்படுகின்றனவோ அவைகளே தாழ்த்தப்பட்டவர்களுக்கான வேலைகளாக அவர்கள் மீது திணிக்கப்பட்டிருந்தன. இப்போது நகர்ப்புற வேலை வாய்ப்புகளும் இந்த வறையறுப்பை முற்றாக நிராகரித்தவைகள் அல்ல. இவ்வரம்புகளுக்கு உட்பட்டே அமைந்திருந்தன.

குறிப்பாக மனித மலத்தை மனிதனே அகற்றும் வேலைகள் நூறு விழுக்காடு தாழ்த்தப்பட்டவர்களுக்கானது. அரசின் அனைத்து துறைகளிலுமே துப்புறவு பணிகள், இட ஒதுக்கீடு இல்லாமலேயே முழுமையாக தாழ்த்தப்பட்டவர்களுக்கே ஒதுக்கப்பட்டன. ஆயினும் இவ்வேலைவாய்ப்புகள் கிராமப்புற வேலை வாய்ப்புகளோடு ஒப்பிடும்போது அதிக கூலியைத் தரக்கூடியனவாக ஆகும். இதுவும் பலரை பொருளாதார ரீதியாக மேம்பட வைத்தது. மொத்தத்தில் ஒட்டுமொத்த தாழ்த்தப்பட்ட சமூகமே உணர்வு ரீதியான மேம்பாட்டை சிறிது சிறிதாக அடைய ஆரம்பித்தது.

anbumani_ramadoss_gkmani_guru

தாழ்த்தப்பட்ட மக்கள் தமது வாழ்வாதாரத்திற்கு கிராமப்புற ஆதிக்க சாதிகளை சார்ந்திருப்பதை தவிர்த்தன் மூலமும், மற்றும் நவீன கல்வியின் ஊடாகவும் தமது உணர்வுளை எந்த அளவிற்கு மேம்படுத்திக் கொள்ள ஆரம்பித்தனரோ, அந்த அளவிற்கு சாதி, தீண்டாமைக்கு எதிராக போராடுபவர்களாகவும் உருவெடுத்தனர்.

 ஒவ்வொரு கிராமத்திலும் ஆதிக்கசாதி வெறிக்கு எதிரான தாழ்த்தப்பட்ட மக்களின் செயல்பாடுகள் பல்வேறு வடிவங்களில் வளர ஆரம்பித்தன. சாதி தீண்டாமைக்கு எதிரான தமது போராட்டத்தில் சட்டபூர்வ வாய்ப்புகளையும் பயன்படுத்த துவங்கினர். அரசு எந்திரம் நிலவுகிற சமூக அமைப்பை பாதுகாப்பதற்கான கட்டமைப்பானாலும், பார்ப்பனியத்தை நடைமுறைப்படுத்துவதில், பாதுகாப்பதில் ஆதிக்க சாதி வெறியர்கள் கோரும், விரும்பும் வடிவில் ஏற்பதோ, நடைமுறைபடுத்துவதோ அதன் நலன்களுக்கு உகந்தது அல்ல என்பதால் தாழ்த்தப்பட்டவர்களை அதன் வரம்பிற்கு உட்பட்டு ஆதரிக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. இப்படி தாழ்த்தப்பட்டோர் தமக்கு கிடைத்த அனைத்து வாய்ப்புகளையும் பயன்படுத்தி, தீண்டாமையின் பல்வேறு வடிவங்களை போராட்டங்களின் ஊடாக முறியடிக்கவும் செய்தனர்.

தாழ்த்தப்பட்ட மக்களின் சாதி, தீண்டாமைக்கு எதிரான ஒவ்வொரு செயல்பாடும் ஆதிக்க சாதிகளிடையே சகிக்க இயலாதவைகளாக மாறின. இதை முறியடிப்பதற்கு தாழ்த்தப்பட்ட மக்கள் மீது ஆதிக்க சாதிகள் கிராம அளவிலான தாக்குதலை மேற்கொண்டாலும், அதையும் மீறி தாழ்த்தப்பட்ட மக்கள் தமது உரிமைகளை வென்றெடுப்பதை அவர்களால் தடுக்க இயலவில்லை. இந்த வெற்றிகளை ஆதிக்க சாதிகள் ஏற்றுக் கொள்ளாவிட்டாலும், வேறு வழியில்லாமல் சகித்துக் கொண்டன.

இந்த வன்னிய ஆதிக்க சாதி வெறியைத்தான் பாமக அமைப்பாக்கியது. இட ஒதுக்கீட்டின் மூலமாகத்தான் தாழ்த்தப்பட்ட மக்கள் முன்னேறி விட்டதாகவும், தங்களை மதிப்பதில்லை என்றும், நாமும் முன்னேற வேண்டுமானால் நமக்கும் தனியே இடஒதுக்கீடு வேண்டும் என்றும், இதுவே வன்னிய மக்கள் எதிர்கொள்ளும் வாழ்வாதாரப் பிரச்சனைகளை தீர்ப்பதற்கான மாமருந்தாகவும் காட்டி சாதி வெறியூட்டியது.

இட ஒதுக்கீட்டுக்கான போராட்டம் என்றப் பேரில் தாழ்த்தப்பட்ட மக்களைத் தாக்கி, தமது கண்களை உறுத்திய அவர்களின் குடியிருப்புகளை தீ வைத்து எறித்து சூறையாடி, அவர்கள் சேர்த்து வைத்த செல்வங்களை கொள்ளையடித்து கோரத்தாண்டிவமாடியது. பல பத்தாண்டுகளாக தாங்கள் அடக்கி வைத்திருந்த ஆதிக்க சாதி வெறியை இதன் மூலம் தணித்துக் கொண்டனர்.

ஆனாலும் இவைகளின் ஊடாகவும் ஆதிக்க சாதி வெறிக் கும்பல் எதிர்மறை விளைவுகளையே சந்தித்தது. இவர்களின் செயல்பாடுகள் தாழ்த்தப்பட்ட மக்களை மேலும் எழுச்சி பெறச் செய்ததே அல்லாமல் அடங்கிப் போக செய்யவில்லை.

வன்னிய ஆதிக்கசாதி வெறியூட்டல் செயல்பாடுகளின் மூலம் வன்னிய மக்களிடையே வலுவான அரசியல் சக்தியாக மாறிய பாமக தலைமை, பல்வேறு அரசியல் கட்சிகளுடன் அரசியல் பேரங்கள் மூலம் பெருமளவிலான பொருளாதார ஆதாயங்களை அடைந்தது. அதோடு வன்னிய ஆதிக்க சாதி வெறியின் அடையாளமான பாமக, திருமாவளனோடு அரசியல் கூட்டு என்று கூறி – அது நயவஞ்சகமானதானாலும் – தாழ்த்தப்பட்டோருக்கு எதிரான சாதி வெறிக் நடவடிக்கைகளை தொடராதது ஆகியவைகளினால் பாமக மீது வன்னிய சாதியினரிடையே அவநம்பிக்கை படிப்படியாக வளர காரணங்களாக அமைந்தன. இதனோடு தமக்கான இட ஒதுக்கீட்டை அடைந்து விட்ட பின்னரும் கூட, தமது வாழ்வாதார பிரச்சனைகள் தீரவில்லை என்பதையும், அவைகள் மேலும் தீவிரம் அடைந்து வருவதையும் அனுபவ ரீதியாக வன்னிய சாதியினர் உணரவும் ஆரம்பித்தனர்.

தாழ்த்தப்பட்டோருக்கு எதிரான தாக்குதலை ஒருங்கிணைத்து நடத்தும் வேலைக்கு மாறாக, தனது குடும்ப பொருளாதார நலன்களை அதிகரித்துக் கொள்வதே ராமதாசின் பிரதான வேலையாக மாறியது. தன்னைத் தவிர தனது குடும்பத்தினர் எவரையும் கட்சி பொருப்புகளுக்கு கொண்டு வரமாட்டேன் என ஆரம்பத்தில் சவடால் அடித்த ராமதாஸ், மகன் அன்புமணியை தனது வாரிசாக கட்சியில் நிலைநாட்டினார். அவரின் இப்படியான செயல்பாடுகள் பாமக - வில் குழுச்செயல்பாட்டை தீவிரமாக்கியது.

தமது நடவடிக்கைகளை எதிர்க்க துவங்கிய பு.தா.இளங்கோவன், பு.தா.அருள்மொழி, பேராசிரியர் தீரன் ஆகியோரை கட்சியிலிருந்து ராமதாஸால் இலகுவாக ஒதுக்கி விட முடிந்தது. ஆனால் ராமதாசுக்கு எதிரான வன்னிய சாதியினரின் கோபம் வேல்முருகன் வடிவில் வெடித்துச் சிதறியது. வன்னிய சாதியில் கணிசமானோர் வேல்முருகனோடு சேர்ந்து கொண்டனர். ஏற்கனவே, தமிழகத்தின் எந்த ஒரு இடத்திலும் தேர்தலில் தனித்து நின்று வெற்றி பெற முடியாது என்ற அளவிற்கு பலவீனமைடைந்திருந்த பாமக, வேல்முருகனின் வெளியேற்றத்தினால் மேலும் பலவீனமாகியது.

இந்த இக்கட்டான சூழலில்தான், வன்னிய சாதி மக்களிடம் தான் இழந்து போன செல்வாக்கை மீண்டும் நிலைநாட்ட, கடந்த பத்தாண்டுகளாக நிறுத்தி வைத்திருந்த தாழ்த்தப்பட்டோருக்கு எதிரான மாநில அளவில் ஒருங்கிணைக்கப்பட்ட வன்னிய ஆதிக்க சாதிவெறியை பாமக மீண்டும் கையிலெடுத்துள்ளது.

இதற்கு முன்னமே வன்னிய ஆதிக்க சாதி வெறியை தாழ்த்தப்பட்ட மக்களுக்கு எதிராக பயன்படுத்தி தோல்வி கண்டிருந்த பாமக, மீண்டும் அதை கையிலெடுத்திருக்கிறது. தனது இந்தச்செயல் தற்கொலைக்கு ஒப்பானது என்று பாமக தலைமைக்கு தெரியாதா? தெரியும். ஆனாலும் பாமக உயிர் வாழ இதைத் தவிர அதற்கு வேறுவழியுமில்லை!

கடந்த பத்தாண்டுகளாக திருமாவளவனோடு நயவஞ்சக நாடகமாடி தாழ்த்தப்பட்ட மக்களிடையே அதன் செல்வாக்கை சரிய வைத்துவிட்டதாலும், அதன் தலைமை போராடும் குணத்தை இழந்து பிழைப்புவாத கும்பலாக மாறி விட்டதாலும், தாழ்த்தப்பட்ட மக்களிடமிருந்து உடனடி எதிர்தாக்குதல் சாத்தியமில்லை என்று பாமக தலைமை உறுதியாக நம்புகிறது. இதனால் தான் தாழ்த்தப்பட்டோருக்கு எதிரான தனது செயல்பாடு எதிர்காலத்தில் பெரும் எதிர் விளைவுகளை ஏற்படுத்தும் என்று தெரிந்திருந்தாலும் கூட, தன்னை பாதுகாத்துக் கொள்ள வேறு வழியின்றி அதை தெரிவு செய்து விட்டது.

தன்னுடைய இந்த செயல்பாடு எதிர்காலத்தில் ஏற்படுத்தப்போகும் எதிர் விளைவுகளை கருத்தில் கொண்டு தான், தமிழகத்தில் உள்ள அனைத்து ஆதிக்க சாதி வெறி அமைப்புகளுடனும் பாமக கூட்டமைப்பை உருவாக்கிக் கொண்டிருக்கிறது.

இப்போதைய நிலையில் தமிழகத்தில் உள்ள புரட்சிகர, ஜனநாயக அமைப்புகள் அறிக்கை போர் நடத்தும் அளவிற்கு மட்டுமே திறன் படைத்தவைகளாக இருப்பதும், பாமகவின் தற்போதைய நிலையை ஆளும் கும்பலும் தனது தேவையின் காரணமாக ஆதரிப்பதும் போன்ற காரணங்களால் தாழ்த்தப்பட்ட மக்கள், வன்னிய ஆதிக்க சாதி வெறியை தனித்து நின்று எதிர்கொள்வதைத் தவிர வேறு வழியில்லை என்ற யதார்த்தமான உண்மைகளைத்தான் எமது முந்தைய கட்டுரைகளில் நாங்கள் பதிவு செய்திருந்தோம்.

தொடரும்.....

- சூறாவளி ( இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும். தொடர்பு எண்:9842529188)

Pin It