“அவன் அடிமை என்பதை அவனுக்கு உணர்த்துங்கள்; அவன் கிளர்ந்தெழுவான்” என்றார் அம்பேத்கர். “நீங்கள் சூத்திரர்கள், சட்டப்படி சாஸ்திரப்படி தேவடியாள் மக்கள்” என்றார் பெரியார். பார்ப்பனர்களால் - அந்தணர்களால் - ஆரியர்களால் அடிமைப்படுத்தப்பட்ட மக்களிடம் அவர்களின் அடிமைத்தனத்தை உணர்த்தி, மூளைக்கு இடப்பட்ட விலங்கை உணரவைத்து அவ்விலங்குகளை உடைத்தெறிந்த தலைவர்கள் வடநாட்டில் அம்பேத்கர்; தென்னாட்டில் பெரியார்.

மிகப்பெரும் பண்பாட்டுப் புரட்சியை, சமுதாயப் புரட்சியை அண்மைக்காலத்தில் தம் கண்முன்னே  நம் பெற்றோர்கள் கண்டிருக்கிறார்கள்; நமக்கு முந்தைய தலைமுறை கண்டிருக்கிறது. அந்தப் பண்பாட்டுப் புரட்சியால் வாழ்வுபெற்ற இக்காலத் தலைமுறை தன் இனத்தின் விடுதலை வரலாற்றை முற்றிலும் அறியாமலிருக்கிறது. அதேசமயம்  அடிபட்ட ஆரிய இனம் - அந்தணர் குலம் - பார்ப்பனக் கூட்டம் நம் வரலாற்றின் அடிப்படைகளையே அரிச்சுவடியே இல்லாமல் அழிக்கத் தொடங்கியிருக்கிறது. அதன் அடையாளம்தான் சிந்துசமவெளி அல்ல இந்து சமவெளி; சரஸ்வதி பள்ளத்தாக்கு என்ற கதைகளெல்லாம். சங்க பரிவாரங்களின் - சங்கராச்சாரிகளின் இந்த வரலாற்று கரசேவக் பணிகளை தம் தோள்மேல் போட்டு ஏவல்செய்ய தமிழ்நாட்டில் கடும்போட்டியே நடக்கின்றது. அந்த மகாபாரத, மகாவம்சக் கனவுக்காரர்களை நாம் அவ்வப்போது அடையாளம் காட்டித்தான் வருகிறோம்.

தமிழ்த்தேசியத்தின் மாபெருந் தலைவனாக ம.பொ.சியைக் கொண்டு வந்தார்கள். சக தமிழ்த் தேசியரான சுப.வீரபாண்டியன் அவர்களாலேயே ம.பொ.சியின் பார்ப்பன மூளை தோலுரிக்கப்பட்டது. பார்ப்பானுக்கு மட்டுமல்ல, பார்ப்பனக் கொள்ளைக்கு ஆதாரமான இந்திய தேசியக் கொள்ளைக்கும், மார்வாடிக் கூட்டுக்கொள்ளைக்கும் வால்பிடித்தவர்  என அம்பலப்பட்டுப்போனார் ம.பொ.சிவஞானம். ம.பொசியின் அரசியல் அண்மைக்காலத்தில் நடந்தவைதான். எனவே அவற்றிற்கான ஆதாரங்களை யார் வேண்டுமானாலும் உடனே பார்த்துவிடலாம். பார்த்து அம்பலப்படுத்திவிடுவோம். எனவே கொஞ்சம் பின்னோக்கிப் போகிறார்கள். சங்க இலக்கியங்கள், இலக்கணங்கள், வரலாறுகள்  என நமக்குப் புரியாத தளங்களில் களங்களை அமைக்கிறார்கள்.

பார்ப்பான் - பார்ப்பனியம் ஒழியும் வரை இந்த மக்களுக்குத் தலைவன் பெரியார்தான். மக்கள்விடுதலைத் தத்துவம், விடுதலைக் கருவி பெரியாரியல்தான். இது அறிவியல்பூர்வமாக செய்துகாட்டப்பட்ட முடிவு. எனவே பெரியாரை, பெரியாரியலை, திராவிடர் கருத்தியலை அழித்தொழிப்பதே பார்ப்பனருக்கு அவசியமான பணி.  ஆகவே பெரியாரியலுக்கு எதிராக  பார்ப்பன தொல்காப்பியத்தையும், ஆரியக் கைக்கூலி இராஜராஜனையும் சங்க இலக்கியங்கள், வரலாறுகள் போன்ற முட்டுக்களால் தூக்கி நிறுத்திக்கொண்டுள்ள ஒரு கூட்டம் அம்பலப்படுவதை இனி பார்ப்போம்.

“அந்தணர் என்னும் பிரிவினர் தமிழ்ச்சமூகத்தின் அறிவாளர்கள் ஆவர். அரசு உருவாக்கத்தின்போது அரசர்களுக்கான அறிவுரைகள் வழங்கியும்,  மெய்யியல் துறைகளில் ஈடுபட்டும் வந்தவர்கள் அந்தணர்கள் ஆவர். இவர்கள் தமிழர்களே.”

இப்படி ஒரு கண்டுபிடிப்பு ஆர்.எஸ்.எஸ்.ஸின் விஜயபாரதத்தில் வரவில்லை. அவர்களின் ‘ரகஸ்ய கார்யவாஹ்’ செந்தமிழன் தமிழர் கண்ணோட்டம் இதழில் எழுதியுள்ளார். இக்கண்டுபிடிப்புக்கு அவர் ஆதாரம் என்ன தெரியுமா? எதாவது ஒரு கல்வெட்டா?  வரலாற்று ஆய்வறிஞர்களின் கருத்தா? அகழ்வாராய்ச்சி முடிவுகளா? ஆதாரப்பூர்வமான எதுவும் இல்லை. ‘பொய் இருக்குது மலைபோல, புளுகத்தான் நேரமில்ல’ என்னும் பண்பாட்டாளர்களுக்குப் புகலிடம் சங்க இலக்கியங்கள்தானே! பதிற்றுப்பத்து என்னும் சங்க இலக்கிய நூல் ஒன்றில் வரும் பாடல். இமயவரம்பன் நெடுஞ்சேரலாதனைப் புகழ்ந்து குமட்டூர் கண்ணனார் என்ற பார்ப்பனப் புலவர் பாடிய பாடல் தான் அவர் காட்டும் ஆதாரம். பதிற்றுப்பத்தில் முதல் பத்து இதுவரை யாருக்கும் கிடைக்கவில்லை. இரண்டாம் பத்தில் முதல் பாடல் அதாவது 21 ஆம் பாடல் என்று வைத்துக் கொள்வோம்.  முழுமையான முதல் பாடல் இதுதான்.

வரை மருள் புணரி வான் பிசிர் உடைய,
வளி பாய்ந்து அட்ட துளங்கு இருங் கமஞ் சூல்
நளி இரும் பரப்பின் மாக் கடல் முன்னி,
அணங்குடை அவுணர் ஏமம் புணர்க்கும்
சூருடை முழு முதல் தடிந்த பேர் இசை,
கடுஞ் சின விறல் வேள் களிறு ஊர்ந்தாங்கு-
செவ் வாய் எஃகம் விலங்குநர் அறுப்ப,
அரு நிறம் திறந்த புண் உமிழ் குருதியின்,
மணி நிற இருங் கழி நீர் நிறம் பெயர்ந்து,
மனாலக் கலவை போல, அரண் கொன்று,
முரண் மிகு சிறப்பின் உயர்ந்த ஊக்கலை;
பலர் மொசிந்து ஓம்பிய திரள் பூங் கடம்பின்
கடியுடை முழு முதல் துமிய ஏஎய்,
வென்று எறி முழங்கு பணை செய்த வெல் போர்,
நார் அரி நறவின், ஆர மார்பின்,
போர் அடு தானைச் சேரலாத!-
மார்பு மலி பைந் தார் ஓடையொடு விளங்கும்
வலன் உயர் மருப்பின் பழி தீர் யானைப்
பொலன் அணி எருத்தமேல் கொண்டு பொலிந்த நின்
பலர் புகழ் செல்வம் இனிது கண்டிகுமே
கவிர் ததை சிலம்பில் துஞ்சும் கவரி
பரந்து இலங்கு அருவியொடு நரந்தம் கனவும்,
ஆரியர் துவன்றிய, பேர் இசை இமயம்
தென்அம் குமரியொடு ஆயிடை
மன் மீக் கூறுநர் மறம் தபக் கடந்தே.

இப்பாட்டின் பொருள்,

“காற்று கடலுள் புகுந்து நீரை அள்ளிக்கொண்டு மேகமாக உலவும். முருகப் பெருமான் கடலுக்குள் சூரனை அழித்தபோது கடலே செந்நிறம் பெற்றது. இந்த நெடுஞ்சேரலாதன் மேகம்போல் படையுடன் சென்றான். முருகனைப் போலப் பகைவரைக் கொன்று உப்பங்கழிகளையெல்லாம் குங்குமம் கரைத்தது போலச் செந்நிறமாக்கினான். கடற் கொள்ளையர் கடம்பர் பகையை முடித்தபோது இந்த நிலை. பகைவரை வென்ற சேரன் பகைவரின் காவல் மரமான கடம்பமரத்தை கொண்டுவந்து கடம்ப மரத்தால் தனக்கு முரசு செய்துகொண்டான். இந்த வெற்றிப் பெருமிதத்தோடு யானைமீது வந்த சேரனைக் கண்டு புலவர் வாழ்த்துகிறார்.

முருக்கமரம் பூத்திருக்கும் மலைக்காட்டில் தூங்கும் கவரிமான் வயல் வெளியில் வளர்ந்திருக்கும் நரந்தம்புல்லை மேயக் கனவு காண்பது போல், இமயத்தில் இருந்துகொண்டு குமரியைக் கைப்பற்றக் கனவு கண்டுகொண்டிருந்த ஆரியமன்னர்களையெல்லாம் வென்று அந்த நிலப்பரப்புகளிலெல்லாம் தன் புகழ் பரவும்படி செய்தான்.”

அந்தணர் என்பவர்கள் ஆரியர்கள் இல்லை. அவர்கள் தமிழர்கள் என்பதற்கு தமிழர் கண்ணோட்டம் சொல்லும் ஆதாரம் என்ன தெரியுமா? வடக்கே உள்ள ஆரியர்களை எதிர்த்து நெடுஞ்சேரலாதன் போரிட்டான். அதை குமட்டூர் கண்ணன் என்ற அந்தணர் புகழ்ந்து பாடுகிறார். அதுதான் பதிற்றுப்பத்தின் இரண்டாம் பத்து என பாடலைக் காட்டுகிறார் செந்தமிழன்.  ஒரு ஆரியனை எதிர்த்து வென்றதை மற்றொரு ஆரியன் புகழ்வானா? புகழமாட்டான். எனவே குமட்டூர் கண்ணன் என்ற அந்தணர் தமிழ்நாட்டு அந்தணர்; ஆரியர்  அல்ல. இதுதான் செந்தமிழனின் கண்டுபிடிப்பு.

மேற்கண்ட பதிற்றுப்பத்துப் பாட்டில் தமக்குத் தேவையான நான்கு வரிகளை மட்டும் வெட்டி எடுத்து அந்த வரிகளுக்கு மட்டும் பொருள் தந்திருக்கிறது தமிழர் கண்ணோட்டம். ஆனால் அந்தப் பாட்டின் தொடக்க வரிகளில் அக்காலத்திலேயே தமிழினம் ஆரியமயப்பட்டுவிட்டது என்பதை நன்றாகவே விளக்கியுள்ளது. முருகக்கடவுள் சூரனை அழித்தபோது என்ற பொருள்படும் வரிகள்தான் முதலில் வருகின்றன.

திணைவழிப்பட்ட நாகரிகக் காலங்களில் கொற்றவையின் மகனாக புரிந்துகொள்ளப்பட்ட முருகன் கடைச்சங்க காலத்திலேயே ஆரிய மயமாகிவிட்டான். பரிபாடல் என்னும் சங்க இலக்கியத்தில் வரும் செவ்வேள் பாடல்களில் அதற்கான ஆதாரங்கள் விரிவாக உள்ளன.

ஆதி அந்தணன் அறிந்து பரி கொளுவ,
வேத மா பூண் வையத் தேர் ஊர்ந்து,
நாகம் நாணா, மலை வில்லாக,
மூவகை ஆர் எயில் ஓர் அழல்-அம்பின் முளிய,
மாதிரம் அழல, எய்து அமரர் வேள்விப்
பாகம் உண்ட பைங் கட் பார்ப்பான்
உமையொடு புணர்ந்து, காம வதுவையுள்,
அமையாப் புணர்ச்சி அமைய, நெற்றி
இமையா நாட்டத்து ஓரு வரம் கொண்டு,
.....................................................
.....................................................
நிவந்து ஓங்கு இமயத்து நீலப் பைஞ் சுனைப்
பயந்தோர் என்ப, பதுமத்துப் பாயல்;

பெரும் பெயர் முருக! நிற் பயந்த ஞான்றே,
அரிது அமர் சிறப்பின் அமரர்செல்வன்,
எரி உமிழ் வச்சிரம் கொண்டு, இகந்து வந்து, எறிந்தென,
அறு வேறு துணியும் அறுவர் ஆகி,
ஒருவனை; வாழி, ஓங்கு விறல் சேஎய்!

- பரிபாடல்

கொற்றவையின் மகனாக இருந்த முருகன் இப்பாடல்வழியே சிவபெருமானின் மகனாக உருவெடுக்கிறான். சிவபெருமானின் விந்தணுக்களின் சூட்டைத்தாங்க முடியாத வாயு அதை அப்படியே சரவணப் பொய்கையில் விடுகிறான். அதைக்குடித்த  கார்த்திகைப் பெண்கள் ஆறுபேருக்கு முருகன் பிறக்கிறான். இந்த ஸ்கந்த புராணம் பரிபாடலாக வருகிறது.  ஆரியர்களின் தலைவன் இந்திரன் அசுரர்களுடன் போரிட்டு வெல்லமுடியாமல் போனதால் தேவர்கள் முருகனிடம் முறையிட்டனர். இந்திரனுக்காக அசுரர்களை அழிக்கும் போரில் அசுரர்களை வெல்கிறான் முருகன். அதற்குப் பரிசுதான் ஆரியத்தலைவன் இந்திரனின் மகள் தெய்வானை முருகனுக்கு இரண்டாம் தாரமாக கொடுக்கப்படுகிறாள். காலப்போக்கில் குறிஞ்சி மகளாக அறியப்பட்ட வள்ளி இரண்டாம் இடத்துக்குப் போகிறாள்.

நாம் முதலில் பார்த்த பதிற்றுப்பத்துப் பாடலில் இதுதான் வருகிறது. அசுரர்களை அழித்த முருகனைப் போல... என்று பாடல் தொடங்குகிறது. தேவ அசுரப் போராட்டம் தமிழ்நாட்டு எல்லைக்குள்ளேயே வந்து விட்ட பின்பு -  ஆரியர்களின் தலைவன் இந்திரனின் படைத்தலைவனாக முருகன் மாறிவிட்ட பின்பு வேறு எந்த ஆரியர்களை எதிர்த்து இமயத்துக்குப் போனான் நெடுஞ்சேரலாதன்? அதே பதிற்றுப்பத்து பாடலில் மகாபாரதக் கதையும் வருகிறது. இரண்டாம் பத்தில் நான்காம் பாடலில்

போர் தலைமிகுத்த ஈர் ஐம்பதின்மரொடு
துப்புத் துறைபோகிய, துணிவுடை ஆண்மை,
அக்குரன் அனைய கைவண்மையையே;
அமர் கடந்து மலைந்த தும்பைப் பகைவர்
போர், பீடு, அழித்த செருப் புகல் முன்ப!
கூற்று வெகுண்டு வரினும், மாற்றும் ஆற்றலையே;

என்ற வரிகளில் மகாபாரதக்கதையில் வரும் கௌரவர்கள் கர்ணன் பற்றிய குறிப்புகள் உள்ளன.  மேலும் இரண்டாம் பத்தின் பாடப்பெற்ற தலைவனான நெடுஞ்சேரலாதனின் தந்தை உதியஞ்சேரல் என்ற சேர மன்னனைப் பற்றி ஒரு முக்கியச் செய்தி புறநானூற்றுப் பாடலில் வருகிறது. புறநானூற்றில் இரண்டாம் பாடலில்

அலங்குளைப் புரவி ஐவரோடு சினைஇ,
நிலந்தலைக் கொண்ட பொலம்பூந் தும்பை
ஈரைம் பதின்மரும் பொருது, களத்து ஒழியப்
பெருஞ்சோற்று மிகுபதம் வரையாது கொடுத்தோய்!

மகாபாரதப் போருக்கு பெருஞ்சோறு கொடுத்தானாம் உதியஞ்சேரல், எனவே அவனுக்கு அதாவது இமயவரம்பன் நெடுஞ்சேரலாதனின் தந்தைக்கு பெருஞ்சோற்று உதியஞ்சேரலாதன் என்று பெயரே வந்தது. பதிற்றுப்பத்தும், புறநானூறும் எழுதப்பட்ட கடைச்சங்க காலம் சுமார் கி.பி 2 ஆம்  நூற்றாண்டு. ஆனால் மகாபாரதம் நடந்த கதை என்று ஒரு வாதத்திற்கு ஒப்புக்கொள்வதாக இருந்தாலும், அந்தக் கதை கி.மு 14 ஆம் நூற்றாண்டில் நடந்ததாகவும் - தொகுக்கக்கப்பட்டதாகவும் சொல்லப்படுகிறது. அப்படியிருக்க கி.பி 2 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த உதியஞ்சேரல் எப்படி மகாபாரதப் போரின்போது உதவியிருக்க முடியும்? மேலும்

.....அரைக்கமை மரபின மிடற்றியாக் குநரும்,
கடுந்தெறல் இராமன் உடன்புணர் சீதையை......

என்னும் புறநானூற்றின் 378 ஆவது பாடலில் இராமன், சீதை பற்றிய செய்திகள் இடம்பெற்றுள்ளன.

ஆக, ஸ்கந்த புராணம், ஆரியஇந்திரன் வழிபாடு, மகாபாரதம், இராமாயணம் எல்லாம் தமிழர்களிடம் செல்வாக்குப் பெற்ற பின்பு வேறு எங்கு போய் ஆரியர்களை எதிர்க்கிறான் நெடுஞ்சேரலாதன்?

கி.மு 1000 -ஆம் ஆண்டு வாக்கிலேயே ஆரியர்கள் தமிழ்நாட்டுக்குள் ஊடுருவத் தொடங்கி விட்டார்கள். வடநாட்டுப் பார்ப்பனர்கள் கி.முவிலேயே தென்னாட்டு அந்தணர்களோடு திருமண உறவு கொண்டுள்ளனர். ஆயிர கணக்காக நடந்த இக்கலப்புகள் வட - தென் நாடுகளில் வாழ்ந்த பார்ப்பனர்களுக்கிடையே மட்டுமே நடந்தன  என்று ஈழத்து அறிஞர் ந.சி.கந்தையா அவர்கள் தமது ‘தமிழர் சரித்திரம்’ என்னும் நூலில் விரிவாகப் பதிவு செய்துள்ளார். இறுக்கமான  வர்ணாஸ்ரமக் கோட்பாடுகளையும் சாதிப்பிரிவினைகளையும் வாழ்வில் வழுவாது கடைபிடிக்கும் வடபகுதி பார்ப்பனர்கள் தென்னாட்டில் அந்தணர்களுடன் மட்டுமே மணஉறவு, கொள்வினை, கொடுப்பினைகள் வைத்திருந்தனர். தமிழன் வேலாயுதன் முருகனையே தமது தோலாயுதத்தால் வென்ற கதை போல, ஒருசில திணைத்தலைவர்களை, குறுநில மன்னர்களை ஆரியர்களாக, ஆரிய அடிமைகளாக ஆக்குவதற்காக சில வெள்ளைத்தோல் வேள்விகளும் நடந்திருக்கலாம். ஆனால் வரலாற்றில் குறிப்பிடும் அளவுக்கு நடக்கவில்லை. ஆரியர்களின் அகண்டபாரதத்தின் - ஆரியவர்ஷத்தின் இரத்த உறவாக அந்தணர்கள் மட்டுமே இருந்தனர்.

பதிற்றுப்பத்து எழுதிய காலத்திலிருந்து கணக்கு பார்த்தால். அதாவது பதிற்றுப்பத்து காலத்துக்கு பல நூற்றாண்டுகளுக்கு முன்பே ஆரியர்கள் தமிழ்நாட்டுக்குள் வந்து  கலந்துவிட்டார்கள்.  பதிற்றுப்பத்து காலத்தில் ஆதிக்கத்திற்கே சென்றுவிட்டார்கள். அக்கால இலக்கியங்கள் அவர்கள் வசமாகிவிட்டது. அக்காலத்தில் தமிழர்களின் தெய்வமாக அறியப்படும் முருகன் கதையையே மாற்றிவிடும் அளவுக்கு, முருக வழிபாட்டையே திருத்தி அமைக்கும் அளவுக்கு ஆரியர்கள் சமூக ஆதிக்கத்தில்  உயர்ந்திருந்திருக்கிறார்கள்.

ஆகவே ஆரியர்களுடன் போராடுவது என்றால் அது ஒரு வில்லும் வாளும் ஏந்திய போராட்டமாக இருந்திருக்க முடியாது. தோழர் பெரியார் நடத்தியது போன்ற ஒரு பண்பாட்டுப் புரட்சிதான் நடந்திருக்க வேண்டும். ஸ்கந்த புராணம் கொளுத்தப்பட்டிருக்க வேண்டும். மகாபாரதமும் இராமாணயணமும் எரிக்கப்பட்டிருக்க வேண்டும். பார்ப்பனர்களால் ஏமாற்றிப் பிடுங்கப்பட்ட பிரம்மதேயங்கள் நெடுஞ்சேரலாதனால் கையகப்படுத்தப்பட்டிருக்க வேண்டும். அந்தணனோ, பார்ப்பானோ, பிராமணனனோ எவனாக இருந்தாலும் உழைப்பில் ஈடுபடுத்தப்பட்டிருக்க வேண்டும். உற்பத்தியில் ஈடுபடுத்தியிருக்க வேண்டும். அதுவே ஆரியர்களுக்கு எதிரான போராட்டம். அப்படி ஒரு திசைநோக்கி நெடுஞ்சேரலாதன் செல்லவில்லை. குமட்டூர் கண்ணன் என்ற பார்ப்பான் அப்படி ஒரு இலக்குநோக்கி நெடுஞ்சேரலாதனை அனுப்பவில்லை.

வடநாட்டில் ஆண்ட ஒரு மன்னரை எதிர்த்து வென்றானாம். அதற்கான எந்த ஆதாரங்களும் எந்த வரலாற்று ஆய்வாளருக்கும் இதுவரை கிடைக்கவில்லை. அப்படி ஒரு போர் நடந்ததற்கான எந்தக் கல்வெட்டையும் எந்த ஒரு பிராமி கல்வெட்டையும் ஆதாரமாக யாரும் காட்டவில்லை.  தமிழ்நாட்டிலோ அல்லது வடநாட்டிலோ பாரதம் கூறும் 56 தேசங்களின் கல்வெட்டுக்களிலோ எங்கும் நெடுஞ்சேரலாதனின் போர் பற்றி ஆதாரம் இல்லை. இப்படி நடக்காத ஒரு போரைக்காட்டி அதில் ஆரியர்களை வென்றான் என கட்டுக்கதையைச் சொல்லியிருக்கிறான் குமட்டூர் பார்ப்பான். அதற்கு கிடைத்த பரிசு என்ன தெரியுமா? நெடுஞ்சேரலாதன் குமட்டூர் கண்ணன் என்ற தமிழ்(?)அந்தணனுக்கு தனது ஆட்சியிலிருந்த 500 ஊர்களை பிரம்மதேயமாக வழங்கியுள்ளான். அதே பதிற்றுப்பத்தில் பதிகத்துக்கு அடுத்து இந்தக் குறிப்பு உள்ளது.

பிரம்மதேயம் என்பது பார்ப்பனர்களுக்கு - பிராமணர்களுக்கு மட்டுமே வழங்கப்படுவதாகும். மற்றவர்களுக்கு வெவ்வேறு பெயர்களில் வழங்கப்பட்டு வந்திருக்கிறது.  500 ஊர்களை பிரம்மதேயமாகப் பெற்றவன் பார்ப்பான் தானே? எப்படி தமிழன் ஆனான்?

ஒரு ஆரியனை எதிர்த்ததை மற்றொரு ஆரியன் புகழ்வானா என்கிறார் செந்தமிழன். காஞ்சிபுரத்தில் சங்கரராமன் என்ற பார்ப்பானைக் கொலை செய்த சங்கராச்சாரி தமிழனா? அதே அந்தணன் தானே? அதே பிராமணண் தானே? அதே ஆரியர்களின் தலைவன்தானே? அந்தக் கொலைகாரன் சங்கராச்சாரிப் பார்ப்பானை உள்ளே தூக்கிப் போட்டு அசிங்கப்படுத்திய ஜெயலலிதா தமிழச்சியா? பாப்பாத்தி தானே?

நெடுஞ்சேரலாதன் நடத்திய போருக்கு எந்த ஆதாரமும் இல்லை. அப்படியே நடத்தியிருந்தாலும் அது ஆரியருக்கு எதிரான சரியான போர் இல்லை. எனவே அப்போரை ஆரியப்பார்ப்பான் குமட்டூர் கண்ணன் புகழ்ந்ததில் வியப்பேதும் இல்லை.

இதோடு நிறுத்தவில்லை செந்தமிழன் அவரது இரண்டாம் கண்டுபிடிப்பு இதைவிடக் கேவலம். குமட்டூர் கண்ணன் ஒரு தமிழ் அந்தணன் என்று முதலில் எழுதுகிறார்.  அடுத்த சில வரிகளில் அவர் அந்தணர் இல்லை. சங்க காலத்துப் பாணர் குலத்தைச் சேர்ந்த தமிழர் என எழுதியுள்ளார். ஒரு பார்ப்பானை தமிழனாக்குவதற்கு இலக்கியங்களை வைத்துக்கொண்டு படாதபாடுபட்டிருக்கிறார். பாவம் இலக்கியங்கள் கூட அவருக்கு கைகொடுக்கவில்லை என்பதைப் பார்ப்போம். கண்ணன் ஒரு பாணர் குலத்தான் என்பதற்கு
செந்தமிழன் தரும் சான்று இதோ,

வயவர் வீழ வாள் அரில் மயக்கி,
இடம் கவர் கடும்பின் அரசு தலை பனிப்ப
உண்மின் கள்ளே! அடுமின் சோறே!
எறிக திற்றி! ஏற்றுமின் புழுக்கே!

என்னும் இரு பாடல்களைக் காட்டுகிறார். இப்பாடலில் “எம் பாணர் மகளிர் அனைவருக்கும் ஒளிவீசும் அணிகலன்கள் வழங்கினாய்” என்ற பொருள்படும் வரிகள் வருகின்றன. இதில் எம் பாணர் என குமட்டூர் கண்ணன் சொல்வதால் அவர் ஒரு பாணர் குலத்தவர் என்கிறார் செந்தமிழன்.

பாணர், பாடினி, விறலியர், கூத்தர் எனப்பட்டோர் சங்ககாலத்தில் இசை மற்றும் ஆடல் பாடல்களில் வல்லவராக இருந்தனர். நல்ல இலக்கியத் தரமான பாடல்களை இயற்றுவதிலும் வல்வராக இருந்தனர். விழாக்காலங்களில் மக்களிடமும், போர் வெற்றி காலங்களில் அரசர்களிடமும் பாடி, ஆடி பரிசில் பெற்று வந்தனர். காலப்போக்கில் செய்யுள்களை இயற்றுவதில் திறன்வாய்ந்த சில புலவர்கள் பாணர்களையும் விறலியர்களையும் உடன் இணைத்துக்கொண்டு ஒரு கலைக்குழுவை உருவாக்கி, கலைக்குழுவோடு மன்னர்களைச் சந்திப்பது என்ற மரபு உருவானது. அதோடு பாணர்களின் பாத்திரங்களை புலவர்கள் தாமே ஏற்றுப் பாடும் மரபும் இருந்தது. இம்முறைகளைப்பற்றி டாக்டர் தமிழண்ணல் அவர்கள் 1969 ஆம் ஆண்டிலேயே தமது முனைவர் பட்ட ஆய்வில் தெரிவித்துள்ளார். அவரது ஆய்வு ‘சங்க மரபு’ என்ற பெயரில் நூலாக அச்சிடப்பட்டுள்ளது.

புறநானூற்றில் ஊன்பொதி பசுங்குடையார் என்ற புலவர் செருப்பாழி எறிந்த சோழன் இளஞ்சேட் சென்னியைப் புகழ்ந்துபாட தன்னோடு ஒரு கலைக்குழுவையும் அழைத்துச் சென்றதாகப் பாடுகிறார்.

விரல்செறி மரபின செவித்தொடக் குநரும்,
செவித்தொடர் மரபின விரற்செறிக் குநரும்,
அரைக்கமை மரபின மிடற்றியாக் குநரும்,
கடுந்தெறல் இராமன் உடன்புணர் சீதையை......
.......அறாஅ அருநகை இனிதுபெற் றிகுமே,
இருங்குளைத் தலைமை எய்தி,
அரும்படர் எவ்வம் உழந்ததன் தலையே. - புறநானூறு . 378

மேலும் வல்வில் ஓரி என்னும் மன்னன் வேட்டைக்காக காட்டுக்குள் சென்றபோது அதைக் கேள்விப்பட்ட வன்பரணர் என்னும் புலவர் பாணர்கள் அடங்கிய தம் கலைக்குழுவை உடன் அழைத்துச்சென்று  வல்வில் ஓரியைப் புகழ்ந்து பாடி பரிசில் பெற்றுச் சென்றுள்ளார். அந்தப் பாடல்

வேழம் வீழ்த்த விழுத் தொடைப் பகழி
பேழ்வாய் உழுவையைப் பெரும்பிறிது உறீஇப்,
புழல்தலை புகர்க்கலை உருட்டி, உரல்தலைக்
கேழற் பன்றி வீழ, அயலது
ஆழற் புற்றத்து உடும்பில் செற்றும், - புறநானூறு . 152

இதுபோல பாணர், விறலியர் அடங்கிய கலைக்குழு ஒன்றை உடன் அழைத்துச் சென்றுதான் நெடுஞ்சேரலாதனைப் புகழ்ந்து பாடியுள்ளான் குமட்டூர் பார்ப்பான். அதனால்தான் “எம் பாணர் மகளிர்” எனப் பாடியுள்ளான். ஆகவே பாணர்குலம் வேறு; குமட்டூர் கண்ணன் வேறு. 500 ஊர்களைப் பிரம்மதேயமாகப் பிடுங்கியவன் வரலாற்றின்படி  நிச்சயம் பார்ப்பானே. பாணர்களைத் தம்முடன் அழைத்துச் சென்று நெடுஞ் சேரலாதனை ஏமாற்றி 500 ஊர்களைப் பிடுங்கிக்கொண்டு, பாணர்களுக்கு வெறும் அரிசிச்சோற்றையும், ஆட்டுக்கறிக் குழம்பையும் சில நகைகளையும் கொடுத்துவிட்டு பாணர்களையும் விறலியர்களையும்  ஏமாற்றியிருக்கிறான் குமட்டூர் பார்ப்பான் என்ற உண்மையை திராவிடர்கள் அறியச் செய்த செந்தமிழன் அவர்களுக்கு நன்றி.

அந்தணர்கள் என்னும் பார்ப்பனர்களைத் தமிழர்கள் என உறுதிப்படுத்தத் துடிப்பது அவர்கள்  பல நூற்றாண்டு காலமாகத் தொடர்ந்து வெற்றிகரமாக நடத்திவரும் ஆரியச்சுரண்டலை நிலைநிறுத்தவே, நீடிக்கவே பயன்படும். பார்ப்பன ஆதிக்கம் ஒழியாமல் ஒருவேளை தனிநாடோ, தமிழ்த்தேச தன்னுரிமையோ கிடைத்தாலும் அந்த நிலையிலும் சாதி, தீண்டாமைகள் ஒழியப்போவதில்லை. பூஜை, புணஸ்காரங்கள் குறையப்போவதில்லை. பிறவிச்சுரண்டல்காரர்களான - பிறவிஆதிக்கவாதிகளான - ஒட்டுமொத்த இந்திய ஒருமைப்பாட்டின் சின்னங்களான, காவலர்களான இந்தப் பார்ப்பனக்கூட்டத்திற்கு, தமிழர்கள் - ஒரே இனத்தவர் என்ற அங்கீகாரமும் கிடைத்துவிட்டால் நமக்கு - அதாவது திராவிடத் தமிழர்களுக்கு கிடைக்கும் எந்த உரிமையும், எவ்வகை விடுதலையும் நீடிக்காது.

 உண்மையான இனவிடுதலைக்கு, ஒடுக்கப்பட்டோர் விடுதலைக்கு எதிரான பார்ப்பனர்களை தமிழர்கள் என அங்கீகரிப்பதற்கு தமிழர் கண்ணோட்டம் ஆதாரமாகத் தந்த இலக்கியப்பாடல்கள் மிகவும் பித்தலாட்டமானது. அறிவியலுக்கும் வரலாற்றுக்கும் முரணானது. அந்தணர்கள் குறித்து சங்க இலக்கியங்கள் சொல்லியுள்ள மேலும் சில செய்திகளைப்பற்றி இனி பார்ப்போம்.                           

(தொடரும்)

- அதிஅசுரன் (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)

Pin It