இலங்கையில் கடந்த செவ்வாயன்று (25ஆம் திகதி) தொடங்கி வரும் ஞாயிறு வரை (30 திகதி) வரை "இலக்கியத் திருவிழா" காலே நகரில் நடைபெறுகின்றது. இந்த "இலக்கியத் திருவிழாவில்" பங்கேற்க வேண்டாம் என்று 'Reporters without Borders' என்ற அமைப்பும், 'புலம்பெயர்ந்து செயல்பட்டு வரும் இலங்கை பத்திரிகையாளர்களும்' இணைந்து உலக இலக்கிய எழுத்தாளர்களிடம் கோரிக்கை வைத்தார்கள். இந்த கோரிக்கைக்கு ஆதரவாக சமூகவியல் தளங்களில் பல நூல்கள் எழுதியுள்ள நோம் சோம்சுகியும், புக்கர் பரிசு பெற்ற இந்திய எழுத்தாளர் அருந்ததி ராயும், அசுத்திரேலியாவைச் சேர்ந்த அந்தோணியும், இந்தியாவைச் சேர்ந்த புகழ்பெற்ற எழுத்தாளரும், திரைப்பட கலைஞருமான தாரிக் அலியும், ஆங்கில திரைப்பட இயக்குநரான கென் லோச்சும் தங்கள் கையெழுத்தைப் பதிந்துள்ளார்கள்.
பிரகீத், அவரது துணைவியார், இரண்டு மகன்கள் உலகெங்கிலும் உள்ள எழுத்தாளர்களும், ஊடகவியலாளர்களும் காலே நகரில் நடைபெறும் "இலக்கிய திருவிழாவில்" பங்கேற்க அணியமாகி வருகின்றார்கள். இந்த நிகழ்ச்சியை "இலங்கை சுற்றுலாத் துறை" இணைந்து நடத்துகின்றது. Reporters without Borders அமைப்பும், புலம்பெயர்ந்து செயல்பட்டு வரும் இலங்கை பத்திரிகையாளர்கள் அமைப்பும், கேலிச்சித்திர ஓவியர்களும், பத்திரிகையாளர்களும், எழுத்தாளர்களும் இப்பொழுதுள்ள அரசினால் சுதந்திரமாக செயல்பட முடியாமல், அவர்கள் குரல்கள் நசுக்கப்பட்டு, அவர்களின் உயிர்களுக்கு உத்திரவாதமில்லாத ஒரு மண்ணில் இந்த "இலக்கிய திருவிழா" நடப்பது வேதனைக்குரிய ஒன்றாகக் கருதுகின்றனர்.
"ஐந்தாவது "காலே இலக்கியத் திருவிழாவிற்கு" அழைக்கப்பட்டிருக்கும் உங்களிடம் நாங்கள் ஒரு கோரிக்கை வைக்கின்றோம். மிகவும் மோசமான மனித உரிமை மீறல் வரலாற்றைக் கொண்டதும், பத்திரிகையாளர்களைத் தொடர்ந்து தாக்கியும் வரும் இலங்கைக்கு நீங்கள் செல்லவேண்டுமா என ஒருகணம் சிந்தியுங்கள். உள்நாட்டுப் போர் முடிந்து பல மாதங்களாகிய பின்னும், இன்றும் கூட கொலை செய்தல், தாக்குதல் நடத்துதல், கடத்துதல், அச்சுறுத்துதல், ஊடகங்களுக்கு கடுமையான தணிக்கை விதித்தல் போன்றவை இலங்கையில் நடந்து வரும் வழமையான செயல்களாக உள்ளன. இலங்கை அரசின் பாதுகாப்பு செயலர் கோத்தபயா உள்பட அரசின் மிக முக்கியமான பதவிகளில் இருக்கும் அதிகாரிகள், ஊடகங்களின் மீது நடத்தப்பட்ட வன்முறைகளில் பங்கு கொண்டுள்ளார்கள்.
மிகச்சிறந்த எழுத்தாளர்களான நீங்கள் அங்கு செல்வதன் மூலம் இலங்கையில் உள்ள பேச்சு சுதந்திரமே இல்லாத ஒரு மயான நிலைக்கு ஆதரவு தருவதாகவே கொள்ளப்படும். மேலும் நீங்கள் அங்கு செல்வதன் மூலம் அங்கு இருக்கும் தற்போதைய நிலையில் எந்த ஒரு மாற்றமும் ஏற்பட்டு விடப்போவதுமில்லை.
இன்னும் சில நாட்களில் அரசியல் கேலிச்சித்திரக் கலைஞரான பிரகீத் ஏக்னெலிகோடா காணாமல் போய் இரண்டு ஆண்டுகள் ஆகப்போகின்றது. மிகவும் பாதுகாப்பு மிகுந்த கொழும்பில் இருந்து கடந்த சனவரி 24, 2009 அன்று (அதிபர் தேர்தலுக்கு சில மணி நேரங்கள் முன்னதாக) - எதிர்கட்சி வேட்பாளரை ஆதரித்து இவர் நாளேடு ஒன்றில் எழுதியதற்கு மறுதினம் இவர் கடத்தப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. இவரை மீட்பதற்கான எந்த ஒரு நம்பத்தகுந்த விசாரணையையும் இதுவரை காவல்துறை மேற்கொள்ளவில்லை. உங்களைப் போலவே தனது மனதில் தோன்றிய கருத்துகளை வெளியிட்டதற்காக இன்று பிரகீத்தின் இரண்டு மகன்களும் தந்தை இல்லாமல் இருக்கின்றார்கள்.
இதே சனவரி மாதம் 8ஆம் திகதி 2009 அன்று தான் பிரபலமான பத்திரிகையாளரான இலசந்த விக்ரமதுங்க பாதுகாப்பு மிகுந்த கொழும்பில் வேலைக்கு செல்லும் வழியில் சுட்டுக்கொல்லப்பட்டார். இவரது படுகொலை நடந்த இடம் அதி உய பாதுகாப்பு வளையப் பகுதியாகும். இந்த பகுதிக்குள் நுழைவதற்கோ, வெளியேறுவதற்கோ பல இராணுவத் தடைகளைத் தாண்டி தான் வர முடியும் என்ற நிலை இருக்கும்பொழுது இலசந்தாவை கொன்றவர்கள் மட்டும் மிக எளிதாக அந்தப் பகுதியில் இருந்து தப்பிச் செல்ல முடிந்தது ஒரு ஆச்சர்யமே!. இவர் படுகொலை செய்யப்படுவதற்கு முன்னால் எழுதிய இந்த தலையங்கம் "ஒரு வேளை நான் கொல்லப்பட்டால் அது இலங்கை அரசினால் மட்டுமே அன்றி வேறு யாராலும் அல்ல" உங்களுக்குக் கூறும் யார் இவரை படுகொலைகள் செய்தார்கள் என.
2006லிருந்து இது வரை 16 பத்திரிகையாளர்கள் கொல்லப்பட்டுள்ளார்கள், மூன்று பேர் காணாமல் போயுள்ளார்கள். முப்பதுக்கும் மேற்பட்ட ஊடகவியலாளர்கள் தங்களது உயிரைக் காப்பாற்றிக்கொள்ள நாட்டை விட்டு வெளியேறியுள்ளார்கள். மேலும் தற்பொழுது இலங்கையில் உள்ள பத்திரிகையாளர்களும், எழுத்தாளர்களும் தொடர்ந்து அச்சுறுத்தப்பட்டும், தாக்கப்பட்டும் வருகின்றார்கள். அவர்கள் எழுதிய கட்டுரைகளை மட்டும் வைத்துக் கொண்டு அவர்களை 20 வருடங்கள் சிறையில் அடைக்கலாம் என்பதே அங்குள்ள தற்போதைய சட்டமுறை.
விடுதலைப்புலிகளுக்கும், அரசிற்கும் இடையே நடைபெற்ற இறுதிப் போரில் செய்தி சேகரிக்கவும், போரினால் ஏற்பட்ட மனித உயிரிழப்புகள் குறித்த செய்தி வெளியிடவும் எந்த ஒரு ஊடகவியலாளருக்கும் இசைவு அளிக்கப்படவில்லை. தற்பொழுது இலங்கையின் போர்க்குற்றங்கள் ஒவ்வொன்றாக வெளிவரத் தொடங்கியுள்ள்ன. இந்த நிலையில் அங்குள்ள ஊடகவியலாளர்கள் இதைப் பற்றி பேசவோ அல்லது வடக்குப் பகுதிக்கு சென்று உண்மை நிலையைக் கண்டுணரவோ முடியாது. அவ்வாறு சென்றால் அவர்கள் கடத்தப்படலாம் அல்லது கொலை செய்யப்படலாம் என்ற நிலையே அங்கு நிலவுகின்றது.
இலங்கையில் நிலைமை இவ்வாறு இருக்கும்போது அங்கு நீங்கள் செல்வது இந்த நிலைக்கும், இதை எல்லாம் நடத்தும் அரசிற்கும் நீங்கள் ஆதரவளிக்கின்றீர்கள் என்றே கருதப்படும்.
நீங்கள் இந்த நிகழ்விற்கு செல்லாமல், இலங்கையில் அரச ஒடுக்குமுறையினால் பேச முடியாமல் உள்ள சகோதர சகோதரிகளுக்கும், ஊடக சுதந்திரத்திற்கும் ஆதரவளிக்குமாறு உங்களை நாங்கள் கேட்டுக்கொள்கின்றோம். மேலும் நிலைமை இவ்வாறு இருக்கும்போது நீங்கள் எவ்வாறு இலக்கியத்தை காலேவில் கொண்டாடமுடியும்? (1)...."
இந்த கோரிக்கைக்கு முதன்முதலாக மொழி, சமூகம் பற்றி பல நூல்கள் எழுதியுள்ள நோம் சோம்சுகியும், புக்கர் பரிசு பெற்ற இந்தியாவின் அருந்ததி ராயும் ஆதரவளித்து கையெழுத்திட்டது மட்டுமல்லாமல் அவர்கள் இருவரும் உலக இலக்கிய எழுத்தாளர்களை நோக்கி இந்த கோரிக்கையை முன்வைத்தார்கள். இதன் பின்னர் இந்த கோரிக்கைக்கு ஆதரவாக துருக்கியைச் சேர்ந்த நோபல் பரிசு பெற்ற இலக்கிய எழுத்தாளரான ஓரான் பாமுக், இலங்கை காலே இலக்கிய திருவிழாவைப் புறக்கணிக்கப்போவதாக அறிவிப்பு வெளியிட்டார். இவரைத் தொடர்ந்து இந்திய எழுத்தாளரான கிரண் தேசாய் சில காரணங்களுக்காக காலே இலக்கியத் திருவிழாவில் பங்கேற்கப்போவதில்லை என அறிவித்தார்.(2)
Reporters without Borders மற்றும் புலம் பெயர்ந்த இலங்கை ஊடகவியலாளர்களின் கோரிக்கையையோ, ஓரான் பாமுக் இந்த நிகழ்வில் பங்குகொள்ளப்போவதில்லை என்று கொடுத்த அறிக்கையையோ "ஊடக நேர்மையை கடைப்பிடிக்கும்" இந்து நாளேடு மறந்தும்கூட வெளியிடவில்லை. மாறாக ஓரான் பாமுக், காலே இலக்கியத் திருவிழாவில் கலந்து கொள்ளவில்லை என்ற செய்திக்கு இலங்கை அரசு வெளியிட்ட மறுப்பு அறிக்கையை மட்டும் வெளியிட்டு தனது "ஊடக நேர்மையை" உறுதி செய்து கொண்டுள்ளது இந்து நாளிதழ்.
தனது சக பத்திரிகையாளர்கள் இலங்கை அரசால் கொல்லப்படும், கடத்தப்படும் நிகழ்வுகளை மறைத்து, அதற்கு இலங்கை அரசு வெளியிடும் பொய்யான மறுப்பு அறிக்கைகளை மட்டுமே வெளியிடுகிறது இந்து நாளிதழ். குறிப்பாக சொல்லவேண்டுமென்றால் இலங்கை அரசு செய்யும் எந்த ஒரு கொலையையும், கடத்தலையும் செய்தியாகத் தராமல், இலங்கை அரசு மீது ஒரு தவறான கருத்து சர்வதேச அரங்கில் உருவாகும்பொழுது (குறிப்பாக இந்தியாவில்) அதனை மறுதலித்து செய்தி வெளியிட்டு இலங்கை அரசின் அரசாங்க ஊடகப் பிரிவாகவே செயல்பட்டுவருகிறது இந்து நாளிதழ். இந்த ஊடகவியலாளர் படுகொலைகளை அரங்கேற்றுவதாக கருதப்படும் இலங்கை அரசிற்கும் அதை மூடி மறைக்கும் இந்து நாளிதழுக்கும் எதாவது ஒரு வேறுபாடு இருக்கின்றதா என வாசகர்களாகிய நீங்கள் உங்களை கேட்டுப்பாருங்கள். அப்பொழுது உங்களுக்குப் புரியும் இந்தக் கட்டுரையின் தலைப்பு.
நேற்று Reporters without Borders, புலம்பெயர்ந்த இலங்கை ஊடகவியலாளர்களின் கோரிக்கையை ஆதரித்து தென் ஆப்பிரிக்க எழுத்தாளரான கால்கத் கையெழுத்திட்டுள்ளார்.(4)
Reporters without Borders, புலம்பெயர்ந்த இலங்கை ஊடகவியலாளர்களின் கோரிக்கையை ஆதரித்து நீங்கள் கையொப்பமிட இந்த சுட்டிக்குச் செல்லுங்கள்
http://en.rsf.org/sri-lanka-galle-literary-festival-appeal-19-01-2011,39355.html
தரவுகள்:
1) http://en.rsf.org/sri-lanka-galle-literary-festival-appeal-19-01-2011,39355.html
2)http://epaper.timesofindia.com/Repository/ml.asp?Ref=VE9JQ0gvMjAxMS8wMS8yMiNBcjAxNTAy&Mode=HTML&Locale=english-skin-custom
3) http://www.thehindu.com/news/international/article1116277.ece
4) http://news.yahoo.com/s/afp/20110127/wl_sthasia_afp/srilankasafricabooksrightspeoplegalgut_20110127062739
- ப.நற்றமிழன் (