கல்விக்கூட அனுபவங்கள்

கல்லூரி முதல்வர் கூப்பிடவிட்டிருந்தார். கல்லூரியில் சேர்ந்த புதிதில் முதல்வர் கூப்பிடு கிறார் என்றால் லேசாக நடுக்கம் தோன்றும். இந்த இருபது ஆண்டுகளில் அர்த்தம் மாறியிருக்கிறது. ‘முதல்வருக்கு ஏதோ நடுக்கம்’ என்பது இப்போ தைய அர்த்தம். பகிர்ந்து கொள்ளக்கூப்பிடுகிறார்.

‘உக்காருங்க’ என்றார். ‘போர்ஷன் எல்லாம் முடிச்சாச்சுல்ல’ என்றார். இதற்காகக் கூப்பிட வில்லை என்று எனக்குத் தெரியும். நேரடியாக விசயத்தை ஆரம்பித்தால் அவர் மதிப்பு என்னாவது. . . ?

கொஞ்ச நேரம் மௌனம்.

‘தெரியும்’ல. காமர்ஸில் ஒரு புது அப்பா யிண்ட்மெண்ட்’ என்றார். விசயத்துக்கு வந்து விட்டார்.

‘தெரியாது’ என்றேன்.

‘பேரு பச்சையம்மாள்!’

‘ஓ!’

‘வந்த முதல் நாளே சேட்டை!’

‘என்ன செஞ்சாங்க?’

‘இன்னிக்கி அவுங்களுக்கு டைம்டேபிள் போடல. ராம்தாஸ் இன்னிக்கி லீவுல்ல. அவர் கிளாஸுக்குப் போயி ஏதாவது ஜெனரலா பேசீட்டு வாங்கன்னு காமர்ஸ் புரொபசர் சொல்லீருக்காரு. அதுக்கு இந்தம்மா என்ன சொல்லுச்சு தெரியுமா?’

‘என்ன சொன்னாங்க?’

‘எனக்கு முறையா டைம்டேபிள் போட்டு சப்ஜெக்ட் போட்டு கிளாஸுக்கு அனுப்புங்க சார்! திடீர்’னு ஒரு கிளாஸ்ல போய் எதையாவது பேசுறது நல்லால்ல. நான் போகல சார்’னு சொல்லீருக்கு!

‘ஓ!’

‘ சுநகரளநன ‘

‘ஓ!’

‘என்ன ஓ! சரி! போயிட்டு வாங்க. எனக்கு வேலை நெறையக் கெடக்கு. இந்தாப்பா! ஹெட் கிளார்க்கைக் கூப்பிடு’.

இப்படித்தான் - ஒவ்வொரு முறையும். ஏதோ இவரை நான் கூப்பிடவிட்டது போல உரையாடலை முடித்து என்னை வெளியே அனுப்புவார்.

பச்சையம்மாளை இன்னும் பார்க்க வில்லை. ஆனால் அவர் மீது பெரிய மரியாதை ஏற்பட்டுவிட்டது.

மறுப்புத்திறன் மீது என் கவனம் குவிந்திருந்த நேரம் அது. வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் மாணவர்களுக்கு மறுப்புத்திறனில் சிறுசிறு பயிற்சிகள் அளித்து வந்தேன்.

“எல்லாவற்றுக்கும் ஆமாம்! ஆமாம்! என்று தலையாட்டியே பழகிவிட்டீர்கள். ஆசிரியர்களும் நீங்கள் ஆமாம் சொல்வதையே விரும்புகிறார்கள். ஆமாம் சொல்லிச் சொல்லி உங்களின் சுய மரியாதை போனது மட்டுமல்ல - உங்கள் கற்பனைத் திறன், படைப்பாற்றல் எல்லாம் போய் விட்டது. ‘யெஸ்’(லுநள) சொன்னது போதும். மறுக்கப் பழகுங்கள். இது தவறு - இது பிடிக்கவில்லை என்று உங்கள் மனதுக்குப்பட்டால் தயங்காமல் ‘நோ’ சொல்லுங்கள். சோம்பலில், சலிப்பில் நாம் சொல்லுகிற ‘நோ’ அல்ல இது. கெடுதலான பத்தாம் பசலிப் போக்கு

களுக்கு எதிரான ‘நோ’ இது. அதிகாரத்தின் வற்புறுத்தல்களுக்கு எதிரான ‘நோ’ இது” என்று விளக்கவுரை ஆற்றுவேன். ‘இத புதுசா எங்க படிச்சுட்டு வந்தாரோ’ என்று மனதுக்குள் சிரித்தபடி மாணவர்கள் நான் சொல்வதற்குக் காது கொடுப்பார்கள்.

இடையிடையே வகுப்பை மரத்தடிக்குக் கொண்டு போவதுண்டு. அப்போது பயிற்சியை ஆரம்பிப்பேன்.

“நான் சில வாக்கியங்களைச் சொல்வேன். அவற்றை நீங்கள் ‘யெஸ்’ சொல்லி ஏற்கலாம். ‘நோ’ சொல்லி மறுக்கலாம். உங்கள் இஷ்டம்”. மாணவர்கள் சத்தமிடத் தயாராவார்கள்.

‘மாதா பிதா குரு தெய்வம்’.

‘நோ’.

‘மாணவர்கள் பணிந்து அடங்கி நடக்க வேண்டும்’.

‘நோ’

‘பரீட்சைதான் முக்கியம்’

‘நோ’

‘படிப்புதான் முக்கியம்’

‘நோ’.

மாணவர்கள் நோ! நோ! என்று கத்து வார்கள். எழும்பும் சத்தம் மரத்தில் வந்தடையும் பறவைகளை மிரட்டும். சில நேரங்களில் மாணவர் சத்தத்தை மாணவியர் சத்தம் மிஞ்சிவிடும். இடையே ‘யெஸ்’ சத்தமும் பூனைக்குட்டிக் குரலில் கேட்கும். நீ ‘நோ’ சொல்லச் சொன்னால், நான் ‘யெஸ்’ சொல்வேன் என்று மறுத்து நிற்கிற குரல் அது. அதுவும் கவனிக்க வேண்டிய குரல்.

இந்தப் பயிற்சிகளில் நான் தோய்ந்திருந்த நேரத்தில்தான், பச்சையம்மாள் வேலையில் சேர்ந்த முதல் நாளே நோ சொன்னதை முதல்வர் வாயிலாக அறிந்தேன். இது உண்மையான தைரியம். கல்விக் கூடங்கள் காண்பதற்கு ஏங்கிக் கிடந்த தைரியம்!

 ****

இரண்டு தினங்களில் பச்சையம்மாளைச் சந்திக்க முடிந்தது.

அவரே ஒரு உதவி கேட்டுத் துறைக்கு வந்தார். வணிகவியலில் புழங்கும் சில ஆங்கிலச் சொற்களுக்குத் தமிழ்ப் பதங்களைக் கேட்டு வந்தார்.

நான் சொன்ன தமிழ் இணைகளை அவர் முழுமனதாக ஏற்றுக் கொண்டதாகத் தெரிய வில்லை. இருந்தாலும் எங்கள் உரையாடல் தொடர்ந்தது.

பச்சையம்மாள் முப்பதைத் தாண்டியவ ராகத் தெரிந்தார். ‘இதுக்கு முன்னால வேற எங்கேயும் வேல பாத்தீங்களா?’ என்று பொது வாகக் கேட்டேன்.

“சொல்லிக்கிட்றது மாதிரி ஒண்ணுமில்ல சார். சின்னச்சின்ன வேல பாத்திருக்கேன். அரிசி மில்ல உக்காந்து கணக்கு கூட எழுதியிருக்கேன். ஆனா, இதுதான் உருப்படியான முதல் வேலை! எம். காம். முடிச்சு 10 வருசம் ஆகப்போகுது. கல்யாணம் ஆகி ரெண்டு பிள்ளைகளும் இருக்கு. இப்பத்தான் வேல கெடச்சுச்சு. அதுவும் மூணு லட்சம் கொடுத்து வாங்குனேன்”.

நிர்வாக ரகசியங்களை இப்படிப் படீரென்று யாரும் உடைத்ததில்லை. சீக்கிரம் சங்கத்துக்கு வருவார் என்று மனதுக்குள் நம்பிக்கை துளிர் விட்டது.

ஒரு நாள் அவருடைய பெயர் பற்றிக் கேட்டேன். ‘கொஞ்சம் வித்தியாசமா இருக்கே ஒங்க பெயர்?’

“என்ன சார்! தமிழ்ப் பேராசிரியரா இருந்துக் கிட்டு இப்படிக் கேக்குறீங்க! பச்சைனா செடி கொடி தாவரங்கள்னு அர்த்தம் சார். பச்சை யம்மாள்னா இயற்கை தெய்வம். பச்சையப்பன் கல்லூரின்னு சென்னையில இருக்குல்ல. அது கூட ஞாபகத்துக்கு வரலையா?”

ஒளிவுமறைவற்றுப் பேசுபவர்களைக் காணுதல் அபூர்வம். ஒளிவு மறைவற்ற பேச்சுக் களைத் தாங்குகிற இதயம் அதைவிட அபூர்வம். பச்சையம்மாள் பதிலில் நான் சற்று கசங்கிப் போனேன். சம்பிரதாயப் பணிவு, மரியாதைகளைப் பச்சையம்மாள் உரையாடலில் கடைப்பிடிப்பது இல்லை. முன்னால் இருப்பவரின் மூக்கு உடைந்து கீழே சிதறுவதையும் அவர் சிரத்தை எடுத்துப் பார்ப்பது இல்லை.

ஆசிரியைகள் அடிக்கடி வீட்டை நினைவு கூர்வார்கள். ‘எங்க சார் சொன்னார்!’ - ‘எங்க சார் பாத்துக்கிடுவார்’ என்று பேச்சினிடையே சார் வந்து போவார்.

பச்சையம்மாள் பேச்சில் வீட்டுப் பெரு மிதங்கள் இடம்பெறவே இல்லை.

‘ரொம்ப முற்போக்கா இருக்கீங்களே! வீட்டில உங்க சாருடைய ஆதரவு எவ்வளவு?’ என்று ஒருமுறை கேட்டேன். ‘அவரு போக்கு வேற! என் போக்கு வேற!’ என்று சுருக்கமாய்ப் பதில் சொன்னார் பச்சையம்மாள்.

போகப் போக எங்கள் கல்லூரியின் புதிய ஆச்சர்யமாக ஆனார் பச்சையம்மாள்.

ஒரு மழை நாளில், ஆசிரியைகள் மாணவி கள் தங்கி இருந்த ஓய்வு அறையில் மழைநீர் ஒழுகி அங்கங்கே தண்ணீர் தேங்கிக் கிடந்தது. பச்சை யம்மாள் சேலையைத் தூக்கிச் செருகிக் கொண்டு விளக்குமாறு எடுத்துத் தானே தண்ணீரைத் தள்ளி முடித்தார். உதவிக்கு வந்த மாணவிகளை ‘ச்சூ! சும்மா இரு! இதச் செய்ய நாலு பேரா?’ என்று மறுத்து ஒதுக்கினார். தற்செயலாக இதைப் பார்த்த கல்லூரி நிர்வாகி ஒவ்வொருவரிடமும் சொல்லிச் சொல்லிப் பூரித்தார். ‘மாணவிகளுக்கு மத்தியில கௌரவம் பாக்காம துடைப்பம் எடுக் கணும்னா. . . . . . ’ என்பது அவர் வியப்பு.

படிப்பில் பின்தங்கிய மாணவர்களுக்குக் கல்லூரி முடிந்ததும் மாலையில் நேரம் ஒதுக்கி ‘ஸ்பெஷல் கிளாஸ்’ எடுக்க வேண்டும் என்ற யோசனையைக் கல்லூரி முதல்வர் முன் வைத்ததும் முதல் ஆளாகக் கை தூக்கியவர் பச்சையம்மாள். முதல்வருக்குப் பெருமிதம் பச்சையம்மாளை எழச்சொல்லி எல்லோரையும் கைதட்ட வைத்தார் முதல்வர்.

கல்லூரி விளையாட்டு விழாவுக்குப் பச்சை யம்மாள் சுடிதாரில் வந்த போதும் அந்தக் கிராமப்புறக் கல்லூரியின் விழிகள் விரிந்தன. அந்த விளையாட்டு விழாவின் பேச்சாக அது மாறி விட்டது. பெண்ணின் உடை மீதான ஆணின் கவனம் - ஆணின் அதிகாரம் இவற்றையெல்லாம் தாண்டி நடந்து வந்த முதல் ஆசிரியை அவர் - எங்கள் கல்லூரியைப் பொறுத்தமட்டில்!

சுடிதார் போடுவது அவ்வளவு பெரிய விசயமா என்று தோன்றும் - நீங்கள் சென்னைப் பக்கத்தவராக இருந்தால். 1980களில் தென் மாவட்டங்களில் சில இருபாலர் கல்லூரிகளில் சுடிதார் விடுதலையின் அடையாளமாக இருந்தது உங்களுக்குத் தெரிந்திருக்க நியாயமில்லை.

பாவாடை தாவணிகளில்தான் மாணவிகள் வருவார்கள். சுடிதாருக்கு அனுமதியில்லை. சைக்கிள் செயினில் பாவாடை தாவணி சிக்கி அவர்கள் பட்ட கஷ்டங்களைச் சொல்ல முடியாது. எங்கள் கல்லூரி இருபாலர் கல்லூரி ஆன சில ஆண்டுகள் கழித்து, மாணவிகளைச் சுடிதார் போட அனுமதித்தால் என்ன என்ற விவாதம் ஆசிரியர் கூட்டங்களில் நடந்தது. ‘சில பிள்ளைக, மேல துப்பட்டா போடாம வருவாளுக சார்! ஒங்களுக்கு என்ன தெரியும்?’ என்று ஓர் ஆசிரியை சாமி வந்து ஆடியது இன்னும் என் ஞாபகத்தில் இருக்கிறது.

இருந்தாலும் கடைசியில் மாணவிகளே ஜெயித்தார்கள்.

 ****

1980 பற்றி உங்களுக்குச் சுருக்கமான அறி முகம் தேவை.

1970களின் இறுதியில் கல்லூரியில் இருந்து பியூசி வகுப்பு நீக்கப்பட்டுப் பள்ளியில் அது பிளஸ்டூ ஆனது. பியூசி போனதும் கல்லூரி வகுப்பறைகள் காற்றாட ஆரம்பித்தன. கிராமப்புறக் கல்லூரிகள் சில மூடப்படும் நிலைக்கு வந்தன.

அப்போது நிர்வாகங்கள் ஒரு புத்திசாலித் தனமான முடிவை எடுத்தன. ஆண்கள் கல்லூரியில், பி. ஏ. , பி. எஸ். சி, பி. காம் வகுப்புகளில் மாணவி களையும் சேர்ப்பது என்பதுதான் அந்த முடிவு. தயக்கம், பயம் இல்லாமல் இது நடந்துவிட வில்லை. ஆனால் வெகு சீக்கரமே பெரும்பாலான ஆண்கள் கல்லூரிகள் இருபாலர் கல்லூரிகள் ஆயின.

எண்பதுகளின் மத்தியில் எங்கள் கல்லூரி இருபாலர் கல்லூரி ஆனது. கல்லூரி காட்டுக்குள் கிடந்தது. ஆரம்பத்தில் ஒவ்வொரு வகுப்பிலும் ஓரிரு மாணவிகளே சேர்ந்தனர்.

முதல்வர் எங்களுக்குப் ‘போலீஸ் பயிற்சி’ கொடுத்தார். “ஒருத்தர் வராண்டாவுல நில்லுங்க. ஒருத்தர் சைக்கிள் ஸ்டாண்ட் பக்கம் போங்க. கும்பலா பசங்க அந்தப் பக்கம் வர்றானுக. ஒராள் அதை வாட்ச் பண்ணுங்க”.

கல்லூரி இருபாலர் கல்லூரி ஆகி 20 ஆண்டு கள் கழித்துத்தான் நான் பணிஓய்வு பெற்றேன். அத்துமீறி நடந்த ஒரு மாணவனைப் பற்றிய குற்றச் சாட்டும் எங்கள் கவனத்துக்கு வந்ததில்லை.

வருந்தத்தக்க விதத்தில் சில ஆசிரியர்களைப் பற்றிய குற்றச்சாட்டுகள் காதுக்கு வந்தன - குறிப் பாகச் சோதனைக் கூடங்களில் நடந்த அத்து மீறல்கள்!

ஆசிரியைகள் ஒரு சிலர்தான் இருந்தார்கள். ஆனாலும், மாணவிகளின் பாதுகாப்புக்கு அரணாக இருந்தார்கள்.

‘தனியாக எங்கும் போகக்கூடாது. இருவர் மூவராகத்தான் போக வேண்டும்’ என்று மாணவி களுக்கு அறிவுறுத்தி இருந்தார்கள்.

‘இல்ல மேடம்! ழ. டீ. னு. கூப்பிட விட்ருக்கார்”.

“கச்சோடியோ, கிச்சோடியோ தனியாகப் போகக்கூடாது. கலாவைக் கூடக் கூப்பிட்டுப் போ!”

தொன்னூறுகளுக்குப் பிறகுதான் பச்சை யம்மாள் எங்கள் கல்லூரிக்கு வந்தார். கல்லூரியில் மாணவிகள் ஏறக்குறைய பாதிக்குமேல் நிரம்பி யிருந்த காலம் இது. கம்ப்யூட்டர் சயன்ஸ் போன்ற பளபளப்பான படிப்புகளும் கல்லூரிக்கு வந்து விட்டன. போலீஸ் உத்தியோகத்தை நாங்கள் விட்டும் நாளாச்சு!

மாணவிகளிடம் பச்சையம்மாள் நெருங்கி உறவாடினார். மாணவர்களிடமும் விலகி நிற்கா மல் சகஜமாகப் பேசிப் பழகினார். வகுப்பு முடிந்ததும் ஒரு மாணவர் கூட்டம் அவரைச் சுற்றி வராண்டாவில் பேசியபடி கூட வருவதைப் பல சந்தர்ப்பங்களில் பார்த்தேன்.

ஒரு நாள் சோர்ந்த முகத்தோடு பச்சை யம்மாள் துறைக்கு வந்தார். காரணம் கேட்டேன். முதலில் உரையாடலைத் தவிர்க்கப் பார்த்தார். பிறகு பொருமினார்.

“ஏன் சார்! பையன்களோட வராண்டாவில் பேசிட்டுப் போறது தப்பா? பையன்க என்னைத் தொத்திக்கிட்டே திரியுறானுகளாம்! இதப் பட்டிக் காட்டான் எவனும் சொல்லல! கூட வேல பாக்குற ஆசிரியர்களே பேசுறாங்க! சே! கேவலம்! ரெண்டு பிள்ளைகளுக்குத் தாய் சார் நான்”.

பச்சையம்மாளுக்குக் கண்ணீர் கசிந்து விட்டது. இந்தக் கல்விக் கூடங்கள் யாரைத்தான் கண்ணீர் சிந்த வைக்கவில்லை? இந்த வளாகங் களில் அறிவு உருவாகிறது என்பதெல்லாம் உண்மைதானா?

“தற்செயலாய் - போகிற போக்கில் மனக் கட்டுப்பாடு இல்லாமல் சிலர் கொட்டும் அபிப் பிராயங்களுக்குப் பெரிய அழுத்தம் கொடுத்து மனச்சோர்வடைய வேண்டாம்” என்று அவரைத் தேற்றினேன்.

“கல்லூரியில் உங்களுக்கு இருக்கும் மரியாதை தனி” என்றும் உணர்த்தினேன்.

பச்சையம்மாள் சமாதானம் ஆனார். புறப் பட்டு நாலு எட்டு எடுத்து வைத்தவர் சட்டென்று திரும்பினார்.

“இதைப் போய்ப் பொறணி பேசுறாங்களே! கம்ப்யூட்டர் சயின்ஸ் டிபார்ட்மெண்ட்ல என்ன நடக்குது தெரியுமா? போய்ப் பாருங்க! ஆணும் பொண்ணும் கூத்தடிக்கிறாங்க சார்! அது யார் கண்ணுக்கும் படலை போல!” என்று உறுமினார். பிறகு போய்விட்டார்.

நான் அதிர்ச்சியடைந்தேன். பச்சையம்மாள் சொன்னது எனக்குப் புரிந்தது. பி. ஈ. படித்த இளைஞர்களும் யுவதிகளும் கணினித் துறைக்கு ஆசிரியர்களாக வந்திருக்கிறார்கள். புதிய காலத்தின் துளிர்கள். சிரிப்பார்கள்; அரட்டை அடிப்பார்கள்; இயல்பாகத் தொட்டுப் பேசிக் கொள்வார்கள். பச்சையம்மாளுக்கு இது உறுத்துகிறது.

பச்சையம்மாளை விமர்சித்தவர்கள் கிணற்றுத் தவளைகள் என்பதில் சந்தேகமில்லை. ஆனால், கோபங்கொண்ட பச்சையம்மாள் இன் னொரு கிணற்றுக்குள் இருந்தல்லவா பேசுகிறார்?

எவ்வளவு பெரிய ஆளுமை இந்தப் பச்சையம்மாள்! பறக்கிற பறவை மாதிரி ஒரு சுதந்திர மான ஆளுமை! ஆனால், பறவைக்குள்ளும் ஒரு கிணறு இருக்கிறதே!

அவருடைய கிணறு பற்றி யோசித்தபோது எனக்குள் உறைத்தது.

என்னுடைய கிணறு எது?

ஒரு கிணறா? பல கிணறுகளா?

முதலில் என் கிணறுகளை நான் கண்டுபிடிக்க வேண்டும்.

 ஆசிரியர் குறிப்பு :

பல கல்லூரிகளின் - பல ஆசிரியர்களின் அனுபவத் தொகுப்பு இது. ஒரு கல்லூரி அனுபவ மாகத் தரப்பட்டிருப்பது புரிதலுக்காக. . .

Pin It