பறிக்கப்பட்ட உரிமைகளை, அவ்வாறு பறித்தவர்களின் மனசாட்சியை நோக்கி விடுக்கப்படும் வேண்டுகோள்கள் மூலம் கண்டிப்பாக மீட்டெடுக்க முடியாது. மாறாக, இடையறாத போராட்டத்தின் மூலமாக மட்டுமே மீட்டெடுக்க முடியும், _ டாக்டர். அம்பேத்கர்

இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் டிச 25 அன்று வெண்மணி தியாகிகள் நினைவு நாளில் காலம் காலமாய் இந்திய தேசத்தின் அவமானமாய் நீடிக்கும் தீண்டாமை கொடுமைக்கு எதிரான போராட்டத்தை தமிழகம் முழுவதும் நடத்துவதென அறிவித்து இருந்தது.

டிச 25 அன்று காலை அனைத்து பத்திரிகைகளிலும் ஆலய நுழைவு போராட்டம் குறித்த செய்திகள் விடுக்கப்பட்ட அறிக்கை பிரசுரிக்கப்பட்ட அறிக்கை நம்முடையது அல்ல தமிழக முதல்வருடையது.

கடந்த ஓராண்டில் முதல்வர் விடுக்கும் இரண்டாவது அறிக்கை 3000 கிலோமீட்டர், 15 நாட்கள் பல லட்சம் மக்களை சந்தித்து சென்னையில் டி.ஒய்.எப்.ஐ சைக்கிள் பயண நிறைவு போராட்டத்தில் விடுத்த மறியல் அறைகூவலைத் தொடர்ந்து முதல்வர் விடுத்த அறிக்கை.

தற்சமயம் தலைமுறை தலைமுறையாக தலித் மக்கள் மீது சுமத்தப்படும் அராஜகத்தை தடுத்துநிறுத்திட சுவர் மறைத்த தலித் பகுதிக்கு பாதை அமைத்திட போராடிய, காங்கியனூர் போராட்டத்தில் சிறைசென்ற என தொடர்ந்து ஒடுக்கப்பட்ட மக்களின் சமூக விடுதலைக்காக இடைவிடாது போராடும் தமிழகத்தின் துடிப்புமிக்க இளைஞர் அமைப்பு டி.ஒய்.எப்.ஐ

தீண்டாமைக்கு எதிரான போராட்டத்தை டி.ஒய்.எப்.ஐ விடுத்த அறைகூவலை நாம் திடீரென போராடுவதாக விமர்சித்தும் சட்டம் ஒழுங்கை காப்பாற்றும் பொறுப்பு உள்ளதாகவும் அதனை நாம் உணரவேண்டும் எனவும் போராட்டத்தை கைவிடக் கோரி மறைமுக அறிவிப்பும் இதில் உள்ளடங்கி இருந்தது.

இத்தகைய நிலையில் ஆலய நுழைவு, முடிவெட்ட மறுப்பதற்கு எதிராக இரட்டைக்குவனை, பொதுக்குளத்தில் தண்ணீர் எடுக்கமறுப்பு, மயானப்பாதை அமைக்க மறுப்பது வடிவேல்கரை தலித் இளைஞன் முருகன் மீதான பொய்வழக்கு, தலித் மக்களின் அடிப்படை வசதி உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து 6 மையங்களில் நேரடி நடவடிக்கையும், 12 மையங்களில் ஆர்ப்பாட்டங்களும் நடைபெற்றது.

நாமக்கல்:

நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு வட்டம் பள்ளிப்பாளையம் அருகேயுள்ளது கொக்கராயன் பேட்டை. இங்கு பழமை வாய்ந்த பிரம்மலிங்கேஸ்வரர் ஆலயம் உள்ளது. சுமார் 1800 ஆண்டுகளுக்கு முன் பராந்தக சோழன் காலத்தில் அமைக்கப்பட்ட இந்தக் கோவில் இந்து சமய அறநிலையத்துறையின் கண்காணிப்பில் உள்ள போதிலும், தலித் மக்கள் கோயிலினுள் சென்று வழி பட முடியாத நிலை இருந்தது. இந்த அவலநிலையை முடிவுக்குக் கொண்டு வர இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் ஆலய நுழைவுப் போராட்டம் அறிவித்தது. இந்நிலையில், கடந்த 21 ம் தேதி வருவாய் கோட்டாட்சியர் தலைமையில் பேச்சுவார்த்தையில் அனைத்து தரப்பு மக்களும் கோயிலுக்குள் சென்று வழி பட யாருக்கும் மாற்றுக் கருத்து இல்லை என்றும், சட்டம் ஒழுங்கு பாதிக்கப்படாத வகையில் ஆலய நுழைவுப் போராட்டம் நடத்த ஒத்துழைப்பு தருவதாகவும் கோயில் நிர்வாகம் சார்பாக உறுதியளிக்கப்பட்டது. இதையடுத்து வெண்மணி நினைவு தினத்தன்று வாலிபர் சங்கத்தின் மாநிலத் தலைவர் எஸ்.ஜி. ரமேஷ்பாபு தலைமையில் ஆலய நுழைவு போராட்டம் நடைபெற்றது. சிபிஎம் மாவட்ட செயலாளர் எ. ரங்கசாமி, மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் பி. பெருமாள், எம்.அசோகன், தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் மாவட்ட அமைப்பாளர் சி.துரைசாமி, வாலிபர் சங்க மாவட்டத் தலைவர்கள் ந. வேலுசாமி, எஸ். சுரேஷ், இ.கோவிந்தராஜ் மற்றும் திரளான தலித் மக்கள் ஆலயத்துக்குள் நுழைந்து வழிபாடு செய்தனர். இது டி.ஒய்.எப்.ஐ போராட்டத்திற்கு கிடைத்த வெற்றியாகும்.

நாகப்பட்டிணம்:

நாகை மாவட்டம் செம்பனார் கோவில் ஒன்றியம் மாத்தூரில் உள்ள மாரியம்மன் கோயிலில் நீண்டகாலமாகவே தலித் மக்கள் உள்ளே செல்லவோ, வழிபாடு செய்யவோ உரிமை மறுக்கப்பட்டிருந்தது. இக்கொடுமை இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் டிசம்பர் 30 அன்று தலித் மக்களின் ஆலய நுழைவுப் போராட்டம் நடத்தப்படும் என்று வாலிபர் சங்கம் அறிவித்தது. பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது.

இந்நிலையில் டிசம்பர் 26 அன்று மயிலாடுதுறை கோட்டாட்சியர் முன்னிலையில் நடந்த அமைதிப்பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது. டிசம்பர் 28 திங்களன்று காலை, அரசு அதிகாரிகள், காவல்துறை, வாலிபர் சங்கம், ஆதிக்க சாதியினர் உள்ளிட்டோர் அடங்கிய அமைதிப்பேச்சுவார்த்தை நடைபெற்றது.

அன்று மதியமே அரசு  காவல்துறை அதிகாரிகள் முன்னிலையில் தலித் மக்கள் ஆலய நுழைவும், வழிபாடும் நடைபெறும். தொடர்ந்து தலித் மக்களின் வழிபாட்டு உரிமையை எவரும் தடுத்தால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் ஒப்பந்தம் ஏற்பட்டது. ஆலய நுழைவு அதன்படி மதியம் 2 மணிக்கு மாத்தூர் மாரியம்மன் கோயிலில் ஆர்டிஓ, டிஎபி மற்றும் அரசு, காவல்துறை அதிகாரிகள் முன்னிலையில் 75 பெண்கள் உள்பட தலித் மக்கள் 150 பேர் ஆலயத்துக்குள் நுழைந்தனர். அப்போது கோயில்கருவறை சாதி ஆதிக்கச் சக்திகளால் பூட்டப்பட்டிருந்தது. அதிகாரிகள் பூட்டை உடைத்துக் கருவறையைத் திறந்துவிட்டனர். தலித் மக்கள் அமைதியாகவும், உரிமை பெற்ற வெற்றிப் பூரிப்போடும் வழிபாடு செய்தனர். அதன்பின், காலனித் தெருவில் வாலிபர் சங்கத்தின் ஒன்றியச் செயலாளர் மார்க்ஸ் தலைமையில் கூட்டம் நடைபெற்றது. மாவட்டச் செயலாளர் ஜி. ஸ்டாலின், நிர்வாகிகள் பி.ஏ.ஜி. சந்திரசேகரன், கிருஷ்ணமூர்த்தி, கணேசன், சரவணன், கண்ணன் ஆகியோர் உரையாற்றினர்.

திருச்சி:

திருச்சி மாவட்டம் துறையூர் அருகே உள்ள கொட்டையூர் கிராமத்தில் தலித்துகளுக்கு இரட்டை கிளாஸ் முறை, செருப்பு அணிந்து செல்வதற்கும், கோயிலுக்குள் நுழைவதற்கும் பல ஆண்டுகளாக அனுமதி மறுக்கப்பட்டுவந்தது. வாலிபர் சங்கம் மற்றும் அகில இந்திய விவசாயத் தொழிலாளர் சங்கத்தினர் இந்த அநீதியை எதிர்த்து டிசம்பர் 30ஆம் தேதி கொட்டையூர் கிராமத்தில் ஆலய நுழைவுப் போராட்டத்தை அறிவித்திருந்தனர். இந்நிலையில் செவ்வாய் அன்று வட்டாட்சியர் தலைமையில் நடைபெற்ற முத்தரப்பு பேச்சு வார்த்தையில் தீர்வு ஏற்பட்டது.

இதனை தொடர்ந்து தாழ்த்தப்பட்ட மக்கள், வாலிபர் சங்கம் மற்றும் விவசாயத் தொழிலாளர் சங்கத்தினருடன் அப்பகுதியில் உள்ள கோயிலுக்கு சென்று வழிபட்டனர். இப்போராட்டத்தில் வாலிபர் சங்க மாவட்டச் செயலாளர் கோ. வெற்றிச்செல்வன், சி.பி.எம் மாநகர செயலாளர் அண்ணாதுரை, விவசாயத் தொழிலாளர் சங்க மாவட்டச் செயலாளர் எஸ். சந்திரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

விருதுநகர்:

விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் தாலுகாவிற்கு உட்பட்ட நல்லமநாயக்கன்பட்டி கிராமத்தில் தலித், அருந்ததியர் சமூகத்தினருக்கு முடிதிருத்தம் செய்ய மறுக்கப்பட்டது. எனவே, அக்கிராமத்தில் நடைபெற்ற கூட்டத்தில் ஊர் பெரியவர்கள், இளைஞர்கள் கலந்து கொண்டனர். இக்கொடுமை பற்றிய புகார் மனுவை தாசில்தார் காளிமுத்துவிடம் கொடுத்தனர். உடனே, வருவாய்த்துறை அலுவலர் விசாரனை செய்தார். அதில் அருந்ததியர் மக்களுக்கு முடிவெட்ட மறுப்பது உண்மை என ஊர்ஜிதம் ஆனது. எனவே, 21.12.09 அன்று தாசில்தார் அலுவலகத்தில் சவரத் தொழிலாளி தமிழரசன், வட்டாட்சியர், காவல்துறை ஆய்வாளர் கார்த்திகைசாமி, அருந்ததியர் மக்கள், வாலிபர் சங்க நிர்வாகிகள் ஆகியோர் பங்கேற்ற சமாதானக் கூட்டம் நடைபெற்றது. அதில் முடிதிருத்தும் தொழிலாளி தமிழரசன் அன்றைய தினமே அருந்ததியர்களுக்கு முடிதிருத்த எழுத்துப் பூர்வமாக சம்மதம் தெரிவித்தார். 

முனியாண்டி என்ற அருந்ததியருக்கு முடிதிருத்தம் செய்தார். பல வருடங்களாக உரிமை மறுக்கப்பட்ட தலித் மக்களுக்கு வாலிபர் சங்கம் நடத்திய போராட்டம் மூலம் உரிமை கிடைத்ததால் அருந்ததியர் மக்கள் மகிழ்ந்தனர். இதில் வாலிபர் சங்க மாநிலத் துணைத் தலைவர் என். முத்துராஜ், தீண்டாமை ஒழிப்பு மாவட்ட அமைப்பாளர் சாமுவேல்ராஜ், மாவட்டத் தலைவர் எல்.முருகன், மாவட்ட பொருளாளர் பி.பாலசுப்பிரமணியன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

கடலூர்:

கடலூர் மாவட்டம் விருத்தாச்சலம் தாலுக்கா பழைய பட்டிணம் கிராமத்தில் டாக்டர் அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தும் போராட்டத்தை வாலிபர் சங்கம் அறிவித்தது. இப்பிரச்சனை தொடர்பாக வட்டாட்சியர் முன்னிலையில் நடைபெற்ற பேச்சுவார்த்தை குறிப்பிட்ட சமூகத்தினரின் பிடிவாதத்தால் தோல்வி அடைந்தது. போராட்டம் நடந்தே தீரும் என வாலிபர் சங்கத்தினர் கூறினர்.

இந்நிலையில் பழைய பட்டினம் கிராமத்திற்குள் செல்லும்சாலைகள்அனைத்துக்கும் போலீசாரால் சீல் வைக்கப்பட்டது. கிராமத்தை சுற்றி போலீசார் குவிக்கப்பட்டு யாரையும் கிராமத்திற்குள் அனுமதிக்கவில்லை. விருத்தாசலத்தில் இருந்து பழைய பட்டினம் கிராமத்திற்கு செல்லும் சாலைகளையும் போலீசார் மற்றும் உளவுத்துறையினர் கண்காணித்தனர். கூடுதல் மாவட்ட கண்காணிப்பாளர், இரண்டு துணை கண்காணிப்பாளர், அதிரடிப்படையினர் உள்ளிட்ட 300க்கும் மேற்பட்ட போலீசார் அம்பேத்கார் சிலைக்கு மாலை அணிவிப்பதை தடுக்கும் பணியில் ஈடுபட்டிருந்த னர். வாலிபர் சங்கத்தினர் வாகனங்களில் பாதிதூரம் வரை வந்து, வாகனத்தில் இருந்து இறங்கி முந்திரிக்காடுகள் வழியாக நடந்தே போராட்டத்திற்கு விரைந்தனர்.

அம்பேத்கருக்கே தீண்டாமையா? மாலை அணிவிக்க தடை என்றால் அவர் என்ன தேச விரோதியா என்ற முழக்கத்துடன் பழையபட்டினம் அம்பேத்கர் சிலை அருகே விரைந்த வாலிபர் சங்கத்தினரை போலீசார் தடுத்து நிறுத்தினார்கள். அதைத் தொடர்ந்து சங்கத்தினர் இரண்டு மணிநேரம் சாலை மறியல் போராட்டம் நடத்தினர். வாலிபர் சங்கத்தை சேர்ந்த 200 பேரும், தலித் மக்கள் 300 பேரும் இப்போராட்டத்தில் கலந்து கொண்டனர். போராட்டத்தில் பங்கெடுத்த மாவட்ட தலைவர் என்.எஸ். அசோகன், மாவட்ட செயலாளர் ஜே. ராஜேஷ்கண்ணா, மாவட்ட துணைச் செயலாளர் பி. வாஞ்சிநாதன், வட்டத் தலைவர் ஜி. வீராசாமி உள்ளிட்ட நூற்றுக்கு மேற்பட்டவர்களை காவல்துறை கைது செய்தனர்.

திருப்பூர்:

திருப்பூர் மாவட்டம் பொங்கலூர் ஒன்றியம் கொடுவாய் கிராமத்தில் தலித் மக்களுக்கு முடி திருத்த மறுத்து தீண்டாமையைக் கடைப்பிடித்து வரும் சலூன் கடையை வாலிபர் சங்கத்தினர் ஆவேசத்துடன் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.

சுப்பிரமணி என்ற தலித் வாலிபர் அங்கு முடி திருத்தச் சென்றுள்ளாசுப்பிரமணி. தலித் என்ற காரணத்திற்காகவே அவருக்கு முடி திருத்த மறுத்துள்ளனர். இந்த அவல நிலையை முடிவுக்குக் கொண்டுவர, கடையை முற்றுகையிட்டு வாலிபர் சங்க ஊழியர்கள் மற்றும் நிர்வாகிகளுடன் ஏராளமான தலித் இளைஞர்கள் போராட்டத்திற்கு முருகேஷ் தலைமைதாங்கினார். வாலிபர் சங்க தலைவர்கள் ஆர்.காளியப்பன், மாநிலப் பொருளாளர் எஸ்.முத்துக்கண்ணன், தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் அமைப்பாளர் பி.ராமமூர்த்தி உள்ளிட்ட ஏராளமான இளைஞர்கள் கலந்து கொண்டனர்.

கரூர்:

கரூர் மாவட்டம் தீண்டாமைக்கு எதிராக குளித்தலை ஒன்றியம் ஈச்சம்பட்டி கிராமத்தில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. வாலிபர் சங்க மாவட்டச் செயலாளர் முத்துச்செல்வன் உரையாற்றினார்.

சிவகங்கை:

சிவகங்கை மாவட்டம் தீண்டாமை எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் சிவகங்கை அரண்மனை வாசல்முன்பு மாவட்டத் தலைவர் வைகை சரவணன் தலைமையில் நடைபெற்றது. செயலாளர் முருகன், பொருளாளர் கிருஷ்ணமூர்த்தி 50 பெண்கள் உள்ளிட்ட நூற்றிற்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர்.

தர்மபுரி:

தர்மபுரி மாவட்டம் அரூர் தாலுக்கா வேடக்கட்டம் நடுவு கிராமத்திலும், தீர்த்தமலை கிராமத்திலும் தலித் மக்களுக்கான மயான வசதி கேட்டு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இவ்வியகத்தில் அரூர் தொகுதி சி.பி.எம் எம்.எல்.ஏ டில்லிபாபு, வாலிபர் சங்க மாநிலத் துணைத்தலைவர் எம். குணசேகரன், மாவட்டச் செயலாளர் முத்து, தலைவர் ஜோதிபாபு உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

விருதுநகர்:

விருதுநகர் மாவட்டம் கலெக்டர் அலுவலகம் முன்பு தீண்டாமைக்கு எதிரான ஆர்ப்பாட்டம் மாவட்டத் தலைவர் பாலசுப்பரமணி தலைமையில் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில் தீண்டாமை ஒழிப்பு முன்னணி சார்பில் அ. சேகர், வாலிபர் சங்க மாநில துணைத்தலைவர் என். முத்துராஜ், மாவட்டச் செயலாளர் எல். முருகன், மாவட்ட நிர்வாகிகள் தில்லைநாயகம், மாரியப்பன், சசி, பாண்டியராஜன், ஜெயக்குமார், செல்வம், எஸ்.எப்.ஐ மாவட்ட செயலாளர். மாரியப்பன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

விழுப்புரம்:

விழுப்புரம் மாவட்டம் உளுந்தூர் பேட்டை வட்டம், கல்சிறுநாகலூர் கிராமத்தில் வாழும் தலித் மக்களுக்கு தொடர்ந்து இழைக்கப்படும் தீண்டாமைக் கொடுமையை எதிர்த்து இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

கல்சிறுநாகலூர் கிராமத்தில் ஆதிக்க சாதியினர் வசிக்கும் தெருக்களில் தலித் மக்கள் காலில் செருப்பு அணிந்து நடப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. சைச்கிள் மற்றும் மாட்டு வண்டியின் மேல் உட்கார்ந்து செல்லவும் உரிமையில்லை டீக்கடை மற்றும் பொது இடங்களில் தலித்துக்கள் சமமாக உட்காரவும் தடைவிதித்து உள்ளதை கண்டித்து டி.ஒய்.எப்.ஐ சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் உளுந்தூர்பேட்டையில் நடைபெற்றது.

ஆர்ப்பாட்டத்திற்கு ஒன்றிய செயலாளர் வி. ரகுராமன் தலைமை தாங்கினார். சி.பி.எம் மாவட்டச் செயலாளர் ஜி. ஆனந்தன், ஒன்றியச் செயலாளர் எம். ஆறுமுகம், டி.ஒய்.எப்.ஐ மாநில துணைச் செயலாளர் ஆர். வேல்முருகன், மாவட்டத் தலைவர் ஆர். கண்ணப்பன், மாவட்ட செயலாளர். எம். செந்தில் ஆகியோர் கலந்து கொண்டனர்.

புதுக்கோட்டை:

புதுக்கோட்டை மாவட்டம் குன்றாண்டார கோவில் கந்தர்வக்கோட்டை, பொன்னமராவதி ஒன்றியப் பகுதிகளில் உள்ள இரட்டை டம்ளர் முறையை ஒழிக்க வேண்டும். கோவனூர் மற்றும் பல இடங்களில் உள்ள பொதுக்குளங்களில் தலித்துகள் குளிப்பதற்கு தடை விதிக்கும் ஆதிக்க சக்திகள் மீது நடவடிக்கை எடுக்ககோரி நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு சங்கத்தின் மாவட்டத் தலைவர் ஏ. ஸ்ரீதர் தலைமை வகித்தார். ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டு சங்கத்தின் மாநிலச் செயலாளர் எஸ். கண்ணன் சிறப்புரையாற்றினார். மாவட்டச் செயலாளர் எஸ். கவிவர்மன், தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாவட்ட அமைப்பாளர் எஸ். சங்கர் ஆகியோர் கலந்து கொண்டனர்.

வடசென்னை:

வடசென்னை மாவட்டம் வியாசர்பாடியில் தீண்டாமை கொடுமைக்கு எதிராகவும் தலித் மக்கள் வாழக்கூடிய பகுதிகளில் சுகாதார வசதிகளை மேம்படுத்தக் கோரியும் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் மாவட்டச் செயலாளர் இல. சண்முகசுந்தரம், நிர்வாகிகள் விஜயகுமார், அருள், கோபி, முருகன் உள்ளிட்ட 200க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர்.

தென்சென்னை:

தென்சென்னை மாவட்டம் அஞ்சு குடிசை, புஷ்பாநகர் ஆகிய இரணடு மையங்களில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் மாவட்டச் செயலாளர் ச. லெனின், தலைவர் கே. சந்தோஷ், முன்னாள் மாநிலச் செயலாளர் திருவேட்டை உள்ளிட்ட ஏராளமான இளைஞர்கள் கலந்து கொண்டனர்.

பாண்டிச்சேரி:

டிசம்பர் 24 பாண்டிச்சேரியில் தலித் சிறப்பு உட்கூறு திட்ட நிதியை முறையாகவும், முழுமையாகவும் செலவழிக்கக்கோரியும், தலித் மாணவர் தங்கி படிக்கும் அரசு விடுதிகளில் போதுமான அடிப்படை வசதிகளை செய்துதரக்கோரியும் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு பிரதேச தலைவர் சந்துரு தலைமை தாங்கினார். மாநிலத் தலைவர் எஸ்.ஜி. ரமேஷ்பாபு, மாவட்டச் செயலாளர் மணிபாலன் உள்ளிட்ட ஏராளமான இளைஞர்கள் கலந்து கொண்டனர்.

கோவை:

கோவை மாநகராட்சி 22வது வட்டம் புலியக்குளம் பகுதிகளில் வசிக்கக்கூடிய எழை, எளிய தலித் மக்களுக்கு பயன்படக்கூடிய வகையில் சமூகக்கூடம் கட்டப்பட்டுள்ளது. இச்சமுக கூடத்தை கடந்த இரண்டு ஆண்டு காலமாக திறக்காமல் பூட்டி வைத்திருந்தனர் மாநகராட்சி நிர்வாகிகள் டி.ஒய்.எப்.ஐ அறிவித்த போராட்டத்தை ஒட்டி இச்சமூககூடம் தலித் மக்கள் பயன்படுத்தும் வகையில் திறந்து வைக்கப்பட்டது. இந்நிகழ்ச்சிக்கு மாவட்டச் செயலாளர் ஏ.ஆர். பாபு பங்கேற்றார். முன்னதாக மாநகராட்சி மேயரிடம் மனு அளிக்கப்பட்டது.

மதுரை:

மதுரை மாவட்டம் தலித் மக்கள் வாழும் பகுதிகளில் அடிப்படை வசதிகளை செய்துதரக்கோரியும், ஆதிக்க சாதியினரின் தாக்குதலுக்கு ஆளான முருகன் மீது போடப்பட்ட பொய் வழக்குகளை வாபஸ்பெறக் கோரியும் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம், தீண்டாமை ஒழிப்பு முன்னணியும் இணைந்து ஆர்ப்பாட்டம் மதுரையில் நடத்தினர். ஆர்ப்பாட்டத்திற்கு வாலிபர் சங்க மாவட்டத் தலைவர் வை. ஸ்டாலின் தலைமை தாங்கினார். தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாநில அமைப்பாளர் பி. சம்பத், சட்ட மன்ற உறுப்பினர் என். நன்மாறன், வாலிபர் சங்க மாநில நிர்வாகிகள் எஸ். பாலா, ஜா. நரசிம்மன், என். கல்பனா, புறநகர் மாவட்டச் செயலாளர் உமா மகேஸ்வரன், தலைவர் கண்ணன் உள்ளிட்ட 500 மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

தேனி:

வீரபாண்டி பேரூராட்சி 10வது வார்டுடில் தலித் பெண்களுக்கான கழிப்பிடம் கட்ட வலியுறுத்தி மலைசாமி தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்டச் செயலாளர் ஆர். கார்ல் மார்க்ஸ், தீண்டாமை ஒழிப்பு முன்னணி சார்பில் டி. வெங்கடேசன் உள்ளிட்டோர் பலர் பங்கேற்றனர். போராட்டத்தை தொடர்ந்து நடைபெற்ற பேச்சுவார்த்தையில் ஒரு வாரக் காலத்தில் இடத்தை தேர்ந்தெடுத்து கட்டுவதற்கான நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளிக்கப்பட்டது. டி.ஒய்.எப்.ஐ நடத்திய போராட்டத்திற்கு கிடைத்த வெற்றியாகும்.         இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் நடத்திய தீண்டாமைக்கு எதிரான போராட்டம் ஈரோடு, சேலம், தூத்துக்குடி, கடலூர் என தொடர்ந்து நடைபெறவுள்ளது. தமிழகத்தில் தீண்டாமை கொடுமை முற்றுப்புள்ளி வைக்கும்வரை ஒடுக்குமுறையற்ற சமத்துவமான வாழ்வு அனைவருக்கும் உருவாக்கும்வரை இப்போராட்டம் தொடரும்.

- களத்திலிருந்து: எஸ்.பாலா

Pin It