கூடங்குளம் அணுஉலை திட்டத்தை நிறுத்த வேண்டும் என்று கூறுவதற்கான நான்கு அடிப்படைக் காரணங்கள்: 1) இந்த அணுஉலை அமைந்துள்ள இடத்தின் சுற்றுச்சூழல் பற்றி அணுசக்தித் துறை இதுவரை எந்த ஆராய்ச்சியும் நடத்தவில்லை 2) நடைபெற வாய்ப்புள்ள பின்விளைவுகளைப் பற்றி எந்த தொலைநோக்குப் பார்வையும் இல்லாமல் தொழில்நுட்ப முடிவுகள் மனம் போன போக்கில் எடுக்கப்பட்டுள்ளன 3) இந்திய – அமெரிக்க அணுஒப்பந்தத்துக்குப் பின் அரசு தொழில்நுட்ப நிர்வாகத் துறையினரின் எதிர்காலம் சார்ந்த பிரச்சினைகள் 4) சட்டப் பிரச்சினைகள். இவற்றை விரிவாகப் பார்ப்போம்.
 
1) அந்த இடத்தின் சுற்றுச்சூழல் தொடர்பாக அணுசக்தித் துறை ஆழ்ந்த தூக்கத்தில் இருந்த நிலையில் சிவில் சமூகத்தினரே ஆராய்ச்சிகளை மேற்கொண்டனர். இந்தப் பகுதியின் நில இயல் இயல்பு தொடர்பாக அரசு நிர்வாகத்துக்கு எதுவும் தெரியாது. அந்த இடத்தின் புவிஇயற்பியல் தொடர்பாக எந்த வகையான நுண்ணிய அளவிலான ஆராய்ச்சியோ, பெரிய அளவிலான ஆராய்ச்சியோ நடத்தாமல், கூடங்குளம் அணுஉலை இவ்வளவு அளவு கொண்ட நிலஅதிர்ச்சியைத் தாங்கக் கூடியது என்று பொத்தாம்பொதுவாக அரசு அமைப்புகள் கூறி வருகின்றன.

சிவில் சமூகத்தினரான எங்களுக்குக் கிடைத்த தகவல்களின் அடிப்படையில் ஆராய்ச்சியை செய்திருக்கிறோம். இந்த ஆராய்ச்சி பற்றி அரசு நிர்வாகத்திடம் நேரடியாக பகிர்ந்து கொள்ள முயற்சித்தோம், பிறகு ஊடகங்கள் மூலமாகவும், கடைசியாக 2002 மே மாதம் உச்சநீதிமன்றத்திலும் சமர்ப்பித்தோம். ஆனால் நீதிமன்றம் உள்பட அனைவராலும் எங்களது ஆராய்ச்சி புறக்கணிக்கப்பட்டது, கணக்கில் எடுக்கப்படவில்லை.

ஆனால் 2002 ஆராய்ச்சியில் ( R.Ramesh - Listen to the Voice of Geology, May 2002, Doctors for Safer Environment) நாங்கள் எழுப்பிய முக்கிய பிரச்சினைகளஇல் ஒன்று, சார்னோகைட் பாறை அஸ்திவாரத்தின் மேல் 14 கார்பனாடைட் டைக்ஸ் இருக்கிறது (இவை உறுதியற்ற நிலப்பகுதிகள். பண்டைய புவி யுகங்களில் உறுதியாக மாறிய எரிமலைக் குழம்புகளால் உருவானவை. 90களில் கேரள பல்கலைக்கழகத்தின் நில இயல் துறையைச் சேர்ந்த டாக்டர் பிஜு, பேராசிரியர் ராம சர்மா ஆகிய இருவரும் இதை கண்டுபிடித்திருக்கிறார்கள்), என்ற விஷயத்தை சென்னை ஐ.ஐ.டியைச் சேர்ந்த  டாக்டர் பூமிநாதன் என்பவர் எதிர்பாராதவிதமாக உறுதிப்படுத்தி இருக்கிறார். 2004 நவம்பர் மாத கரண்ட் சயின்ஸ் இதழில் “அணுஉலைகள் தொடர்பான இந்திய அனுபவங்கள்” என்ற ஆராய்ச்சி கட்டுரையில் அவர் இதைத் தெரிவித்திருக்கிறார்.

டாக்டர் பிஜு கண்டுபிடித்ததை அவர் உறுதிப்படுத்தினாலும், கூடங்குளம் அணுஉலை அமைந்துள்ள அதே முறிவுப் பாதையின் (fault line) மீது 1998 – 2002 வரை உருகிய பாறைப் பிதுங்கல்கள் (Rock Melt Extrusions - RME) ஏற்பட்டுள்ளன என்பதை டாக்டர் பூமிநாதன் உறுதிப்படுத்தவில்லை. 2003ஆம் ஆண்டில் இந்த பலவீனமான இடங்களைப் பற்றி கண்டறிந்த பிறகு, அது தொடர்பாக அரசு நிர்வாகம் நிறைய நேரத்தையும் பணத்தையும் செலவழித்துள்ளது. இந்த இடத்தை அகழ்ந்தெடுத்து, இந்தப் பகுதிகளை வலுப்படுத்த அதற்குள் காங்கிரீட்டை ஊற்றியிருக்கிறார்கள். இருந்தபோதும், இந்த உறுதியற்ற பாறை கூட்டங்களின் ஆழத்தைக் கண்டறிவதன் அவசியத்தை அவர்கள் உணரவில்லை.

பேராசிரியர் ராம சர்மா தனது கட்டுரையில், இந்த உறுதியற்ற பாறை கூட்டங்கள் பூமியின் மேலோடு வரை, அதாவது 30 கி.மீ. ஆழத்துக்கு நீண்டிருக்கலாம் என்று எச்சரித்திருக்கிறார். எங்களது கருத்து இதுதான் 1) கூடங்குளம் அணுஉலை தொடர்பாக ரஷ்யர்கள் தயாரித்து, அணுசக்தி ஒழுங்குமுறை வாரியத்திடம் (ஏ.இ.ஆர்.பி) சமர்ப்பித்த முதல்கட்ட பாதுகாப்பு மதிப்பீட்டு அறிக்கையில் மேற்கண்ட விஷயம் பற்றி எந்தத் தகவலும் இல்லை; இதற்குக் காரணம் என்னவென்றால் இந்த அறிக்கைக்கான ஆய்வு 1998ஆம் ஆண்டு கடைசி மாதங்களில் நடத்தப்பட்டு, 1999 தொடக்கத்தில் சமர்ப்பிக்கப்பட்டுவிட்டது. அதாவது இந்த உருகிய பாறைப் பிதுங்கல் நிகழ்வுகள் தொடர்பான அறிவியல் ஆராய்ச்சிகள் நில இயல், அறிவியல் இதழ்களால மறுஆய்வு செய்யப்பட்டு 2001ஆம் ஆண்டுக்குப் பிறகே வெளி வந்தன. அதற்கு முன்னதாகவே இந்த அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டுவிட்டது. இந்தப் பகுதியில் உள்ள பலவீனமான கார்பனாடைட் டைக்ஸ் எதிர்காலத்தில் ஏற்படக் கூடிய நிலஅதிர்ச்சி, ஆழிப் பேரலையால் எப்படி பாதிக்கப்படும், மேலும் அவற்றின் இயல்பு என்ன என்பது பற்றி புரிந்துகொள்ள ஆழமான நிலஇயற்பியல், நிலஅதிர்வு ஆராய்ச்சிகள் அவசியம் நடத்தப்பட வேண்டும். 2002 ஜனவரி மாதத்தில் இருந்து இந்த கோரிக்கையை நாங்கள் முன்வைத்து வருகிறோம். இந்தப் பகுதியில் விரிவான நுண்ணிய நில இயல் ஆராய்ச்சிகளை மேற்கொள்ளாமல், இந்த அணுஉலை அமைந்துள்ள இடத்தில் நிகழ்ந்துள்ள உருகிய பாறைப் பிதுங்கல்கள் நிகழ்வை சாதாரணமாக புறமொதுக்கிவிட முடியாது.

எனவே, இந்த ஆராய்ச்சிகளுக்குப் பிறகு வி.வி.இ.ஆர். 1000, வி 392 அணுஉலைகளில் அந்த பகுதியின் நில இயல்புக்கு ஏற்ப வடிவ மாறுதல்கள் தேவை. இந்த இடத்தில் உள்ள பலவீனமான பகுதிகள் காரணமாக மிதமான நிலஅதிர்வுகள்கூட அணுஉலையை பாதிக்கக் கூடும். மேலும் உருகிய பாறைப் பிதுங்கல்கள் வெளியே வந்து நேரடியாக அணுஉலையை பாதிக்கலாம் அல்லது மறைமுகமாக தீவிபத்துகளை தூண்டிவிடலாம் என்ற வாதங்களை புறக்கணித்துவிட முடியாது.  ஆனால் அரசு அணுசக்தித் துறை இந்த பொறுப்பை ஏற்றுக் கொள்ளாமல் தப்பிக்கப் பார்க்கிறது.

இந்த இயற்கை பேரழிவுகள் நிகழ்ந்தால், அதிலும் மோசமாக ஆழிப் பேரலை, நிலஅதிர்வு, உருகிய பாறைப் பிதுங்கல்கள் போன்றவை ஒரே நேரத்தில் ஏற்பட்டால், அவற்றைக் கையாள அணுசக்தித் துறையிடம் அறிவியல்பூர்வமான, தொழில்நுட்ப வல்லமையும் திறமையும் இருக்கிறதா? சுத்தமாக இல்லை என்பதே உண்மை.
 
2) கூடங்குளம் அணுஉலையில் அணுசக்தித் துறை மேற்கொண்ட முக்கிய தொழில்நுட்ப மாற்றங்கள் இந்த விவகாரத்தை இன்னும் சிக்கலாக்குகின்றன.  கன்னியாகுமரியில் உள்ள பேச்சிப்பாறை அணையிலிருந்து அணுஉலையின் முதன்மை குளிர்விப்பு குழாய்களுக்கு தண்ணீர் எடுக்கப்படும் என்று 2006 அக்டோபர் வரை கூறப்பட்டு வந்தது. இந்த அணை கூடங்குளம் அணுஉலையில் இருந்து வடமேற்கில் 65 கி.மீ. தொலைவில் உள்ளது. நூறு ஆண்டுகளுக்கு முன் ஆட்சி நடத்திய திருவாங்கூர் மாநிலத்தால் இந்த அணை கட்டப்பட்டது. ராஜிவும் கோர்பசேவும் 1988ஆம் ஆண்டு கூடங்குளம் அணுஉலை தொடர்பான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட நேரத்தில் பேச்சிப்பாறை அணை நீரை பயன்படுத்தும் முடிவு எடுக்கப்பட்டது.

2005ஆம் ஆண்டில் 4 வி.வி.இ.ஆர் கூடுதல் அணுஉலைகளுக்காக நாக்பூரை மையமாகக் கொண்ட நீரி அமைப்பு நடத்திய சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டிலும் இது பற்றி குறிப்பிடப்பட்டுள்ளது. கூடங்குளம் அணுஉலை திட்டத்தின் தலைமைப் பொறியாளர் எஸ்.கே.அகர்வால், நியூக்ளியர் எஞ்சினியரிங் அண்ட் டிசைன் இதழிலில் 2006ஆம் ஆண்டு எழுதிய கட்டுரையிலும் இது உறுதி செய்யப்பட்டுள்ளது.

ஆனால் திருநெல்வேலியில் 2006 அக்டோபரில் நடப்பதாக இருந்து, பின்னர் ஒத்தி வைக்கப்பட்ட முதல் மக்கள் கலந்தாய்வு கூட்டத்துக்குப் பிறகு இந்த முடிவு திடீரென மாற்றிக் கொள்ளப்பட்டது.

2006ஆம் ஆண்டின் கடைசியில் இருந்து கூடங்குளம் அணுஉலைக்கு பேச்சிப்பாறை அணை தண்ணீர் பயன்படுத்தப்படாது, அதற்கு பதிலாக புதிய கடல்நீர் சுத்திகரிப்பு திட்டம் உருவாக்கப்படும் என்று அரசு நிர்வாகம் ஊடகங்களில் தெரிவிக்க ஆரம்பித்தது. இது பலருக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தி இருக்கலாம். ஆனால் எங்களுக்கு அப்படி ஏற்படவில்லை.

ஏனென்றால், அணையின் கொள்ளளவு தொடர்பான முதல் ஒருங்கிணைந்த ஆய்வைப் பற்றி எடுத்துக் கூறி, அந்த நீராதாரத்தை அணுஉலைக்கு பயன்படுத்துவதற்கு வாய்ப்பில்லை என்பதை மக்கள் கலந்தாய்வு மூலம் அதிகாரிகளுக்கு தெரிவித்ததே நாங்கள்தான். அந்த அணுஉலை செயல்படுவதாகச் சொல்லப்பட்ட 40க்கும் மேற்பட்ட ஆண்டுகளில் பல்வேறு தொழில்நுட்ப, அரசியல் பின்விளைவுகளை எதிர்நோக்காமல் அந்த அணையில் இருந்து தண்ணீரைப் பெற முடியாது என்பதை இந்த ஆராய்ச்சி நிரூபித்தது. 1992ஆம் ஆண்டில் உலக வங்கி நிதியுதவியுடன் அந்த அணையில் நடைபெற்ற வண்டல்படிவு ஆராய்ச்சியை பற்றியும் இந்த கட்டுரை குறிப்பிட்டிருந்தது. அந்த அணையில் நூறு ஆண்டுகளாக ஏற்பட்ட வண்டல்படிவு, அணையின் உண்மையான கொள்ளளவில் பாதியை மூடிவிட்டது.

தனது முதன்மை அணுஉலை திட்டத்துக்கான தண்ணீர் விநியோகத்துக்கான அணையின் கொள்ளளவு தொடர்பாக ஆராய்ச்சி நடத்துவது பற்றி அணுசக்தித் துறை எந்த வகையிலும் கவலைப்படவில்லை. இந்த அம்சத்தை 18 ஆண்டுகளாக புறக்கணித்து வந்த அணுசக்தித் துறை, சிவில் சமூகம் தனது ஆராய்ச்சியை பகிர்ந்து கொண்ட பின்னர்தான் விழித்துக் கொண்டிருக்கிறது என்பது மிகப் பெரிய உண்மை.

பேச்சிப்பாறை திட்டத்தை கைவிட்ட பிறகு அணுசக்தித் துறை என்ன செய்தது? தனது கடல்நீர் சுத்திகரிப்பு திட்டத்துக்காக பாரம்பரிய மல்டி ஸ்டேஜ் ஃபிளாஷ் அல்லது மல்டி எஃபெக்ட் டிஸ்டிலேஷன் தொழில்நுட்பங்களில் ஏதாவது ஒன்றை தேர்ந்தெடுக்க வேண்டிய கட்டாயத்துக்கு தள்ளப்பட்டது. ஏனென்றால் பேச்சிப்பாறை அணை தண்ணீரைப் பெறும் திட்டத்துடன் அணுஉலைகள் ஏற்கெனவே வடிவமைக்கப்பட்டு விட்டனவே ஒழிய, தண்ணீர் சுத்திகரிப்பு தொழில்நுட்பங்களுக்கு ஏற்ப அணுஉலைகள் வடிவமைக்கப்படவில்லை. எனவே, இந்த பாரம்பரிய தொழில்நுட்பங்கள் வி.வி.இ.ஆர் அணுஉலையின் வடிவமைப்பில் ஏற்படுத்தும் “செருப்புக்கு ஏற்ப காலை வெட்டும்” மாற்றங்கள் தொடர்பான பிரச்சினைகளைப் பற்றி ஆராய வேண்டி இருக்கிறது. (இதுவரை எந்த வி.வி.இ.ஆர். 1000 அணுஉலையும் கடற்கரையில் அமைக்கப்பட்டது இல்லை. கூடங்குளத்தில் உள்ள வி.வி.இ.ஆர் 1000 அணுஉலைகள்தான் முதன்முறையாக தனது முதன்மை, பதிலி குளிர்விப்பான்களுக்கு கடல்நீரை பயன்படுத்தப் போகின்றன). இந்த பிரச்சினையில் சிக்கி அடிபடாமல் இருக்க, அணுசக்தித் துறை ஒரு குறுக்குவழியைக் கண்டுபிடித்தது. அணுத் தொழிலில் இதுவரை பரிசோதித்துப் பார்க்கப்படாத, விலை அதிகமான மெக்கானிகல் வேபர் கம்ப்ரெஷன் என்ற புதிய தண்ணீர் சுத்திகரிப்பு முறையை கையில் எடுத்தது.

கூடங்குளம் அணுஉலை அமைந்துள்ள இடத்தில் அணுஉலைகள் உயரமான இடத்தில் அமைக்கப்பட்டுள்ளதால், ஆழிப்பேரலை வந்தால் இந்த அணுஉலைகள் பாதிக்கப்படாது என்று அணுசக்தித் துறை நிபுணர்கள் கூறுகிறார்கள். ஆனால் எதிர்காலத்தில் ஆழிப் பேரலையோ அல்லது புயலோ இந்த தண்ணீர் சுத்திகரிப்பு நிலையங்களுக்கு ஏற்படுத்த வாய்ப்புள்ள பாதிப்புகளை எதிர்கொள்வதற்கான எந்த ஒரு திட்டத்தையும் அவர்கள் பரிசீலிக்கவில்லை. (2004 ஆழிப்பேரலையின்போது கூடங்குளம் அணுஉலை ஊழியர்கள் குடியிருப்புக்கு தண்ணீர் வழங்கும் சுத்திகரிப்பு நிலையம் உண்மையிலேயே பாதிக்கப்பட்டது இந்த இடத்தில் குறிப்பிடத்தக்கது); ஆழிப்பேரலை நிகழும் நேரத்திலேயே கார்பனாடைட் டைக்ஸில் நிலஅதிர்வு ஏற்பட்டு உறுதி குலைந்தால், உருகிய பாறைப் பிதுங்கல்கள் வெளியே வந்தால் என்ன நடக்கும் என்பதை கற்பனை செய்தும் பார்க்க முடியாது.

3) இந்திய அணுசக்தி கழகத்தின் தலைவர் வி.கே.சதுர்வேதி மற்றொரு மிகப் பெரிய முக்கியமான பிரச்சினையை உருவாக்கி இருக்கிறார். 2008ஆம் ஆண்டில் அனில் திருபாய் அம்பானியின் அணு முன்முயற்சி குழுவில் அவர் சேர்ந்துள்ளார். அதற்குப் பிறகு இந்திய அணுசக்தித் துறையில் உள்ள சிறந்த திறமையாளர்களை ரிலையன்ஸ், தனியார் நிறுவனங்களில் சேருமாறு அவர் பிரசாரம் செய்து வருகிறார். இப்படியாக ஏற்கெனவே கவனக்குறைவாகவும் பொறுப்பில்லாமலும் உள்ள அணுசக்தித் துறை, அணுசக்தி ஒழுங்குமுறை வாரியத்தை இன்னும் பொறுப்பில்லாததாக மாற்றி வருகிறார்.

4) எல்லாம் மிகவும் மோசமடையும் நிலையில், ஃபுகுஷிமா நெருக்கடியைப் போல் இல்லாமல், கூடங்குளம் அணுஉலையில் ஏற்படும் அணுஉலை நெருக்கடியை அந்த உலையின் காவலர்கள்தான் கையாளுவார்கள் போலத் தெரிகிறது. ஏனென்றால் அதற்குள் அணுசக்தித் துறையில் உளஅள நிபுணர்கள் அனைவரும் மற்ற நிறுவனங்களுக்கு இடம்பெயர்ந்து இருப்பார்கள். 2004 ஆழிப்பேரலையின் போது கல்பாக்கத்தில் இது நடந்திருக்கிறது என்பதை வைத்துப் பார்க்கும்போது, எதிர்காலத்தில் கூடங்குளத்திலும் இது மீண்டும் நடப்பதற்கு ஆயிரம் மடங்கு வாய்ப்பிருக்கிறது. அப்படி நடப்பதற்கான வாய்ப்பு நிதர்சனமானது.

கூடங்குளம் அணுஉலை ஏன் முற்றிலுமாக நிராகரிக்கப்பட வேண்டும் என்பதற்கான எங்களது வலியுறுத்தல் மேற்கண்ட காரணங்களின் அடிப்படையிலேயே அமைந்துள்ளது.

- டாக்டர் ஆர்.ரமேஷ், டாக்டர்.வீ.புகழேந்தி, டாக்டர்.வி,டி.பத்மநாபன்
 
பாதுகாப்பான சுற்றுச்சூழலுக்கான மருத்துவர் குழு (Doctors for Safer Environment)