uthapuram_372

தமிழகத்தில் தலித் விடுதலை வரலாற்றில் மதுரை மாவட்டத்தில் உள்ள உத்தப்புரம் மக்களுக்கு மிகப்பெரிய பங்கிருக்கிறது. தங்களது உரிமையை நிலைநாட்ட இதுவரை ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வழக்குகள் என்ற வலிகளைச் சுமந்து கொண்டே மேலும், மேலும் தங்கள் போராட்ட முனையை கூர்மைப்படுத்தி வருகின்றனர்.

தஞ்சை கீழவெண்மணியில் ஆண்டை, அடிமை என்ற நிலையை ஒழித்த பெருமை பி.ஆர்.சீனிவாசராவ் என்ற கம்யூனிஸ்ட்டுக்கு உண்டு. அதன் காரணமாக ஒன்றுபட்ட தஞ்சை மாவட்டத்தில் ஏராளமான தலித் மக்கள் தங்களுடைய பிள்ளைகளுக்கு சீனிவாசன் என்ற பெயரிட்டு இன்னும் மகிழ்ந்து வருகிறார்கள்.

இழிசாதியென ஒதுக்கப்பட்ட சமுதாயம் திரண்டெழும்போது, அதை எதிர்கொள்ளத் திராணியில்லாத சக்திகள் சட்டத்தின் பின்பும், அரசு அதிகாரத்தின் பின்னும் ஒழிந்து கொள்கிறார்கள். கீழ்வெண்மணியில் 44 தலித் மக்கள் உயிரோடு எரித்துக்கொல்லப்பட்ட வழக்கிலும், உத்தப்புரத்தில் காலகாலமாய் வழிபட்டு வந்த தங்கள் வழிபாட்டு உரிமையை மீண்டும் வலியுறுத்தும் தலித்துகளிடம் அரசு தாஜா செய்வதிலும், நீதி அதிகாரங்கள் யார் பக்கம் நிற்கிறது என்பதைக் காட்டுகின்றன. அவர்களின் வர்க்க குண நலன்கள் யாரிடம் வாலையாட்டி நிற்கிறது என்பதை ஜனவரி 31 ந்தேதி உத்தப்புரம் கோவில் நுழைவுப் போராட்டத்தின் போது காணமுடிந்தது.

தலித்துகளின் சட்டப்பூர்வ உரிமை

தலித் மக்கள் உள்ளிட்ட பல்வேறு சமுதாயத்தைச் சேர்ந்த மக்கள் பல ஆண்டுகளாக வழிபாடு நடத்தி வந்த முத்தாலம்மன் கோவிலில் கடந்த 1989 ஆம் ஆண்டு ஒரு கட்டப்பஞ்சாயத்தின் மூலம் தலித்துகளின் வழிபாட்டு உரிமைப் பறிக்கப்பட்டது. சட்டரீதியான உரிமை நிலைநாட்டப்பட வேண்டும் என வலியுறுத்தியும், உத்தப்புரத்தில் தலித் மக்களின் பிரச்சனைகளுக்குத் தீர்வு காண வலியுறுத்தியும், அப்பகுதி மக்கள் போராடி வருகிறார்கள். கடந்த 3 ஆண்டுகளாக தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் இதற்காக குரல்கொடுத்து பல போராட்டங்களை நடத்தியுள்ளன. முதல்வர் கருணாநிதிக்கும் பல கடிதங்கள் எழுதப்பட்டுள்ளன.

மாநிலங்களவை உறுப்பினர் டி.கே.ரங்கராஜன் தனது தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து நிதி ஒதுக்கியும் உத்தப்புரத்தில் நிழற்குடை அமைக்கப்படவில்லை. நிழற்குடை அமைத்தால் தலித் மக்கள் தங்கள் முன் அமர்ந்து விடுவார்கள் என்ற சாதி ஆதிக்க உணர்வுக்கு அரசு அதிகாரமும் துணைபோவதை பலமுறை சுட்டிக்காட்டியும் இதுவரை உத்தப்புரத்தில் நிழற்குடை அமைக்கப்படவில்லை. இந்த நிலையில் மதுரையில் டி.கே.ரங்கராஜன் தலைமையில் நடைபெற்ற முற்றுகைப்போராட்டத்தின்போது காவல்துறை கடுமையான அடக்குமுறையை ஏவிவிட்டது. இதன் காரணமாக பலர் படுகாயமடைந்தனர். சென்னையில் உத்தப்புரம் தலித் மக்களுக்கு ஜனநாயகரீதியான அனைத்து உரிமைகளும் வழங்கப்பட வேண்டும் என வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இப்போராட்டத்தின்போது, உத்தப்புரம் தலித் மக்களது சட்டப்பூர்வமான உரிமைகளை நிலைநாட்ட ஜனவரி 31 காலை 11 மணியளவில் உத்தப்புரம் முத்தாலம்மன் கோவிலில் ஆலய நுழைவுப்போராட்டம் நடத்துவது என முடிவு செய்யப்பட்டது. ஒரு மாதமாகியும் அரசு தரப்பிலிருந்து எந்த நடவடிக்கையும், பேச்சுவார்த்தையும் நடத்தப்படவில்லை.

இந்த நிலையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி சார்பில் இப்போராட்டம் நடத்தப்படுவதாக அறிவிக்கப்பட்ட நாளுக்கு 2 நாட்களுக்கு முன்பே உத்தப்புரத்தில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இந்த உத்தரவைப் பிறப்பித்த பேரையூர் வட்டாட்சியர், அகில இந்திய கட்சியான மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை, இடதுகம்யூனிஸ்ட் கட்சி என்றே ஆணையில் குறிப்பிட்டுள்ளார். தமிழக சட்டமன்ற விவாதத்தின்போது, இடது, வலது என பேசப்பட்டபோது, இனி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி என குறிப்பிட வேண்டும் என கடந்த 1989ஆம் ஆண்டு முடிவு செய்யப்பட்டது. ஆனாலும், சில விஷம ஏடுகள் இன்னமும் இடது, வலது கம்யூனிஸ்ட் என்றே எழுதி வருகின்றன. அந்தப்புரிதலோடு 144 தடையாணையில் குறிப்பிடப்பட்டதா, அல்லது அறியாமல் குறிப்பிடப்பட்டதா என முழுமையாகத் தெரியவில்லை. அந்த அறிவிப்பு என்பது உத்தப்புரத்தில் இருந்து 300 மீட்டர் தூரத்திற்குத் தான் போடப்பட்டிருந்தது. ஆனால் மதுரை நகரில் உள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அலுவலகம் இருந்த மகபூப்பாளையத்தில் ஏராளமான காவல்துறையினர் குவிக்கப்பட்டிருந்தனர்.

144 தடை உத்தரவு

இந்த நிலையில் மாவட்ட ஆட்சியர் பேச்சுவார்த்தைக்கு அழைக்கிறார் என்ற தகவல் கிடைத்தது. தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் மாநிலத்தலைவர் பி.சம்பத், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச்செயலாளர்கள் இரா.அண்ணாதுரை, சி.ராமகிருஷ்ணன் ஆகியோர் ஆட்சியருடன் பேச்சுவார்த்தை நடத்தினர். 144 தடையாணை பிறப்பித்துள்ளதால் உத்தப்புரம் செல்லக்கூடாது என அவர் கூறியுள்ளார். அறிவிக்கப்பட்டபடி போராட்டம் நடைபெறும் என தலைவர்கள் அறிவித்துவிட்டு, அலுவலகம் வந்து உத்தப்புரத்திற்கு கிளம்பினர்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் தலைமை வகித்து வாகனத்தில் ஏறிச்செல்ல, அவருடன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினரும், தீண்டாமை ஒழிப்பு முன்னணி அமைப்பினரும், ஆதித்தமிழர் பேரவை, தமிழ்புலிகள், அருந்தமிழர் இயக்கம், பெரியார் திராவிடர் கழகம் உள்ளிட்ட பல்வேறு அமைப்பினர் வேன்களில் தங்கள் கரங்களில் கொடிகளோடு உத்தப்புரம் செல்ல ஆயத்தமானார்கள். ஆனால், அவர்களைத் தடுத்த காவல்துறையினர், நீங்கள் உத்தப்புரம் போனால், சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்படும் எனக்கூறினர்.

அரசியல் சட்டம் தலித் மக்களுக்கு வழங்கிய உரிமையை அமல்படுத்து என்று கூறுபவர்களால் சட்டம் ஒழுங்கு பிரச்சனையாம்! தலித்துகள் கோவிலுக்குள் நுழையக்கூடாது என்ற சட்டத்தை மதிக்காதவர்களுக்கு பாதுகாப்பாம்! என்ன ஏற்பாடு!

உத்தப்புரத்தில்தானே தடை உத்தரவு என்றதற்கு, 32 செக்ஷன் படி மதுரையில் கூட்டமாக சேர்வதற்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது என்று கூறினர். 144 தடையாணையை வீடு வீடாகத் தேடி வழங்கிய நீங்கள், இந்த ஆணையை பத்திரிகைச் செய்தியாகவோ, தலைவர்களிடமோ வழங்கவில்லை. ஆகவே, உத்தப்புரத்திற்கு நாங்கள் செல்வோம் என்ற தலைவர்களை, மாநகர காவல்துறை ஆணையாளர் பாலசுப்பிரமணியன் தலைமையில் குவிக்கப்பட்டிருந்த காவல்துறையினர் தடுத்தனர். இதனால் திரண்டிருந்த மக்களிடம் உணர்ச்சிக்கொந்தளிப்பு ஏற்பட்டது; தமிழக அரசைக் கண்டித்து முழக்கங்கள் எழுப்பினர். அங்கிருந்து முழக்கங்களுடன் மகபூப்பாளையம் ஜின்னா திடலை நோக்கி அனைவரும் முன்னேறினர்.

தலித்துகளை பழிவாங்கும் முதல்வர்

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச்செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் அங்கு பேசுகையில், "உத்தப்புரத்தில் தலித் மக்களுக்காக ஆலய நுழைவுப்போராட்டம் நடத்தப்படும் என திடீரென்று அறிவிக்கவில்லை. சென்னையில் கடந்த டிசம்பர் மாதம் நடைபெற்ற போராட்டத்தின்போது இதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டது. ஒரு மாதத்திற்குப் பின்னும் இதுகுறித்து பேச்சுவார்த்தை நடத்தப்படவில்லை. தலித் மக்களுக்கான ஆலயப்பிரவேசம் என்பது சட்டப்படியான உரிமையாகும். தலித் மக்களை கோவிலுக்குள் அனுமதிக்க முடியாது என்பது தான் சட்டவிரோதமாகும். சட்டத்தை அமல்படுத்து என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும், தீண்டாமை ஒழிப்பு முன்னணியும் வலியுறுத்துகின்றன.

இப்பிரச்சனை குறித்து தமிழக முதல்வர் கருணாநிதிக்கு அனுப்பப்பட்ட கடிதத்திற்கு எந்தப்பதிலும் இல்லை. ஆ.ராசா தலித் என்பதால் தான் பழிவாங்குகிறார்கள் என முதல்வர் கருணாநிதி கூறினார். ஆனால் தலித் மக்கள் கோவிலுக்குள் செல்லக்கூடாது என்பதற்காக 144 தடையாணையை பிறப்பித்து தலித் மக்களை பழிவாங்குகிறார். மதுரை மாவட்ட ஆட்சித்தலைவர் போராட்டம் நடைபெறும் நாளன்று பேச்சுவார்த்தைக்கு அழைக்கிறார். அவர் அழைத்துத் தலைவர்கள் சென்று பேச்சுவார்த்தை நடத்தியும் முடிவு எட்டப்படவில்லை. எந்த ஆலயத்திலும் நுழையலாம் என்ற சட்டத்தை யாராலும் தடுக்க முடியாது. எங்களைக் கைது செய்தாலும் ஆலய நுழைவுப் போராட்டம் என்றாவது ஒருநாள் நடந்தே தீரும்" என ஜி.ராமகிருஷ்ணன் பேசினார்.

அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் மாநிலப்பொதுச்செயலாளரும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியக்குழு உறுப்பினருமான உ.வாசுகி பேசுகையில், "உத்தப்புரத்திற்கு சென்றால் சட்டம் - ஒழுங்கு பிரச்சனை ஏற்படும் என மதுரை மாவட்ட காவல்துறை கூறுகிறது. சட்டம் - ஒழுங்கு குறித்து முதலில் மதுரை காவல்துறை பேசலாமா? உத்தப்புரத்தில் உள்ள தலித் அல்லாத இதர சாதியைச் சேர்ந்த சிலர், மார்க்சிஸ்ட் கட்சித் தலைவர்களை மிரட்டும் வகையில் மோசமாகப் பேசியுள்ளனர். அவர்கள் மீது எந்தவித நடவடிக்கையும் எடுக்காத காவல்துறை, மார்க்சிஸ்ட் கட்சி அலுவலகத்தின் முன் வந்து எங்களைக் கைது செய்வது தான் சட்டமா? தமிழக முதல்வர் கருணாநிதி, துணைமுதல்வர் மு.க.ஸ்டாலின் ஆகியோர் ஜனவரி 30ந்தேதி காந்தி சுட்டுக்கொல்லப்பட்ட நாளன்று தீண்டாமை ஒழிப்பு உறுதிமொழியேற்றுள்ளனர். தீண்டாமை ஒழிப்பு என்பது கலைஞரின் செம்மொழிப்படி தீண்டாமைப் பாதுகாப்பு தான். இது தான் பெரியார் வழியா?" என்ற வினாவையும் எழுப்பினார்.

3 ஆயிரம் பேர் கைது

அதற்கு மேல் அங்கு கூடவிடாமல் தடுத்த காவல்துறை அனைவரையும் கைது செய்தது. தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் மாநிலத் தலைவர் பி.சம்பத், ஆதித்தமிழர் பேரவை மாநில நிர்வாகி திருச்செந்தூர் சங்கர்,மாநில இளைஞரணி செயலாளர் விடுதலை வீரன், இமானுவேல் பேரவை பொதுச்செயலாளர் பூ.சந்திரபோஸ், சட்டமன்ற உறுப்பினர் என்.நன்மாறன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மதுரை புறநகர் மாவட்டச்செயலாளர் சி.ராமகிருஷ்ணன், மாநகர் மாவட்டச்செயலாளர் இரா.அண்ணாதுரை, மாநிலக்குழு உறுப்பினர் இரா.ஜோதிராம், வாலிபர் சங்க மாநிலத்தலைவர் முத்துக்கண்ணன், இந்திய மாணவர் சங்க மாநிலச் செயலாளர் ஜோ.ராஜ்மோகன் மற்றும் தமிழ்ப் புலிகள், பெரியார் திராவிடர் கழகத்தைச் சேர்ந்த தோழர்கள் உட்பட 600க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர்.

அதே நாளில் உத்தப்புரத்தில் ஆலயநுழைவுப்போராட்டம் செல்ல உத்தப்புரம் தலித் மக்களோடு சென்ற மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பெரம்பூர் சட்டமன்ற உறுப்பினர் எஸ்.கே.மகேந்திரன், தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாநிலப் பொதுச்செயலாளர் கே.சாமுவேல்ராஜ், தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் மாநிலச்செயலாளர் எஸ்.கே. பொன்னுத்தாய், மாவட்ட அமைப்பாளர் எம்.தங்கராஜ், சி.சங்கரலிங்கம், பொன்னையா, உத்தப்புரம் நாட்டாண்மைகள் முத்துராஜ், பெரியசாமி உள்ளிட்ட ஏராளமான பெண்கள் குழந்தைகளுடன் ஏராளமானோர் கைது செய்யப்பட்டனர்.

உத்தப்புரத்தில் கோவில் நுழைவுப் போராட்டத்தன்று அரசு பேருந்துகள் உள்ளிட்ட அனைத்துப் பேருந்துகளும் நிறுத்தப்பட்டன. உத்தப்புரம், எழுமலை பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. பேருந்து இல்லாத காரணத்தால் வெளியூர் செல்ல வேண்டியவர்கள், வேலைக்குச் செல்ல வேண்டிய இ.கோட்டைப்பட்டி, உத்தப்புரம், எழுமலை ஆகிய பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்கள் நீண்ட தூரம் நடந்தே ஊருக்குள் வரவேண்டிய நிலை ஏற்பட்டது. உத்தப்புரம் முத்தாலம்மன் கோவில் முன்பு ஏராளமான காவல்துறையினர் குவிக்கப்பட்டிருந்தனர். கண்ணீர்ப் புகைக்குண்டுகள், தண்ணீரைப் பீய்ச்சி அடிக்கும் வஜ்ரா வாகனம், கலவரத்தடுப்பு வாகனமான ரயாட் ஆகிய வாகனம் ஊரில் நிறுத்தப்பட்டிருந்தன.

கண்ணீர் புகைகுண்டுகளுடன் மிரட்டல்

தலித்துகளின் சம்பந்தியான முதல்வர் கருணாநிதி ஆட்சியில், தலித்துகள் ஆலயப்பிரவேசம் செய்து விடக்கூடாது என்பதற்காக மதுரை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் மு.மனோகர், விருதுநகர் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் பிரபாகரன் தலைமையில் உத்தப்புரத்தில் 3 ஏடிஎஸ்பிகள், 14 டிஎஸ்பிகள், 34 ஆய்வாளர்கள், 153 சார்பு ஆய்வாளர்கள், 57 ஆயுதப்படை காவல்துறையினர், 311 சிறப்பு காவல்படையினர் உள்ளிட்ட 1787 பேர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். கணவாய்கேட், ராஜாக்காபட்டி, கோடாங்கி நாயக்கன்பட்டி, கச்சப்பட்டி, பொட்டல்காளியம்மன்கோவில், ஆத்தங்கரை கருப்பசாமி கோவில், மல்லப்புலம் விலக்கு, டி.கிருஷ்ணாபுரம், பாப்பிநாயக்கன்பட்டி, திருமாணிக்கம் விலக்கு, அல்லிக்குண்டனம், சின்னக்கட்டளை, மங்கள் ரேவு உள்ளிட்ட 14 இடங்களில் காவல்துறை செக்போஸ்ட் அமைத்து உத்தப்புரத்திற்குள் யாரையும் அனுமதிக்கவில்லை.

டி.ஐ.ஜி சந்தீப்மிட்டல், மதுரை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் மு.மனோகருடன் ஆலோசனை நடத்தி பாதுகாப்பை பலப்படுத்தினார். குறிப்பாக, உத்தப்புரத்தில் தலித் மக்கள் வசிக்கும் பகுதிகளில் அதிக எண்ணிக்கையில் காவல்துறையினர் குவிக்கப்பட்டனர். ஆனாலும், அறிவித்தபடி ஆலயநுழைவுக்காக மாலை, பழம், சூடம், சாம்பிராணி தட்டு, பொங்கல் வைக்க பொருட்களுடன் தலித் மக்களுடன் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி , தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் தலைவர்கள் அணிவகுத்து வந்தனர். அவர்களை ஏடிஎஸ்பி மயில்வாகனன் தலைமையிலான காவல்துறையினர் முத்தாலம்மன் கோவிலுக்கு 300 மீட்டர் தூரத்திற்கு முன் தடுத்து நிறுத்தி கைது செய்தனர்.

உத்தப்புரம் கோவில் நுழைவுப்போராட்டத்தில் பங்கேற்பதாக விருதுநகர் மாவட்டத்தில் சாத்தூர், ஸ்ரீவில்லிபுத்தூர், இராஜபாளையம், சிவகாசி உள்ளிட்ட பல்வேறு ஊர்களில் இருந்து காவல்துறையினர் என்ஜிஓ காலனியிலேயே தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர். ஒவ்வொரு பேருந்தாக ஏறி இந்த சோதனை மேற்கொள்ளப்பட்டது. வேனில் வந்தவர்களை இறக்கி விடச்சொல்லி காவல்துறையினர் கட்டாயப்படுத்தினர். ஆனாலும், போராட்டத்தில் பங்கேற்றவர்கள் அங்கிருந்து நடந்தே கல்லுப்பட்டி பேருந்து நிலையத்திற்கு திரண்டு வந்தனர். அங்கு திரண்டவர்களை காவல்துறை டிஎஸ்பி சி.பாலசுப்ரமணியன் தடுத்து நிறுத்தினார். அகில இந்திய விவசாயத் தொழிலாளர் சங்க மாநிலத்தலைவர் ஏ.லாசர், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக்குழு உறுப்பினர் பி.சுகந்தி, தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் விருதுநகர் மாவட்டத்தலைவர் ஏ.சேகர், செயலாளர் எஸ்.ஞானகுரு, பொருளாளர் எம்.முத்துக்குமார், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் விருதுநகர்,மதுரை மாவட்ட b சயற்குழு உறுப்பினர்கள் உள்ளிட்ட 340 பேர் கைது செய்யப்பட்டனர்.தீண்டாமை ஒரு குற்றம் என்று சொல்கிற சட்டத்தை மதித்து உத்தப்புரம் தலித் மக்களின் உரிமை மீட்பு போராட்டத்தில் பங்கேற்ற 3 ஆயிரம் பேர் மதுரை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் கைது செய்யப்பட்டனர்.

தலித் அமைப்புகள் என்ன செய்கின்றன? 

உத்தப்புரம் பிரச்சனை குறித்து தலித் அமைப்புகள் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் என்ற வேண்டுகோளை முன்வைக்கும்போது தலித் அறிவு ஜீவிகள், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினைப் பகடி செய்கிறோம் என்ற பெயரில் புத்தகம் எழுதி மகிழ்கிறார்கள். உத்தப்புரம் குறித்த அவர்களின் தூயவாதம் மார்க்சிஸ்ட்டுகள் மட்டுமல்ல யாரும் புரிந்து கொள்ள முடியாததது. தலித் அமைப்புகள், ஜனநாயக இயக்கங்களின் ஒன்றுபட்ட இயக்கங்கள் தான் தலித் விடுதலைக்கு கட்டியம் கூறும் என்பதை ஏற்க மறுத்து வருகிறார்கள்.

உத்தப்புரம் ஆலயநுழைவுப் போராட்டம் நடைபெற்ற அதே நாளில் மதுரையில் மள்ளர்கழகம் என்ற அமைப்பு தேவேந்திர மக்களுக்கு பத்து சதவீத இடஒதுக்கீடு கேட்டு பட்டினிப்போராட்டம் நடத்திக்கொண்டிருந்தது. உத்தப்புரத்தில் காலகாலமாக வழிபட்டு வந்த சாமியைக் கும்பிட வேண்டும் என்ற தேவேந்திர மக்கள் காவல்துறையின் அடக்குமுறையால் கைது செய்யப்பட்டது அன்றைய தினம் என்பதை யாரும் எளிதில் மறக்கமுடியாது.

மதுரை மாவட்டம் இ.கோட்டைப்பட்டியில் காவல்துறையின் துப்பாக்கிக்குண்டுக்கு பலியான சுரேஷ் நினைவு நாளை உத்தப்புரம் கலவரத்தில் கொல்லப்பட்ட சுரேஷ் என போஸ்டர் போடும் புதிய தமிழகத்தைச் சேர்ந்தவர்களும் உத்தப்புரம் ஆலயநுழைவுப் போராட்டத்தைக் கண்டுகொள்ளாதது பெரும் வேதனை.

"இந்தியாவில் உள்ள 25 கோடி தலித்துகள் ஒரு நிமிடம் சிந்திக்கத் தொடங்கினால், இந்தியாவின் நிலைமை மாறும்" என மறைமலைநகரில் நடைபெற்ற தமிழர் இறையாண்மை மாநாட்டில் விடுதலைச்சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் பேசினார். மேலும்," தோழமை உரிமையோடு காங்கிரஸ் கட்சிக்கு ஒரு கேள்வி கேட்கிறேன். ஒரு தலித் இந்த நாட்டின் பிரதமர் ஆக முடியுமா? நாட்டின் துணைப்பிரதமராக இருந்த பாபு ஜெகஜீவன்ராமுக்கு பிரதமர் ஆவதற்கு அனைத்து தகுதிகளும் இருந்தன. இருந்தும் அவர் தலித் என்ற காரணத்தால் அவரை பிரதமராக்கவில்லை" என்று கூறிய திருமா தொடர்ந்து பேசுகையில், "21 லட்சம் குடிசை வீடுகளை கான்கிரீட் வீடுகளாக மாற்றும் திட்டத்தை திமுக அரசு செயல்படுத்தி வருகிறது. தமிழகத்தில் உள்ள 60 சதவீத குடிசைவாசிகள் தலித் மக்கள் தான். திமுக தொடர்ந்து ஆட்சியில் இருந்தால்தான் அடுத்த 6 ஆண்டுகளில் இத்திட்டத்தை நிறைவேற்ற முடியும். எனவே தலித் மக்களுக்கு பயனளிக்கும் இத்திட்டத்தை நிறைவேற்றுவதற்கு திமுக கூட்டணியிலேயே விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தொடர்ந்து நீடிக்கும்" என்று பேசினார்.

திருமா கவலைப்பட்டுள்ள 60 சதவீத குடிசைவாசிகளில் மதுரை மாவட்டம் உத்தப்புரத்தைச் சேர்ந்த தலித் மக்களும் உள்ளனர். ஆறு ஆண்டுகளில் முடிவடையும் திட்டத்திற்கு இப்போதிருந்தே ஆதரவளிக்கத் துவங்கியுள்ள திருமாவளவன், கடந்த 2008 ஆம் ஆண்டு தீண்டாமைச்சுவரை இடித்து திறந்து விடப்பட்ட பாதையில் தலித் மக்கள் இன்னமும் போகமுடியவில்லையே என்பதற்குத் தரும் பதில் தான் என்ன? தமிழக முதல்வராக கருணாநிதி ஆறாவது முறை வந்தாலும் அது நடக்குமா?

- ப.கவிதா குமார் (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)

Pin It