தமிழகத்தின் சமூகநீதி வரலாறு மிக நீண்டது. ஏறத்தாழ ஒரு நூற்றாண்டுக்கு முன், அதற்காகவே தொடங்கப்பட்ட இயக்கம்தான் திராவிட இயக்கம். கல்வி, வேலைவாய்ப்பு, அரசியல் ஆகிய மூன்று தளங்களிலும், பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட மக்களுக்கு இடஒதுக்கீடு தேவை என்னும் கோரிக்கை, படிப்படியாகத்தான் நடைமுறைக்கு வந்தது. இன்னும் கூட அதில்நாம் முழுமையை எட்டவில்லை. அதற்குள்ளாகவே ஆயிரத்தெட்டு தடைகளைச் சந்திக்க வேண்டி வருகிறது.
அப்படிப்பட்டத் தடைகளில் ஒன்றுதான், நுழைவுத் தேர்வு என்பது. ஆண்டின் இறுதியில் நடைபெறும் தேர்வுகளில், இரவு பகலாக உழைத்துப் படித்து, நல்ல மதிப்பெண்களை நம் பிள்ளைகள் பெற்றாலும், மிக எளிதில் நுழைவுத் தேர்வுகளின் மூலம் அவர்களை வெளியேற்றிவிட முடியும். நுழைவுத் தேர்வென்பது பெரும்பாலும் நகரக் கலாச்சாரம் சார்ந்தது. வாழ்வியல் சார்ந்த அறிவைக் காட்டிலும், வெறும் புள்ளி விவரங்களை அறிந்து வைத்திருத்தலே அறிவு என்பது போன்ற போலி முகம் காட்டும் தேர்வுகள் அவை.
துணிகளை நெய்வது எப்படி என்பதைச் சென்னைப் பிள்ளைகளைவிட, சென்னிமலைப் பிள்ளைகள்தான் கூடுதலாய் அறிந்து வைத்திருப்பார்கள். வயலில் இறங்கி நாற்று நடுவதும், களை பறிப்பதும், அறுவடை செய்வதும் கிராமத்துப் பிள்ளைகளின் வாழ்வின் ஒரு பகுதி. ஆனால் நுழைவுத் தேர்வில் இவைகளைப் பற்றியயல்லாம் எந்தக் கேள்வியும் இருக்கப் போவதில்லை. எனவே வாழ்க்கை தொடர்பான சிந்தனைகளையும், செயல்முறைகளையும் கொண்டிருக்கும் கிராமத்துப் பிள்ளைகள் பின்னுக்குத் தள்ளப்பட்டு, புத்தக அறிவை மட்டுமே பெற்றிருக்கும் நகரத்துப் பிள்ளைகள் வெற்றி பெற நுழைவுத் தேர்வுகள் உதவுகின்றன.
சமூக நீதிக்கு எதிரான இந்நிலையை மாற்றவே மூன்று ஆண்டுகளுக்கு முன்பு நுழைவுத் தேர்வு நீக்கப்பட்டது. அன்று முதல் ஒடுக்கப்பட்ட ஏழை எளிய மாணவர்கள் பெரும்பயன் அடைந்து வருகின்றனர். ஆனால் இப்போது, மருத்துவம் மற்றும் மருத்துவம் தொடர்பான முதுகலைப் படிப்புகளில் மாணவர்கள் அனுமதி பெற வேண்டுமெனில், அவர்கள் பொது நுழைவுத் தேர்வில் வெற்றி பெற்றாக வேண்டுமென்று இந்திய மருத்துவக் கவுன்சில் முடிவு செய்திருக்கிறது.
ஆண்டாண்டு காலமாக ஒடுக்கப்பட்டுக் கிடக்கும் ஏழை மக்களுக்கு எதிரான இச்சமூக அநீதியை விலக்கிக்கொள்ள வேண்டும் என்னும் கோரிக்கையை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்துவிட்டது.
இத்தீர்ப்பு சமூக நீதியின் மீது விழுந்த சம்மட்டி அடியாக இருக்கிறது. இதனைக் கட்சி வேறுபாடுகளைக் கடந்து அனைவரும் ஒருங்கிணைந்து எதிர்த்திட வேண்டும். நீதிமன்றத் தீர்ப்புகளுக்கு எதிராகக் குரல் கொடுக்கவே கூடாது என்னும் மூடநம்பிக்கையைத் தகர்த்திட வேண்டும்.