அகில இந்திய அளவில் நடக்கும் தேர்வுகளை எதிர் கொள்ள ஏதுவாக தமிழக பாடத்திட்டத்தில் தேவையான மாற்றத்தை கொண்டு வரப் போவதாக கல்வி அமைச்சர் தெரிவித்திருக்கிறார். வரவேற்புக்குரிய ஒன்று தான். நீட் தேர்வு உட்பட பல தேர்வுகளில் தமிழகம் பின் தங்குவதற்கு அதன் பாடத்திட்டமும் ஒரு காரணம் தான். ஆனால் அது மட்டுமே காரணமா?
CBSE பாடத்திட்டத்தைக் காட்டிலும் சமச்சீர் பாடத்திட்டம் சற்று குறைவு என்ற வாதம் ஒரு புறம் இருக்கட்டும் . கற்பித்தல் சார்ந்த கட்டமைப்பு மற்றும் வசதிகள் எவ்வளவு தூரம் எட்டப்பட்டுள்ளன என்பதைப் பார்ப்போம்.
பெரும்பாலான ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளிகள் இரு ஆசிரியரை கொண்டே இயங்குகின்றன. ஒவ்வொரு பாடமும் அதாவது தமிழ், ஆங்கிலம், கணிதம், அறிவியல், சமூக அறிவியல் கற்பிக்க வேண்டி பாடப்புத்தகம் தயாரிக்கப்படுகிறது. அதில் உள்ள திறன்களை சராசரியாக மாணவர்கள் கற்க வேண்டி 220 நாட்களுக்கு அவை திட்டமிட்டு தயாரிக்கப்படுகின்றன.
எ.கா. மூன்று பருவமும் சேர்த்து ஒரு அறிவியல் பாடப்புத்தகம் 160 பக்கங்கள் இருக்கு என வைத்துக் கொள்வோம்.
பள்ளி வேலை நாட்கள் = 220
தேர்வு அதற்குரிய திருப்புதல் போக. [- ]20 ------ 200 நாட்கள்
ஏதேனும் பள்ளி நிகழ்வுகள்,விழாக்கள், எதிர்பாரா விடுமுறைகள் [-] 20 ------ 180 நாட்கள்ஆசிரியர் விடுப்பு சுமார் 20 ------ 160 நாட்கள்
ஆக இவையெல்லாம் போக ஒரு அறிவியல் பாடத்தினை ஒரு நாள் ஒரு பக்கம் என சராசரியாகக் கற்பித்தல் மேற்கொள்ள வேண்டும். இதே போல் ஐந்து பாடங்களையும் கற்பிக்க வேண்டும். ஆக 1 ஆசிரியர் 1 ஆண்டு முழுவதும் 1 வகுப்பிற்குரிய அனைத்து பாடத்தையும் கற்பிப்பார் என்றால் அனைத்து திறனும் மாணவனுக்கு சென்று சேரும் என்பது திட்டம்.
ஆனால் நடைமுறையில் பள்ளியில் உள்ள இரண்டு ஆசிரியரும் 5 வகுப்புகளை கவனிக்க வேண்டியுள்ளது. இதில் தலைமை ஆசிரியர்க்கு கூடுதல் பணி வேறு.
தொடக்க வகுப்புகளில் ஏதோ அரைகுறையாய் கற்றல் நிகழ்ந்து ஒரு வழியாய் ஆறாம் வகுப்பிற்கு செல்லும் மாணவனுக்கு அங்குள்ள ஆசிரியர் அடிப்படையையும் சொல்லித்தர முடியாமல் பாடத்தையும் முடிக்க முடியாமல் All pass தயவால் மாணவனை 9 ஆம் வகுப்பிற்கு அனுப்புவார். அங்குள்ள ஆசிரியர் ஏதோ கொஞ்சம் போல 9 ஆம் வகுப்பை கற்பித்து 10 ஆம் வகுப்பு பாடத்தை அப்பொழுதே ஆரம்பித்து தனியார் பள்ளிகளுக்கு இணையாக போட்டி போடுகிறேன் என்று வெறும் Repeated questions திரும்ப திரும்ப தேர்வு வைத்து ஒரு வழியாக பாஸ் பண்ண வைப்பார்.
இப்படியாக பன்னிரெண்டாம் வகுப்பும் முடியும். அடிப்படைகளை சரியாக அமைக்காமல் அதன் மீது அடுக்கு மாடிகளை அசராமல் கட்டச் சொல்கிறது அரசு.
இந்த வகையாக பயின்று ஏதோ சில மாணவர்கள் பெரிய அளவு மதிப்பெண் பெற்று விட்ட பின்னர் அவர்கள் தேசிய அளவு தேர்வுகளில் பங்கேற்கும் பொழுது அடிபட்டுப் போகிறார்கள். மேற்குறிப்பிட்ட மோசமான கட்டமைப்பு, கல்வி கற்பிக்கும் வளங்கள் ஆகியனவற்றை CBSE பள்ளிகள், தனியார் பள்ளிகளுடன் ஒப்பிட்டு பார்க்க வேண்டும். பாடத்திற்கு ஒரு ஆசிரியர், நவீன தொழில் நுட்பப் பயன்பாடு, தேவைக்கேற்ப தகவமைப்பு போன்று பல விஷயங்களில் அரசு பள்ளிகள் பின் தங்குகிறது.
பெரும்பான்மை அரசு பள்ளிகளில் மாவட்ட ஆட்சியரால் நியமிக்கப்பெரும் துப்புரவு பணியாளர் கூட இல்லை. மாணவர்களே வகுப்பறையை சுத்தம் செய்வதால் பெற்றோர்களிடமிருந்து எதிர்ப்புகளை சந்திக்கும் பல நிகழ்வுகள் உண்டு.
எத்தகைய பாடத்திட்டத்தை கொண்டு வந்தாலும் இந்நிலைமையை சரி செய்ய முடியாது. மேற்குறிப்பிட்ட அனைத்தும் அரசாங்கத்திற்கும் தெரியும். அவர்கள் அதனை சரி செய்ய விரும்ப வில்லை. மாறாக அரசு பள்ளிகளை மேலும் நசுக்கி , அரசியல்வாதிகள் தாம் நடத்தும் தனியார் பள்ளிகள், தமது பினாமியின் பள்ளிகள் என அவற்றை நோக்கி பிள்ளைகளை ஈர்ப்பது தான் நோக்கம்.
மேலும் இங்கு ஆசிரியராய் ஆவது எளிது. ஆசிரியர் பயிற்சி என்று டிப்ளமோ அளவில் 2 வருடமும் பட்டப்படிப்பு என்ற அளவில் 2 வருடமும் தரப் படுகிறது. ஆனால் அவற்றால் எந்தவொரு ஆசிரியத் தன்மைகளும் , அதற்குரிய திறன்களும் வளர்க்கப்படுவதில்லை என்பது என் கருத்து. சம்பாதிக்கும் எளிய வழியாடஇத்தொழில் தேர்வு செய்யப்படுகிறது. வேலைக்கு வந்த கையோடு அவர்களும் தங்கள் கற்றலை முடித்துக் கொள்கின்றனர். அதற்கு மேல் ஊக்க ஊதியத்திற்காக மட்டுமே படிக்கின்றனர். இதையும் தாண்டிய விதிவிலக்குகள் உண்டு. ஆனால் அவர்கள் மேற்குறிப்பிட்ட கட்டமைப்பு சீர்கேட்டில் அடித்துச் செல்லப்படுகின்றனர்.
கிராமப்புற சூழலில் இருந்து வரும் மாணவனை அனைத்து வகைத் திறனோடும் வளர்த்தெடுக்க வேண்டுமாயின் அடிப்படையில் நாம் பலவற்றை மாற்றியமைக்க வேண்டியுள்ளது.
இவற்றையெல்லாம் சுயநல அரசுகள் குழி தோண்டி புதைத்து விட்டு, பேருக்கு பல கல்வி சார்ந்த திட்டங்களையும், மாற்றங்களையும் அறிவித்து, அதன் மீதான ஒதுக்கீட்டை தின்று போகின்றன.\
தற்போது தமிழக அரசு செய்திருக்க வேண்டியது நீட் தேர்வில் உள்ள உள்நோக்கத்தை சுட்டிக் காட்டி அதை எதிர்த்திருக்க வேண்டும். மாறாக ஆட்சியை தக்க வைக்க தமிழக மாணவர்களின் எதிர்காலத்தை மோடிகளின் காலடியில் அவைத்து கும்பிட்டுவிட்டு தற்போது பாடத்திட்டத்தில் மாற்றம் கொண்டு வரப் போவதாய் நாடகமாடுகிறது.
மோடிகள் கொடுக்கும் இந்துத்துவம் சார்ந்த பாடங்களையும், இந்துத்துவ போராளிகளின் வாழ்க்கை வரலாறுகளையும் இனி தமிழக பாடப்புத்தகங்கள் தாங்கும் என்பதே இந்த அடிமை அமைச்சர்களின் அறிவிப்பில் எஞ்சி நிற்கும் உண்மை.