இந்தியாவும் பாகிஸ்தானும் கிரிக்கெட் உலகக்கோப்பையின் அரையிறுதிப் போட்டியில் சந்தித்தன. இந்தியாவின் பல தனியார் நிறுவனங்களில் கூட அரை நாள் விடுப்பு அளிக்கப்பட்டிருக்கிறது. அரசு அலுவலகங்கள் மதியத்திற்கு மேல் காற்றாடியது. கடந்த இரு தினங்களாக வடக்கிந்திய ஆங்கில ஊடகங்களில், இந்தப் போட்டியைக் குறித்து பல விவாதங்கள், கலந்துரையாடல்கள் நடைபெற்றன. இந்தப் போட்டியைக் காண்பதற்காக இந்தியா வருமாறு பாகிஸ்தான் பிரதமரையும், குடியரசுத் தலைவரையும் வேண்டி விரும்பி அழைத்திருக்கிறார் இந்தியப் பிரதமர். போட்டியைக் காண வந்த மக்களின் நடுவில் சோனியாவும் அவர் மகன் ராகுல் காந்தியும் ஆர்ப்பரித்துக்கொண்டிருக்கிறார்கள்.  நடிகர்கள், நடிகைகள் எனப் பலபேர் போட்டியைக் காண வந்திருந்தார்கள்.

வழக்கம் போல நடக்கும் கிரிக்கெட் சூதாட்டத்தில் சுமார் ரூ. 5000  கோடி வரைப் புழங்கியதாகத் தகவல்கள் உள்ளன.

ஏன் இவ்வளவு ஆர்ப்பாட்டம்? இந்திய தேசப்பற்றுதான் காரணமா? அப்படி தேசியப் பற்று தான் காரணமென்றால் மற்றப் போட்டிகளுக்கும் இவ்வளவு ஆடம்பரங்கள் நிகழ்ந்திருக்கவேண்டுமே? ஏன் நடக்கவில்லை? ஏன் என்று சிறு குழந்தைக்குக் கூடத் தெரியும். அதுவே இந்து மதவாதம். பாகிஸ்தானை எதிரி நாடு என்று காண்பதில் தம் இந்திய தேசிய உணர்வே இருக்கிறது என்று எண்ணும் இந்து தேசியவாதம். இந்தியர்களின் முஸ்லிம் மத வெறுப்பினை வெளிச்சம் போட்டுக்காட்டுவதே இவ்வகையான போட்டிகள்தான் .

பாகிஸ்தானுடன் இரண்டு  பெரிய போர்களையும் ஒரு சிறிய போரையும் இந்தியா சந்தித்திருக்கிறது. அவ்வப்போது எல்லைக்கோட்டில் சில துப்பாக்கிச் சூடுகளையும் இரு நாடுகளும் நடத்தி வந்தன. பாகிஸ்தான் இந்தியாவின் நேசநாடுகளில் ஒன்று அல்ல. எதிரியே! ஆனால் இந்தியாவுக்குத்தான் திரும்பிய திசையெங்கும் எதிரிகள் உள்ளனரே!

பாகிஸ்தானை மதவாத நாடு அல்ல என்று யாரும் சொல்லவில்லை. பாகிஸ்தான் ஒரு Islamic Republic என்பது  அந்நாட்டின் அரசியல் சட்டத்திலேயே உள்ளது. பாகிஸ்தான் தன்னை, மிக நேர்மையுடன் ஒரு முஸ்லிம் நாடு என்றே கூறிக்கொள்கிறது. மதத்தின் அடிப்படையிலேயே அந்நாடு தோன்றியதை யாரும் மறுக்கவில்லை.

ஆனால், இந்திய பாகிஸ்தான் மோதல்கள், விளையாட்டுப் போட்டிகளில் கூட, போர்களைப் போலவே சித்தரிக்கப்படுவத்தின் ரகசியம் என்ன?  அப்படி என்றால் இந்தியாவும் தன்னை ஒரு இந்து தேசம் எனக் கூறிக்கொள்ள  முடியுமா? இவ்வளவு இந்துப் பாசிச வெறிபிடித்த தேசமும், இந்துவெறி பிடித்த மக்களும் எப்படி தங்களைக் கொஞ்சம் கூட வெட்கமேயில்லாமல் Secular Republic என்றுக் கூறிக்கொள்கிறார்கள்?

இந்துவெறி பிடித்த வடக்கிந்திய ஊடகங்கள், அந்த வெறியை மக்களின்பால் ஊட்டி, இந்திய தேசியத்தை இந்து தேசியமாக மாற்றுவதில் எப்படி வெற்றி காண்கிறார்கள்?

இந்திய தேசியவாதத்தின் மாய மழுப்பலில், கரைந்துபோகும், மறக்கப்படும் விஷயங்கள் ஏராளம். திரும்பும் திசையெல்லாம் பிரச்சினைகளைக் கொண்ட இந்தியா, தேசியம் என்ற ஒற்றைப் போர்வையைக் கொண்டு தான் வடிவமைத்த எதிரியை நோக்கி மக்களின் கவனத்தைத் திசைத்திருப்புவதற்கே  இந்த தேசியம் பயன்படுகிறது. வேறொன்றுக்கும் பிரயோஜனமில்லை.

அதனால், இந்தியா மத உணர்வைப் பயன்படுத்தி குளிர்காய்கிறது என்று மட்டும் குற்றம் சாட்டிவிடமுடியாது. வெறும் அரசின் முயற்சிகளாலும் மாயத் தோற்றங்களாலும் மக்களை இந்த அளவுக்கு வெறிபிடிக்கச் செய்ய இயலாது. இந்திய இந்து மக்களுக்கே இயல்பாக தம் இரத்தத்தில்  இந்துப் பாசிச வெறி ஊறிப்போயிருந்தாலொழிய  இது சாத்தியப்படாது.

இந்த போட்டியைக் கண்டுகொண்டிருந்த என் கன்னட நண்பன் ஒருவனைக் கேட்டேன்.

நான்: "இந்தியா ஜெயிக்குமா, இல்ல பாகிஸ்தான் ஜெயிக்குமா?"

அவன்: " ஏன்றி ஹெலுத்தாயிதீரா! இந்தியாவே win மாடு பேக்கு"

நான்: "யாக்கு?"

அவன்: "முஸ்லிம் நம்புகே ஆகல்லா! அதுக்கே"

மிகத்தெளிவாக கூறிவிட்டான் அவன்!

கடைசியில் இந்தியாவே போட்டியில் வென்றது. ஆனால், அங்கு ஒவ்வொரு பந்துக்கும் ஒலித்த கோஷங்களின் அடிநாதம் இந்து பாசிசவெறியும், முஸ்லிம் மதவெறுப்பும், இந்தியப்போலி தேசியமும்தான் என்பது கண்கூடு.

இந்திய தேசியத்தின் ஆழம் போகப்போக அதன் அசல் நிறமான காவியே கண்ணுக்குப் படுகிறது.  அது காவியின் நிறமா? இல்லை காய்ந்துபோன ரத்தத்தின் நிறமா என்று வேறுபடுத்திப்பார்க்க முடியவில்லை.

குறிப்பு:

தேசத்தைத் தாய்க்குச் சமம் என உளறும் தேசியவாதிகளுக்கு ஒன்று சொல்கிறேன். தாய்நாடு என்பது ஒன்றும் தாய்க்குச் சமம் அல்ல. வேணும்னா உன் தாய் பிறந்த நாடுன்னு வேணா சொல்லிக்கலாம். மத்தபடி அது ஒரு இடம். அது தாய்க்கும் சமமல்ல. நாய்க்கும் சமமல்ல.

Pin It