கடந்த ஏப்ரல் 1-ஆம் தேதி முட்டாள்கள் தினத்தன்று, மக்களை முட்டாள்கள் ஆக்கிக்கொண்டிருக்கும் இந்தியாவின் மிகப்பெரும் கார்ப்பரேட் நிறுவனமான - திருநெல்வேலி மாவட்டம் தாழையூத்து எனும் ஊரில் அமைந்திருக்கும் இந்தியா சிமெண்ட்ஸ் நிறுவனத்தின் மக்கள் குடியிருப்பு பகுதியில் - 48 மெகாவாட் அனல்மின் நிலையத்தை அமைத்த மக்கள் விரோத, சமூக விரோத நடவடிக்கைகளைக் கண்டித்து, மனிதநேய மக்கள் முன்னேற்ற கழகத்தின் சார்பில் நடத்தப்பட்ட அனல்மின் நிலைய முற்றுகைப் போராட்டத்தை காவல்துறையினரின் உதவி மூலம் ஒடுக்க நினைத்து, அதில் தோற்றுப்போன நிர்வாகம் ஊடகங்களை விலைக்கு வாங்கி, இத்துப்போன இந்திய இறையாண்மையை உலுக்கும் அளவிற்கு நடைபெற்ற இந்த பெரும் போராட்ட சம்பவத்தை முற்றிலுமாக வெளியே கசியாமல் முடக்கிய சம்பவம் இனி இந்தியத் திருநாட்டில் எங்குமே மக்கள் உரிமைப் பாதுகாப்பிற்காகவும், உயிர் மற்றும் உடைமைப் பாதுகாப்பிற்காகவும் போராடிப் பயனில்லை எனும் நிலையை ஏற்படுத்தி உள்ளது.

nellai_agitation_620

அருகருகே ஒரு பேரூராட்சியையும், ஒரு சிறப்பு நிலை பேரூராட்சியையும் கொண்ட ஒரு மைய இடத்தில் உள்ளது சர்ச்சைக்குரிய இந்தியா சிமெண்ட்ஸ் நிறுவனம். ஏற்கனவே இந்த ஆலை வெளியிடும் நச்சுக்கழிவுகளால் ஆஸ்துமா போன்ற சுவாசக் கோளாறுகளாலும், பிற நுரையீரல் பாதிப்புகளாலும், மூலம் போன்ற உடல் உபாதைகளாலும் இன்னும் பல நோய்களாலும் இப்பகுதி மக்கள் காலம் காலமாக கஷ்டப்பட்டு வருகின்றனர்.

மறைந்த முன்னாள் மத்திய அமைச்சர் முரசொலிமாறன் அவர்கள் இந்த ஆலையின் பெரும்பங்குதாரராக இருப்பதை சாதகமாக வைத்து பல அட்டூழியங்களை செய்து சுற்றுச்சூழலை மாசுபடுத்தி உலகின் ஆயுளை குறைக்கும் எமகாதக செயல்பாடுகளை அரங்கேற்றி வந்த இந்த நிறுவனம், இங்குள்ள மக்களையும், அவர்களின் நலனையும் முற்றிலுமாக புறக்கணித்து வந்தது.

திருடர்கள் முன்னேற்ற கழகம் என தமிழக மக்கள் பலராலும் செல்லமாக அழைக்கப்படும் ஒரு போலி திராவிட சாயம் பூசிய கொள்ளைக்குடும்ப கட்சியின் கொள்ளைக்கார உறுப்பினர்கள் யார் வந்தாலும் இந்த ஆலையின் விருந்தினர் மாளிகையில்தான் தங்குவார்கள். இந்தக் கட்சி தேசிய அரசியலில் மிகுந்த செல்வாக்கை எப்போதும் தக்க வைத்துக்கொண்டிருப்பதால் இவர்கள் சட்ட விரோதமான செயல்பாடுகளுக்கான அனைத்து அனுமதிகளையும் சம்பந்தப்பட்ட அனைத்துத் துறைகளிலும் மிகவும் எளிதாகப் பெற்று வருகின்றனர். இது தவிர சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்கும், மக்கள் பாதுகாப்பை சுரண்டி சம்பாதித்த பணத்தை வாரி வழங்கியதும் இவர்களின் பலம்.

கடந்த அரை நூற்றாண்டு காலங்களாக நடந்த இந்த இயற்கை வள, மனிதவள சுரண்டல்களை தூக்கி சாப்பிடும் அளவிற்கு ஒரு மனிதாபிமானமே இல்லாத செயலை நிசப்தமாக அரங்கேற்றி உள்ளது. நினைத்தாலே நடுங்க வைக்கும் இந்த சம்பவம் மிகவும் லாவகமாக கையாளப்பட்டு மூடிமறைக்கப்பட்டு இருப்பது நாம் ஜனநாயக நாட்டில் வாழ்கிறோமா? சர்வாதிகார நாட்டில் வாழ்கிறோமா? என்ற சந்தேகத்தை எழுப்பி உள்ளது.

nellai_agitation_3

ஏற்கனவே உரிமைப்போராட்டங்கள் ஒடுக்கப்பட்டு உரிமைக்காக ஓங்கும் குரல்வளைகள் நெறிக்கப்பட்டு வரும் இந்த பணநாயக நாட்டில் இப்போது கண்முன் மிக அருகில் நடைபெற்றிருக்கும் இந்த சம்பவம் மிகுந்த மன உளைச்சலை இப்பகுதியில் வாழும் அனைவருக்கும் ஏற்படுத்தி உள்ளது. அப்படி இந்த நிறுவனம் செய்த செயல் என்ன?

கூடங்குளம் அணுமின் நிலையத்திற்காக கடந்த முக்கால் ஆண்டுகளாக நடைபெற்று வரும் வலுவான மக்கள் போராட்டத்திற்கு இடையில், கிட்டத்தட்ட 25 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வாழும் நெருக்கமான குடியிருப்புப் பகுதியின் மத்தியில் 48 மெகாவாட் திறன் கொண்ட அனல்மின் நிலையத்தை அமைத்திருப்பதுதான் இந்த நிறுவனம் செய்திருக்கும் மனித குலத்திற்கு எதிரான செயல். இந்த அனல்மின் நிலையம் தொடங்கப்பட்டதின் பின்புலம் ஆராயப்பட்டால் சில ஆண்டுகளுக்கு முன் திரைக்கு வந்த ஒரு திரைப்படத்தில் அதிகாரிகள் தங்கள் நலனுக்காக ஒரு கிராமத்தையே இந்திய வரைபடத்தில் இல்லாமல் ஆக்கியது போன்ற ஒரு உண்மைச்சம்பவம் புலப்படும்.

இந்த அனல்மின் நிலையத்தைத் தொடங்க இவர்கள் மேற்கொண்ட முறைகேடுகளை முதலில் இங்கே பதிவு செய்கிறேன்.

- 25 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வாழும் பகுதியை, அனுமதி பெறுவதற்காக மக்கள் குடியிருப்பே இல்லாத பகுதி என வரைபடம் காண்பிக்கப்பட்டு, ஒரு முழு பூசணிக்காய் குடோனையே சோற்றுக்குள் மறைத்துள்ளது இந்த நிறுவனம்

- கிட்டத்தட்ட நூறு மீட்டர் தொலைவிற்குள் இருக்கும் தென்னக இரயில்வேயின் கன்னியாகுமரி- சென்னையை இணைக்கும் அகல இரயில் இருப்புப் பாதையை மூடிமறைத்து அருகில் இருப்பு பாதை இல்லை என அனுமதி பெற்றது.

- சுற்றுச்சூழல் வாரியம், மாசுக்கட்டுப்பாட்டு வாரியம், மாவட்ட நிர்வாகம், சம்பந்தப்பட்ட பஞ்சாயத்துக்கள், எதிர்த்து நின்ற பொதுமக்கள், இவை அனைத்திற்கும் மேலாக மக்கள் மிகவும் நம்பும் காவல்துறை ஆகியவற்றை கைக்குள் போட்டு, வெற்றிகரமாக அனல்மின் நிலையத்தை கட்டி முடித்தது.

- இவை அனைத்திற்கும் மேலாக இந்த சட்ட விரோத செயல்களை தங்கள் பங்குதாரர்களின் கட்டுப்பாட்டில் இருந்த கடந்த தி.மு.க ஆட்சிக்காலத்திலேயே அரங்கேற்றியது.

மேற்கண்ட செயல்பாடுகளில் வெற்றி பெற்ற நிர்வாகத்தை எதிர்த்தும் மக்கள் உயிருக்கும், உடைமைக்கும், நலவாழ்வுக்கும் உலை வைக்கும் அனல்மின் நிலையத்தை குடியிருப்புப் பகுதியில் இருந்து அப்புறப்படுத்தக்கோரி கடந்த ஏப்ரல் 1 - ஆம் தேதி மனிதநேய மக்கள் முன்னேற்ற கழகத்தின் சார்பில் முற்றுகைப்போராட்டத்திற்கு அனுமதி கோரி காவல்துறை மற்றும் மாவட்ட நிர்வாகத்திடம் விண்ணப்பிக்கப்பட்டது. மக்கள் வரிப்பணத்தில் பெறும் சம்பளத்தை விட நிறுவனத்திடம் இருந்து அதிக வருவாயைப் பெற்று வரும் அதிகாரிகள் இந்த போராட்டத்திற்கு அனுமதி மறுத்து விட்டனர். இருப்பினும் திட்டமிட்டபடி முற்றுகைப்போர் நடைபெறும் என அறிவிக்கப்பட்டு கடந்த அரை மாதமாக‌ விளம்பரப்படுத்தப்பட்டது. இதற்கு ஆதரவாக இப்பகுதியில் உள்ள விலை போகாத சில நல்ல உள்ளங்களும், அரசியல் பொறுப்பாளிகளும் கைகோர்க்க முன்வந்தனர் குறிப்பாக ம.தி.மு.க, கம்யூனிஸ்ட், தே.மு.தி.க போன்ற கட்சியைச் சார்ந்தவர்களும் கை கோர்க்க முன்வந்தனர்.

திட்டமிட்டபடி முற்றுகைப்போர் நடந்த அன்று காலையிலேயே தேர்தல் சமயங்களில் நிறுத்தப்படும் அளவை விட அதிகமாக காவல்துறையினர் மற்றும் அவர்களின் அடிதடி வாகனங்களான வஜ்ரா போன்றவையும் குவிக்கப்பட்டன. இந்த படை ஊர் முழுவதும் ஆங்காங்கே நிறுத்தப்பட்டிருந்தது. காலை 9 மணியளவில் சொற்ப அளவில் திரண்ட போராளிகள் வீடு வீடாக சென்று ஆதரவு திரட்டி ஒரு பெரும்படையுடன் ஊரின் சாலைப்பகுதிக்கு வந்தனர். காவல்துறையினரின் சுற்றிவளைக்கப்பட்ட அரவணைப்பில் சென்ற மக்கள் கூட்டம் கோஷம் எழுப்பியபடியே ஓர் இடத்தில் நிலை கொண்டது. பெரும்பகுதி காவல்துறையினர் தங்கள் பாதுகாப்பு வாகனங்களுடன் அவர்களைச் சூழ்ந்து கொண்டு ஒரு தடுப்பை பலமாக ஏற்படுத்தி இருந்தனர். பல டி.எஸ்.பி.க்களும், பல ஆய்வாளர்களும், பல பயிற்சி துணை ஆய்வாளர்களும் இதில் அடங்குவர். கோஷம் ஒலித்துக்கொண்டிருந்த வேளையில் எதிர்பாராத விதமாக அங்கே பல வாகனங்களில் அணிவகுத்து வந்த மனிதநேய மக்கள் முன்னேற்ற கழகத்தினர் பெரும் கோஷத்துடன் திரளாக இறங்கி ஆவேசமாக காவல்துறையினர் அமைத்த தடுப்புகளை தகர்த்தெறிந்து போராட்டத்தை மிகவும் சக்தி வாய்ந்த நிலைக்கு இழுத்துச் சென்றனர். காவல்துறையினர் இந்த திடீர் மாற்றத்தால் நிலை குலைந்தனர். அதோடு செய்வதறியாது திகைத்து அப்படியே ஒதுங்கி நின்று விட்டனர்.

nellai_agitation_621

காவல்துறையினர் சுதாரிப்பதற்குள் தங்கநாற்கர தேசிய நெடுஞ்சாலையின் கீழ்பகுதி அணுகுசாலை வழியாக இந்தியா சிமெண்ட்ஸ் நிறுவனத்தை நோக்கி போராளிகள் ஓடத்தொடங்கினர். இதைத் தொடர்ந்து காவல்துறையினரும் தங்கள் ஓட்டத்தை போராளிகளின் பின்னால் தொடர்ந்தனர். நிறுவனத்தின் அருகில் வந்த போராளிகளை இந்த போராட்டத்தின் ஒருங்கிணைப்பாளரும், மனிதநேய மக்கள் முன்னேற்ற கழகத்தின் மாநிலத் தலைவருமான ரபீக் நிற்குமாறு அறிவுறுத்தியதின் பேரில் நெடுஞ்சாலையில் முதலில் கூடிய போராளிகள் காவல்துறையின் சில நேர்மையான அதிகாரிகளின் வேண்டுகோளுக்கிணங்கி மேற்புறம் உள்ள அணுகு சாலையில் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டனர். மேலும் அவர்கள் இந்தியா சிமெண்ட்ஸ் நிர்வகத்திற்கு எதிராகவும், அதன் இயக்குனர் சீனிவாச ஐயங்காருக்கு எதிராகவும் குரல் எழுப்பினர். இதில் பெண்களும் அடங்குவர். பின் ஒருங்கிணைப்பாளர் ரபீக் போராளிகள் மத்தியில் உரையாடி நிர்வாகத்தையும், அதற்குத் துணை போகும் அதிகாரிகளையும் எச்சரித்தார். பின் தங்கள் தீர்மானங்களையும் இது ஆரம்பம் என்பதையும் நிறுவனத்திற்கு எச்சரிக்கையாக விடுத்த அவர், அனல்மின் நிலையம் மூடப்படாவிடில் இந்த போராட்டம் இதை விட கூடுதல் சக்தியுடன் தொடரும் எனவும் எச்சரித்தார். இறுதியில் காவல் துறை சுமார் 600 போராளிகளை கைது செய்து பின் மாலையில் விடுவித்தனர் (பெண்கள், குழந்தைகள் உட்பட)

இந்த மாபெரும் போராட்ட சம்பவமானது ஊடகங்களால் மூடிமறைக்கப்பட்டுள்ளது. இரு தினப்பத்திரிக்கைகள் மட்டுமே சிறிய அளவில் செய்தியை வெளியிட்டுள்ளன. இந்த மாபெரும் போராட்ட சம்பவம் மூடிமறைக்கப்பட்டிருப்பது ஜனநாயகத்தின் கையாலாகத் தன்மையையே நமக்கு எடுத்துரைக்கிறது.

கூடங்குளம் பிரச்சினையில் மத்திய, மாநில அரசுகளை எதிர்த்து பின்னடைவை சந்தித்த நாம், இந்த அனல்மின் நிலையப் பிரச்சினையில் ஒரு நிறுவனத்திடம் தோல்வியடைவது நம் பாதுகாப்பை கேள்விக்குறியாகவே ஆக்குகிறது. இது எதிர்காலத்தில் தொடராமல் இருக்க இப்போதே இதற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டியது அவசியம். எனவே உணர்வுள்ள, சமூக அக்கறையுள்ள அன்பர்கள் இந்தச் செய்தியை நாடு முழுவதும் பரப்ப உதவுங்கள். எங்கள் போராட்டத்திற்கு வலுசேர்க்க உதவுங்கள்.

Comments

5 comments

5
கி.பிரபா
எங்கே எல்லாம் ஒடுக்கப்பட்டவர்களும் நசுக்கப்பட்டவர்களும் வாழ்கிறார்களோ! அங்கெல்லாம் தான் உயர்ந்த சாதியினர் எனத் தனக்குத் தானே கூறிக் கொள்ளும் இந்து முன்னணியினரும் அதைக் கொண்டு கூழினைக் குடிக்கும் பிள்ளை, முதலியார்,செட்டியார் மற்றும் பிராமணன் ஆகியோர் அட்டூழியம் செய்து முழுப்பூசனியைச் சோற்றில் மறைத்து அவர்களின் வாரிசுகளுக்கு மட்டுமே வாழ வழி தேடிக் கொள்கின்றனர். அந்த வகையில் உருவானதே மதுரா கோட்சு நிறுவனம். இந்தியா சிமெண்டு நிறுவனம், சில வங்கிகள் உட்பட ஆகும் இதில் வேடிக்கை என்னவென்றால் தாழ்த்தப்பட்ட, ஒடுக்கப்பட்ட, வெறுக்கப்பட்ட ஒரு சிலருக்கு மட்டும் [வாயை அடைப்பதற்காக] வேலை கொடுத்திருப்பார்கள். குறிப்பாகச் சொன்னால் அவர்களுக்கு மற்றவர் சொல்லும் வேலையைத் தவிர வேறெதுவும் தெரியாது. அப்படிப்பட்ட மனநில உள்ளவர்களை மட்டுமே தேர்ந்தெடுத்துப் பணிகளைத் தந்திருப்பார்கள்.ஆக உயர் சாதியனர் எனப்படும் மக்களுக்கு வாழ்வதற்குரிய வகையில் தேவைகள் அனைத்தையும் ஏற்பாடு செய்யவே பொய்யான தகவல்களைத் தந்து அங்கிருக்கும் விளைச்சல் நிலங்களை எல்லாம் தமக்கு உரிமையாக்கி இருப்பார்கள் என்பதே உண்மை.
Mohammed khan.J
சரிதான் பிரபா இந்த நிலை மாற்றப்பட வேண்டும் அதற்காக குரல் கொடுக்க முயற்சிப்போம்
jaysmani
போராடும் கட்டாயத்தில் தமிழர்கள் தள்ளப்பட்டுள்ள்ர்கள்
அரசியல் கட்சிகளெல்லாம் மக்கள்முன் அடிதுக்கொண்டலும்
கொள்ளையடிப்பதில் இணைந்துவிடுவார்கள்
ram
இந்த எனது எதிர்வினை இந்த கட்டுரையை எழுதியவரைவிட இதை வெளியிட்ட கீற்று ஆசிரியர் குழுவினருக்கே.

இந்த கட்டுரையில் ஒரு இடத்தில் இப்படி எழுதப்பட்டிருக்கிறது.

"திருடர்கள் முன்னேற்ற கழகம் என தமிழக மக்கள் பலராலும் செல்லமாக அழைக்கப்படும் ஒரு போலி திராவிட சாயம் பூசிய கொள்ளைக்குடும்ப கட்சியின் கொள்ளைக்கார உறுப்பினர்கள் யார் வந்தாலும் இந்த ஆலையின் விருந்தினர் மாளிகையில்தான் தங்குவார்கள்."

இந்த வரிகள் திமுக என்கிற கட்சியை குறிப்பதாகவே நான் புரிந்துகொள்கிறேன், நான் வேறொருகட்டுரையில் தன்னைத்தானே "“ஞாநி" என்று விதந்தோதும் சுயமோகியை அக்கிரகாரத்து அராத்து என்று எழுதியதை, அராத்து என்கிற வார்த்தைகளை நீக்கிவிட்டு பிரசுரித்திருந்தீர்கள். அதே கட்டுரைக்கு துரை இளமுருகு எழுதியிருந்த எதிர்வினையிலும் சில சொற்கள் நீக்கப்பட்டிருப்பதை பார்த்தேன்.

எதிர்வினைகளில் அராத்து என்கிற வார்த்தைக்கு அவ்வளவு தூரம் நாகரிகம் பார்த்த நீங்கள், இந்த கட்டுரையில் ஒரு கட்சியை ஒட்டுமொத்தமாக திருடர்கள் முன்னேற்றக்கழகம் என்று சொல்வதை எப்படி அனுமதிக்கிறீர்கள்? அது திமுக மீதான விமர்சனமல்ல. மாறாக ஒரு கட்சியை ஒட்டுமொத்தமாக திருடர்கள் கட்சி என்று முத்திரை குத்தும் செயல். விமர்சனத்துக்கும் முத்திரை குத்தும் செயலுக்கும் வேறுபாடு இருக்கிறது என்பதை நீங்கள் ஏற்பீர்கள் என்று இன்னமும் எதிர்பார்க்கிறேன். திமுகவையோ அதன் தலைமையையோ அல்லது அந்த கட்சியை சார்ந்தவர்களையோ விமர்சிக்க எல்லோருக்கும் உரிமை இருக்கிறது. அதை இங்கே நான் கேள்வி கேட்கவில்லை. மாறாக ஒரு ஒட்டுமொத்த கட்சியை திருடர்களின் கட்சி என்று போகிற பொக்கில் ஒரு அரசியல் அரைவேக்காடு சொல்வதும், அதை நீங்கள் பிரசுரிப்பதும் எந்த விதத்தில் சரி என்பதே என் கேள்வி.

ஆரம்பம் முதலே உங்கள் இணையதளத்தை தொடர்ந்து கவனித்துவருகிறேன். அனைத்து கருத்துக்களுக்குமான இடம் என்று துவக்கத்தில் காட்டிய தோற்றத்தை காலப்போக்கில் நீங்கள் தொலைத்துவிட்டிருக்கிறீர்கள் என்பதை கண்டிப்பாக உங்களுக்கு சுட்டிக்காட்டுவது அவசியம். அதை நீங்கள் கவனமாக திட்டமிட்டு செய்தீர்களா அல்லது அது காலப்போக்கில் அப்படியானதா என்பத்ற்கான விடை என்னிடம் இல்லை. அதை நீங்கள் மட்டுமே உங்கள் மனசாட்சியிடம் (இன்னமும் அப்படி ஒன்று உங்களுக்கு இருந்தால்) கேட்டு தெரிந்துகொள்வது அவசியம். ஆனால் எந்னைப்போன்ற திராவிட இயக்க ஆதரவாளர்கள் மத்தியிலும் திமுகவுக்கு ஆதரவாக வாக்களிக்கக்கூடியவர்கள் மத்தியிலும் நீங்கள் மிக நுட்பமாக திமுக எதிர்ப்பை விதைத்து வளர்த்துவருகிறீர்கள் என்கிற கருத்து வலுப்பட்டுவிட்டது. அதை நீங்கள் மறுப்பீர்களானால் ஒரே ஒரு அளவுகோலின் மூலம் நீங்கள் என் குற்றச்சாட்டை மறுக்கலாம். கடைசியாக நீங்கள் வெளியிட்ட நூறு கட்டுரைகளில் திமுக ஆதரவு எத்தனை, திமுக மற்றும் திராவிட இயக்க எதிர்ப்பு எத்தனை என்கிற புள்ளிவிவரங்களை தொகுத்து பார்த்து தெளிவு படுத்தினால் என் கருத்து தவறாக இருக்கும் பட்சத்தில் நான் திருத்திக்கொள்கிறேன். ஆனால் அப்படியானதொரு புள்ளிவிவரம் என்கருத்தை வலுப்படுத்தும் என்பதே என் கருத்து.

குற்றப்பரம்பரை சட்டம் கொண்டுவந்த வெள்ளைக்காரனின் செயலுக்கு வரலாற்றாசிரியர்கள் கடுமையான கண்டனம் தெரிவித்துவரும் அந்த சட்டத்தின் நூற்றாண்டில், உங்களைப்போன்றவர்கள் திமுக என்கிற கட்சியை புதிய குற்றப்பரம்பரையாக உருவாக்க இடமளிக்கிறீர்கள் என்பது காலத்தின் கோலமல்லவா? அதைவிட முக்கியமாக நம் சமகல சூழலில், உலக அளவில் சந்தேகக்கண்கொண்டு பார்க்கப்படும் முஸ்லீம் சமூகத்தை சார்ந்த ஒருவரே அதை செய்கிறார் என்பது காலவிசித்திரத்தின் மிகக்கொடூரமான நிதர்சனம்.

கடைசியாக இந்த கட்டுரையை எழுதியவருக்கு சில கேள்விகள்.

"திருடர்கள் முன்னேற்ற கழகம் என தமிழக மக்கள் பலராலும் செல்லமாக அழைக்கப்படும்" என்று எழுதியிருக்கிறீகள். நீங்கள் ஏதாவது பொது வாக்கெடுப்பு நடத்தி இதை கண்டுபிடித்திருக்கிறீர்களா? எதன் அடிப்படையில் இப்படி பொத்தாம்பொதுவில் ஒரு குற்றச்சாட்டை வைக்கிறீர்கள். உங்கள் பெயரில் இருந்து நீங்கள் ஒரு முஸ்லீம் என்று தெரிகிறது. தமிழ்நாடில் பரவலாக முட்டாத்துலுக்கன் என்றும் முக்கா துலுக்கன் என்றும் கூட முஸ்லீம்கள் அழைக்கப்படுகிறார்கள். அதை கொண்டு முஸ்லீம்களை குறிக்கலாமா? அது சரியா? நீங்கள் அதை ஏற்பீர்களா? அதைவிட முக்கியமாக தமிழ்நாட்டில் நடந்த குண்டுவெடிப்பு சம்பவங்களில் பெரும்பாலும் முஸ்லீம்கள் மீது தான் குற்றச்சாட்டுக்கள் பதியப்பட்டு நீதிமன்றங்களில் தண்டிக்கப்பட்டிருக்கிறார்கள். அதை வைத்து குண்டுவைக்கும் முஸ்லீம்கள் என்று இஸ்லாமியர்களை அழைக்கலாமா? எது எவ்வளவு பெரிய அபத்தம் மட்டுமல்ல ஆபத்தான பின்விளைவுகளை ஏற்படுத்தும் என்பது அர்சியல் கட்சியில் இருக்கும் உங்களுக்கு புரியவில்லையா? அதென்ன திமுகவை திட்டுவது என்றால் என்னவேண்டுமானாலும் திட்டலாம் என்கிற திமிர்? இது ஒருவகையான மேல்தட்டு மனப்பாங்கின் மிக கேவலமான வெளிப்பாடாக உங்களுக்கு படவில்லையா? ஒரு கால்த்தில் தீண்டத்தகாதவர்களை ஜாதிப்பெயர் சொல்லி திட்டிய மேல்ஜாதி ஆண்டைகளின் நடத்தைக்கும் உங்களுக்கும் என்ன வேறுபாடு?

தவறு செய்வது மனித இயல்பு என்பதையும் அதிலிருந்து நீங்கள் வெளியில் வரவேண்டும் என்கிற எதிர்பார்ப்பிலுமே இந்த எதிர்வினையை எழுதியிருக்கிறேன். நீங்கள் உண்மையயிலேயே ஆரோக்கியமான அரசியல் விமர்சனத்திற்கான இணைய்தளமாக இருந்தால் இந்த எதிர்வினைக்குபிறகாவது அந்த குறிப்பிட்ட வரிகளை திரும்பபெறுங்கள். மறுப்பீர்களானால், உங்களை புறக்கணிப்பதை தவிர எங்களைப்போன்றவர்களுக்கு வேறு வழியில்லை. ஏனென்றால் நாகரிகமற்றவர்களிடமிருந்து விலகுவது தான் நம் நாகரிகத்தை காத்த்குக்கொள்ள இருக்கும் ஒரே வழி
Mohammed khan
வணக்கம் ராம் உங்களின் நியாயமான சாடல்களை ஏற்றுக்கொள்கிறேன். ஒரு அரசியல் அமைப்பின் உறுப்பினர் என்ற அடிப்படையில் உங்களுடய தர்க்கம் சரிதான் ஆனால் நீங்கள் நினைப்பது போல நான் எந்த அரசியல் பின்புலமும் உள்ளவன் இல்லை. அரசியல் ஆதாயத்துகாக எனது கருத்துக்களை பரப்ப நினைப்பவனும் இல்லை. ரஷ்ய புரட்சியாளர் ஸ்டாலின் கூறிய படியான சுயநலவாதியாகவும், சந்தர்ப்பவாதியாகவும் இல்லாத தலைமையை விரும்பாத ஒரு நல்ல தலைவனின் தன்னலமற்ற ஆட்சியில் இந்த சமூகம் இன்புற விரும்புபவன் நான். இந்த கட்டுரையை வைத்து என்னை அரைவேக்காடாக எடை போட்ட உங்கள் முழுவேக்காடான புத்திசாலித்தனத்தை நான் மெச்சுகிறேன். நான் திராவிட சாயம் பூசி மக்களை ஏமாற்றுவதையே தொழிலாக கொண்டிருக்கும் அனைத்து சந்தர்ப்ப வாதிகளையும் எப்போதும் எதிர்த்து கொண்டுதான் இருப்பேன். நீங்கள் ஆதரவு கொடுக்க விரும்புவது கார்ப்பரேட் நிறுவனங்களின் கைகூலியாக வலம் வரும் ஊடகங்களையா? இல்லை சாதீய மத சாயம் பூசிய ஊடகங்களையா? இல்லை அரசியல் பலத்தை வளர்ப்பதற்காக வலம் வரும் ஊடகங்களையா? நீங்கள் குறிப்பிட்ட இந்த துலுக்கனுக்கு ஒரு சிந்தனை உண்டு "தமிழன் என்பது என் இனம், இஸ்லாம் என்பது நான் விரும்பி ஏற்று கொண்டிருக்கும் மார்க்க நெறி, ஆனால் இந்தியன் என்பது என்மீது திணிக்கப்பட்ட, திணிக்கப்பட்டுக்கொண்டிருக்கும் ஒரு தேசீயம்". இதுதான் என் அரசியல் பார்வை. திருட்டு என்பது அரசியல் அல்ல அது நிர்வாகம் தொடர்பான ஒரு சமூக விரோதம். உங்கள் கேள்விகளுக்கு நான் விரிவான பதில் தர விரும்புகிறேன். அந்த பதிலை இறைவன் நாடினால் எனது அடுத்த கட்டுரையாக பதிவு செய்கிறேன். மற்றொரு தகவல் நான் சாயம் பூசப்ப்பட்டவனாக இருக்க விரும்பவில்லை எனது முகநூல் பக்கத்தை பாருங்கள் எனது விமர்சனம் இப்போதைய ஆளும்கட்சியையும், எதிர்கால நாற்காலி கனவுகளுடனும் அரசியல் செய்து கொண்டிருக்கும் அனைத்து சமூக விரோத அரசியல் மாபியா கும்பல்களையும் பதம் பார்த்தே இருக்கும். இந்த தளத்தின் மீது நேங்கள் ஏற்படுத்த முயற்சிக்கும் மாயையான வெறுப்பையும். என் மீது நீங்கள் திணிக்க முயற்சிக்கும் மதவாத முத்திரையையும் தகர்க்கும் விதமாகவும் உங்கள் தவறான புரிந்துணர்தலை( நீங்கள் நடு நிலையாளராகவும், நியாயவானாகவும், உண்மையான யோக்கியராகவும் இருந்தால்) தீர்க்கும் விதத்திலும் எனது அடுத்த கட்டுரை இருக்கும். சந்திப்போம் தோழரே.

Leave a comment

Fields marked with * are required.

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.