சோவியத் யூனியனில் சோஷலிசப் புரட்சி வெற்றி அடையும் வரை முதலாளிகளும், முதலாளித்துவ அறிஞர்களும், பொதுவுடைமைத் தத்துவம் வெறும் கற்பனை என்றும் நடைமுறைக்கு வராது என்ற எண்ணத்திலும் இருந்தனர். ஆனால் சோஷலிசப் புரட்சி வெற்றி பெற்றது மட்டுமல்லாமல் நிலை கொண்டு விட்டதையும் பார்த்த அவர்கள் மிகவும் கதிகலங்கிப் போனார்கள். பொதுவுடைமைச் சிந்தனை மக்களிடையே பரவாமல் இருக்க இராணுவ அடக்குமுறை மட்டும் போதாது என்றும் கருத்தியல் ரீதியான தாக்குதல் மிகவும் அவசியம் என்றும் உணர்ந்தார்கள்.
 
          1925 ஆம் ஆண்டில் செர்கெய் எய்சென்டெய்ன் (Sergei Eisentein) என்பவரால் இயக்கப்பட்ட போர்க் கப்பல் பொதோம்கின் (Battleship Potemkin) என்ற திரைப்படம் வெளியிடப்பட்டது. இது 1905 ஆம் ஆண்டு நடந்த புரட்சியின் போது பொதோம்கின் என்ற போர்க் கப்பலில் இருந்த தொழிலாளர்களின் வீரஞ் செறிந்த போராட்டத்தைப் பற்றியது. இத்திரைப்படம் உலகெங்கும் நல்ல வரவேற்பைப் பெற்றது.
 
          1928 ஆம் ஆண்டு அவ்வியக்குநர் ஐரோப்பிய நாடுகளின் திரைப்படக் கலைஞர்களைக் கண்டு, திரைப்படத் துறையில் அவர்களுடைய அனுபவங்களைத் தெரிந்து கொள்ள அந்நாடுகளுக்குச் சென்றார். அப்பொழுது அந்நாட்டு அரசுகள் "இவன் செம்படையை விட ஆபத்தானவன்" என்று கூறி அவருடைய ஒவ்வொரு அசைவையும் நெருக்கமாகக் கண்காணித்தன. அதாவது தங்கள் நாடு படையெடுக்கப்படுவதை விட அதிகமான பாதிப்பு இத்திரைப்பட  இயக்குநரால் நேர்ந்து விடும் என்று அஞ்சினார்கள். அதாவது பேரழிவு ஆயுதங்களை விட, கருத்துப் பரவலைக் கண்டு தான் மிகவும் அஞ்சினார்கள்.
 
          பொதுவுடைமைக் கொள்கை வலுப்பெறாமல் இருப்பதற்கு இராணுவ வலிமையை மட்டும் நம்பினால் போதாது என்றும் கருத்தியல் ரீதியான குழப்பத்தை விளைவித்தே தீர வேண்டும் என்றும் முதலாளிகளும், முதலாளித்துவ அறிஞர்களும் உறுதியாக நம்பினார்கள். அதன்படி பொதுவுடைமைச் சிந்தனையாளர்களின் நடுவில் புகுந்து, குழப்பமான வாதங்களை  முன் வைக்கும் உத்தியைக் கையாள ஆரம்பித்தார்கள். அப்படி ஒரு குழப்பவாதக் கருத்தை முன் வைத்தவர் தான் கிரேக்க நாட்டைச் சேர்ந்த நிகோஸ் பெளலன்ட்சாஸ் (Nicos Poulantzas).
 
          ஒருவர் பொதுவுடைமைக் கொள்கையைச் சரியாகப் புரிந்து வைத்துக் கொண்டிருக்கிறாரா இல்லையா என்பதைத் தெரிந்து கொள்ள வேண்டும் என்றால் அவர் அரசு என்பதைப் பற்றி என்ன நினைக்கிறார் என்பதைக் கொஞ்சம் உரசிப் பார்க்க வேண்டும்.
 
          மார்க்சியத் தத்துவத்தின் சரியான புரிதல்படி அரசு என்பது ஒரு வர்க்கம் இன்னொரு வர்க்கத்தை அடக்கி ஆளப் பயன்படுத்தும் ஒரு வன்முறைக் கருவி. இது சுரண்டல் வர்க்கத்தின் கைகளில் இருக்கும் போது மட்டுமல்ல; உழைக்கும் வர்க்கத்தின் கைகளிலும் அது வன்முறைக் கருவி தான். சுரண்டும் வர்க்கம் அடையாளம் தெரியாமல் அழியும் வரை அடக்குமுறையால் ஒடுக்கும் வேலை உழைக்கும் வர்க்க அரசுக்கு இருக்கும்.
 
          பொதுவுடைமைச் சிந்தனையாளர்கள் இதை நேர்மையுடன் ஒப்புக் கொள்கின்றனர். ஆனால் சுரண்டும் வர்க்கத்தினர் உண்மையை ஒப்புக் கொள்வதில்லை. அரசு நடுநிலையானது; அனைவருக்குமானது என்று கூறுகின்றனர். காரணம் என்னவென்றால், உழைக்கும் வர்க்கத்திற்கு, சுரண்டும் வர்க்கத்தின் தயவு தேவையில்லை; தயவு தேவையில்லை என்பது சரியல்ல; அவர்களின் இருப்பே (existance) தேவை இல்லை. இன்னும் சரியாகச் சொல்ல வேண்டும் என்றால் அது முற்றிலுமாக அழிந்தொழிய வேண்டும். ஆகவே அவர்களால் உண்மையை நேர்மையுடன் ஒப்புக் கொள்ள முடிகிறது.
 
          ஆனால் சுரண்டும் வர்க்கத்திற்கு அப்படி அல்ல. உழைக்கும் வர்க்கம் இன்றி அவர்களின் இருப்பு சாத்தியமில்லை. அதே சமயத்தில் உழைக்கும் வர்க்கத்திற்கு உரிய பங்கைக் கொடுத்து சமாதானம் செய்து கொள்ளவும் முடியாது. அப்படிச் செய்தால் சுரண்டும் வர்க்கம் உயிருடன் இருக்க முடியாது. ஆகவே சுரண்டும் வர்க்கத்திற்கு உழைக்கும் வர்க்கம் வேண்டும்; அதே சமயத்தில் அவர்களுக்கு உரிய பங்கைத் தரக் கூடாது. இதைச் செய்ய அனைத்து விதமான அடக்குமுறைகளும் தேவைப்படுகின்றன. அடக்குமுறைக்கு உட்படுவதாக உழைப்பவர்கள் தெரிந்து கொண்டால் அதை எதிர்க்க முற்படுவர். ஆகவே அடக்குமுறை அரசை இரு வர்க்கத்திற்கும் பொதுவானது என்று காதில் பூ சுற்றிக் கொண்டு இருக்கறார்கள். இம்மாதிரியான காதில் பூ சுற்றும் வேலையைத் தாங்கள் மட்டுமே செய்தால் போதாது என்று நினைத்து காதில் சுற்றப்பட்ட பூ கழன்று விடாமல் பார்த்துக் கொள்ளும் வேலையைப் பொதுவுடைமைச் சட்டை போட்டுக் கொண்டு, தங்களுக்கு விலைக்குப் போகிறவர்களுக்கு அளித்து விடுகிறார்கள். அவர்களில் ஒருவர் தான் கிரேக்க நாட்டைச் சேர்ந்த நிகோஸ் பெளலன்ட்சாஸ்.
 
          1970களில் இவர் மிகவம் பிரபலமாக இருந்தார். முதலாளி வர்க்கம் தன்னுடைய வர்க்க முழுமைக்குமான அதிகாரத்தைக் கண்காணிப்பதை விட, குறுகிய காலத்தில் தனிப்பட்ட முதலாளிகள் அதிகமான இலாபத்தை ஈட்டிவிட வேண்டும் என்பதில் தான் அதிகமாகக் குறியாக இருக்கிறது. இப்படிச் செய்வதும் அவர்களுடைய நலன்களுக்காகவே. (Capitalists calss too focused on thier individual short term profit rather than on monitoring class power as a whole, to simply excercise  the whole power in its own interest) என்பது தான் இவருடைய கருத்து.
 
          பெளலண்ட்சாஸ் மதில் மேல் பூனை போல் நிற்கிறார். பொதுவுடைமைத் தத்துவத்தை நன்றாகப் புரிந்து கொண்டவர்கள் விவாதித்தால் முதலாளிகள் அரசிடம் இருந்து விலகி நின்று அரசை ஆட்டிப் படைப்பதாகக் கூறியிருக்கிறேன் என்று வாதிடலாம். ஆழமாகப் புரிந்து கொள்ளாதவர்களிடம் அரசின் நடவடிக்கை பற்றி முதலாளிகளுக்கு அவ்வளவாக அக்கறை இல்லை; அவர்களுடைய அக்கறை எல்லாம் இலாபத்தின் மீது தான் என்பது போல் புரிய வைத்து, அரசின் நடவடிக்கைகளில் உழைக்கும் வர்க்கமும் பங்கு கொள்ள முடியும் என்பது போலவும் நினைக்க வைத்து அரசு என்பது அனைத்து மக்களுக்கும் பொது என்ற உணர்வை ஏற்படுத்தி விடலாம்.
 
          இது பொதுவுடைமைத் தத்துவத்தின் மீது கருத்தியல் ரீதியான கொடூரமான தாக்குதல். இப்படிப்பட்ட தாக்குதல் தொடுத்தவர் பொதுவுடைமச் சிந்தனைகளைச் செழுமைப்படுத்தவில்லை; மாறாக காயப்படுத்தித் தான் இருக்கிறார்.
 
- இராமியா (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)