வகுப்புவாரிப் பிரதிநிதித்துவத்தைப் பற்றி வலியுறுத்த ஆரம்பித்த பிறகு தமிழ்நாடு ராஜீய உலகத்தில் ஒரு பெரிய மாறுதல் ஏற்பட்டதோடு வகுப்புவாரிப் பிரதிநிதித்துவத்திற்கு அநுகூலமாயிருக்கும் சில தேசபக்தர்களுக்கு காங்கிரசில் செல்வாக்கில்லாமலடிப்பதோடு காங்கிரஸையே பிராமணமயமாக்க அவசியம் ஏற்பட்டதும், பிராமணரல்லாதாரில் யாருக்காவது காங்கிரஸ் பெயரைச் சொல்லிக்கொள்ள வேண்டுமானால் அவர்கள் பிராமணர்கள் தயவு பெற வேண்டியிருப்பதால் பிராமணர்களுக்கு பயப்பட்டு வகுப்புவாரிப் பிரதிநிதித்துவத்தை எதிர்க்கவேண்டிய அவசியமேற்படவும் ஏற்பட்டிருப்பது நேயர்களுக்குத் தெரிந்த விஷயமே. வகுப்புவாரிப் பிரதிநிதித்துவத்தை ஒரு நாளும் பிராமணர்கள் ஒப்புக்கொள்ளமாட்டார்கள். வகுப்புவாரிப் பிரதிநிதித்துவம் எங்கு ஏற்பட்டுப் போகுமோ என்கிற பயத்தால்தான் பிராமணர்கள் சர்க்காரைத் தொங்கிக் கொண்டிருப்பதும் ஒரு சர்க்கார் இவர்களுக்கு விரோதமாயிருந்தால் வேறொரு சர்க்காரை தயார் செய்வதுமாயிருக்கிறார்கள். அதற்குப் பயந்து கொண்டுதான் வரும் சர்க்கார்களும் பிராமணர்களுக்கு சுவாதீனமாய்ப் போய் விடுகிறார்கள். நம் நாடு ஏதாவது ஒரு காலத்தில் “இயற்கைக்கு விரோதமாய்” நம் நாட்டார்களாலேயே ஆளப்படுகிறது என்கிற யோக்கியதை அடையுமானால் அது கண்டிப்பாய் வகுப்புவாரிப் பிரதிநிதித்துவம் வழங்கப்பட்டதால்தான் முடியும் என்று வைரக்கல்லில் எழுதி வைப்போம்.

அது ஏற்படும் வரை இந்தியாவை இந்தியர் ஆட்சி புரிவது என்பதைத் தூர தள்ளி வைத்துவிடவேண்டியதுதான். நமது வகுப்பு வாரிப்பிரதிநிதித்துவத்திற்கு பிராமணர்கள் மாத்திரம் விரோதிகளல்ல. அந்நிய அரசாங்கத்தாரும் விரோதிகள் என்பதை உணரவேண்டும். ஏனென்றால் எவ்வளவுக்கெவ்வளவு நமக்குள் சண்டையும் சச்சரவும் ஏற்பட்டு ஒற்றுமைக் குறைவாய் இருக்கிறோமோ அவ்வளவுக் கவ்வளவு அந்நிய ஆக்ஷியின் எல்லை நீண்டு கொண்டிருக்கும். நமக்கு வகுப்புவாரிப் பிரதிநிதித்துவம் கொடுத்து நம் எல்லோரையும் உத்தியோகத்திற்கும் பதவிக்கும் சண்டை போட்டுக் கொள்ளாமல் அவரவர்களுக்குள்ளது அவரவர்கள் அடையும்படி செய்து ஒருவரை ஒருவர் தின்னாமல் செய்துவிட்டால் பிறகு எல்லோரும் ஒற்றுமையாய் விடுவார்கள். இதனால் அந்நிய ஆக்ஷிக்கு ஆபத்து. ஆதலால் இந்தத் தத்துவம் எப்போதும் அந்நிய அரசாங்கத்திற்கு விரோதமானது.

“பெருங்கூட்டத்தை சிறு கூட்டம் ஆள வேண்டுமானால் சிறு கூட்டத்தார் பெருங்கூட்டத்தை ஒருவருக்கொருவர் பொறாமையும் துவேஷமும் ஏற்படும்படி செய்து பிரித்து வைத்து கலகத்தை உண்டாக்கி விட்டால் தாராளமாய் ஆளலாம்” என்று ஒரு பழமொழி உண்டு. அதுபோல் சர்க்காரின் நடவடிக்கை; அதுவே நமது பிராமணர்களின் நடவடிக்கை. இதை நம்மில் பலர் அறிவதில்லை; அறிந்தாலும் எப்படி பிராமணர்களுக்கு நல்ல பிள்ளையாகலாம் என்பதில்தான் அதிகக் கவலை. ஆங்கில அரசாங்கத்தின் 150 வருஷத்திற்கு மேற்பட்ட ஆக்ஷியின் பலனாய், வகுப்புவாரிப் பிரதிநிதித்துவம் இல்லாததின் பலனாய் பிராமணரல்லாத வகுப்புகள் எவ்வளவு முற்போக்கடைந்திருக்கிறது என்று பார்த்தால் உண்மை பிராமணரல்லாத ரத்தம் ஓடும் மனிதன் துடிக்காமல் இருக்கமாட்டான். நம் தென்னாட்டு அரசாக்ஷியில் பிராமணரல்லாதார் நிலை எப்படி இருக்கிறது; பிராமணர்கள் நிலை எப்படியிருக்கிறது என்பது கீழ்க்கண்ட கணக்குகளினால் அறிந்து கொள்ளக் கோருகிறோம். நமது அரசாங்கத்தில் 35 ரூபாய் சம்பளத்திற்கு கீழ்ப்பட்ட உத்தியோகங்களில், அதாவது வாசல் கூட்டுவது, மேஜை துடைப்பது, பங்கா இழுப்பது, அதிகாரிகளுக்கு கால் கை அழுத்துவது முதலிய வேலைகளில் பிராமணரல்லாதவர் 37,125 பெயர்கள் இருக்கிறார்கள். பிராமணர்கள் 1810 பெயர் மாத்திரமே இருக்கிறார்கள். இவர்களும் சம்பளம் குறைவாயிருந்தாலும் தளுக்காய் மேலதிகாரிகளை ஏமாற்றி  வேலைகள் பார்க்காமல் அதிகாரம் செலுத்தி வருவார்கள்.

35-க்கு மேல்பட்டு 100 ரூபாய் வரை சம்பளம் உள்ள உத்தியோகத்தில் பிராமணரல்லாதார் 7003, பிராமணர்களோ 10,934. இந்த இடத்திலேயே நம்மைவிட பிராமணர்கள் 4000 பேர் அதிகமாகிவிட்டார்கள். 100 -க்கு மேல்பட்டு சுமார் 250ரூ. வரை உள்ள உத்தியோகத்தில் பிராமணர் 2679 பேரும் பிராமணரல்லாதார் 1666 பேருமாயிருக்கிறார்கள். இந்த இடத்தில் பிராமணரல்லாதாரை விட பிராமணர்கள் 1000 பேர் அதிகமாயிருக்கிறார்கள். 250 ரூபாய்க்கு மேல்பட்டு உத்தியோகங்களில் பிராமணர்கள் 594, பிராமணரல்லாதார் 280 பேர்கள் இருக்கிறார்கள். இந்த இடத்தில் ஒன்றுக்கு இரண்டிற்கு மேல் போய்விட்டார்கள். கலெக்டர் உத்தியோகத்தில் 11 உத்தியோகம் இந்தியர்கள் வகிப்பதில் 9 பேர் பிராமணர்கள். இந்த இடத்தில் ஒன்றுக்கு ஐந்தாய் விட்டார்கள். ரிவின்யூ போர்டில் உள்ள ஒரு இந்திய மெம்பர் உத்தியோகத்தில் பிராமணர்தான் இருக்கிறார். இந்தியருக்கு கொடுக்கப்பட்ட கைத்தொழில் டைரக்டர் வேலையில் பிராமணரே இருக்கிறார். அரசாங்கக் காரியதரிசி வேலையில் உள்ள இந்தியரும் பிராமணரே.

200 ஜில்லா முன்சீப்புகளில் 150 பேர் பிராமணர்கள்; 61 சப் ஜட்ஜுகளில் 45 பேர் பிராமணர்கள்; ஜில்லா ஜட்ஜுகளில் 7 பேர் பிராமணர்கள். அதாவது எடுபிடி உத்தியோகங்களில் பிராமணரல்லாதாரும் 100,500,1000, 2000, 3000 உள்ள உத்தியோகங்களில் பிராமணர்களும் அநுபவிக்கிறார்கள். வகுப்புவாரிப் பிரதிநிதித்துவம் வேண்டாம் என்று சொல்லும் ஸ்ரீமான் திரு.வி. கலியாணசுந்தர முதலியார் அவர்களை நாம் ஒரு கேள்வி கேள்க்கின்றோம் அதாவது:-

இவ்வித 1000, 2000, 3000 உள்ள உத்தியோகங்கள் பிராமணரல்லாத இந்துக்கள் என்போராகிய 100 - ல் 70 பேருக்கு மேலாக இருக்கும் பிராமணரல்லாதாருக்கு குறைவாயிருப்பதற்கும், 100-ல் 3 பேராயிருக்கும் பிராமணர்களுக்கு ஏகபோகமாயிருப்பதும் யோக்கியதை இல்லாததாலா? வகுப்புவாரிப் பிரதிநிதித்துவம் இல்லாததாலா? என்று கேள்ப்பதோடு ஸ்ரீமான் முதலியார் கோரும் சுயராஜ்யமோ சீர்திருத்தமோ வரவர பிராமணர்களுக்கு உத்தியோகம் பெருக்கமாகுமா? அல்லது ஏழைகளுக்கு வரி குறைந்து தொழிலாளிகளுக்கு தொழில் கிடைக்குமா? என்று கேள்க்கிறோம்.

(குடி அரசு - தலையங்கம் - 18.04.1926)

Pin It