"நாங்களும் மனுஷங்கடா" என்று கடும் ஆவேசத்துடன் கவிதை எழுதினார் இன்குலாப். யார் என்ன கவிதை எழுதினால் எங்களுக்கு என்ன வந்தது என்ற நினைப்பில் இந்திய பார்ப்பன அரசு தன்னுடைய நிலையில் எந்த வித மாற்றமும் இன்றி பார்ப்பன நலன்களைத் தவிர வேறு எதைப் பற்றியும் கவலைப்படாமல் சொகுசாகத் தன் பயணத்தைத் தொடர்ந்து கொண்டு இருக்கிறது. இந்தியாவில் நிகழும் நிகழ்வுகள் மட்டுமின்றி, இந்திய அரசின் தொடர்பான அயல் நாட்டு நிகழ்வுகளிலும் இது தெளிவாகத் தெரிகிறது.

          நேபாள நாட்டில் உள்ள பசுபதிநாதர் கோயிலில் 5.9.2009 அன்று நேபாள மக்கள் தங்கள் நாட்டிற்கு இந்தியப் பூசாரிகள் வேண்டாம் என்றும் தங்கள் நாட்டுப் பூசாரிகளே பூசை செய்யட்டும் என்றும் கூறி அங்கு பூசை செய்யச் சென்று இருந்த இரு பார்ப்பனப் பூசாரிகளை வழி மறித்து முழக்கம் இட்டு உள்ளனர். அவ்வளவு தான்; ஏதோ பிரளயமே ஏற்பட்டு விட்டது போல இந்திய அரசு துள்ளி எழுந்து விட்டது. நேபாளத்தில் உள்ள இந்திய தூதரக அதிகாரிகள் மட்டுமின்றி இந்தியாவில் உள்ள அயல் நாட்டுத் துறை அமைச்சகமும் பார்ப்பனப் பூசாரிகளின் பாதுகாப்பு குறித்து கேள்விகளுக்கு மேல் கேள்விகள் கேட்டு நேபாள அரசைத் துளைத்து எடுத்து விட்டனர். இந்திய நேபாள உறவே முறிந்து போய் விடும் என்ற அளவிற்கு நேபாள அரசை மிரட்டவும் செய்தனர்.

          ஆனால் ஐக்கிய அரபு எமிரேட்டில் உள்ள ஷார்ஜாவில் ஒடுக்கப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த 16 பஞ்சாபிகளும், ஒரு  ஹரியானா மாநிலத்தவரும் கள்ளச் சாராய வியபாரிகளால் கொலை வழக்கில் சிக்க வைக்கப்பட்டனர். கள்ளச் சாராய வியாபாரிகள் ஒரு பாகிஸ்தானியரைக் கொன்று அப்பழியை இவர்கள் மேல் சுமத்தியுள்ளனர். இந்த 17 இந்தியர்களுக்கும் அரபு மொழி சரியாகத் தெரியாத காரணத்தால் தங்கள் தரப்பு நியாயத்ததை எடுத்து உரைக்க முடியவில்லை. இவ்வழக்கைப் பற்றி அவர்களுடைய உறவினர்கள் மூலம் அறிந்து கொண்ட நவ் கிரண் சிங் என்ற மனித உரிமைக்காகப் போராடும் வழக்கறிஞர் ஷார்ஜா சென்று விசாரித்து அவ்விவரங்களை 30.5.2010 அன்று சண்டிகர் நகரில் வெளியிட்டு இருக்கிறார். ஐக்கிய அரபு எமிரேட் அரசு, அந்த 17 இந்தியர்களும் கைதான உடன் இந்திய தூதரகத்திற்குத் தகவல் கொடுத்துள்ளது. ஆனால் இந்திய தூதரகத்தினர் எந்த ஒரு நடவடிக்கையையும் எடுக்கவில்லை.

          உலகோர் அனைவராலும் ஒப்புக் கொள்ளப்பட்ட தூதரகப் பணிகளின்படி தன்னாட்டு மக்கள் ஏதாவது பிரச்சினையில் சிக்கிக் கொண்டால், அவர்களுக்குத் தேவையான அனைத்து உதவிகளையும் செய்வது தூதரகங்களின் அடிப்படைக் கடமை. முக்கியமாக மொழி தெரியாமல் திண்டாடும் பொழுது, மொழி பெயர்த்து உதவி செய்வது தூதரகத்தின் தவிர்க்க முடியாத கடமை என்று கூறிய நவ் கிரண் சிங், இந்திய தூதரகம் 17 இந்தியர்கள் கைது செய்யப்பட்ட தகவலைப் பதிவு செய்ததைத் தவிர வேறு எந்த நடவடிக்கையையும் எடுக்கவில்லை என்றும் தெரிவித்தார்.

          பகவத் கீதைக்கு 'ஹரே ராமா ஹரே கிருஷ்ணா' இயக்கத்தின் நிறுவனர் எழுதிய உரை, மாற்றுக் கருத்தினர் மீது வன்முறையைத் தூண்டுவதாக உள்ளது என்றும் ஆகவே அந்த உரைக்குத் (நன்றாகக் கவனிக்கவும் - பகவத் கீதையின் மீது அல்ல; பகவத் கீதையின் மொழி பெயர்ப்பு மீதும் அல்ல; பகவத் கீதைக்கு யாரோ ஒரு தனி நபர் எழுதிய உரைக்குத் தான்) தடை விதிக்க வேண்டும் என்றும் இரஷ்ய நாட்டின் சைபீரியாவில் உள்ள நீதிமன்றம் ஒன்றில் அங்குள்ள கிருத்தவ அமைப்பு ஒன்று வழக்கு தொடர்ந்தது. அவ்வழக்கை விசாரித்த நீதிமன்றம் 28.12.2011 அன்று மனுதாரரின் கோரிக்கையை ஏன் ஏற்கக் கூடாது என்று விளக்கம் அளிக்கும் படி 'ஹரே ராமா ஹரே கிருஷ்ணா' இயக்கத்திற்கு ஒரு தாக்கீது (notice) அனுப்பியது.  அவ்வளவு தான்; இந்திய நாடாளுமன்றமே அல்லோலகல்லோலப் பட்டுப் போய் விட்டது. இந்திய அரசும் இந்திய தூதரகமும் இரஷ்ய அரசுடனும் தூதரகத்துடனும் போர்க் கால அடிப்படையில்பேச்சு வார்த்தை நடத்தி, அந்த வழக்கைத் தள்ளுபடி செய்ய வைத்து விட்டன.

          (இப்பிரச்சினையில் நாத்திகர்கள் என்று தங்களைப் பிரகடனம் செய்து கொண்டோர்கள் எந்திரத்தனமாக, பகவத் கீதை தடை செய்யப்பட வேண்டிய நூலே என்று கருத்து வெளியிட்டனரே தவிர, சைபீரிய நீதிமன்றம் பகவத் கீதைக்குத் தடை விதிக்க எத்தனிக்கவும் இல்லை என்றும், ஒரு தனி நபரின் உரைக்குத் தடை விதிப்பதைப் பற்றிய வழக்கு விசாரணையில் தாக்கீது தான் அனுப்பி இருந்ததையும் சுட்டிக் காட்டி உயர் சாதிக் கும்பலினர் தேவையற்ற பீதியைக் கிளப்புவதை மக்களிடையே அம்பலப்படுத்தத் தவறி விட்டனர்.)

          டைடானிக் கப்பல் விபத்து போன்று 'கோஸ்டா கன்கோர்டியா' என்ற சொகுசுக் கப்பல் ஒன்று 13.1.2012 அன்று இத்தாலி நாட்டிற்கு அருகில் விபத்துக்கு உள்ளானது. அக்கப்பலில் 70 நாடுகளைச் சேர்ந்த சுமார் 1200 பணியாளர்கள் இருந்தனர். அவர்களில் 202 பேர்கள் இந்தியர்கள். உயிர் தப்பிய அனைவரும் மீட்புப் படகுகள் மூலம் இத்தாலி நாட்டிற்கு வந்தள்ளனர். அவர்களை அழைத்துச் சென்று, நாடு திரும்புவதற்கு வேண்டிய உதவிகள் செய்வதற்காக இந்தியாவைத் தவிர மற்ற 69 நாட்டு தூதரகங்களில் இருந்தும் அதிகாரிகளும் ஊழியர்களும் வந்திருந்தனர். இந்தியர்கள் மட்டும் அனாதைகளாக விடப்பட்டு, செல்லும் வழி அறியாது திகைத்துக் கொண்டிருப்பதைப் பார்க்க, உலக அரங்கில் இந்தியாவின் மானம் சந்தி சிரித்தது. இரண்டு நாட்கள் சிரிப்பாய்ச் சிரித்த பின் வேண்டா வெறுப்பாக இந்திய தூதரகத்தினர் செயல்பட்டுள்ளனர்.

          நேபாள நாட்டு மக்கள் தங்கள் நாட்டிற்கு அந்நிய நாட்டுப் பூசாரிகள் வேண்டாம் என்று சொல்வதிலும், அமைதியான முறையில் வழிமறிப்பு செய்ததிலும் எவ்விதத் தவறும் இல்லை. அப்படி இரு பார்ப்பனப் பூசாரிகள் தங்கள் வேலையை இழப்பதால் இந்தியாவின் பொருளாதாரம் சரிந்து விடப் போவதில்லை. ஆனால் பிரளயம் ஏற்பட்டு விட்டது போன்று துடிதுடிப்புடன் இந்திய அரசு செயல்பட்டது. அதே போல பகவத் கீதை விஷயத்திலும் சைபீரிய நீதிமன்றம் பகவத் கீதையை விவாதப் பொருளாக்கவில்லை. அதன் மொழி பெயர்ப்பையும் விவதப் பொருளாக்கவில்லை. பகவத் கீதைக்கு எத்தனையோ பேர்கள் உரை எழுதி இருக்கிறார்கள். அவற்றை எல்லாம் கூட விவாதப் பொருளாக்கவில்லை. ஒரே ஒரு தனி நபரின் உரையை மட்டும் அது வன்முறையைத் தூண்டுவதாகத் தொடுக்கப்பட்ட வழக்கில் தாக்கீது மட்டுமே அனுப்பியது. இதில் ஏன் இந்திய அரசு தலையிட வேண்டும்? பார்ப்பனர்களுக்கு எதிரானதாக ஒரு சிறு அசைவையும் - அது எவ்வளவு தான் நியாயமானதாக இருந்தாலும் - அனுமதிக்கக் கூடாது என்பதில் இந்திய அரசு முனைப்பாய் இருப்பது இதில் இருந்து தெரிந்து கொள்ளலாம்.

          அதே சமயத்தில் ஒடுக்கப்பட்ட மக்கள் ஒரு தவறும் செய்யாத நிலையிலும் கொடூரமான துன்பங்களைச் சந்தித்தாலும் அதைப் பற்றி இந்திய அரசு மனதிலும் நினைப்பதில்லை. ஒடுக்கப்பட்ட மக்களே நீங்களும் இந்தியர்கள் தானே? இந்திய அரசு உயர் சாதிக் கும்பலினரைத் தவிர மற்றவர்களை இந்நாட்டுக் குடிமக்களாகவே நடத்துவது இல்லையே? இதை மாற்ற வேண்டும் என்று தோன்றவே இல்லையா? இதற்கான வழி தான் என்ன?

          அரசு எந்திரத்திலும் சமூக பொருளாதார நடவடிக்கைகளிலும் கேந்திரமான இடங்களில் பார்ப்பனர்கள் மட்டுமே ஆக்கிரமித்துக் கொண்டு இருப்பது தான் இதற்குக் காரணம். அப்படிப்பட்ட இடங்களில் வேலை செய்வதற்கான தகுதி அதிகமாகவே படைத்த ஒடுக்கப்பட்ட வகுப்பு மக்கள் இருக்கவே செய்கின்றனர். ஆனால் அவர்களுக்கு வாய்ப்பு தராமல் திறமைக் குறைவாக இருந்தாலும் பார்ப்பனர்கள் தான் வேண்டும் என்று அவாளே நியமிக்கப்படுகின்றனர்.  அவாள் அவாளுக்காகத் தான் செயல்படுகிறார்களே ஒழிய நம்மைப் பற்றிக் கவலைப்படுவது இல்லை. அது மட்டுமல்ல; ஒடுக்கப்பட்ட மக்கள் போதுமான அளவிற்கு, கேந்திரமான நிலைக்கு வந்தால் அவாளுடைய அயோக்கியத்தனமான சுகங்கள் பறி போய் விடும் என்ற அச்சத்திலும் நமக்கு வாய்ப்பு தரக் கூடாது என்பதில் மிக மிக ..... மிக உறுதியாக இருக்கிறார்கள். ஒடுக்கப்பட்ட மக்கள் தங்களுடைய நலன்களை முன்னெடுக்க வேண்டும் என்றால் நம்முடைய பங்கை நாம் பெற்றே தீர வேண்டும். அதற்கு ஒரே வழி கல்வி, வேலை வாய்ப்பு, மற்றும் அனைத்து சமூக, பொருளாதார நடவடிக்கைகளிலும் விகிதாசாரப் பங்கீடு முறையை அமல்படுத்துவது தான்.

- இராமியா (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)

Comments

27 comments

27
xxxx
ஏனையா உமக்கு பிராமணர்களை எதிர்ப்பது தவிர வேறு வேலையே கிடையாதா
Ramea
Will you get me a good job Mr./Ms. xxxx?
ஆறுமுகம்
தமிழகத்தில் 69 சதவீத் அளவு சட்டப்படி பார்ப்பனர் கள் பதவிக்கு வரவே முடியாது. மீதமுள்ள 31 சதவீதத்திலும் பாப்பனரகள் மட்டுமே தேர்ந்தெடுக்கப்படுவதில்லை யே. அதை விடுஙகள் 21 சதவீத இடஒதக்கீட்டில் 3 சதவீதம் அருந்ததியர்களுக்கு ஏன் வழங்கப்பட்டது. பாரப்பனர்களா அங்கு ஆதிகம் செலுத்தினர்? அந்த 3 சதவீதத்தையும் கூட கொடுக்க கூடாத என்று பார்ப்பனர்களா பொராடினர்? மதுரை காமராஜர் பல்கலை தமிழ்துறையில் அருந்ததியர் பிரிவுக்கு ஒதுக்கிய இடத்தில் அருந்ததியர் பிரிவைச் சேர்ந்தவர் நேர்முகத்தேர்வில் கலந்து கொண்ட பின்னரும் அதை அருந்ததியர் அல்லாதவர் ஒருவருக்கு வழங்கியுள்ளனர். அப்படியனால் அதில் நியமிக்கப்பட்டவர் பார்ப்பனரா அல்லது பாரப்பனர் அல்லாதவரா?
இராமியா
நண்பர் ஆறுமுகம் அவர்களே, அரசியல் அமைப்புச் சட்டத்தின் நோக்கதிற்கு எதிராக உச்ச நீதி மன்றம் அளித்துள்ள தீர்ப்பின் படி இட ஒதுக்கீடு 50% தான். 69% என்பதை, கூடுதல் இடங்களை உருவாக்குதல் போன்ற ஏமாற்று வித்தைகளின் மூலம் செல்லாததாக்கி விட்டார்கள். இதை விட முக்கியமாகக் கவனிக்க வேண்டியது என்ன‌வென்றால் தமிழக அரசு வேலை வாய்ப்புகள் பயனற்றவை என்று பார்ப்பனர்கள் துப்பி விட்டுப் போய் விட்டார்கள். அவர்கள் கடித்துத் துப்பிய சக்கையை வைத்துக் கொண்டு நாம் போராடிக் கொண்டு இருக்கிறோம்.

3% பார்ப்பனர்கள் 90% க்கும் மேல் ஆக்கிரமித்துக் கொண்டிருக்கும் அநியாயத்தை வேரறுத்தாலே, அதனால் கிடக்கும் வாய்ப்புகளின் மூலம் நீங்கள் குறிப்பிடும் அருந்தியர்களுக்கு இழைக்கப்படும் அநியாயம் தானாகவே மறைந்து விடும். அப்படி மறையவில்லை என்றால் அதையும் போராடி ஒழிக்கத் தான் வேண்டும் என்பதில் மறு கருத்து இல்லை.

நண்பரே, ஒடுக்கப்பட்ட மக்கள் தவறு செய்யாத நிலையிலும் சங்கடத்தில் மாட்டிக் கொள்வதையும், அபபொழுதும் இந்திய அரசு சுண்டு விரலைக் கூட அசைக்காமல் இருப்பதையும், வன்முறையைத் தூண்டும் விளக்கங்களை எழுதும் குற்றங்களைச் செய்தாலும், பார்ப்பனர்களுக்கு ஆதரவாக முழு வல‌ிமையைப் பயன்படுத்துவதையும் பார்க்கும் பொழுது பார்ப்பனர்களுக்கு எதிராக நாம் அணி திரள வேண்டியதன் அவசியம் புரியவில்லையா?
ஆறுமுகம்
எனது பின்னூட்டத்திற்க்கான பதில் இல்லை. அப்படியானால் தமிழக அரசு வேலைவாய்ப்பில் இடஒதுக்கீடு தேவையில்லை தானே அதான் பார்ப்பனர்கள் கடித்து துப்பிவிட்டு போய்விட்டனர். பின்னர் ஏன் இடஒதுக்கீடு. அருந்ததியர்களுக்கு ஏன் உள் ஒதுக்கீடு. அதை யும் விட்டுவிடுவோம் பட்டியல் இனத்தில் நரிக்குரவர் சமுதாயம் என்ன பலனை அடைந்தது? ஏனைய சமுதாயத்தினராவது சொந்த மனை யுடன் கௌரவமாக வாழ்கின்றனர். அவர்கள் நிலை என்ன? எந்த பட்டியல் இனத்தினராவது அவர்களை வீட்டுக்குள் அணுமதித்து உணவு வழங்குவது உண்டா? அது ஏன் புதிரை வண்ணார் நாவிதர் இவர்கள் நிலை என்ன ? அவர்களை அடக்கி ஆதிக்கம் செலுத்துவது யார்? அதை உடைப்பது எப்படி? ஆதிக்க சாதி விடுமா?
இராமியா
திரு.ஆறுமுகம் அவர்களே, தங்களுடைய வினாக்களுக்கு விடை இருக்கவே செய்கிறது. ஒரு வேளை நீங்கள் பார்ப்பனராக இருந்தால் அதைப் புரிந்து கொள்ள மறுக்கலாம். 3% பார்ப்பனர்கள் 90% வாய்ப்புகளைச் சுருட்டிக் கொண்டு போய்விட்ட பிறகு மீதம் உள்ள 10% வாய்ப்புகளை 97% மக்கள் பங்கிடும் பொழுது யாருக்கும் போதாமல் போவதால் நீங்கள் குறிப்பிடும் குறைபாடுகள் நிகழ்கின்றன. 10% வாய்ப்புகளைப் பங்கிடுவதைப் பற்றியே பேசி ஒடுக்கப்ட்ட மக்களுக்குள் முரண்பாட்டை வளர்த்துக் கொண்டு இருப்பது சரியான அணுகுமுறை அல்ல. 3% பார்ப்பனர்கள் 3% க்கு மேல் பெறாமல் பார்த்துக் கொண்டால் தான் ஒடுக்கப்பட்ட மக்கள் தங்களுக்குள் பங்கிடும் போது இக்குறைபாடுகள் நிகழாமல் இருக்கும். தமிழக அரசு வேலை வாய்ப்பைப் பார்ப்பனர்கள் துப்பி விட்டுப் போய் விட்டதால் இட ஒதுக்கீடு தேவை இல்லை என்பது அவாளை மீண்டும் அழைத்து நம் கொஞ்ச நஞ்ச வாய்ப்புகளையும் பறி கொடுப்பதில் தான் முடியும். அது சரி, பார்ப்பனர்கள் அயோக்கியத்தனமாகச் சுருட்டி வைத்துக் கொண்டிருக்கும் வாய்ப்புகளை அவர்களிடம் இருந்து பறித்துக் கொண்டால் என்ன குடி முழுகிப் போய்விடும்? அனைத்து வகுப்பினரும் தங்களுக்கு உரிய பங்கைப் பெறும் பொழுது சாதிகளுக்கு இடையே உள்ள மோதல்களின் கூர்மை மழுங்கி விடும் அல்லவா? அதை ஏன் செவிமடுக்க மறுக்கிறீர்கள்?
ஆறுமுகம்
எனது பின்னூட்டத்திற்க்கான பதில் இல்லை.
இராமியா
திரு,ஆறுமுகம் அவர்களே, நீங்கள் பார்ப்பனராக இல்லாத பட்சத்தில் உங்கள் வினாக்களுக்கு விடை இருப்பது புரியும்.
ஆறுமுகம்
அதனால் தான் நான் கேட்கிறேன். நான் உங்கள் பின்புலத்தை ஆராய வில்லை உங்கள் கட்டுரை குறித்தே வினா எழுப்பியுள்ளேன் அதற்க்கு உரிய விளக்கம் அளிக்க வேண்டியது கட்டுரையாளரின் கடமை. முடிவுக்கு வருமுன் அணைத்தையும் ஆராய வேண்டும். நீங்கள் சொன்ன 50 சதவீதம் என்று எடுத்துக் கொண்டாலும் கூட 97 சதம் ஒருசமுதாயம் பெற முடியாது என்பது பள்ளி கணக்கு தெரிந்தால் போதும். தொடர்ந்து பொய்யை வலியுறுத்தினார் அதை ஆராயமல் அப்படியே ஏற்றுக் கொள்ள முடியாது கூறுவது யாராக இருந்தாலும், ( ஏன் அது கடவுளே இருந்தாலும்). பின்னூட்டத்தின் வினாக்களுக்கு விடை தேடுக.
இராமியா
ஒரு முறை ஒரு வழக்கறிஞர் தான் கேட்கும் வினாக்களுக்கு மட்டுமே விடையளிக்க வேண்டும் என்றும் கூடுதலாகப் பேசக் கூடாது என்றும் அதட்டினார். உடனே நான் அவர் கேட்கும் வினாக்களுக்கு மட்டும் விடை கூறி, தவறான முடிவுக்கு இட்டுச் செல்ல வேண்டுமா அல்லது என்னுடைய வழியில் விடை கூறி சரியான முடிவுக்கு இட்டுச் செல்ல வேண்டுமா என்று எதிர் வினா தொடுத்தேன். நீதிபதி சிரித்துக் கொண்டே இடைமறித்து என்னுடைய வழியில் விடை கூறுமாறு அனுமதித்தார். நண்பர் ஆறுமுகம் வினவுவதும் வழக்கறிஞரின் சாயலிலேயே உள்ளது.

ஆறுமுகம் அவர்களின் வினா
//21 சதவீத இடஒதக்கீட்டில் 3 சதவீதம் அருந்ததியர்களுக்கு ஏன் வழங்கப்பட்டது. பாரப்பனர்களா அங்கு ஆதிகம் செலுத்தினர்? அந்த 3 சதவீதத்தையும் கூட கொடுக்க கூடாத என்று பார்ப்பனர்களா பொராடினர்? மதுரை காமராஜர் பல்கலை தமிழ்துறையில் அருந்ததியர் பிரிவுக்கு ஒதுக்கிய இடத்தில் அருந்ததியர் பிரிவைச் சேர்ந்தவர் நேர்முகத்தேர்வில் கலந்து கொண்ட பின்னரும் அதை அருந்ததியர் அல்லாதவர் ஒருவருக்கு வழங்கியுள்ளனர். அப்படியனால் அதில் நியமிக்கப்பட்டவர் பார்ப்பனரா அல்லது பாரப்பனர் அல்லாதவரா?//

என்னுடைய விடை
//3% பார்ப்பனர்கள் 90% க்கும் மேல் ஆக்கிரமித்துக் கொண்டிருக்கும் அநியாயத்தை வேரறுத்தாலே, அதனால் கிடக்கும் வாய்ப்புகளின் மூலம் நீங்கள் குறிப்பிடும் அருந்தியர்களுக்கு இழைக்கப்படும் அநியாயம் தானாகவே மறைந்து விடும். அப்படி மறையவில்லை என்றால் அதையும் போராடி ஒழிக்கத் தான் வேண்டும் என்பதில் மறு கருத்து இல்லை//

ஐயா ஆறுமுகம் அவர்களே! ஊரைக் கொள்ளை அடிக்கும் கொள்ளையர்களைப் பற்றிப் பேசிக் கொண்டு இருக்கும் பொழுது சோற்றைத் திருடி உண்ணும் திருடனைப் பற்றி விரிவாகப் பேசிக் கொண்டு இருக்கிறீர்கள். அப்படி உணவைத் திருடி உண்டது ஒரு ஏழையின் வீட்டில் என்று கூறி அது தீவிரமான குற்றம் என்று உரக்க வாதிடுகிறீர்கள். அது குற்றம் தான். ஆனால் அதற்கு அடிப்படைக் காரணம் பார்ப்பனர்கள் தங்கள் தகுதிக்கு உரியதை விடக் கொடூரமான அளவிற்குச் சுருட்டி வைத்துக் கொண்டு இருப்பது தான் என்பதைச் செவிமடுக்கவே மறுக்கிறீர்கள். அருந்தியர்கள் இட ஒதுக்கீட்டில் வஞ்சிக்கப்பட்டு இருக்கிறார்கள் என்று (உங்கள் வினாவிற்கு மட்டும்) விடையைப் பெற்று, ஆகவே பார்ப்பனர்கள் வஞ்சிப்பது குற்றமல்ல என்ற முடிவிற்கு வர முயலுகிறீர்கள். அளவு மாற்றம் குணமாற்றத்தைக் கொடுக்கும் என்ற அடிப்படையில் நான் தரும் விடைகளைக் காண மறுக்கிறீர்கள்.

‌மேலும் 50% இட ஒதுக்கீடு இருப்பதால் பார்ப்பனர்கள் 97% பெற்று இருக்க முடியாது என்று கூறி இருக்கிறீர்கள். இட ஒதுக்கீடு என்பது பின் பற்றப்படுவதே இல்லை என்று புரிந்து கொள்வதை விட்டு விட்டுத் தலை கீழாகப் புரிந்து கொண்டாலென்ன செய்வது? ஜெகஜீவன்ராம் அவர்கள் இரயில்வே அமைச்சராக இருந்த பொழுது தாழ்த்தப்பட்ட மக்களுக்கான 18% இட ஒதுக்கீட்டில் 5% கூட நிரப்பப்படுவதில்லை என்பதைக் கண்டு, சட்ட பூர்வமாக 18% இடங்களை நிரப்பத் தனது அதிகாரம் முழுவதையும் பயன்படுத்தினார். ஆனால் அவரால் 10% கூட நிரப்ப முடியவில்லை. நிலைமை இப்படி இருக்கும் பொழுது (நீங்கள் பார்ப்பனராக இல்லாத பட்சத்தில்) அதைப் புரிந்து கொள்ளாத தங்கள் அப்பாவித்தனத்தைப் பற்றி இரக்கப் படுவதைத் தவிர வேறு ஒன்றும் செய்ய முடியவில்லை. தாங்கள் பார்ப்பனராக இருந்தால் உங்களுடைய இனத்திற்கு நீங்கள் சரியாகவே வேலை செய்கிறீர்கள்.
ஆறுமுகம்
உங்கள் வழக்கில் நீங்கள் எதிர்பர்ப்பது சரியான முடிவு வழக்கறிஞர் பார்வையில் அவரது செயல் சரியான முடிவு அது இங்கு கதைக்கு உதவாது. மதுரை காமாராஜர் பல்கலை பிரச்சினை மற்றும் அருந்ததியர் இட ஒதுக்கீட்டில் நிச்சியமாக பார்பனர் நியமிக்கப்படவில்லை என்று கூறமுடியும். அப்படியானால் அவர்கள் மீது ஆதிக்கம் செலுத்துவது யார் ? என்பதே கேள்வி. பறையர் சமுதாயத்தை சேர்ந்தவர் ஒரு நிறுவனத்தின் தலைமைப்பதவியல் உள்ளதால் அங்கு பெறும்பான்மையாக உள்ள பட்டியல் இனத்திலேயே மற்றொரு பிரிவினர் அவருக்கு அளிக்கும் தொல்லைகள் பற்றி உங்களுக்கு தெரியுமா? தமிழகத்தில் 69 சதவீதமும் மத்தியில் 50 சதவீதமும் பார்பனர்கள் பதவிக்கு வரவே முடியாது என்று நிலையை பலபத்தாண்டுகளாக மாற்றிய பின்னரும் எப்படி தொடர்ந்து பொய்யாக 90 சதம் பேர் உள்ளதாக வாதிட முடிகிறது? பார்பன் செய்தால் ஜாதி வெறி கொள்ளை அதையே மற்றொருவர் செய்தால் சோற்றை திருடி உண்ணும் திருடனா? இல்லை அது நஞ்சு அளவு எவ்வளவு இருந்தாலும் அது நஞ்சு தான். இடஒருக்கீடு பின்பற்றபடவே இல்லை எனபதற்க்கு என்ன ஆதாரம் உள்ளது? அப்படியானால் 29 சதம் மட்டும் தான் நிரப்ப படுகிறதா? 18 சதவீதத்தில் 5 சதவீதம் கூட நிரப்பபடவில்லை என்றால் அருந்ததியர்காக 3 சதவீதத்தை எதிரக்க வேண்டிய அவசியம் என்ன? இந்த 18 சதவீதத்தில் ஏனைய சமுதாயத்தினரும் தங்கள் மக்கள் தொகைக்கு ஏற்ப பெருவதில் தடையாக இருக்கும் ஆதிக்க சாதி எது?
இராமியா
வழக்கறிஞர் தன்னுடைய கட்சிக்கு வாதாடுபவர் என்ற நிலையில் அவருடைய வாதம் நியாயம் என எடுத்துக் கொள்ள முடியாது; அதைத் தள்ளி விடலாம் என்று ஒப்புக் கொண்டதற்கு நன்றி. பாரப்பனர்கள் மீது பிறர் ஆதிக்கம் செலுத்துவதாக நண்பர் கற்பனை செய்து வைத்திருப்பது உலக மகா முரண்பாடு. பார்ப்பனர்கள் ஒன்றைச் சாதிக்க நினைத்து இருந்தால் அதை நம்முடைய மக்களை வைத்தே சாதித்துக் கொள்ளும் அளவிற்கு நம் மக்கள் அறியாமையில் தான் உள்ளனர். மதுரை காமராஜர் பல்கலைக் கழகம் அதற்கு விதி விலக்காக இருந்து விட முடியாது. பார்ப்பனர்கள், நண்பர் கூறும் பதவிகளை ஒரு பொருட்டாக நினைக்கவில்லை. ஆகவே அவற்றைக் கைப்பற்ற நினைக்கவில்லை. அவ்வளவு தான். மற்றபடி நண்பரின் வருத்தம் தாழ்த்தப்பட்ட மக்களிடையே அருந்ததியருக்கும் மற்றவர்களுக்கும் இடையே உள்ள முரண்பாடு பற்றியது தான். இதை விடப் பெரிய கொடுமைகள் பிற்படுத்தப்பட்ட மக்களுக்கும் தாழ்த்தப்பட்ட மக்களுக்கும் இடையே உள்ள முரண்பாடுகளினால் நடந்து கொண்டு இருப்பதும் நண்பர் அறியாமல் இருக்க முடியாது. அவற்றிற்கு அடிப்படைக் காரணம் என்ன? நண்பர் கற்பனை செய்து வைத்து இருப்பது போல மைய அரசில் 50% இட ஒதுக்கீடு செயல்படுத்தப்படுவது இல்லை. பிரதமர் அலுவலகத்தில் உள்ள உயர் அதிகாரிகளில் 98%க்கும் மேல் பார்ப்பனர்களே உள்ளனர். 2% உள்ள மற்றவர்களும் பார்ப்பன அதிகாரத்திற்குக் கட்டுப்படுபவர்களே அனுமதிக்கப்படுகின்றனர். குடியரசுத் தலைவர் அலுவலகத்திலும் இதே நிலைமை தான் இருந்தது. கே.ஆர்.நாராயணன் அவர்கள் இவ்வேற்பாட்டைக் கடுமையாக எதிர்த்த நி‌லையிலும் அதை 95%க்கும் குறைவாகக் கொண்டு வர முடியவில்லை. இந்த நிலைமை இவ்விரு இடங்களில் மட்டுமல்ல; அதிகாரமும் செல்வமும் படைத்த அனைத்து இ‌டங்களுக்கும் பொருந்தும். (அவ்வலுவலகங்களில் உள்ள கடை நிலை ஊழியர்களைக் கணக்கில் எடுத்துக் கொண்டு வாய்ப்புகளைத் தயவு செய்து கணக்கிட வேண்டாம்.) அருந்ததியர்களுக்குத் தனி இட ஒதுக்கீடுத் திட்டத்தை முன்னெடுப்பவர்கள் தாழ்த்தப்பட்ட மக்களிடையே பிளவை எற்படுத்த முயல்வதாக அக்கருத்தை எதிர்ப்பவர்கள் வாதிடுகிறார்கள். என்னுடைய வாதம் என்னவென்றால் தாழ்த்தப்பட்ட மக்கள் நாடு முழுமையிலும் அடைய வேண்டிய பங்கை முறையாக அடைந்தால் அருந்ததியர்களுக்கும் மற்ற தாழ்த்தப்பட்ட மக்களுக்கும் இடையேயான முரண்பாடுகள் மழுங்கும். பார்ப்பனர்கள் அயோக்கியத்தனமாகச் சுருட்டி வைத்துக் கொண்டு இருக்கும் வாய்ப்புகளை மீட்டு எடுத்தால் பிற்படுத்தப்பட்ட மக்களுக்கும் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு இடையே உள்ள வாய்ப்புச் சுரண்டல் முரண்பாடுகளும் முற்றிலும் மறைந்து விடும். தாங்கள் குறிப்பிடும் மதுரை காமராஜர் பல்கலைக் கழக வேலை வாய்ப்பை எடுத்துக் கொள்வோம். அந்த வாய்ப்பை ஒரு அருந்ததியரிடம் தட்டிப் பறித்த தோழருக்கோ அல்லது அவ்வேலை வேண்டும் என்று விண்ணப்பித்து இருக்கும் அருந்ததியர் தோழருக்கோ, மைய அரசில் அல்லது அதிகாரமும் செல்வமும் படைத்த மற்ற இடங்களில் அவர்களுக்குச் சேர வேண்டிய வேலையைப் பார்ப்பனர்கள் பறித்துக் கொள்ள முடியாது இருந்தால் அவர்களில் ஒருவருக்கு இப்பொழுது விவாதித்துக் கொண்டு இருக்கும் வேலையை விட நல்ல வேலை கிடைத்து, இருவரும் எதிரெதிராக நிற்கும் நிலைமை தவிர்க்கப்பட்டு இருக்கும். நமக்குக் கிடைக்க வேண்டிய வாய்ப்புகளில் சிறு பகுதியை மட்டும் வைத்துக் கொண்டு பங்கிடுவதினால் தான் நமக்கு இடையே முரண்பாடுகள் ஏற்படுகின்றன. இந்த மூல வேரை அறுத்து விட்டால் நமக்கு இடையே உள்ள முரண்பாடுகள் மழுங்கவும் மறையவும் செய்யும்.
ஆறுமுகம்
”உங்கள் வழக்கில் நீங்கள் எதிர்பர்ப்பது சரியான முடிவு வழக்கறிஞர் பார்வையில் அவரது செயல் சரியான முடிவு ” என்றுதான் கூறப்பட்டுள்ளது அதை விடுத்து எவ்வாறு முரணாக பொருள் கொள்ள முடிந்தது? மதுரை காமராஜர் பல்கலைக் கழகம் நியமனம் பார்பனர்களுக்கானது அல்ல என்பதை திரும்ப திரும்ப கூறிவருகிறேன். அவ்விடம் அருந்ததியர்களுக்கு ஒதுக்கப்பட்டது அதில் அருந்ததியர் நியமிக்க பட வில்லை மாறாக பட்டியல் வகுப்பில் உள்ள மற்றொரு பிரிவை சேர்ந்தவர் நியமிக்கப்பட்டுள்ளார். ஆதாரங்கள் வழங்கபபட்டுள்ளது. அங்கு அருந்ததியர் வகுப்பினரை முன்னேர விடாமல் ஆதிக்கம் செலுத்தி வாய்ப்பை புறவழியாக அணுபவிப்பது யார்? மத்திய அரசு மாநில அரசு பணிகளில் முழுவதும் இடஒதுக்கீடு அடிப்படையிலேயே நியமிக்கபடும் போது அதை பின்பற்றவில்லை என்று எவ்வாறு பொய்யாக வாதிட முடிகிறது. அரசு அதிகாரிகள் தகுதியின் அடிப்படையில் நியமிக்கப்படுகின்றனர், குறைந்த அளவு கல்வி, வயது மற்றும் ஒதுக்கீடு அடிப்படையில். உயர்பதவிக்கு வர தகுதியை ஏற்படுத்தி கொள்வதே சரியான வழி அதில் பிரதமர் அலுவலகமாக இருந்தாலும் சரி எதுவாக இருந்தாலும் சரி. அகில இந்திய அளவில் பணிசெய்ய விரும்பி னால் அத்தகைய வாய்ப்பு கிடைக்கும். ஏனைய பிரிவினரை காட்டிலும் தகுதி பெறும் மதிப்பெண்கள் பட்டியல் இனத்தினருக்கு மிகவும் கு‌றைவே. அதே வேளையில் பிற சமுதாயத்தினர் அதிக அளவு முயற்சி செய்தால் மட்டுமே அரசு பணிக்கு செல்ல முடியும் என்பதே நிலை. பட்டியல் பிரிவிலும் ஒரு சில குறிப்பிட்ட சாதியினரின் ஆதிக்கமே உள்ளதே அருந்ததியர்கள் உள்இடஒருக்கீடு கேட்டதும் அதை ஒரு சில பயனடையும் பிரிவினர் எதிர்பதும். அவர்களுக்கு இடையேயான உறவு குடும்ப உறவல்ல பிளவை ஏற்படுத்த. தாழ்த்தபட்ட மக்களுக்கான இடஒதுக்கீட்டிலோ இல்லை பிற்படுத்த பட்டோருக்கான ஒதுக்கீட்டிலோ பார்ப்னர்கள் நியமிக்க படுவதில்ல ஆனால அருந்ததியர்களுக்காக ஒதுக்கீட்டில் அருந்ததியர் அல்லாதவர் நியமிக்கப்படுகிறார் அதாவது இடஒதுக்கீடு வழங்கினாலும் ஆதிக்க சாதியினர் அவர்களை விடுவதிலை என்பதே கருத்து. மைய அரசிலோ மாநில அரசிலோ தாழ்த்தபட்ட அல்லது பிற்பட்டவர்களுக்கான இடத்தில் பார்ப்பனர்கள் நியமிக்க படுவதே இல்லை என்பதை உணர்க. மூலவோர் ஆதிக்கம் செலுத்த என்னும் மனோபாவமே அது யாரிடம் இருந்தாலும் அகற்றப்பட வேண்டும் தாழ்த்தபட்டவராக இருந்தாலும் சரி பிற்படுத்தபட்டவராக இருந்தாலும் சரி.
இராமியா
நண்பரே! நீதியின் பார்வையில் வழக்கறிஞரின் வாதத்திற்கு முக்கியத்துவம் ஏதும் இல்லை. உண்மைக்குத் தான் முக்கியத்துவம் இருக்கிறது. வழக்கறிஞர் அவருடைய வாதத்தை வைத்துக் கொள்ளட்டும் என்று கூறுவதே அவர் பாட்டுக்கு அவர் பேசி விட்டுப் போகட்டும்; நாம் உண்மைக்கு வழி விடுவோம் என்பதாகத் தான் பொருள் கொள்ள முடியும்? இதில் முரண்பாடு எதுவும் இல்லை. தாங்கள் கூறுவதை நன்றாகப் புரிந்து கொண்டு தான் விடை அளித்து இருக்கிறேன். அருந்ததியர்க்கு ஒதுக்கப்பட்டுள்ள ஒரு வேலையை வேறொரு வகுப்பைச் சேர்ந்தவர் அபகரித்து விட்டார் என்பது தான் தங்களுடைய குற்றச் சாட்டு. இதை நான் சரி என்று வாதாடவே இல்லை. இப்படி ஒரு அபகரிக்கும் எண்ணம் அவருக்கு ஏன் வந்தது? தாழ்த்தப்பட்ட வகுப்பினராக இருந்தாலும் சரி; பிற்படுத்தப்பட்ட வகுப்பினராக இருந்தாலும் சரி; அவர்கள் அடைய வேண்டிய உரிமைகளில் மிக மிக ..... மிகப் பெரும் பகுதி பார்ப்பனர்களால் வஞ்சகமாக அபகரித்துக் கொள்ளப்பட்டு இருக்கிறது. தாழ்த்தப்பட்ட மற்றும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான இடங்களில் பார்ப்பனர்கள் நியமிக்கப்படுவதே இல்லை என்றால் பிரதமர் அலுவலகம், குடியரசுத் தலைவர் அலுவலகம், ரிசர்வ் வங்கி இன்னும் பல கேந்திரமான இடங்களில் பார்ப்பனர்கள் 95%க்கும் மேல் எப்படி இடம் பிடிக்க முடிகிறது? நீங்கள் தமிழ் நாட்டு வாய்ப்புகளை மட்டும் கணக்கில் கொண்டு பார்த்தால் குண்டுச் சட்டிக்குள் குதிரையை ஓட்டிக் கொண்டே இருக்க வேண்டி வரும். பிற்படுத்தப்பட்ட மற்றும் தாழ்த்தப்பட்ட வகுப்பினர் தங்களுடைய வாய்ப்புகள் பார்ப்பனர்களால் கொள்ளை அடிக்கப்படுவதை அறிந்து கொள்ளாமல் அவர்கள் கொள்ளை அடித்தது போக மீதம் இருக்கும் மிக மிக ..... மிகக் குறைந்த வாய்ப்புகளைப் பங்கிடும் போது இப்படிப்பட்ட வேண்டாத சண்டைகள் தவிர்க்கப்பட முடிவதில்லை. யாருக்கும் போதாத அளவில் கிடைக்கும் மிக மிக ..... மிகக் குறைந்த வாய்ப்புகளைப் பங்கிடும் போது தவறுகள் நேரக் கூடாது என்று போராடுவதை விட நமக்கு உரிய வாய்ப்புகள் முழுமையாக நமக்கு கிடைக்குமாறு செய்து அவற்றை நமக்குள் முரண்பாடு இன்றி பெற்றுக் கொள்வது தானே சரியான அணுகுமுறையாக இருக்கும்?
ஆறுமுகம்
அவரவர் பார்வைக்கு அவரவர் கூறுவதே சரியானதாகும். நீங்கள் சொன்னதாலேயே அது உண்மையாகவும் வழக்கறிஞர் சொன்னதாலேயே அவர் சொன்னது பொய் என்றும் ஆகிவிடாது என்றே வலியுறுதத்தப்பட்டுள்ளது. "அருந்ததியர்க்கு ஒதுக்கப்பட்டுள்ள ஒரு வேலையை வேறொரு வகுப்பைச் சேர்ந்தவர் அபகரித்து விட்டார் என்பது தான் தங்களுடைய குற்றச் சாட்டு" - வே‌றொரு வகுப்பு மட்டுமல்ல அவர்கள் பட்டியல் வகுப்பில் உள்ளவர் மட்டுமே அதில் நியமிக்கபடமுடியும் என்பதை சுட்டக்காட்டியுள்ளேன். மேலும் அதில் பார்ப்பனர்கள் நியமிக்கபடவே முடியாத நிலையில் ” இப்படி ஒரு அபகரிக்கும் எண்ணம் அவருக்கு ஏன் வந்தது? மிக மிக ..... மிகப் பெரும் பகுதி பார்ப்பனர்களால் வஞ்சகமாக அபகரித்துக் கொள்ளப்பட்டு இருக்கிறது" என்று எப்படி கூசாமல் பொய் சொல்ல முடிகிறது. பட்டியல் இனத்தில் உள்ள சாதிகளில் ஒரு சில குறிப்பிட்ட சாதினர் சிறுபான்மையினராக உள்ள பட்டியல் சாதியினரை ஆதிக்கம் செலுத்தி அடிமையாகவும் நடத்துகின்றனர் என்பதை தெளிவுபட ஆதரத்துடன்விளக்கியாயிற்று. தமிழகத்தில் நடக்கும் அநியாயத்தை சுட்டிக்க காட்டினால் உடனே டெல்லிக்கு தாவுவதேன்? ”உயர்பதவிக்கு வர தகுதியை ஏற்படுத்தி கொள்வதே சரியான வழி அதில் பிரதமர் அலுவலகமாக இருந்தாலும் சரி எதுவாக இருந்தாலும் சரி. அகில இந்திய அளவில் பணிசெய்ய விரும்பி னால் அத்தகைய வாய்ப்பு கிடைக்கும். ஏனைய பிரிவினரை காட்டிலும் தகுதி பெறும் மதிப்பெண்கள் பட்டியல் இனத்தினருக்கு மிகவும் கு‌றைவே. அதே வேளையில் பிற சமுதாயத்தினர் அதிக அளவு முயற்சி செய்தால் மட்டுமே அரசு பணிக்கு செல்ல முடியும் என்பதே நிலை ” 69 சதம் யாருக்கு செல்கிறது பார்பனருக்கா? அல்லது பார்பனர் அல்லாதவர்களுக்கா? 31 சதமும் பார்ப்னர்களுக்கானது இல்லை அதில் தான் அவர்கள் அணைவருடனும் போட்டியிட வேண்டும். எனவே ”மிக மிக ..... மிகக் குறைந்த வாய்ப்பு” பார்பனர்களுக்கே. மத்திய பணியிலும் 50 சதம் பார்பனர்கள் நியமிக்கப்படவே முடியாது மீதமுள்ள 50 சதத்தில் தான் பார்பனர்கள் அணைவருடனும் போட்டியிட வேண்டும் எனவே இங்கும் மிகக் குறைந்த வாய்ப்பு பார்பனர்களுக்கே. ”மிக மிக ..... மிகக் குறைந்த வாய்ப்புகளைப் பங்கிடும் போது இப்படிப்பட்ட வேண்டாத சண்டைகள் தவிர்க்கப்பட முடிவதில்லை.” மிகமிக குறைந்த வாய்ப்புகள் (பார்பனர்களுடன் தான்) அணைத்து சாதியினரும் போட்டியிடு யிடுகின்றனர், அங்கு பார்பனர்கள் யாரிடமிருந்தும் பறித்துக் கொள்வதில்லை. வேண்டாத சண்டைகள் எழுவதும் இல்லை.
ஆறுமுகம்
”யாருக்கும் போதாத அளவில் கிடைக்கும் மிக மிக ..... மிகக் குறைந்த வாய்ப்புகளைப் பங்கிடும் போது தவறுகள் நேரக் கூடாது என்று போராடுவதை விட” அப்படியானால் தவறு நடக்க அணுமதிக்க வேண்டுமா? ”நமக்கு உரிய வாய்ப்புகள் முழுமையாக நமக்கு கிடைக்குமாறு செய்து” அதற்காகத்தானே இத்தனை சதவீதம் என்று இடஒதுக்கீடு கொண்டுவரப்பட்டு பிறர் அப்பிரிவில தேர்வு செய்ய முடியாதபடி வாய்ப்பு தரப்பட்டது. அதையும் மற்றொரு சாதியனர் தட்டிப்பறித்தால் பார்பனர்களை விட அதிகம் ஆதிக்கம் செலுத்துவது அவர்கள் தான். காரணம் 31 சதம் மற்றும் 21 சதம் ஆகமொத்தம் 52 சதம் வாய்ப்பு அவர்களுக்கே உள்ளது. ”அவற்றை நமக்குள் முரண்பாடு இன்றி பெற்றுக் கொள்வது தானே சரியான அணுகுமுறையாக இருக்கும்?” ஆனால் பட்டில் பிரிவில் பர்பனர்கள் நியமிக்க படமுடியாது பிற்றபட்ட மிகவும் பிட்ட பிரிவிலும் போட்டியிட முடியாது. ஆனால் அருந்ததியர் பரிவில் எப்படி அருந்ததியர் அல்லாதவர் நியமிக்கப்படுகிறார் என்பதே அடிப்படை கேள்வி. அவர்கள் இடத்தையும் அபகரிக்கும் ஆதிக்க சாதி எது? நிச்சயம் அது பார்பனர் இல்லை.
இராமியா
நண்பரே! சர்க்கரை நோயாளி ஒருவருக்கு உடலில் புண் உள்ளது. புண் நன்றாக ஆற வேண்டும் என்றால் இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவு குறைய வேண்டும். அதற்காக சர்க்கரையின் அளவைக் குறைக்க வேண்டும் என்று கூறினால் புண் வலி ஆறுவதற்காக மருந்து தடவக் கூடாது என்று பொருள் இல்லை. புண் குணமாக வேண்டும் என்று கூறிக் கொண்டு அதற்கான மருத்துவம் மட்டுமே பார்த்துக் கொண்டு, சர்க்கரையின் அளவு குறைப்பதைப் பற்றி அக்கறை இல்லாமல் இருப்பது தவறு. அருந்ததியருக்காக ஒதுக்கப்பட்ட இடத்தில், மற்ற வகுப்பினர் ஆக்கிரமித்து இருந்தால் அது மிகப் பெரிய குற்றம். இது ஏன் நிகழுகிறது என்பதைப் பற்றி ஏற்கனவே எழுதி இருக்கிறேன். சர்க்கரை நோயைப் போன்று உள்ள பார்ப்பன ஆதிக்கத்தை வேரறுக்காமல் மற்ற பிரச்சினைகள் தீரப் போவதில்லை. ஆகவே நாம் அதில் மிகப் பெரிய கவனத்தைச் செலுத்தியாக வேண்டும். இப்பொழுது உள்ள ஒதுக்கீட்டின் அளவு எந்த விதத்திலும் போதாது. அதுவும் முழுமையாக நிரப்பப்படுவது இல்லை. நீங்கள் தான் அது நடை முறைப் படுத்தப் படுவதாக அப்பாவித்தனமாக நம்பிக் கொண்டு இருக்கிறீர்கள். நாம் வெற்றி கொள்ள வேண்டியது விகிதாசாரப் பங்கீடு முறையைத் தான். உயர் சாதிக் கும்பல், பிற்படுத்தப்பட்டோர், தாழ்த்தப்பட்டோர், பழங் குடியினர், மதசிறுபான்மையினர் ஆகியோர் மக்கள் தொகையில் எந்த விகிதத்தில் இருக்கிறார்களோ அந்த விகிதத்தில் கல்வி, வேலை வாய்ப்பு மற்றும் சமூக, பொருளாதார நடவடிக்கைகள் அனைத்திலும் அனைத்து நிலைகளிலும் (அனைத்து நிலைகளிலும் என்பதை நன்றாகக் கவனிக்க வேண்டும்) வய்ப்புகளைப் பங்கீடு செய்ய வேண்டும். இவ்வாறு விகிதாசாரப் பங்கீட்டு முறையைக் கண்டிப்புடன் நடைமுறைப்படுத்தினால் (கண்டிப்புடன் என்பதை நன்றாகக் கவனிக்கவும்.) பார்ப்பனர்கள் இப்பொழுது ஏமாற்றி உயர் நிலை வாய்ப்புகளைக் கபளீகரம் செய்வது போலச் செய்ய முடியாது. மற்ற வகுப்பு மக்களுக்கும் போதிய அளவு வாய்ப்புகள் கிடைக்கும் என்பதால் தாங்கள் கூறும் தவறுகள் நிகழ வாய்ப்பு இல்லாமல் போய் விடும்.
இராமியா
முழுமையான விவரங்கள் வந்து விடக் கூடாது என்று வழக்கறிஞர் அதட்டுவதே உண்மைக்கு எதிரானது என்பதைக் காட்டும். அருந்ததியர்க்கு என வர வேண்டிய வாய்ப்பு மற்ற சாதியினருக்கு, அது பட்டியல் வகுப்பினராக இருந்தாலும், சேருவது தவறு தான். //அவருக்கு அப்படி அபகரிக்கும் எண்ணம் எப்படி வந்தது?// அது தான் இல்லாத கொடுமை என்றும் சோற்றைத் திருடி உண்ணும் கயமைத்தனம் என்றும் ஏற்கனவே எழுதி இருக்கிறேன். //தமிழ் நாட்டைப் பற்றிப் பேசினால் டெல்லிக்குத் தாவுவானேன்?// என்ன செய்வது? அருந்ததியரின் வாய்ப்பை அபகரித்த அந்த தோழருக்கு அதை விட நல்ல வேலை ஒன்று டெல்லியில் கிடைத்து இருந்தால் இவ்வாறு அபகரி்க்கும் எண்ணமே வந்து இருக்காது. அல்லது அந்த அருந்ததியர்த் தோழர் டெல்லியில் ஒரு நல்ல வேலையைப் பெற்றிருந்தால் மதுரை காமராஜர் பல்கலைக் கழக வேலையைப் பற்றி நினைத்தே இருக்க மாட்டார். நம்முடைய நடவடிக்கைகள் நாட்டின் மற்ற நடவடிக்ககைளில் இருந்து பிரிக்க முடியாத படியே இருக்கின்றன. பார்ப்பனர்கள் நம்முடைய வாய்ப்புகளை அபகரிக்காமல் இருந்தால் நாம் ஒருவருடன் ஒருவர் மோதிக் கொள்ள வேண்டிய அவசியமே இருக்காது. //”உயர்பதவிக்கு வர தகுதியை ஏற்படுத்தி கொள்வதே சரியான வழி அதில் பிரதமர் அலுவலகமாக இருந்தாலும் சரி எதுவாக இருந்தாலும் சரி. அகில இந்திய அளவில் பணிசெய்ய விரும்பி நால் அத்தகைய வாய்ப்பு கிடைக்கும். ஏனைய பிரிவினரை காட்டிலும் தகுதி பெறும் மதிப்பெண்கள் பட்டியல் இனத்தினருக்கு மிகவும் கு‌றைவே. அதே வேளையில் பிற சமுதாயத்தினர் அதிக அளவு முயற்சி செய்தால் மட்டுமே அரசு பணிக்கு செல்ல முடியும் என்பதே நிலை ”// ‌ஐயா, மதிப்பெண் பெறுவது மட்டுமே திறமைக்கு அடையாளம் அல்ல. அதிக மதிப்பெண்கள் பெற்று மருத்துவம் படித்த உயர் சாதி மருத்துவர்கள் நிறைந்த டெல்லி மற்றும் வட மாநிலங்கள் சிறந்த மருத்துவ மையங்களாகப் பரிணமிக்க முடியவில்லை. இட ஒதுக்கீடு ஓரளவு செயல்பட்டு தாழ்த்தப்பட்ட மற்றும் பிற்படுத்தப்பட்ட வகுப்பு மருத்துவர்கள் நிறைந்த சென்னை நகரமும் தமிழ் நாடும் தான் சிறந்த மருத்துவ மையங்களாகப் பரிணமித்து, உலகெங்கிலும் இருந்து சிகிச்சைக்காக மக்கள் தேடி வருகின்றனர்.
ஆறுமுகம்
”சர்க்கரையின் அளவு குறைப்பதைப் பற்றி அக்கறை இல்லாமல் இருப்பது தவறு. அருந்ததியருக்காக ஒதுக்கப்பட்ட இடத்தில், மற்ற வகுப்பினர் ஆக்கிரமித்து இருந்தால்” என்ன இருந்தால் கட்டுரையாளரே அதை விசாரித்து உறுதிபடுத்தி ஆக்கிரமித்த நபரை வெளியேற்ற நடவடிக்கை எடுக்கலாம். ”அது மிகப் பெரிய குற்றம்” என்று இப்போதாவது ஏற்றுக் கொண்டதற்க்கு நன்றி. ”சர்க்கரை நோயைப் போன்று உள்ள பார்ப்பன ஆதிக்கத்தை வேரறுக்காமல் மற்ற பிரச்சினைகள் தீரப் போவதில்லை” ஆதிக்கம் செலுத்துவது பார்பனர் அல்ல. இல்லாத எதிரியை எதிர்க்க சொல்லி ஆக்கிரமிப்பாளரை ”தவறுகள் நேரக் கூடாது என்று போராடுவதை விட” என்ற கூறி அதை நியாயப்படுததபட்டதாலேயே தொடர்ந்து ஆதிக்க சக்தி இப்போத யார் என்பதை சுட்டிக் காட்ட வேண்டி வந்தது. பலன் எளிதாக ஏனை யோரை காட்டிலும் கிடைப்பதால் அதை இல்லை என்று வாதிடுவதை ஏற்க இயலாது. ”விகிதாசாரப் பங்கீடு” முறையில்தான் இடஒதுக்கீடு வழங்கப்படுகிறது. நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ”அனைத்து நிலைகளிலும் என்பதை நன்றாகக் கவனிக்க வேண்டும் ” ஒருவன் புதிய பணிநியமனத்தில் இடஒதுக்கீடு சரி ஆனால் பதவி உயர்விலும் ஏனையோரை காட்டிலும் பட்டியல் வகுப்பினர் விரைவாக பதவி உயர்வு வழங்கப்படுவே செய்கிறது. ஒரே நேரத்தில் பணியில் சேர்ந்தவர்கள் ஒருவர் ஒரு குறிப்பிட்ட சாதி என்பதற்க்கா பதவி உயர்வும் மற்றவருக்கு கிடையாது என்பது எவ்வாறு சரியானது?
ஆறுமுகம்
”மற்ற வகுப்பு மக்களுக்கும் போதிய அளவு வாய்ப்புகள் கிடைக்கும் என்பதால் தாங்கள் கூறும் தவறுகள் நிகழ வாய்ப்பு இல்லாமல் போய் விடும்” பார்பனர்கள் ஒதுக்கீட்டுக்குள் வரவே முடியாது. ஆனால் சட்டிப்படியான அருந்ததியர்களுக்கான ஒதுக்கீட்டில அருந்ததியர் நியமிக்கப்படவதில்லை அதை ஆதிக்க சாதியினர் அபகரிக்கின்றனர். அவர்கள் அபரிப்பதற்க்கு பார்பனர் காரணம் அல்ல பட்டியல் வகுப்பில் உள்ள ஆதிக்க வெறியே காரணம். வழக்கறிஞர் மீது குற்றம் சாட்டுவதால் அவர் இங்கு பதில் கூற முடியத நியை உள்ளது எனவே தங்கள் வாதம் உண்மை என்று ஆகிவிடாது. ”//அவருக்கு அப்படி அபகரிக்கும் எண்ணம் எப்படி வந்தது?// அது தான் இல்லாத கொடுமை” அல்ல அது ஆதிக்க வெறி என்பதே உண்மை. ஏனென்றால் பிற்படுத்த பட்டவர்களிலும் மிககும் பிற்படுத்த பட்டவர்களிலும் அந்த இடத்தை ஆக்கிரமிக்க வில்லை. ஏற்கவே ஆதிக்கம் செலுத்தியர்கள் அதை தங்கள் இழக்க விரும்பவில்லை என்பதை அந்த நியமனம் நிறுபிக்கிறது. ஒடுக்கப்பட்டவன் என்ற பெயரில் மிகவும் ஒடுக்கப்பட்டவனை வஞ்சிப்பதை ”போராடுவதை விட” என்று நியாப்படுத்த முடியாது. ”அருந்ததியரின் வாய்ப்பை அபகரித்த அந்த தோழருக்கு அதை விட நல்ல வேலை ஒன்று டெல்லியில் கிடைத்து இருந்தால் இவ்வாறு அபகரி்க்கும் எண்ணமே வந்து இருக்காது. அல்லது அந்த அருந்ததியர்த் தோழர் டெல்லியில் ஒரு நல்ல வேலையைப் பெற்றிருந்தால் மதுரை காமராஜர் பல்கலைக் கழக வேலையைப் பற்றி நினைத்தே இருக்க மாட்டார்” அப்படியானால் டெல்லியில் வாய்பிருந்தால் தமிழகத்தில் யாரும் அபரிக்க மாட்டார்கள் என்பது உண்மையானால் தமிழகத்தில் ஏன் இடஒருக்கீடு. ”பார்ப்பனர்கள் நம்முடைய வாய்ப்புகளை அபகரிக்காமல் இருந்தால்” பாப்பனர்கள் 31 சதம் மட்டுமே வாய்ப்புள்ளவர்கள் மத்தியிலும் 50 சதம் மட்டுமே வாய்ப்புள்ளவர்கள் ஆனால் ஒதுக்கீட்டில் பயனடைவோருக்கு 50 சதத்துடன் (+)ஒதுக்கீட்டு வாய்ப்பும் உள்ளது. எனவே பார்பனர்கள் ஆக்கிரமிப்பாளரகள் இ‌ல்லை. மதிப்பெண் பெறுவது மட்டுமே திறமைக்கு அடையாளம் அல்ல. ”அதிக மதிப்பெண்கள் பெற்று மருத்துவம் படித்த உயர் சாதி மருத்துவர்கள் நிறைந்த மக்கள் தேடி வருகின்றனர்” அதாவது 1) இடஒதுக்கீட்டில் இனி மதிபெண்களை அடிப்படையாக வைத்து நியமனம் கூடாது 2) வடமாநிலங்களில் பார்பனர் மற்றும் பிற உயர்சாதினிர் மட்டுமே மருத்துவம் பார்க்கின்றனர்? 3) கர்நாடக போன்ற மாநிலங்களில் இடஒதுக்கீடே இல்லை 4) இருந்தாலும் அங்குள்ள தாழ்த்தபட்ட பிற்பட்ட வகுப்பினர் மருத்துவராக சிறப்பானவர்கள் இல்லை? ...
இராமியா
ஒரு வகுப்பினருக்கு உரிமையான வாய்ப்பை மற்ற வகுப்பினர் பறித்துக் கொள்வது சரி என்று எப்பொழுதும் சொல்லவில்லை. ஆதிக்கம் செலுத்துவது பார்ப்பனர் அல்ல என்பது தங்களுடைய அப்பாவித்தனமான நினைப்பு. உடனடி காரணத்தை மட்டுமே ஆராய்வதால் தங்களுக்கு அப்படித் தோன்றுகிறது. என்னுடைய முந்தைய விளக்கங்களில் ஒடுக்கப்பட்ட மக்களுக்கு உரிய வாய்ப்புகள் கிடைக்கும் பட்சத்தில் தாங்கள் குறை காணும் உடனடி காரணங்கள் நிகழ வாய்ப்புகள் இருக்காது என்று சொல்லி இருக்கிறேன். தாங்களோ இன்றைய சூழ்நிலையின் உடனடிக் காரணங்களுக்காக மட்டுமே போராட வேண்டும் என்று கூறுகிறீர்கள். அப்படிச் செய்வதினால் உடனடி நிவாரணம் கிடைக்கலாம்; ஆனால் பிரச்சினைகள் தீராது. விகிதாசார முறையில் ஒதுக்கீடு செய்யப்படுகிறது என்பது சரியல்ல. அரசியல் அமைப்புச் சட்டத்தில் இட ஒதுக்கீட்டிற்கு உச்ச வரம்பு இல்லை என்றாலும் உச்ச நீதிமன்ற ஆணைப்படி 50%க்கு குறுக்கப்பட்டு உள்ளது. அதுவும் செயல்படுத்தப்படுவது இல்லை என்பது தான் அனுபவம் காட்டும் உண்மை. ஒதுக்கீடு பற்றியும் அதில் ஒரு அம்சமான பதவி உயர்வு பற்றியும் எழுதப்பட்டுள்ள விதிகளைப் பற்றித் தான் நீங்கள் பேசுகிறீர்கள். முழுமையான நடைமுறை அப்படி இல்லை என்பதைப் புரிந்து கொள்ளுங்கள். அதைப் புரிந்து கொண்டால் தங்களுடைய பல சந்தேகங்களுக்கு விடை கிடைக்கும்.
ஆறுமுகம்
”ஆதிக்கம் செலுத்துவது பார்ப்பனர் அல்ல என்பது தங்களுடைய அப்பாவித்தனமான நினைப்பு.” - என்பது தவறானது ”69 சதம் யாருக்கு செல்கிறது பார்பனருக்கா? அல்லது பார்பனர் அல்லாதவர்களுக்கா? 31 சதமும் பார்ப்னர்களுக்கானது இல்லை ... மத்திய பணியிலும் ... 50 சதத்தில் தான் பார்பனர்கள் அணைவருடனும் போட்டியிட வேண்டும்” எனவே பார்பனர்கள் ஆதிக்கம் செய்வதாக கூறமுடியாது. ”உடனடி காரணத்தை மட்டுமே ஆராய்வதால் தங்களுக்கு அப்படித் தோன்றுகிறது.” உடனடி காரணம் நீண்டகால பிரச்சினையாகது என்பதல்ல. ”ஒடுக்கப்பட்ட மக்களுக்கு உரிய வாய்ப்புகள் கிடைக்கும் பட்சத்தில்” - ஒடுக்கப்பட்ட மக்களுக்கு அவர்கள் விகிதாச்சார அடிப்படையில் இடஒதுக்கீடு வழங்கப்படுகிறது. ஒடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதித்துவபடுத்தவும் இடஒதுகீடு உள்ளது அதே வேளை பிற்படுத்தபட்ட மிகவும் பிற்படுத்தப்பட்டவர்களுக்கு கட்டாய பிரதிநிதித்துவம் இல்லை. ”உடனடிக் காரணங்களுக்காக மட்டுமே போராட வேண்டும் என்று கூறுகிறீர்கள்” அவ்வாறு ஒருபோதும் குறிப்பிட வில்லை. அதற்காக அவற்றை புறந்தள்ள முடியாது. ”விகிதாசார முறையில் ஒதுக்கீடு செய்யப்படுகிறது என்பது சரியல்ல” - வாதம் தறானது ஆதாரமற்றது. ”அரசியல் அமைப்புச் சட்டத்தில் இட ஒதுக்கீட்டிற்கு உச்ச வரம்பு இல்லை என்றாலும் உச்ச நீதிமன்ற ஆணைப்படி 50%க்கு குறுக்கப்பட்டு உள்ளது” - இடஒதுக்கீடு என்பது நிரந்தர தீர்வல்ல ஏற்றத்தள்வுகளை சரிசெய்ய ஏற்படுத்தப்பட்டதே இடஒதுக்கீடு. 100 சதவீதத்தையும் ஒதுக்கீடு செய்வது என்பது சரியல்ல. ”முழுமையான நடைமுறை அப்படி இல்லை” - தவறான வாதம் பதவி உயர்வு குறித்து எனது பின்னூட்டத்தில் குறிப்பிட்டுளளது சரியே அது அரசு பதிவுபடி நிறுபிக்கத்தகது. மேலும் அருந்ததியர் இட ஒதுக்கீடு என்பது சட்டப்படியானது அதில் பிறர் நியமிக்கபடவே கூடாது அதையும் மீறி (ஒடுக்கப்பட்டவரில் மிகவும் ஒடுக்கப்பட்டவன்) அதை பறிப்பதை ”இல்லாத கொடுமை” ”போராடுவதை விட” என்று நியாயப்படுத்தலை ஏற்கவில்லை. தாழ்த்தப்பட்டவர்கள் இடஒதுக்கீட்டில் பார்பனர்கள் ஒருபோதும் நியமிக்கப்படுவதில்லை. ஆனால் அந்த இடங்களில் மதம் மாறியவர்கள் [(உ.ம்) உமா ..ர், அசோ ..ர் ] பறித்துக் கொள்கின்றனர். எனவே. இந்துமதத்தில் இருந்து போராடும் ஒரு பாதிக்கபட்ட நபருக்கு கிடைப்பதற்க்க மாறாக அதை மதம் மாறி சிறுபான்மைஎன்ற பெயரில் 100 சதம் இடஒதுக்கீட்டில் பங்கு பெறுவதோடு தாழ்த்தபட்டடோருக்கான வாய்ப‌்பையும் தட்டி பறிக்கின்றனர். பறிப்பவர்கள் அருகிலேயே இருக்க இல்‌லாத பார்ப்பனரை எதிரியாக காட்டவதை ஏற்ற இயலாது. யாராவது மதம்மாறியவர்கள் இடஒதுக்கீட்டில் இடம்பெறுவதை கண்டித்தது உண்டா? அப்படியானால் எவ்வாறு உரிய பங்களிப்பு கிடைக்கும்.
இராமியா
//”69 சதம் யாருக்கு செல்கிறது பார்பனருக்கா? அல்லது பார்பனர் அல்லாதவர்களுக்கா? 31 சதமும் பார்ப்னர்களுக்கானது இல்லை ... மத்திய பணியிலும் ... 50 சதத்தில் தான் பார்பனர்கள் அணைவருடனும் போட்டியிட வேண்டும்” எனவே பார்பனர்கள் ஆதிக்கம் செய்வதாக கூறமுடியாது.// இது உண்மை என்றால் பிரதமர் அலுவலகம், குடியரசுத் தலைவர் அலுவலகம், ரிசர்வ் வங்கி இன்னும் கேந்திரமான இடங்களில் பார்ப்பனர்கள் எப்படி 90%க்கும் மேல் ஆக்கிரமிக்க முடிகிறது? //இடஒதுக்கீடு என்பது நிரந்தர தீர்வல்ல ஏற்றத்தள்வுகளை சரிசெய்ய ஏற்படுத்தப்பட்டதே இடஒதுக்கீடு. 100 சதவீதத்தையும் ஒதுக்கீடு செய்வது என்பது சரியல்ல.// இட ஒதுக்கீடு நிரந்தரத் தீர்வு அல்ல; ஆனால் இட ஒதுக்கீடு தன் பணியை முடிக்காத வரையில் வேறு தீர்வுக்கு வழியே இல்லை. 100% யும் ஒதுக்கீடு செய்வதில் எந்த விதத் தவறும் இல்லை. அப்படிச் செய்தால் தான் ஒரு வகுப்பார் மற்ற வகுப்பாரின் வாய்ப்புகளைப் பறிக்க முடியாமல் தடுக்க முடியும். கேந்திரமான இடங்களில் பார்ப்பனர்கள் அளவுக்கு மீறி ஆக்கிரமித்து இருப்பதில் இருந்தே வேலைக்கு எடுத்துக் கொள்வது பற்றியும் பதவி உயர்வு பற்றியும் தாங்கள் கூறியுள்ள விவரங்கள் முழுமையானவை அல்ல என்று தெரிந்து கொள்ளலாம். தங்களுடைய மக்கள் தொகைக்குச் சற்றும் பொருந்தாத அளவில் அதிகமாக வாய்ப்புகளை ஆக்கிரமித்துக் கொண்டு இருக்கும் பார்ப்பனர்களை விட தங்கள் மக்கள் தொகைக்குச் சற்றும் பொருந்தாத அளவில் குறைவாக வாய்ப்புகளைப் பெற்றுள்ள ஒடுக்கப்பட்ட மக்கள் தான் தங்களுக்கு எதிரிகளாகத் தெரிந்தால் அதற்கு யாரும் எந்த விதத்திலும் உதவ முடியாது. மன்னிக்கவும்.
ஆறுமுகம்
”இது உண்மை ... 90%க்கும் மேல் ஆக்கிரமிக்க முடிகிறது?” - இடஒதுக்கீட்டு காலத்திற்க்கு முன்பு கல்வியில் ஆங்கிலேயர் காலத்திலும் பார்பனர்கள் விழிப்புடன் இருந்ததால் அரசியலிலும் அரசு பதிவிகளிலும் அதிக அளவு இடம் பெற்றனர். இன்று அவ்வலுவலகத்தில் மலையாளிகளே அதிக அளவில் உள்ளனர் என்று குற்றம் சாட்டப்படுகிறது. இட ஒதுக்கீட்டு காலத்தில் பார்பனர்கள் பங்கு பெருவது 31 சதம் 50சதம் என்ற அளவில் மாநிலத்திலும் மத்தியிலும் ஆகிவிட்டது. எனவே பார்பனர்கள் ஆக்கிரமித்தனர் என்று கூறமுடியாது காரணம் அவர்கள் இடஒதுக்கீட்டில் அல்லது மற்வர்களுக்கான இடத்தை பிடிப்பதும் கிடையாது. ”இட ஒதுக்கீடு நிரந்தரத் தீர்வு அல்ல; ... ஒரு வகுப்பார் மற்ற வகுப்பாரின் வாய்ப்புகளைப் பறிக்க முடியாமல் தடுக்க முடியும்.” - பார்பனர்கள் மற்ற வகுப்பாறின் வாய்ப்புகளை பறிப்பதில்லை மேலும் சட்டப்படி பறிக்க முடியாது. ஆனால், அருந்ததியர்கள் ஒதுக்கீட்டில் பார்பனர்கள் ஆக்கிரமிப்பதில்லை மாறாக ஆதிக்க சாதியே அதை ஆக்கிரமிக்கிறது. அங்கு விதிதாச்சரஅடிப்படையில் 21 சதத்தில் ஆருந்ததியர் இடம்பெறுவதை தடுப்பது பார்பனர் அல்ல. அங்கு அருந்ததிலயர் 3 சதம் கூட பெறமுடியாத அளவு 97 சதத்தையும் ஆக்கிரமிப்பது ஆதிக்க சாதியினரே. ”தங்களுடைய மக்கள் தொகைக்குச் ... அதற்கு யாரும் எந்த விதத்திலும் உதவ முடியாது.” - அருந்ததியர் சமுதாயம் ஒடுக்கப்பட்ட சமுதாயம் தான் அதை ஒடுக்கப்பட்ட மக்கள் என்ற பெயரில் ஆக்கிரமித்தால் அதை தடுக்கவேண்டிது அதை தவிர்க்க வேண்டியது கடமை அதை உதவ முடியாது என்ற ஒதுக்கி தள்ளுவது ஒதுகுறிப்பிட்ட சாதியினர் ஆதிக்கம் பெறவேண்டும் என்று பார்பனனை எதிரியாக காட்டி சுரண்டுவதற்கு ஒப்பாகும்.
இராமியா
ஐயா! ஆறுமுகம் அவர்களே! ஆங்கிலேயர் காலத்தில் மட்டுமல்ல, ஆங்கிலேயர்கள் வெளியேறி 64 ஆண்டுகளுக்குப் பிறகும், இட ஒதக்கீட்டை வற்புறுத்தும் இந்திய அரசியல் அமைப்புச் சட்டம் வந்து 62 ஆண்டுகளுக்குப் பிறகும் கேந்திரமான இடங்களில் பார்ப்பனர்கள் 90%க்கும் அதிகமாக ஆக்கிரமித்துக் கொள்ள எப்படி முடிகிறது? நீங்கள் சட்டம் அனுமதித்துள்ள இட ஒதுக்கீட்டைப் பற்றிப் பேசுகிறீர்களே ஒழிய அது நடைமுறைப் படுத்தப்படாததைப் பற்றி ஏன் புரிந்து கொள்ள மறுக்கிறீர்கள்? மேலும் அருந்ததியர்களுடைய வாய்ப்புகள் அருந்ததியர்கள் பெறப் போராடுவதை நான் தவறு என்று சொல்லவே இல்லை. ஆனால் அதைச் சாக்கிட்டுக் கொண்டு சாதிக் கொடுமைகளின் ஆணி வேரான பார்ப்பன ஆதிக்கத்தை அழித்து ஒழிக்க வேண்டிய கடமையைப் புறந்தள்ள முயல்வது நுனிக் கொம்பில் அமர்ந்து கொண்டு அடிக் கொம்பை வெட்டுவது போலாகும் என்பதைத் தான் சுட்டிக் காட்டுகிறேன்.
ஆறுமுகம்
"ஆங்கிலேயர் காலத்தில் ... எப்படி முடிகிறது?" - என்பதற்க்கு ”இடஒதுக்கீட்டு காலத்திற்க்கு முன்பு கல்வியில் ஆங்கிலேயர் காலத்திலும் பார்பனர்கள் விழிப்புடன் இருந்ததால் அரசியலிலும் அரசு பதிவிகளிலும் அதிக அளவு இடம் பெற்றனர். இன்று அவ்வலுவலகத்தில் மலையாளிகளே அதிக அளவில் உள்ளனர் என்று குற்றம் சாட்டப்படுகிறது ” என்ற பதிலே பொறுந்தும். ”நீங்கள் சட்டம் அனுமதித்துள்ள ... புரிந்து கொள்ள மறுக்கிறீர்கள்?” - நடைமுறைப்படுத்தடும் நியமனங்களில் பட்டியல் இனத்தில் உள்ள ஏனைய பிரிவினர் ஏன் வாய்ப்பு மறுக்கப்படுகின்றனர. அவர்கள் மீது ஆதிக்கம் செலுத்துவது யார்? என்றும் சட்டம் அணுமதி அளித்தும் அதை தடுப்பவர்கள் பட்டியல் இன்தில் உள்ள சிறுபான்மை சாதியினரை ஆதிக்கம் செலுத்துகின்றனர் என்றே வலியுறுத்தப்படுகிறது. இடஒதுக்கீட்டில் இந்து மத்ததை சேர்ந்த பட்டியல் வகுப்பி‌னரை புறந்தள்ளி மதம் மாறியவர்கள் ஏனைய மக்களின் வாய்ப்புளை பறித்துக் கொள்ளும் புறவழி ஆக்கிறமிப்பை ஏன் கண்டிக்கவில்லை? ”மேலும் அருந்ததியர்களுடைய ... என்பதைத் தான் சுட்டிக் காட்டுகிறேன்.” - பார்பனர் ஆதிக்கம் என்பது பழைய கதையாக்கியபின் புதிய ஆதிக்கத்தை சுட்டிக்காட்டி அதை தடுக்கவேண்டியுள்ளது. ஆதிக்கம் செலுத்துவது யாராக இருப்பினும், பார்பனராக இருந்தாலும் சரி பார்பனர் அல்லதவராக இருந்தாலும் சரி, ஆதிக்கத்தை ஒரு போதும் ஏற்பதில்லை.
இராமியா
நண்பரே! நாம் இருவரும் கீறல் விழுந்த இசைத் தட்டு போல, பேசியதையே பேசிக் கொண்டு இருக்கிறோம். மலையாளிகளின் ஆதிக்கம் இருக்கிறது என்றால் அதுவும் மலையாளப் பார்ப்பனர்களின் ஆதிக்கம் தானே? மறைந்த குடியரசுத் தலைவர் நாராயணன் ஒரு மலையாளி தானே? அவ்வளவு உயர்ந்த பதவியில் இருந்தும் அவர் வினா எழுப்பிய கோப்புகள் பதவிக் காலம் முடியும் வரை திரும்பச் சமர்ப்பிக்கப் படவே இல்லையே? அங்கு மலையாளிகள் என்ற உணர்வு மேலோங்கி இருந்ததா அல்லது பார்ப்பன ஆதிக்கம் மேலோங்கி இருந்ததா? பார்ப்பன ஆதிக்கம் பழைய கதை என்று எப்படிச் சொல்கிறீர்கள்? மலையாளிகளின் ஆதிக்கம் எனும் போது மலையாளிகளில் உள்ள பிற்படுத்தப்பட்ட மக்களும் தாழ்த்தப்பட்ட மக்களும் இடம் பெற்றுள்ளார்களா? நண்பரே! மொழி, வட்டாரம் இன்னும் எத்தனை உணர்வுகள் உண்டோ அத்தனை உணர்வுகளையும் விட பார்ப்பன ஆதிக்கம் தான் நம் நாட்டை முற்றிலுமாகச் சீரழித்துக் கொண்டு இருக்கிறது. பாரப்பன ஆதிக்கம் வேரறுக்கப் பட்டால் அதனால் அவிழ்த்து விடப்படும் வாய்ப்புகள் நம்முள் உள்ள முரண்பாடுகள் அனைத்தையும் சுட்டு எரித்து விடும். அப்பொழுது வர்க்க முரண்பாடுகள் முன்னணியில் வரும்.

Leave a comment

Fields marked with * are required.

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.