"அமைதியான முறையில் கூட்டம் கூடவும், சங்கமாகச் சேருவதற்குமான சுதந்திர உரிமையும், அனைவருக்கும் உண்டு" என அகில உலக மனித உரிமைகள் பிரகடனம், 1948 கூறுகிறது.

இந்திய குடிமக்கள் அனைவருக்கும், “ஆயுதங்களின்றி அமைதியாகக் கூடுவதற்கான உரிமை இருக்கிறது” என்று இந்திய அரசியலமைப்பு சாசனம், 1950ன் சரத்து 19(2) கூறுவதோடு, இவ்வுரிமையை அடிப்படை உரிமைகளில் ஒன்றாகவும் அங்கீகரித்துள்ளது.

  “அமைதியாகக் கூடும் உரிமை அனைவருக்கும் உள்ளது” என்று, வாழ்வியல் மற்றும் அரசியல் உரிமைகளின் மீதான சர்வதேச உடன்படிக்கை 1966ன் பிரிவு 21 கூறுகிறது.

  அமலிலுள்ள சட்டத்தின் படி, மூன்று பேருக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனைக்கு எதிராக, வலுவான போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு, அதன் விளைவாக, மரண தண்டனையானது தற்காலிகமாக தள்ளி வைக்கப்பட்டுள்ள இதே நாட்டில்தான், இப்படியாக அரசியலமைப்பு சாசனம் மட்டுமல்லாது, உலகளாவிய பிரகடனங்களும், குடிமக்கள் ஓரிடத்தில் கூடுவதற்கான உரிமையை உத்தரவாதம் செய்யப்பட்டுள்ள நிலையில், கூட்டமாக கூடியதற்காகவே சட்டத்திற்குப் புறம்பான வழியில், கொடூரமான முறையில், ஒரு சாராரின் உயிர்கள் கேள்வி கேட்பாரற்று, பறிக்கப்பட்டதான நிகழ்வு இங்கே அரங்கேற்றப்பட்டுள்ளது.

  ஒடுக்கப்பட்ட மக்களுக்காகப் போராடியதற்காக, தனது முப்பத்து மூன்றாம் வயதில், சமூக விரோதிகளால் படுகொலை செய்யப்பட்ட, இம்மானுவேல் சேகரன் அவர்களது நினைவு தினத்தை அனுசரிக்கும் வகையில், இராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடியில் அமைந்துள்ள அவரது நினைவிடத்திற்குக் கடந்த செப்டம்பர் மாதம் பதினோறாம் நாள் சென்ற மக்களில் 7 பேரை, காவல் துறையினர் துப்பாக்கியால் சுட்டும், தடியடி நடத்தியும் படுகொலை செய்திருக்கிறார்கள். இருநூறுக்கும் அதிகமானோர் படுகாயம் அடைந்திருக்கிறார்கள்.

  இந்த கோர நிகழ்வை, இனக் கலவரம் என்று சுட்டிக்காட்டிய முதலமைச்சர், தமிழ்நாட்டின் எதிர்க்கட்சிகள் அனைத்தும், சட்டப்பேரவை கூட்டத்தொடரில் தங்களது வலுவான எதிர்ப்பை பதிவு செய்ததன் விளைவாகவும், மாநிலம் முழுவதும் பரவலாக, வழக்கறிஞர்கள், மனித உரிமை ஆர்வலர்கள், பட்டியலின அமைப்புகள், பல்வேறு அரசியல் கட்சியினர் போன்றோர் நடத்திய போராட்டங்களின் விளைவாகவும், இப்பிரச்சனையை திசை திருப்பும் வகையில், ஓய்வு பெற்ற உயநீதிமன்ற நீதிபதி சம்பத் என்பவரது தலைமையிலான ஒரு நபர் விசாரணை ஆணையம் ஒன்றை அறிவித்துள்ளார். இருபது நாட்களைக் கடந்து விட்ட பிறகும் இன்னமும் அவர் தனது விசாரணையைத் துவங்கவேயில்லை என்பது வேறு கதை.

  இந்த சூழலில், தமிழ்நாட்டில் ஏற்கனவே அறிவிக்கப்பட்டவைகளில், முக்கியமான விசாரணை ஆணையங்கள் குறித்தும், அவைகளின் விளைவுகள் குறித்தும் காணலாம்.

  1952ஆம் ஆண்டு இயற்றப்பட்ட, “விசாரணை ஆணையங்கள் சட்டத்தின்” அடிப்படையிலேயே, இதுபோன்ற விசாரணை ஆணையங்கள் அமைக்கப்படுகின்றன. இவற்றுக்கான ஆய்வு வரம்புகளும் உரிய அரசுகளால் உருவாக்கப்படுகின்றன. பொதுவாக, ஒரு குறிப்பிட்ட பிரச்சனை குறித்து ஆய்வு செய்து, அறிக்கை சமர்பிக்கவும், ஏற்கனவே நடந்த நிகழ்வுகளுக்கான காரணங்களைக் கண்டறிதல், எதிர்காலத்தில் இது போன்ற நிகழ்வுகள் நடைபெறாமலிருக்க மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் போன்றவைகள் குறித்து சம்மந்தப்பட்ட அரசுக்கு அறிக்கை சமர்பித்தல் என்பது போன்ற செயல்களே இதன் தலையாய பணியாகும். சமர்பிக்கப்பட்ட அறிக்கையானது, பிறகு அந்த மாநில சட்டமன்றத்தில் வைக்கப்பட்டு, பரிசீலிக்கப்படும்.

  தமிழ்நாட்டில், அண்ணாத்துரை அவர்கள் முதலமைச்சராக இருந்தபொழுதே விசாரணை ஆணையங்கள் அமைக்கப்பட்டு விட்டன. கடந்த 2001ஆம் ஆண்டில், ஜெயலலிதா அவர்களின் ஆட்சியின்போது அமைக்கப்பட்ட ஒரு விசாரணை ஆணையத்துக்கு எதிராக, முன்னாள் முதல்வர் கருணாநிதி அவர்கள், “இந்த விசாரணை கமிஷனை ஏற்க முடியாது. எப்படி விசாரிக்க வேண்டும், எந்த மாதிரி விசாரணை அறிக்கையைத் தயார்செய்து தரவேண்டும் என்று, அந்த நீதிபதிக்கு ஜெயலலிதா அரசு ஏற்கனவே கூறிவிட்டது. இதில் நீதிபதியைக் குறை கூற முடியாது. இதனால் இந்த நீதி விசாரணையை ஏற்க முடியாது” என்றும், மேலும், கடந்த 2005ஆம் ஆண்டில் அமைக்கப்பட்ட ஒரு விசாரணை ஆணையத்துக்கு எதிராக, “விசாரணை கமிஷன் அமைப்பதில் விஷேசம் ஏதுமில்லை. வழக்கமான நடைமுறைதான். இதனால் எந்த பயனும் ஏற்படப்போவதில்லை” என்றும் அவர் கூறியுள்ளார். விசாரணை ஆணையங்கள் குறித்து, இந்த மாநிலத்தில் ஐந்து முறை முதல்வராகயிருந்த ஒருவரின் கூற்று இது. இதன்படி பார்த்தால், ஒவ்வொரு பிரச்சனைகளின் போதும், அமைக்கப்படும் விசாரணை ஆணையங்களின் மீதான நம்பகத்தன்மை எளிதில் புலப்படும். ஆனால், இரு திராவிடக் கட்சிகளும், அவர்களது ஆட்சிக் காலத்தில், மீண்டும் மீண்டும் விசாரணை ஆணையங்களை அமைத்த வண்ணமே உள்ளன. பட்டியலின மக்கள், எதிர்க் கட்சியினர், சிறுபான்மையினர் போன்றோர்கள் பாதிப்புக்குள்ளாக்கப்பட்ட நிகழ்வுகளின்போதே அப்போதைய ஆளும் கட்சியினரால் பெரும்பாலும் விசாரணை ஆணையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

தமிழ்நாட்டில், தென் மாவட்ட சாதிக் கலவரங்கள், கொடியன்குளம் கிராமத்தில் காவல் துறையினரின் அத்துமீறல்கள், மாஞ்சோலை தேயிலைத் தோட்ட மக்களின் கூலி உயர்வு போராட்டம், வீரப்பன் தேடுதல் வேட்டையில் காவல் துறையினரின் அத்துமீறல்கள், கும்பகோணம் தீவிபத்து, சிறுதாவூர் ஆக்கிரமிப்பு, அருந்ததியர்களுக்கான உள் ஒதுக்கீடு, சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கறிஞர்கள் மீதான தாக்குதல் என்பது போன்ற முக்கியமான நிகழ்வுகளைத் தொடர்ந்து, தற்போது பரமக்குடியில் நடத்தப்பட்ட துப்பாகிச்சூடு குறித்த நிகழ்வுகளைக் கண்டறிய விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டுள்ளது.

“குறிப்பிட்ட நிகழ்வு தொடர்பாக என்ன நடந்தது என்று, அரசுக்குத் தெரிந்து கொள்ள, விசாரணை ஆணையத்தின் அறிக்கைகளும், பரிந்துரைகளும் பயன்படுமே தவிர, இந்த அறிக்கையை நீதிமன்ற விசாரணைக்கு ஒரு ஆவணமாகவோ, சாட்சியமாகவோ ஒரு நபரின் மீது சொல்லப்படும் குற்றச்சாட்டை நிரூபிக்கத் தடயமாகவோ பயன்படுத்த முடியாது” என்று உச்ச நீதிமன்றத்தின் இரு நீதிபதிகள் அடங்கிய ஆயம், கடந்த 2001ஆம் ஆண்டில் கேரள மாநிலத்தைச் சேர்ந்த வழக்கு ஒன்றில் தீர்ப்பிட்டுள்ளது. உண்மை நிலை இப்படியிருக்க, அறிவிக்கப்பட்ட ஆணையம் குறித்து, அவ்வப்போதைய ஆளும் அரசுகள், விசாரணை ஆணையங்களுக்கு வானளாவிய அதிகாரங்கள் இருப்பதாக பரப்புரைகள் செய்த வண்ணம் உள்ளன.

ஒய்வு பெற்ற அல்லது பதவியிலுள்ள நீதிபதியைக்கொண்டு விசாரணை ஆணையம் அமைக்கலாம் என்று சட்டத்தில் கூறப்பட்டிருந்தாலும், இதுநாள் வரையிலும், ஓய்வு பெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி அல்லது ஓய்வு பெற்ற மாவட்ட நீதிபதி, கோட்டாட்சியர் தலைமையிலான விசாரணை ஆணையங்களே அமைக்கப்பட்டுள்ளன. இந்த ஆணையத்தின் அறிக்கையை மாநில அரசு ஏற்கலாம் அல்லது ஏற்காமல் போகலாம். அதை எவரும் கேள்விக்கு உள்ளாக்க முடியாது. ஆனால், மாநில அரசால் அமைக்கப்பட்ட விசாரணை ஆணையங்களுக்காக, நீதிபதியின் ஊதியம், போக்குவரத்துச் செலவு, தொலைபேசி கட்டணம், அரசு வழக்கறிஞர்களுக்கான ஊதியம், ஊழியர்களின் சம்பளம் என மக்களின் வரி பணம் தொடர்ந்து விரையமாக்கப்பட்டு வருவது மட்டும் தொடர்கிறது. இதன் உச்சபட்ச கொடுமை என்னவென்றால், ஒரு ஆட்சியின்போது அமைக்கப்பட்ட விசாரணை ஆணையமானது, தனது அறிக்கையை வெளியிடாத சூழலில் ஆட்சி மாற்றம் வந்து விட்டால், ஒன்று, அறிக்கை வெளிவராது, இல்லையென்றால் அதே ஆணையத்துக்கு வேறு ஒருவர் தலைமை ஏற்பார் என்னும் நிலையே இங்கு காணப்படுகிறது.

நீதிபதி என்பவர் அனைத்து தரப்பினருக்கும் பொதுவானவராவர். ஆனால் ஓய்வு பெற்ற பிறகு, ஒரு ஆளும் கட்சியால் நியமிக்கப்படும் நீதிபதி, மற்றொரு ஆளும் கட்சியினரால் மற்றொரு ஆணையத்துக்கு பொதுவாக நியமிக்கப்படுவதில்லை என்பது கவனிக்கப்பட வேண்டியது. பெரும்பாலும், எந்த ஆளும் அரசால் நியமிக்கப்படுகிறதோ, அந்த அரசுக்கு ஆதரவான பரிந்துரைகளும், கண்டுபிடிப்புகளுமே அறிக்கையாக வருகின்றன. சான்றாக, கொடியன்குளம் கிராமத்தில் காவல் துறையினரின் அத்துமீறல்கள் தொடர்பாக அமைக்கப்பட்ட நீதிபதி கோமதிநாயகம் அறிக்கையும், மாஞ்சோலை தேயிலைத் தோட்ட மக்களின் கூலி உயர்வு போராட்டத்தின்போது 17 பேர் அடித்துக் கொல்லப்பட்ட நிகழ்வு தொடர்பாக அமைக்கப்பட்ட நீதிபதி மோகன் ஆணையமும், சமூகத்தின் பொது தரப்பினர்களால் கடும் கண்டனத்துக்கு உள்ளாக்கப்பட்டது.

கொழுந்துவிட்டு பற்றி எரியும் பிரச்சனையை மேலும் வளர விடாமல் தடுப்பதற்கும், அந்த பிரச்சனையின் அப்போதைய வீரியத்தைக் குறைப்பதற்கும் ஆளும் கட்சிகளுக்கு கிடைத்திட்ட நல்வாய்ப்புகளில் ஒன்றே, விசாரணை ஆணையம் அமைக்கும் பணியாகும். எனவே, பரிந்துரைகள் செய்யும் அதிகாரத்தை மட்டுமே கொண்ட, அதே வேளையில் மிகுந்த பொருட்செலவு வைக்கும், ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையிலான விசாரணை ஆணையத்திற்குப் பதிலாக, ஆளும் அரசுகளின் கட்டுப்பாட்டுக்குள் இல்லாமல், தேர்தல் ஆணையத்தைப்போல் தன்னாட்சியுடன், தனித்து இயங்கும் ஒரு அமைப்பு உருவாக்கப்பட்டு, இது போன்ற பிரச்சனைகளை, குறிப்பிட்ட கால வரம்புக்குள் விசாரித்து, விதிமுறை மீறல்களுக்குக் காரணமானவர்களைத் தண்டனைக்கு உள்ளாக்குவதே சரியானதாகும்.

- இ.இ.இராபர்ட் சந்திரகுமார் (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)

Pin It