1992ம் ஆண்டு விடுதலைப் புலிகள் இயக்கம் முதன் முதலில் தடை செய்யப்பட்டது. இத்தடை சட்ட விரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டத்தின் கீழ் செய்யப்படுகிறது. ஒருமுறை விதிக்கப்பட்ட தடை இரண்டு ஆண்டுகளுக்கு அமலில் இருக்கும்.

சட்ட விரோத நடவடிக்கைகள் என்றால் என்ன என்று, இந்தச் சட்டத்தில் கூறப்பட்டுள்ளது. இந்தியாவின் இறையாண்மைக்கும், இந்திய பிரதேச ஒற்றுமைக்கும் ஊறு விளைவிக்கும் நடவடிக்கைகள் சட்ட விரோத நடவடிக்கைகள் என்று கூறப்படுகிறது.

புலிகள் இயக்கம், எந்த காலத்திலும், இந்தியாவின் எந்தப் பகுதிக்கும் சொந்தம் கொண்டாடியதில்லை. ஈழம் என்று அவர்கள் குறிப்பிட்டது இலங்கையில் உள்ள பகுதியை மட்டும்தான். இச் சூழலில், இந்த தடைச் சட்டம் புலிகள் இயக்கத்துக்கு பொருந்தவே பொருந்தாது.

1992ம் ஆண்டு விதிக்கப்பட்ட தடையானது, ஒவ்வொரு இரண்டாண்டுகளுக்கு ஒருமுறை புதுப்பிக்கப்பட்டுக் கொண்டே வருகிறது. இத்தனை ஆண்டுகளாக விதிக்கப்பட்ட தடைக்கும், இந்த ஆண்டு விதிக்கப்பட்டுள்ள தடைக்கும் பெரிய வேறுபாடு இருக்கிறது. கடந்த முறை விதிக்கப்பட்ட தடைகள் செயல்பாட்டில் இருந்தபோது புலிகள் இயக்கம் இலங்கையில் போர் நடத்திக் கொண்டும் போராடிக் கொண்டும் இருந்தது.

கடந்த ஆண்டு மே 2009ல் புலிகள் இயக்கம் மிகப் பெரிய பின்னடைவை சந்தித்த பிறகு, இயக்கம் இல்லை என்று இலங்கை அரசு அறிவித்த பிறகு, பிரபாகரனும், பொட்டு அம்மானும் இறந்து விட்டனர் என்று இலங்கை அரசாங்கம், இலங்கை நீதி மன்றத்தில் தாக்கல் செய்த ஆவணத்தை அப்படியே ஏற்றுக் கொண்டு, இவர்கள் இருவர் பெயரையும், ராஜீவ் கொலை வழக்கின் குற்றவாளிப் பட்டியலில் இருந்து நீக்கிய இந்திய அரசாங்கம், இந்த ஆண்டும் புலிகள் இயக்கத்தைத் தடை செய்து அறிவிக்கை வெளியிட்டிருப்பது வேடிக்கையானது.

ஒரு அமைப்பின் மீது தடை விதிக்கப்பட்டது சரியா இல்லையா என்பதை முடிவு செய்ய, தடை செய்யப்பட்ட அமைப்பைச் சேர்ந்தவர்களுக்கு தீர்ப்பாயம் அமைத்து, விசாரணை நடத்தி ஒரு வாய்ப்பு வழங்க வேண்டும் என்று சட்ட விரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டத்தில் உள்ளபடி, ஒவ்வொரு முறையும், தீர்ப்பாயம் கூடுகிறது. இத்தனை ஆண்டுகளாக கூட்டப்படும் தீர்ப்பாயம் ஒரு வெற்றுச் சடங்காகவே நடந்து வருகிறது. இந்தத் தீர்ப்பாயத்தில், இத்தனை ஆண்டுகளாக நடந்த விசாரணையில் புலிகள் இயக்கத்தைச் சேர்ந்தவர்களோ, ஆதரவாளர் களோ, அரசியல் கட்சிகளோ பங்கேற்கவில்லை. மத்திய அரசும், மாநில அரசும், புலிகள் இயக்கத்தைச் சேர்ந்தவர்கள் என்று குற்றம் சாட்டி, கைது செய்யப் பட்டவர்களை பற்றிய விபரங்களை தீர்ப்பாயத்தில் வழங்குவார்கள். இதை ஏற்று நீதிமன்றம் மத்திய அரசின் அறிக்கையை உறுதி செய்யும்.

இத்தனை ஆண்டுகளாக செம்மையாகநடந்து வந்த இந்த நாடகம், இந்த ஆண்டு பல திடீர் திருப்பங்களைச் சந்தித்தது. முதலில் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, புதுதில்லியில் நடந்த தீர்ப்பாயத்தில் தன்னையும் சேர்த்துக் கொள்ள வேண்டும் என்று மனுத்தாக்கல் செய்திருக்கிறார்.

அக்டோபர் 6 அன்று சென்னையில் நடந்த தீர்ப்பாயக் கூட்டத்தில் வைகோவின் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிடுகிறார் நீதிபதி விக்ரம்ஜித் சென்.

சென்னையில் அக்டோபர் 6 அன்று நடந்த விசாரணையின் போது, தமிழர் தேசியக் கட்சித் தலைவர் நெடுமாறன் சார்பிலும், தமிழக மக்கள் உரிமைக் கழகம் சார்பிலும், தங்களையும் விசாரணையில் சேர்த்துக் கொள்ள வேண்டுமென மனுதாக்கல் ஒன்று செய்யப்பட்டது. இந்த இரண்டு மனுக்களும் தள்ளுபடி செய்யப்பட்டன.

இந்த மூன்று மனுக்களையும் தள்ளுபடி செய்ய நீதிபதி கூறிய காரணம், சட்ட விரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டத்தின்படி, தடை செய்யப்பட்ட இயக்கத்தின் உறுப்பினர்களோ, நிர்வாகிகளோ மட்டுமே விசாரணையில் பங்கு கொள்ள முடியும் என்பதுதான்.

மத்திய அரசு புலிகள் இயக்கத்தை தடை செய்து வெளியிட்ட அறிக்கையிலேயே, புலிகள் இயக்கம் பெரும்பாலும் அழிந்து விட்டது என்று குறிப்பிடப்பட்டுள்ளது. பெரும்பாலும் அழிந்து விட்ட ஒரு இயக்கத்தின் உறுப்பினர்களோ, அல்லது நிர்வாகிகளோ எப்படி தீர்ப்பாயத்தின் முன் வர முடியும்? மேலும், ஒரு இயக்கம் தடை செய்யப்பட்டால், நான் அந்த இயக்கத்தின் உறுப்பினர் என்று ஒருவர் சொல்கிறார் என்றால், உடனடியாக அந்த நபர் கைது செய்யப்பட மாட்டாரா? புலிகள் இயக்கத்தைச் சேர்ந்தவன் என்று ஒருவர் தீர்ப்பாயத்தின் முன்பு வந்தால், அந்த நபரை கியூ பிரிவு காவல்துறை சும்மாவா விடும்?

இப்படிப்பட்ட ஒரு நெருக்கடியான, சிக்கலான சூழலில், தடை செய்யப்பட்ட இயக்கத்தின் ஆதரவாளர்களை அந்த இயக்கத்தின் சார்பாக வாதாட அனுமதிப்பதுதானே முறை? அப்படி அனுமதிக்காவிட்டால் தீர்ப்பாயமும், அது நடத்தும் விசாரணையும் கண் துடைப்புதானே?

ஆனால், தீர்ப்பாயம் தந்திரமாக ஒரு நடவடிக் கையை கையாண்டது. அது என்னவென்றால், விசார ணையில் பங்கு பெற அனுமதி அளிக்க மறுத்தாலும், வைகோவும், தமிழக மக்கள் உரிமைக் கழகமும், நெடுமாறனும், சாட்சி களை குறுக்கு விசாரணை செய்யலாமாம். அந்த குறுக்கு விசாரணைக்கான கேள்விகளை சாட்சிகளி டம் நேரடியாக கேட்கக் கூடாது. கேள்விகளை நீதிபதியிடம் கேட்க வேண் டும். நீதிபதி, சாட்சிகளிடம் அந்தக் கேள்விகளைக் கேட்பார். இந்த நட வடிக்கை எதற்காக என் றால், விசாரணை ஓரள வுக்கு நியாயமாக நடந்தது போல் ஒரு தோற்றத்தை உண்டு பண்ணுவதற்கு.

தீர்ப்பாயத்தின் முன்பு, மத்திய அரசாலும், மாநில அரசாலும் சமர்ப்பிக்கப்பட்ட 3000 பக்கங்களுக்கு மேலான ஆவணங்களை பார்வையிடாமல், எப்படி வலுவான முறையில் குறுக்கு விசாரணை செய்ய முடியும்? ஆனாலும் இந்த நாடகம் தொடர்ந்து நடந்தே வந்தது.

நாடகத்தின் அடுத்த கட்ட திருப்பமாக, சுவிட்சர் லாந்தில் உள்ள சிவநேசன் என்ற புலிகள் இயக்கத்தின் முன்னாள் உறுப்பினர் தன்னையும் இவ்விசாரணை யில் சேர்த்துக் கொள்ள வேண்டும் என்று மனுத்தாக்கல் செய்தார். அந்த மனுவில், புலிகள் இயக்கத்தில் அவர் செய லாற்றியதற்கான ஆதாரங்களையும், இணைத் திருந்தார். இந்த மனுவை பரிசீலித்த தீர்ப்பாயம், புலிகள் இயக்கத்தின் தற்போதைய உறுப்பினர்கள் மட்டுமே விசாரணையில் பங்கு கொள்ள முடியும், முன்னாள் உறுப்பினர்கள் பங்கு கொள்ள முடியாது என்று ஒரு தீர்ப்பு வழங்கியது.

இந்தத் தீர்ப்பும், இதற்கு முன் தீர்ப்பாயம் வழங்கிய தீர்ப்புகளும், இந்த விசாரணை எப்படி போலியானது என்பதையும், ஒரு சடங்கு போல் விசாரணை நடை பெறுகிறது என்பதையும் தெளிவாக உணர்த்துகிறது.

ஆனாலும், இது சடங்காக நடந்தாலும், இந்த விசாரணையில் பங்கேற்று, இறுதி வரைபோராடுவது, தேவைப்பட்டால், இத்தீர்ப்புகளை எதிர்த்து, நீதிமன்றம் செல்வது என்றும் தமிழக மக்கள் உரிமைக் கழகம் முடிவு செய்துள்ளது. ஆவணங்களையும், சாட்சிகளின் வாக்குமூலங் களையும் யாருக்கும் வழங்காமல், ரகசியமான முறை யில் நடக்கும் இந்த விசாரணை கடந்த முறைகளைப் போல் இல்லாமல், பெருவாரியான வழக்கறிஞர்களும், தமிழ் உணர்வாளர் களும் பங்கெடுத்ததால், பரபரப்பாகவே நடந்தது.

தமிழர்களின் உரிமைக்கான ஒரு இயக்கத்தின் மீதான முடிவை எடுக்கும் பொறுப்பு தமிழ் சுத்தமாக தெரியாத, ஒரு இந்தி பேசும் நீதிபதியிடமும், இந்தி பேசும் மத்திய அரசு வழக்கறிஞரிடமும் ஒப்படைக் கப்பட்டிருப்பது, எவ்வளவு பெரிய அநீதி பார்த்தீர்களா?

உதகையில் நடந்த விசாரணையின்போது, சாட்சியம் அளித்த, மத்திய உள்துறையின் அதிகாரி, புலிகள் இயக்கத்தை தடை செய்ய வேண்டும் என்ற முடிவை எப்படி எடுத்தீர்கள் என்ற கேள்விக்கு, எங்களுக்கு அத்தனை ஆவணங்களையும் அறிக்கை களையும் அளித்தது, மாநில அரசுதான் என்று கூறினார். ஒருபுறம், தமிழர்களின் நலனை என்னை விட்டால் வேறு யாரும் பாதுகாக்க முடியாது என்று கூறிவிட்டு, மற்றொரு புறம், மத்திய அரசுடன் கை கோர்த்துக் கொண்டு, தமிழர் நலனை அழிக்கும் வேலையில் ஈடுபடும், தமிழக முதல்வர்தான், பாலுக்கும் காவல், பூனைக்கும் தோழன் என்ற பழமொழிக்குச் சரியான உதாரணம்.

புலிகள் இயக்கத்தால், இந்தியாவின் எந்தப் பகுதிக்கு ஆபத்து என்பதையோ, இந்தியாவின் இறையாண்மைக்கு ஊறு விளைவிக்கும் விதமாக புலிகள் இயக்கம் செயல்பட்டதற்கான ஆதாரங்களோ, துளி கூட சமர்ப்பிக்கப்படாத நிலையில், இந்நாடகத் தின் இறுதி காட்சியாக, மத்திய அரசு புலிகள் இயக்கத்தின் மீது விதித்த இந்தத் தடை சரியே என்று தான் தீர்ப்பு கூறப் போகிறது. அதுதான் நாடகத்தின் இறுதிக் காட்சியாக அமையும் என்று மத்திய அரசும், மாநில அரசும் நினைத்துக் கொண்டு உள்ளன.

ஆனால், இது இறுதிக் காட்சி அல்ல, புலிகள் இயக்கத்தின் மீதான தடையை நீக்குவதற்குத் தேவையான முயற்சிகளை தமிழக மக்கள் உரிமைக் கழகம் தொடர்ந்து எடுக்கத்தான் போகிறது.