அன்பான தோழர் தா.பாண்டியன் அவர்களுக்கு,

வணக்கம்.

நீண்ட நாளாகவே உங்களுக்கு எழுத வேண்டும் என நினைத்த கடிதம் இது. இன்று தான் நேரம் கூடி வந்தது. நலமாய் இருக்கிறீர்களா? இந்த கடிதத்தைப் படிக்கும் போதே உணர்ந்து கொள்வீர்கள், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்தவர் எழுதியது என்று! அறிஞர் அண்ணா எழுதியதைத் தொடர்ந்து, டாக்டர் கலைஞர் எழுதியதைத்தொடர்ந்து தற்போது ஜனசக்தியில் தோழர்களுக்கு நீங்கள் தான் ஏராளமான கடிதங்களை எழுதி வருகிறீர்கள். ஆகவே, உங்களுக்கு இக்கடிதத்தை எழுதுகிறேன். என்னுடைய கடிதம் எழுப்பும் கேள்விகளுக்கு நீங்கள் பதில் அளிக்காமல் கூட இருக்கலாம். இல்லை, யாராவது ஒருவர் சொல்லக்கூடும். சமீப கால சர்ச்சைகளை முன்வைத்து மட்டுமின்றி, உங்களை கடந்த கால்நூற்றாண்டு காலமாக அறிந்தவன் என்ற முறையில் தான் இந்த கடிதம் எழுதப்படுகிறது.

தமிழை மிகச்சரியாக உச்சரிக்கத் தெரிந்த உங்கள் உதடுகள் பேசும் மொழி, மேடைப் பேச்சுகளைக் காதலிப்பவர்களுக்கு ஒரு மயக்கத்தைக் கொடுக்கும்.

தலித்துகளுக்கு எதிரான நிலை

tha_pandiyan_340அடக்கப்பட்ட, ஒடுக்கப்பட்ட சமுதாயம் உயர்ந்த நிலைக்கு வரவேண்டும். அவர்கள் உயர்ந்த பதவிகளை அடைய வேண்டும் என்பதில் யாருக்கும் மாற்றுக்கருத்திற்கு இருக்க முடியாது. ஆனால், ஒடுக்கப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்த நீங்கள், பல நேரங்களில் தலித் சமுதாயத்திற்கு எதிராக கருத்துக்களைப் பதிவு செய்துள்ளீர்கள். அது உத்தப்புரம் பிரச்சனையில் அப்பட்டமாய்த் தெரிந்தது.

முன்னாள் பாரதப் பிரதமர்கள் இந்திரா காந்தி, ராஜீவ்காந்தி உள்ளிட்ட பல்வேறு தேசியத் தலைவர்களின் தமிழக சுற்றுப்பயணத்தின் போது உடன் சென்று அவர்களின் ஆங்கில உரையைத் தமிழாக்கம் செய்தீர்கள். அதுவே, தங்களுக்கு நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை வழங்குவதற்கும் காரணமாக இருந்தது. இடதுசாரித் தத்துவங்களைப் பயின்ற ஒருவர் இப்படி காங்கிரசுடன் உறவைப் பேணியது சரியா?

நூலில் எழுதியது தவறா?

ஸ்ரீபெரும்புதூரில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் விடுதலைப்புலிகள் நடத்திய மனித குண்டுவெடிப்பின் போது தங்களுக்கு கொடுங்காயங்கள் ஏற்பட்ட செய்தி, என்னைப் போன்ற மார்க்சிஸ்டுகளுக்கும் பேரதிர்ச்சியை உருவாக்கியது. பத்திரிகைகளில் முன்பு வந்த செய்திகள் பயம்கொள்ள வைத்தன. அடுத்த நாட்களில் வந்த செய்திகள் தான் தன் நிலைக்குக் கொண்டு வந்தன. உடல் முழுவதும் வெடிகுண்டு துகள்களைத் தாங்கி வாழும் தாங்கள், அந்த நேரத்தில் எழுதிய, “ராஜீவ்காந்தியின் கடைசி நிமிடங்கள்” என்ற நூலை பலருக்கு வாங்கிப் பரிசளித்தேன். தீவிரவாதம் குறித்த தங்களின் பார்வை மிகச்சரியாக அந்த நூலில் பதிவாகியுள்ளது என்பது என் கருத்து. அந்த நூலின் பல படிகளை வாங்கிப் பத்திரப்படுத்தி இன்னும் வைத்துள்ளேன். தாங்கள் எழுதிய அந்த நூல், சிபிஐ கட்சியின் நிறுவனமான பாவை பிரிண்டர்ஸ் மூலம் வெளியிடப்பட்டது. ஆனாலும், அந்த நூல் கடைகளிலோ, புத்தகத் திருவிழாக்களிலோ பகிரங்கமாக விற்பனை செய்யப்படாமல் பதுக்கி வைத்ததைப் பார்த்து அதிர்ச்சியடைந்தேன். விடுதலைப் புலிகள் குறித்து தாங்கள் எழுதிய விமர்சனம் தற்போது தவறா என்ற கேள்வியை எனக்கு அது விளைவித்தது. எந்தக் கருத்தையும் உரக்கச் சொல்லும் உங்கள் கருத்துக்கள் எதற்காக பதுக்கப்பட்டது தோழர்?

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில் இருந்து வெளியேற்றப்பட்டவர்களை தேடி தேடி சேர்க்கும் உங்கள் கட்சியினர், அதையொட்டி நடக்கும் பொதுக்கூட்டங்களில், சிபிஐ தான் மிகச்சிறந்த கட்சி என பேசுகிறீர்கள்! சிபிஐ தான் சிறந்த கட்சி என்று மேடை தோறும் முழங்கும் நீங்கள் ஏன், ஐக்கிய பொதுவுடமைக் கட்சிக்குப் போனீர்கள் என்ற கேள்வியும் நீண்ட நாளாக என் மனதில் ஓடும் கேள்வி. மீண்டும் தான் தாய் கட்சிக்கு வந்து விட்டேனே என்று பதில் அளிக்காமல் நீங்கள் செய்தது சரியா என்று பதில் அளிப்பீர்களா?

தமிழக அரசு மீது “பாசம்”

தமிழகத்தில் நடைபெற்ற பல்வேறு பட்டிமன்றங்களில் மறைந்த தவத்திரு குன்றக்குடி அடிகளாருடன் நீங்கள் பேசிய பேச்சை ரசித்த அதே ரசனையுடன் தான், ஜனசக்தியில் தாங்கள் தற்போது எழுதி வரும் கடிதங்களையும் படித்து வருகிறேன். “காகிதத்தில் ஒரு ஆயுதம்” என்ற வாசகத்தைத் தாங்கிய ஜனசக்தி, திடீரென தீக்கதிர் வெளியிட்டு வந்த மக்கள் நாளிதழை சுவீகரித்துக்கொண்டது. அது ஒன்றும் பிழையொன்றும் இல்லை.

ஜனசக்தியின் மூலம் மத்திய அரசின் பல கேடு கெட்ட கொள்கைகள் குறித்து தாங்கள் எழுதி வரும் கட்டுரைகளைத் தொகுத்தால் பல புத்தங்களை வடிக்கலாம். அந்த அளவு மத்திய அரசின் மீதான உங்கள் நிலை உள்ளது. ஏகாதிபத்தியம் குறித்தும், பிரணாப் முகர்ஜி குடியரசு தலைவராகக் கூடாது என்றும் பக்கம், பக்கமாக எழுதும் நீங்கள், தமிழக அரசை எதிர்க்காமல், வாலைச்சுருட்டி வைத்துள்ளது ஏன் என்ற கேள்வியும் இயல்பாகவே எழுகிறது. பேருந்து கட்டணம் உயர்வு, பால் கட்டண உயர்வு, மின்கட்டண உயர்வு ஆகியவற்றை எதிர்த்து அறிக்கைக்குள் ஒளிந்து கொண்டு நிழலுடன் சண்டையிடுகிறீர்கள். திருவாரூரில் சிபிஐ கட்சி சார்பில் காவல்துறையைக் கண்டித்து பல இடங்களில் போராட்டம் நடத்தப்பட்டது. காவல்துறை அமைச்சர் ஜெயலலிதா தான். ஆனால், உங்கள் ஜனசக்தியில் முதல்பக்கத்தில் மாவட்ட காவல்துறை கண்டித்து நடத்தப்பட்ட போராட்டம் என செய்தி வெளியிடுகிறீர்கள். அந்த அளவிற்கு தமிழக அரசு மீது பாசமா?

பசு மாடில்லையா?

“தமிழகத்தில் மதுக் கடைகளை மூடத் தேவையில்லை" என்று தாங்கள் தெரிவித்த கருத்திற்கு தினமணி நாளிதழில் அதிகபட்ச வாசகர்களின் கருத்து “முட்டாள்தனமானது” என்று வெளியாகியிருந்தது. “குடிப்பழக்கம் ஒரு நோய்” என உலக சுகாதார நிறுவனம் திட்டவட்டமாக அறிவித்துள்ள நிலையில், தமிழகத்தில் அரசு மதுக் கடைகளை மூடினால் புதுச்சேரி, கேரளம், ஆந்திரம், கர்நாடக மாநிலங்களுக்குச் சென்று மது குடித்துவிட்டு வருவார்கள். எனவே, தமிழகத்தில் மதுக் கடைகளை மூடத் தேவையில்லை என்ற தங்களின் தத்துவவிசாரம் அபாரமானது.

“தமிழகத்தில் வறுமையால் செத்துப்போகும் நபர்களின் எண்ணிக்கையைப் போல, மதுபானத்தைக் குடித்து இறப்பவரின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. தமிழகத்தில் தினசரி மதுபானம் அருந்துவோரின் எண்ணிக்கை 49 லட்சம் என்பதும், அவர்களின் சராசரி வயது 28-லிருந்து 13 ஆகக் குறைந்துள்ளது. தமிழ்நாட்டில் 46 சதவிதம் மக்கள் போதை நோயாளியாகி உள்ளார்கள். தற்கொலைக்கு முயல்வோரில் 37 சதவீதத்தினர் மதுப்பழக்கம் உள்ளவர்கள்” என்பதையும் அறியவில்லையா நீங்கள்?

கடந்த 2003-2004-ம் ஆண்டு மதுபானக்கடைகள் மூலம் அரசுக்கு கிடைத்தது வெறும் 3639.93 கோடி ரூபாய் தான். ஆனால், 2004-2005-ம் ஆண்டு ரூ.4872.03 கோடி, 2005-2006-ம் ஆண்டு ரூ.6030.77 கோடி, 2006-2007-ம் ஆண்டு ரூ.7473.61 கோடி, 2007-2008-ம் ஆண்டு ரூ.8821.16 கோடி, 2008-2009-ம் ஆண்டு ரூ.10601.50 கோடி, 2009-2010-ம் ஆண்டு ரூ.12498.22 கோடி, 2010-2011-ம் ஆண்டு ரூ.14965.42 கோடி, 2011-2012-ம் ஆண்டு ரூ.18081.16 கோடி மொத்த வருவாய் கிடைத்துள்ளது. இந்த பணத்தை வைச்சு தான் அம்மாவின் ஆட்சி தமிழகத்தில் கருணையோடு பல திட்டங்களை அறிவித்து வருகிறது. இருக்கும் கடை போதாது என்று டிலைட் பார்களை திறக்க அம்மா ஆட்சி திட்டம் போடுவதை ஆதரிக்கிறீர்களா தோழர் தா. பா. அவர்களே?

குடி கெடுக்கும் குடி குறித்து நீங்கள் கூறிய கருத்திற்கு தினமலர் நாளிதழில் கேலிசித்திரம் 29.6.2012 அன்று வெளியிடப்பட்டது. ஜனசக்தியில் கார்டூன் வரைந்து கொண்டிருந்த கேலிச்சித்திரக்காரர் தான் தினமலரிலும் அந்தக் கேலிச்சித்திரத்தை வரைந்திருக்கிறார், அது சரியான நடைமுறைதானா?

மௌனம் சம்மதமா?

குடி குறித்த தங்களின் கருத்துக்கு அனைத்துப் பகுதிகளிலும் இருந்து எதிர்ப்பு கிளம்பியவுடன், ஜனசக்தி நாளிதழில் “பொய்க்கு ஆயிரம் நாக்குகள்” என அரைப்பக்க அளவிற்கு தாங்கள் எழுதிய கடிதம் எழுதினீர்கள். அதில், “மதுக்கடைகளை மூடுவதால் பயனில்லை என்பதற்கும் மூடக்கூடாது என்பதற்கும் வேறுபாடு தெரியாத எழுத்தாளர்கள் இருந்தால் செய்திகள் திரிந்து தான் வரும். ஒருவரை நான் பசு மாதிரி என்கிறேன். அதை நிருபர், மாடு என்று எழுதினால் என்ன அர்த்தம் வருமோ அந்த முறையில் தான் செய்தி வெளியாகியுள்ளது” என்று நீங்கள் எழுதியுள்ளீர்கள்.

பசு மாட்டிற்கும், சாதாரண மாட்டிற்கும் உள்ள வித்தியாசத்தை உங்களை விட இவ்வளவு சிம்பிளாக சொல்ல முடியாது!

தமிழகத்தில் தற்போது ஆட்சி நடத்துவது கருணாநிதியோ என்பது போலத் தான் உங்கள் அறிக்கைகள், செய்திகள் அனைத்தும் உள்ளன. மறந்தும் கூட முதல்வராக உள்ள ஜெயலலிதா கோபப்பட்டு விடக்கூடாது என்பதில் கவனமாக இருக்கிறீர்கள். மழை விட்டும் தூவானம் விடாத மாதிரி, தேர்தல் கூட்டணி தேர்தலோடு முடிந்து போனாலும், இறங்க வேண்டிய இடம் வந்தும் இறங்காத ரயில்பயணி மாதிரி, இன்னும் அதிமுக அண்டியிருப்பது சரிதானா என்ற கேள்விக்கு என்ன பதிலளிக்கப் போகிறீர்கள்?

 “தமிழக முதல்வர் ஜெயலலிதாவை குளிர்வித்து அதன் மூலம் எப்படியாவது மாநிலங்களவை உறுப்பினர் பதவியை தாங்கள் பெற முயற்சிப்பதாக” பல பத்திரிகைகள் குற்றம்சாட்டி எழுதி வருகின்றன. இதுவரை இந்தக் குற்றச்சாட்டுகளுக்கு ஏன் உங்களால் பதிலளிக்க முடியவில்லை? மௌனம் சம்மதம் என்று எடுத்துக்கொள்ளலாமா?

சமீபத்தில் சிவகாசியில் ஒரு பொதுக்கூட்டத்தில் பேசும் போது,” மார்க்சிஸ்ட் கட்சியைக் கொலைகார கட்சி” என்று பேசினார்கள். அதற்கு நாகரீகமாக அந்த கட்சியின் தலைவர் ஜி.ராமகிருஷ்ணன் அறிக்கை விட்டதற்கு, மீண்டும் நீங்கள், “உறவுக்கு இரு கரங்கள்” என்ற பெயரில் ஒரு கட்டுரையை காகிதத்தில் ஆயுதத்தில் தீட்டியுள்ளீர்கள். கட்டுரை எழுதிய ராமகிருஷ்ணன் கைபேசி மூலம் பேசியிருக்கலாமே என்று கிண்டல் அடித்துள்ளீர்களே... பதில் கட்டுரை எழுதியதற்குப் பதில் நீங்கள் கைபேசியில் பேசியிருக்கலாமே? இலவு காத்த கிளி போல, சட்டமன்றத் தேர்தலின் போது அதிமுகவில் இருந்து கழட்டி விடப்பட்ட போது, பல முறை பேச்சுவார்த்தை நடத்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்திற்கு வந்தீர்களே... இப்போது ஏன் பி.ராமமூர்த்தி இல்லத்தின் முகவரி மறந்து விட்டதா?

கொலைகார கட்சி எது?

கேரளாவில் கம்யூனிச இயக்கத்தை வேரறுக்க ஏகாதிபத்திய சக்திகளும், மதவாத அமைப்புகளும், காங்கிரஸ் கட்சியும் பணத்தைக்கொட்டி பணியாற்றிக் கொண்டிருக்கும் போது, காங்கிரஸ் கட்சியின் குரலில் மார்க்சிஸ்ட் கட்சி மீது கொலைப்பழியை ஏன் தோழர் நீங்கள் சுமத்தினீர்கள்? அதற்கு என்ன அவசியம் ஏற்பட்டது? பிபிசி சொல்வதற்கும், இடதுசாரியான நீங்கள் சொல்வதற்கும் வித்தியாசம் இருக்கிறதே?

ராஜபாளையத்தில் நடைபெற்ற சிபிஐ கட்சியின் மாநில மாநாட்டில் சிபிஎம் கட்சியின் மாநிலச் செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் பேசும் போது, "சரியான மாற்றுக் கொள்கையுள்ள இடதுசாரி சக்திகள் அரசியலிலும் ஒரு மாற்று சக்தியாக மலர வேண்டும். இதற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியும் தமிழகத்தில் மக்கள் பிரச்சனைகளில் கூட்டு இயக்கத்தை நடத்திட வேண்டும். தமிழகத்தில் மத்திய, மாநில அரசுகளுடைய மக்கள் விரோதக் கொள்கையை எதிர்த்து இரு கட்சிகளும் இணைந்து மேலும் பல போராட்டங்களை நடத்த வேண்டும். தொழிலாளர்கள், விவசாயிகள் மற்றும் இதர பகுதி உழைப்பாளி மக்கள் நலன் காக்கவும் தீண்டாமை ஒழிப்புக்காக, பெண்களுக்கு இழைக்கப்படும் அநீதிக்கு எதிராக, மனித உரிமைகளுக்காக இரு கட்சிகளும் களம் காண வேண்டும். இரண்டு கட்சிகளிடையே ஒற்றுமையை பலப்படுத்திட வேண்டும்” என்றும் குறிப்பிட்டார்.

ஆனால், நாகபட்டினத்தில் நடைபெற்ற மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில மாநாட்டில் நீங்கள் பேசிய பேச்சு நாகரீகமானது தானா? “கம்யூனிஸ்ட் கட்சிகள் பலமடைய வேண்டும். ஆனால், வலது பையில் உள்ள நூறு ரூபாயை இடது பையில் வைத்தாலும் அது நூறு ரூபாய் தான்” என்று சிலேடையாக சிபிஎம் கட்சியையே விமர்சித்தீர்கள்.

புதுக்கோட்டை, விழுப்புரம், கிருஷ்ணகிரி ஆகிய மாவட்டங்களில் இருந்து ஏராளமானோர் சிபிஐயில் இருந்து விலகி சிபிஎம் கட்சியில் சேர்ந்த கோபம் உங்களுக்கு இருக்கலாம். ஏன் இப்படி விலகிப் போகிறார்கள் என்று என்றாவது நீங்கள் ஆத்ம பரிசோதனை செய்தது உண்டா தோழர்?

கொலைகார கட்சி மார்க்சிஸ்ட் கட்சி என்று நீங்கள் பேசிய பேச்சு பத்திரிகைகளில் வந்து மை காய்வதற்குள், கிருஷ்ணகிரி மாவட்டத்தின் பெரியார் திராவிடர் கழக அமைப்பாளர் பழனியை கொலை செய்ததாக தங்களது கட்சியின் தளி சட்டமன்ற உறுப்பினர் ராமச்சந்திரன் உள்ளிட்டோர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதே. உங்கள் கட்சியினைச் சேர்ந்த பலர் நீதிமன்றங்களைத் தேடி சரணடைந்து வருகிறார்களே... முக்கிய குற்றவாளியாக குற்றம் சாட்டப்பட்டவர்கள் தலைமறைவாகியுள்ளார்களே... இந்தியாவில் எமர்ஜென்சி காலத்தின் போது தலைமறைவாகியிருந்தவர்கள் கம்யூனிஸ்ட் இயக்கத்தைச் சேர்ந்தவர்கள். இப்போது கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு தங்கள் கட்சியினர் பதுங்கியிருப்பது சரியா?

தளி சட்டமன்ற உறுப்பினர் இராமச்சந்திரன் மீதும் அவர் குடும்பத்தினரும் பத்திரிகைகளில் பக்கம், பக்கமாக கட்டுரைகள் வருகிறது. 30 கொலைகள் என்கிறார்கள். 40 கொலைகள் என்கிறார்கள். இப்படிப்பட்ட செய்திகள் வெளியிடும் ஊடகங்கள் மீது பாய்ந்து பதிலளித்து வரும் உங்கள் தலைமை, கேரளாவில் காங்கிரஸ் கட்சியின் திட்டமிட்ட அவதூறுகளை தமிழகத்தில் ஊதிப் பெரிதாக்கினீர்களே, இது என்ன நியாயாம்?

கிருஷ்ணகிரியின் சிபிஐ முன்னாள் மாவட்டச் செயலாளரை எதிர்த்து சுயேட்சையாக நின்று போட்டியிட்ட காரணத்தால் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில் இருந்து ராமச்சந்திரன் நீக்கப்பட்டார். அவர் வெற்றி பெற்று மார்க்சிஸ்ட் கட்சியில் சேர முயன்றார். ஆனால், அவரை மார்க்சிஸ்ட் கட்சி சேர்க்கவில்லை. ஏனெனில், அவர் சுயேட்சையாக போட்டியிட்ட போது சிபிஐ செய்த பிரச்சாரம் என்பது மார்க்சிஸ்ட் கட்சி சார்பாக நிறுத்தப்பட்ட வேட்பாளர் என்பதாகும். அப்படிப்பட்ட நபருக்குத் தான் ஞானஸ்தானம் வழங்கி உங்கள் கட்சியில் மீண்டும் சேர்த்துக் கொண்டீர்கள். அவரைப் பாதுகாக்கத் தான் படாதபாடுகிறீர்கள்.

அகில இந்திய அளவில் இரண்டு கம்யூனிஸ்ட் கட்சிகளும் ஒன்றிணைந்து மக்களுக்கான பல்வேறு இயக்கங்களை நடத்தி வருகின்றன. தமிழகத்தில் அத்தகைய முயற்சிகளுக்கு இடையூறாக இருப்பது எது என்பது அனைவருக்கும் தெரியும். ஆனாலும், அந்த முயற்சியை தொடர்ந்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தான் எடுத்து வருகிறது என்பதை நன்கறிவேன்.

“நட்பிற்கு வீற்றிருக்கை யாதெனின் கொட்பின்றி

ஒல்லும்வாய் ஊன்றும் நிலை”

என்ற வள்ளுவனின் குறள் நெறியைப் படித்தவன் என்பதால் தான் இந்த கடிதத்தை உங்களுக்கு எழுதியுள்ளேன்.

ஏனெனில் வள்ளுவனின் குறள் உங்களுக்கும் பிடிக்கும் என்பது எனக்கும் தெரியும். என்னுடைய கேள்விகளுக்கான பதில்களை எதிர்பார்க்கிறேன்.

உங்கள் மீது பிரியம் கொண்ட தோழன்,

கமலன்

Comments

25 comments

25
ராதா
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினருக்குள் புகைந்து கொண்டிருக்கும் விஷயங்களை, கமலன் தனது கட்டுரையில் வடித்துள்ளார். அவருக்கு எங்களின் நன்றி!
ஜெயலலிதாவிடம் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியை அடகுவைக்கத் துடிக்கும் தா.பா.வின் நடவடிக்கைகளை, தேசியத் தலைமை கவனிக்க வேண்டும். மாறாக, இன்னும் விட்டுக் கொண்டிருந்தால், ஒன்றிரண்டு, எம்.பி.யோ, எம்.எல்.ஏ.க்களோ கிடைப்பார்கள்... ஆனால், தமிழகத்தில், இடதுசாரிக் கட்சி என்ற அஸ்தஸ்தை இந்திய கம்யூனிஸ்ட் கட்சி இழக்கும்!
பாவண்ணன்
எமர்ஜென்சி காலத்தில் தலைமறைவாகி இருந்தவர்கள் கம்யூனிஸ்டுகள் என்று கட்டுரையாளர் கூறுவதில் இருந்து நான் மாறுபடுகிறேன்.

உண்மையில் அந்த எமர்ஜென்சியை ஆதரித்தவர்கள்தான், தா.பா.வின் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர். அவர்கள் சிறைக்கெல்லாம் போகவில்லை. தலைமறைவும் ஆகவில்லை. 'இந்திராதான் இந்தியா; இந்தியாதான் இந்திரா' என்ற அளவிற்கு இந்திராகாந்தியின் காங்கிரசோடு ஐக்கியமனாஹ்ர்கள்.

அதனால்தான் பின்னாளில், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியிலிருந்து விலகி, "ஐக்கிய பொதுவுடமைக் கட்சி" என்ற புதிய கட்சியை ஆரம்பித்து, காங்கிரஸ் ஆதரவுடன் தா.பா. எம்.பி. ஆனார். காங்கிரஸ் தலைவர்களின் பேச்சுக்களை மேடைதோறும் சென்று மொழி பெயர்த்ததற்காக அந்த எம்.பி. பதவியை காங்கிரஸ் போட்டது.
உண்மையில் கம்யூனிஸ்ட் கொள்கைகளை பேசியதை விட, காங்கிரசின் கொள்கைகளைதான் தா.பா. அதிகம் பேசியிருக்கிறார். இப்போது மட்டும் அவர் எப்படி கம்யூனிஸ்ட் குரலில் பேசுவார்?
என்எம்வி
சபாஸ் சபாஸ் சரியான கட்டுரை.
அருமை அற்புதம்.
இந்தக் கட்டுரையை தா.பா.வுக்கு மெயில் அனுப்பி வையுங்கள்.
தாம் உருவாக்கிய ஐக்கிய பொதுவுடைமைக் கட்சியை இன்று வரை கலைக்கத் தயாராக இல்லாத தா.பா. உண்மையான இந்திய கம்யூனிஸ்ட் கட்சியிரை பற்றிப் பேசுவதற்கான தகுதி இல்லாமல் போய்விட்டார்.
ஆனந்த்
தோழர் என்று விளிப்பதை நிறுத்திவிட்டு இனிமேல் திரு.பாண்டியன் என்று சொல்வது அவருக்கும் கூட நல்லது. தில்லியில் ஒருமுறை நடந்த பாரதி பிறந்தநாள்விழாவில் ரோட்டரி கிளப்பின் செயலாளர் வந்திருந்தார். தமிழ்ச்சங்கத்தில், பார்வையாளர்கள் அனைவருமே தமிழர்கள் என்றிருந்தும் கூட அந்த செயலாளருக்காக, பாரதி பிறந்தநாள் சிறப்புரையை ஆங்கிலத்தில் மேற்கொண்டவர் இவர். கை சின்னத்தில் நின்று காங்கிரஸ் உறுப்பினராகவே ஏழு ஆண்டுகள் நாடாளுமன்றத்தில் ஒட்டிக்கொண்டிருந்தவர். தமிழக கம்யூனிஸ்ட் கட்சியின் அவுரங்கசீப் என்ற பட்டத்திற்குப் பொருத்தமானவர் திரு. தா.பா... அவரோடு பெருமைய நிறையச் சொல்லலாமுங்க...
பாட்டாளி
தோழர் தா.பாவின் மீதான விமர்சனம் முழுக்க முழுக்க ஏற்றுக் கொள்ளக் கூடிவைதான். ஆயினும் ஒரு சந்தேகம் கமலன் அவர்களே. இடதுசாரித் தத்துவங்களைப் பயின்ற ஒருவர் இப்படி காங்கிரசுடன் உறவைப் பேணியது சரியா? என்று கடிதத் துவக்கத்தில் கேட்டிருக்கிறீர்கள். நல்லது. அப்படியானால், மார்க்சிஸ்ட் கட்சியில் உள்ள யாருமே இடதுசாரித் தத்துவங்களைப் பயிலவே இல்லையா? காங்கிரசோடு அப்படிக் கூடிக் குலாவிக் கொண்டிருந்தீர்களே? அவர்களது ஆட்சியைத் தாங்கு தாங்கென்று தாங்கிக் கொண்டிருந்தீர்களே? நேர்மையோடு யோசித்துப் பாருங்கள். திருப்பி உங்களையே கேட்கிறேன். இடதுசாரித் தத்துவங்களைப் பயின்ற மார்க்சிஸ்ட் கட்சி இப்படி காங்கிரசுடன் உறவைப் பேணியது சரியா?
பாட்டாளி
கவிப்பித்தன்
மார்க்சிஸ்ட் கட்சியில் இருந்து வெளியேறுவதற்கு முன்பு வரை மதச்சார்பற்ற கொள்கைகளை முன்னெடுத்துச்செல்லவும், மதவெறி பாஜகவை எதிர்க்கவும் காங்கிரஸ் கட்சியை ஆதரித்து திருச்சியில் பல்வேறு போராட்டங்களை தலைமையேற்று நடத்தியவர் நமது தோழர் பாட்டாளி என்பது அனைவருக்கும் நன்றாகவே தெரியும்.
காங்கிரஸ் கட்சியிடம் குலைந்து இந்திரஜித் குப்தாவிற்கு பதவி வாங்கியது மார்க்சிஸ்ட் கட்சி அல்ல என்பதும் பாட்டாளிக்கு நன்றாகவே தெரியும். இடதுசாரிதத்துவங்களைப் அவர் பயின்ற இடம் மார்க்சிஸ்ட் கட்சி என்பதை மறுக்க முடியுமா? அப்படி பட்டவர் இப்படி வினா எழுப்புவது ஆச்சரியமாகத்தான் இருக்கிறது.
பாட்டாளி
இடதுசாரித் தத்துவங்களைப் பயின்ற நாம் இப்படி காங்கிரஸ் மற்றும் அதிமுகவோடு கூட்டணி வைத்துக் கொண்டு உறவைப் பேணுவது சரியா? என்ற கேள்வி எழுப்பலும் முரண்படலும்தானே தோழர் எம்மை மார்க்சிஸ்ட் கட்சியிலிருந்து விலக வைத்தது.
நீலகண்டன்
தா.பாண்டியன் குறித்து சமீபத்தில் வன்னிஅரசு எழுதிய ஆக்கம் அவரது தலித் விரோதப்போக்கை அம்பலப்படுத்தியிருந்தது, அதனைத் தொடர்ந்து கமலன் எழுதிய இந்த ஆக்கம் தா.பாண்டியனின் காங்கிரஸ் சார்பு நிலை, ஜெயலலிதாவிடம் சார்பு நிலை எப்படி கொண்டுள்ளார் என்பதை நல்ல முறையில் பதிவு செய்துள்ளது.
நீலகண்டன்.
சி.கருப்பையாபாரதி
சிபிஐ கட்சியின் அச்சாணியை கழட்டி எறியும் வேலையை தா.பா அவர்கள் செய்து வருவதாக அக்கட்சியினரே பக்கம் பக்கமாக எழுதி வருகின்றனர். அதிமுகவின் அறிவிக்கப்படாத கொள்கைப் பரப்பு செயலாளராக செயல்பட்டு வரும் தா.பாண்டியன் காங்கிரஸ் கட்சி என்ன பதவி கிடைக்க வேண்டுமானால் பிஜேபி கட்சியையும் ஆதரிப்பார்.
இந்தவாரம் ஜுனியர் விகடனைப் பாருங்கள். அக்கட்சியின் தத்துவ ஆசான் தேவபேரின்பன்.தாபாவை உரித்துத் தொங்கவிட்டுள்ளார்.
இளங்கோ
பார்ப்பான்ன வதி “மார்க்சிஸ்ட்’’ களே
“தமிழ் இனப்படுகொலை” இலங்கை அரசுக்கு ஆயுதம் உதவி செய்தது காங்கிரஸ் என்பது அறிந்தும், காங்கிரஸ் என்ற கப்பல் முழிகிக் கொண்டு இருக்கிறது என்று செல்லியும் இன்று சேலையை பிடித்து தொங்கி கொண்டு இருக்கின்றார்.

குடிகாரருவுடன் கூட்டு வைத்து கொண்டு மதுவை ஒழிக்கா போரிங்களா என்ன ‘கொடுமை’ தோழர் இது..
Nathan
வங்காள தி.மு.க. வே -

இவ்வலவு வாய் பேசும் நி ஜனாதிபதி எலெக்சனில் யர்ரிடம் பனம் வாங்கி கொன்டு பிரனாப்-ஐ ஆதரித்து ஓட்டு போட்டாய்?

இடதுசாரித் தத்துவங்களைப் பயின்ற தாக சொல்லும் ஜி.ராமகிருஷ்ணன் இப்படி காங்கிரசுடன் உறவைப் பேணியது சரியா?
soundar
கொலைகார கட்சி எது?

வங்காலத்தில் அப்பாவி விவசாயிகலை கொன்றது தான் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஒறே சாதனை .....

தலித்துகளுக்கு எதிரான நிலை:

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில் எத்தனை எம்.எல்.ஏ.க்கல் இருக்கிறார்கல் ..
மார்க்சிஸ்ட் கட்சியில் தொடர்ந்து தலைமை க்கு வருவது
பார்ப்பனர்கலெ
ஆர்.துரைராஜ்
தா.பாண்டியன் மீதான விமர்சனங்களுக்கு இளங்கோ, நாதன். சௌந்தர் போன்றோர் பதிலளிக்காமல், சம்பந்தமில்லாமல் உளறுவதில் இருந்து தெரிகிறது அம்மாவின் டாஸ்மாக் சப்ளையின் மகிமையை.
பார்ப்பன தலைமை என துருபிடித்துப்போன சொத்தை வாதங்களை மக்கள் புறம்தள்ளியது தெரியாமல் பித்துப்பிடித்துப் பேசுவதில் இருந்து தெரிகிறது எப்படிப்பட்ட அறிவீளிகள் என்று.
இலங்கை பிரச்சனையில் இந்தியா நடந்து கொண்ட விதம் குறித்து மார்க்சிஸ்ட் கட்சி ஏற்றுக்கொள்ளவில்லை என்பதுடன் அதைக்கண்டித்ததையும் வசதியாக மறந்து விட்டு பின்னூட்டம் இடுவது பூனை கண்ணைக் கட்டிக்கொண்டால் உலகம் இருண்டு விடுமாம் என்பதைப் போல் உள்ளது.
karthi
சட்டமன்றத் தேர்தலின் போது அ.தி.மு.கவில் இருந்து கழட்டி விடப்பட்டது மார்க்சிஸ்ட் கட்சியைதான் தோழர் பின்னர் தே.மு.தி.க அலுவலக படி ஏறியது.
மெர்வின்ராஜ்
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தத்துவ தரிசனங்களாக தோழர் எல்.ஜி.கீதானந்தன், தேவ.பேரின்பன் ஆகியோர் இருந்தார்கள்.
தோழர் தா.பா வின் நடவடிக்கைப் பிடிக்காமல் ஏற்கனவே எல்.ஜி.கீதானந்தன் விலகி விட்டார். தேவ.பேரின்பன், நீக்கப்பட்டுள்ளார். தத்துவங்களைத் தொலைத்து விட்டு அம்மாவின் பின் அலைந்து கொண்டிருக்கிறது இந்திய கம்யூனிஸ்ட் கட்சி.
கலையரசன்
சிபிஐ கட்சியை எதிர்த்து ஜெயிச்சவரையே சிபிஐயில சேர்த்துகிட்டாங்களா? இது நல்லா இருக்கே. பேசாமல் கட்சியில் ஆள் சேர்த்து போட்டியிட்டு வெற்றி பெறுவதை விட இந்த வேலை நல்லா இருக்கே.
கலையரசன்
[email protected]
கொள்கை அடிப்படையில் விவாதிப்பதை விட்டு விட்டு ஆர்.துரைராஜ் “மார்க்சிஸ்ட் கட்சி’’ போன்றவர்கள், தான் பிடித்த முயலுக்கு முணே கால் என்று பிடிவாதம் கொண்டு, உண்மையை முடிமறைப்பது ஏன்? காங்கிரஸ் கட்சி சார்பாக பிரணாப் முகர்ஜி போட்டியிட்டது உண்மையா? இல்லையா? படிப்பது ராமாயணம், இடிப்பது பொருமாள் கோயில் என்பது போல் எதிர்ப்பது காங்கிரஸ் கொள்கைகளை ஆதரிப்பதும் காங்கிரஸ் கட்சியே. என்?
soundar
CPM in maoist kalana durairaj. kalaiyarasan avarkale., why do fear in CPI Tha. Pandian ., don't fear. CPI vittu villaki CPM in joined ana three members only like MLA seat this reason only. u know that . Srilankan tamilars not for struggle in 2008 in CPM and more lier struggle in tamilnadu. big lier in tamilnadu from 2008 to still year
pavannan81
த.பா.வா. ஜி.ரா.வா என்ற சண்டை ஒருபக்கம் இருக்கட்டும்.

சிபிஐ வேட்பாளரைத் தோற்கடித்ததற்காகவே சிபிஎம்ல் இருந்து நீக்கப்பட்ட தளி ராமச்சந்திரனை தா.பாண்டியன் மீண்டும் சிபிஐயில் சேர்த்தது ஏன்?

கடந்த தேர்தலில் லட்ச ரூபாய் பணம் வாங்கிக் கொண்டுதான் தளி ராமச்சந்திரனுக்கு தா.பாண்டியன் எம்.எல்.ஏ. சீட் கொடுத்தார் என்று சிபிஐ கட்சியின் தலைவர்களே குற்றம் சாட்டியதை மறுக்க முடியுமா?

அதுமட்டுமல்ல, சிபிஐயில் சேர்க்கப்பட்ட ஓரிரண்டு ஆண்டுக்கு உள்ளேயே அக்கட்சியின் இளைஞரணிக்கு மாநிலத் தலைவராக தளி ராமச்சந்திரன் தேர்ந்தெடுக்கப்பட்டதன் பின்னணி என்ன? அப்படி என்ன சேவையை தளி ராமச்சந்திரன் ஆற்றிவிட்டார்?

பெ.தி.க. தோழர் பழநி கொலை செய்யப்படுவதற்கு முன்பு, தளி ராமச்சந்திரன் ஏற்பாடு செய்த பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு, கம்யூனிஸ்டுக்குரிய நெறிகளை மீறி தா.பாண்டியன் மிரட்டல் பாணியில் பேசியதன் உள்நோக்கம் என்ன?

தா.பாண்டியன் ‘இன’ அடிப்பொடிகள் பதில் சொல்வார்களா?
மோகன் குமாரமங்கலம்
ஜீவா, பாலதண்டாயுதம், கல்யாணசுந்தரம், மாணிக்கம், நல்லகண்னு போன்ற தலைவர்களின் வழியில் சிபிஐயில் கட்சிப் பணியாற்றியவர்களுக்கு முன்பு நடந்தது என்ன? இப்போது சிபிஐயில் நடப்பது என்ன? என்பது நன்றாகவே தெரியும்.
தோழர் நல்லகண்னு மட்டும், தா.பாண்டியனை கட்சிக்குள் சேர்க்காமல் இருந்திருந்தால், பணம் வாங்கிக் கொண்டு சீட் தருகிறார்கள்... சாதி பார்த்தே பொறுப்பு தருகிறார்கள்... இப்போது கொலையும் செய்கிறார்கள் என்ற அவப்பெயர் எல்லாம் கம்யூனிஸ்ட் கட்சிக்கு வந்திருக்காது.
பல மாவட்டங்களில் நடந்த மாவட்ட மாநாடுகள் அடிதடியோடு முடிந்த அவலமோ, அப்பாதுரையும், சுப்பராயனும் மாநிலக்குழு கூட்டத்திலேயே அடித்துக் கொண்ட அசிங்கமோ, எஸ்.எஸ்.தியாகராஜன், தேவ.பேரின்பன் போன்ற தலைவர்கள் கட்சிக்கு உள்ளேயே ஒதுக்கி வைக்கப்பட்டது போன்ற நிலையோ ஏற்பட்டிருக்காது. ஏற்கெனவே ஒரு தோழர் சொன்னது போல எல்.ஜி.கீதானந்தன் இப்போது மறைந்து விட்டார் என்றாலும், ஒரு தத்துவ ஆசிரியர் தனது கடைசிக் காலத்தில் போய் சிபிஎம்ல் சேர்ந்திருக்க மாட்டார். ஆலங்குடி முன்னாள் எம்.எல்.ஏ. ராஜசேகரன் துவங்கி விழுப்புரம் மாவட்டக்குழுவே கம்யூனிஸ்ட் கட்சியை விட்டு வெளியேறி இருக்க மாட்டார்கள்.
பெருமை வாய்ந்த கம்யூனிஸ்ட் கட்சிக்கு தா.பாண்டியன் மாநிலச் செயலாளராக சாபக்கேடு என்றுதான் சொல்ல வேண்டும்.
mohan
பவன்னன்81 அவர்கலுக்கு.,

தளி ராமச்சந்திரன் முதலில் யூசிபிஐஇல் இருந்தார் அவரின் காலீல் விலுந்து கட்சில் சேர்த்தது சிபிஎம்., பிற்கு தளி ராமச்சந்திரன் அவர்கல்லுக்கு தலைவர் பதவி குடுக்க வில்லயா??

பிஜெபி அலலது சிபிம் மாதிரி மாநாடுகள் நடத்தாமால் பதவில் இருப்பவர்கள் இல்லை நான்கள்.,

தா.பாண்டியன் பணம் வாங்கியது கூட இருந்து பார்தாயா?? ஏன் இந்த மலிவு வியாபாறம்.,

முன்னாடி பலனி என்ற நக்சல் பொதுகூட்டத்தில் ராமச்சந்திரனை கொலை செய்வோம் என்றார்., இதர்க்கு தான் பாண்டியன் பதல் சொன்னார்
selvam
மோகன் குமாரமங்கலம் அவர்கள்.,

தா.பாண்டியன் மாநிலச் செயலாளராக இல்லை என்றால் தமில் நாடில் சிபிம் என்ற மார்க்சிட்கள் தான் இருந்திருப்பார்க்ள் ஆனால் கம்யூனிஸ்ட் கள் என்ற சிபிஐ தமில்நாடில் தெரிந்திருக்க மாலட்டார்க்ள்.,

சிபிம் ல் வரதராஜன் என்ற முத்தவர் உன்கள் கட்சில் ஏற்பட்ட பிரச்சனைக்காக ஊர் ஊறாக சுற்ற் தற்கொலை செய்து கொன்டாற்., இது தான் சிபிம்

சிபிஐ ல் பிரிந்து சென்றவர்க்ள் பதவிக்கும், தலைமை பொருப்பிற்க்கும் ஆசை பட்டவர்சக்ள்.,

சுப்பராயனும்,தேவ.பேரின்பன் பனும் தோழர் நல்லகண்னு இன் தலைமை பொருப்பிற்க்கும் ஆசை பட்டவர்கள்.,
சத்தியசீலன்
தேவபேரின்பனும், நல்லகண்ணுவும் தலைமைப் பொறுப்பிற்கு ஆசைப்படாதவர்கள். உண்மை தான்.
பதவி ஆசை கொண்டவர் தா.பா என்பதால் தான் பலர் சிபிஐ கட்சியை விட்டு வெளியேறுகிறேன் என ராஜினமா நோட்டீஸ் தொடர்ந்து கொடுத்து வருகின்றனர். பலர் வெளியேறியும் வருகின்றனர். செல்வத்தின் கணிப்பு மிகச்சரியாக உள்ளது.
- சத்தியசீலன்
சீனிவாசகன்
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியில் அடுத்த மாநிலச் செயலாளர் என கை காட்டப்படுபவர் தோழர் சி.மகேந்திரன். பண்பாளர். சிறந்த பேச்சாளர். நல்ல வாசிப்பாளர்.
அப்படிப்பட்டவர் பொறுப்பிற்கு வரக்கூடாது என சிலர் செய்த சதி தான் பொம்பளக் குற்றச்சாட்டில் அவரை மாட்டிவிட்டது. யார் இந்த வேலை செய்ததது என்பதை இந்திய கம்யூனிஸ்ட் கட்சியில் உள்ள தோழர்களுக்கு நன்றாகவே தெரியும்.
இப்படிக்கு,
சீனிவாசகன்
ராதா
தளி ராமச்சந்திரன் த.பா.வின் யுசிபிஐ கட்சியில் இருந்தவர். அதனால்தான் ராமச்சந்திரனுக்காக தா.பா. இந்தளவிற்கு வக்காலத்து வாங்குகிறார் என்பதை மோகன் என்பவர் போட்டு உடைத்து விட்டார். அந்த தோழருக்கு நன்றி.

பிறகு சிபிஐ கட்சியினருக்கு வக்காலத்து வாங்க தா.பா.வுக்கு என்ன கிறுக்கா பிடித்திருக்கிறது?

தா.பாண்டியன் சிபிஐ-யின் மாநிலச் செயலாளராக இருந்தாலும், அவர் இப்போதும் யுசிபிஐயின் தலைவராகத்தான் நடந்து கொண்டிருக்கிறார்.

சிபிஐக்கு எதிராகத்தான் யுசிபிஐ கட்சியை ஆரம்பித்தார். முன்பு எதிர்த்து நின்று சிபிஐயை அழிக்க நினைத்தவர், இப்போது கூட இருந்தே அழிக்க நினைக்கிறார். அவ்வளவுதான்.

கட்சியின் மூத்த தலைவர்கள் பலர் வெளியேற்றப்படுவதும், புறக்கணிக்கப்படுவதும், மாறாக கொலைக் குற்றம் சாட்டப்பட்டவர்கள் சிபிஐயில் தலைவர்களாக வலம் வருவதும் கொடுமையிலும் கொடுமை.

தமிழ்நாட்டில் எவ்வளவோ பிரச்சனைகள் இருக்கும்போது அதற்காக எந்த போராட்டத்தையும் நடத்தாமல், ஜெயலலிதாவுக்கு ஜால்ரா அடிக்கும் கட்சி என்ற அவப்பெயரை சிபிஐக்கு தா.பா. ஏற்படுத்தி விட்டார்.

Leave a comment

Fields marked with * are required.

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.