புத்தகத்தில் உலகத்தைப் படிப்போம்

உலகத்தையே புத்தகமாகப் படிப்போம்

- கலைஞர்

அறிஞர் அண்ணாவின் பிறந்தநாளான செப்டம்பர் 15 இல், தமிழக முதல்வர் கலைஞரால், சென்னை, கோட்டூர்புரத்தில் திறந்து வைக்கப் பட்ட அண்ணா நூற்றாண்டு நூலகம், உலகத்தரத்தில் உயர்ந்து நிற்கிறது. நூல்களை நேசித்த அண்ணாவின் பெயரில், நூல்களைக் காதலிக்கும் கலைஞர் எழுப்பிய அறிவுச்சோலை இந்த நூலகம் என்றால் அது மிகையாகாது.

உள்ளும் புறமும் உழைப்பின் மதிப்பு தெரிகிறது. எட்டு ஏக்கரில் (3.75 லட்சம் சதுர அடி) எட்டு மாடிகளாக எழுந்து நிற்கும் நூலகத்தின் நுழைவாயிலில் புத்தகமும் கையுமாக அறிஞர் அண்ணா நம்மை வரவேற்கிறார். முழுவதும் குளிர்சாதன வசதி செய்யப்பட்ட இந்நூலகம் அறிவுச் சொத்தாக நமக்குக் கிடைத்திருக்கிறது.

தரைத்தளத்தில் மாற்றுத்திறனாளிகளில் பார்வைக் குறைபாடுடையவர்களுக்கான பகுதி நவீன வசதிகளுடன் உருவாக்கப்பட்டுள்ளது. அவர்களுக்கான பிரெய்லி எழுத்து முறையில் ஏராளமான நூல்கள் இருக்கின்றன. கல்வி தொடர்பான நூல்கள் மட்டுமின்றி, பொதுவான நூல்களையும், தேவைப்பட்டால் பிரெய்லி முறையிலேயே படி எடுத்துக்கொள்ளவும் முடியும். அதற்கான அதிநவீனக் கருவி அவர்களின் பயன்பாட்டுக்காக வைக்கப்பட்டுள்ளது. இந்த அரசு மாற்றுத்திறனாளிகள் மீது கொண்டுள்ள அக்கறைக்கு இதுவும் ஒரு சான்று.

இதே தளத்தில் பள்ளி, கல்லூரி மாணவர்களுக்காகப் பாடப்புத்தகப் பிரிவு உள்ளது. இதில் அனைத்து மாநிலங்களின் பள்ளிப் பாடத்திட்டங்களும், பாடப்புத்த கங்களும் ஒப்பீட்டுக்காகவும், புதியவைகளை எடுத்துக்கொள்ளவும் வைக்கப்பட்டுள்ளன. அமெரிக்கா, இங்கிலாந்து, ஜெர்மனி, சிங்கப்பூர், பிரான்ஸ் உள்ளிட்ட உலக நாடுகளின் கல்லூரிப் பாடப்புத்தகங்களும் இந்தப் பகுதியில் இடம் பெற்றுள்ளன. பாடப் புத்தகங்களில் இடம்பெற்றுள்ள செய்திகளை விடக் கூடுதலான செய்திகளைத் தெரிந்து கொள்ள இது மிகவும் உதவிகரமாக இருக்கும். படிப்பில் ஆர்வம் உடைய, ஆனால் பொருளாதார வசதியில்லாத மாணவர்களுக் கான கொடை இந்தப் பிரிவு.

மாற்றுத்திறனாளிகளுக்கான பகுதிக்கு அருகிலேயே, மற்றொரு பெரிய அறை இருக்கிறது. வசதியான இருக்கைகள், விளக்குகள் பொருத்தப் பட்ட மேசைகள், மடிக்கணினி பயன்பாட்டுக்கான மின் இணைப்புகள் போன்ற சிறப்பான வசதிகள் அந்த அறையில் செய்யப்பட்டுள்ளன. இது சொந்தப் பயன்பாட்டுக்கான அறை. நூலகத்திலுள்ள நூல்களை மட்டுமின்றி, நம்முடைய வீட்டிலிருந்தும் நூல்களைக் கொண்டு சென்று அந்த அறையில் அமர்ந்து படிக்கலாம். படிப்பதற்கான அமைதியான சூழலும், வசதியும் இன்றித் துன்பப்படுகின்ற பிள்ளைகளுக்கான சிறப்பு அறையாக இது உருவாக்கப்பட்டுள்ளது. குளிரூட்டப்பட்ட அறையில் அமர்ந்து அமைதியான சூழலில் பள்ளிக் குழந்தைகள் வரை ஆராய்ச்சியாளர்கள் வரை படித்துப் பயன்பெற முடியும்.

இந்த நூலகத்தை இன்னும் மெருகூட்டிக் கொண்டிருக்கும் நூலக இணை இயக்குநர் திரு நரேஷ், “வெறும் பத்துமணி நேரப் பயன்பாட்டுக் கான நூலகமாக இல்லாமல், இரவு பகல் எந்நேரமும் அறிவுத் தேடலுக்கான மையமாக இதனை மேம்படுத்த வேண்டும் என்று முதல்வர் சிந்தித்துக் கொண்டிருக்கிறார் “ எனச் சொன்னபோது, நூலகத்திற்கான இலக்கணமும் அதுதான் என்றே தோன்றியது.

நூலகம் என்றால் வாசிப்புக்கு மட்டும்தானா? வாசித்ததை, உணர்ந்ததை உரியவர்களோடு பகிர்ந்து கொள்ள வேண்டாமா? அதற்கும் இங்கே இடமுண்டு. 30 பேர் அமர்ந்து விவாதக் கூட்டங் களை நடத்தக் கூடிய சிறு அரங்கம் முதல், 1200 பேர் அமரக்கூடிய பெரிய அரங்கம் வரை குறைந்த வாடகையில் பயன்படுத்திக்கொள்ளலாம்.

முதல் தளம் குழந்தைகளுக்கானது. குழந்தை களின் வண்ணமயமான உலகம் அது. நடுவில் செயற்கையான மரம், அதன் கீழ் பச்சைப்புல் வெளிபோன்ற தரைவிரிப்பு, வட்ட மேசைகள், குட்டி குட்டி இருக்கைகளோடு ஆயிரக்கணக்கான நூல்களும் அவர்களுக்காகக் காத்துக்கொண்டிருக் கின்றன. பெரியவர்கள் மட்டும்தான் நடிக்கவும், விவாதிக்கவும் வேண்டுமா என்ன? இவர்களுக்கும் இங்கே குட்டி மேடை உண்டு. கற்றதைச் செயல்படுத்திப் பார்க்க, நூலில் படித்த சூழலை நடித்துக்காட்ட இந்த மேடையைக் குழந்தைகள் பயன்படுத்திக் கொள்ளலாம். திருக்குறள் கதைகள், நீதிக்கதைகள், அறிவியல் செய்திகளை அனிமேசன் படங்கள் வாயிலாக அறிந்துகொள்ளக் கணினி வசதியும் உண்டு. கணினி என்பது ஒருசிலருக்கு மட்டுமே என்றிருந்த நிலை இன்று மாறிவிட்டது. மாநகராட்சிப் பள்ளிச் சீருடை அணிந்த பிள்ளைகள் கணினியில் அமர்ந்து இங்கே விளையாடிக் கொண்டிருக் கின்றனர்.

பருவ இதழ்களுக்கான பிரிவும் தனியே இருக்கிறது.தமிழில் வெளிவருகின்ற பருவ இதழ்கள் மட்டுமின்றி உலகிலுள்ள அத்தனை பருவ இதழ் களையும் அங்கே படிக்க முடியும். காலையில் இங்கு வந்தால், சுமார் 2000 செய்தித் தாள்களையும், 20,000 பத்திரிகைகளையும் ஆன் - லைன் எனப்படுகின்ற இணைய வழியில் படிக்கின்ற வசதியும் செய்யப்பட உள்ளது என்றார் இணை இயக்குநர். நமது எம்.ஜி.ஆர் உள்பட எல்லாவிதமான பருவ இதழ்களும் இங்கு வைக்கப்பட்டுள்ளன.

இரண்டாவது தளத்தில் அன்னைத் தமிழின் அறிவுத் திரட்டுகள் நம்மை இருகரம் நீட்டி வரவேற்கின்றன.  “ஒரு லட்சம் நூல்கள் தமிழில் உள்ளன. இன்னும் வரவேண்டியவை ஏராளமாக இருக்கின்றன. கால வரிசைப்படி சங்க நூல்களைத் தொகுத்திருக்கிறோம். காலத்தால் மிகவும் பழைய நூல்கள் பயன்படுத்தவே முடியாத நிலையில் இருப்பவைகளைக் கொண்டுவந்தால் அவற்றைப் படி எடுப்பதற்கான நவீனக் கருவியினை வாங்கும் திட்டமும் இருக்கிறது. அதனால் நம்முடைய பழைய எழுத்துருக்களை எதிர்காலத் தலைமுறையினர் அறிந்து கொள்ளவே இந்த ஏற்பாடுகள் செய்யப்பட உள்ளன” என்றார் இந்தப் பணிகளுக்கான சிறப்பு நூலக அலுவலர்களுள் ஒருவரான முனைவர் ஜெகதீசன்.

 மூலையிலோர் சிறுநூலும் புதுநூலாயின்

முடிதனிலே சுமந்துவந்து தருதல்வேண்டும்

என்று பாவேந்தர் சொன்னதை மெய்ப் பிக்கிறது, அரிய நூல்களுக்கான தனிப்பகுதி. மறுபடியும் பதிப்பிக்கப்படாத அரிய தமிழ் இலக்கிய இலக்கண நூல்கள் படி எடுத்து பாதுகாக்கப் பட்டுள்ளன. 1768 இல் ராமானுசக் கவிராயர் எழுதிய நன்னூல் விருத்தியுரையும் இருக்கிறது. அவற்றின் மூல நூல்களையும் அங்கே பார்க்க முடிகிறது. முதல்வர், துணை முதல்வர், சென்னைப் பல்கலைக்கழக மாணவர்கள் சேகரித்துக் கொடுத்த ஆயிரக்கணக்கான நூல்களும் அணிவகுக்கின்றன.

  சுமைசுமையாய்ச் சேகரித்துப் பல்க லைசேர்

துறைதுறையாய்ப் பிரித்தடுக்கி வைத்தல் வேண்டும்

என்ற புரட்சிக் கவிஞர் பாரதிதாசனின் கனவினை இந்நூலகம் நிறைவேற்றியிருக்கிறது. மொழி, மருத்துவம், பொறியியல், தத்துவம், வரலாறு, உளவியல், சமூகவியல் உள்ளிட்ட அத்துனை துறைகளுக்கும் உரிய நூல்கள் அந்தத் துறை வாரியாகப் பிரித்து அடுக்கி வைக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு துறை நூல்கள் இருக்கின்ற பகுதிக்கு அருகிலேயே அதற்கான கலைக்களஞ்சியங்கள் செய்திகளைத் தாங்கி நிற்கின்றன. 370 பிரிவுகளின் கீழ் கலைக்களஞ்சியங்கள் உலகின் பல இடங்களில் இருந்தும் தருவிக்கப் பட்டுள்ளன. எந்தத்துறையைச் சேர்ந்த ஆராய்ச்சி மாணவர்களானாலும், இந்நூலகத் திற்குள் வந்துவிட்டு இந்தப் புத்தகம் கிடைக் கவில்லை என்று சொல்ல முடியாது. சுமார் 68 ஆயிரம் ரூபாய் வரை மதிப்புள்ள நூல்கள்கூட வாங்கி வைக்கப்பட்டுள்ளன. எதிர்காலத்தில் ஆராய்ச்சி மாணவர்கள் இங்கேயே தங்கிப் படிப்பதற்கான வசதிகளும் செய்யப்பட உள்ளன.

 வெளிநாடுகளில் உள்ளதைப் போன்று, அலுவலர்கள் உதவியின்றி, நூல்களைப் பெறவும், திருப்பிச் செலுத்தவுமான நவீன வசதிகளும் அமைக்கப்பட்டுள்ளன. எடுத்துச் செல்லும் நூல்களைப் பதிவு செய்யவும், பதிவு செய்யப்படாமல் நூல்கள் கொண்டு செல்லப்படும் போது எச்சரிக்கை செய்யவும் அதிநவீன தொழில் நுட்பத்துடன் கூடிய, RFID ( Radio Frequency Identification Device ) என்ற கருவி பொருத்தப் பட்டுள்ளது. புத்தகங்கள் இடம் மாறினால், உடனே அது கட்டுப்பாட்டு அறைக்குத் தெரிவிக்கப்பட்டு உடனே அதற்குரிய இடத்தில் வைக்கப்படும் வசதியும் உண்டு. எனவே நூல்களைத் தேடுவதில் காலம் விரயமாவது முழுமையாகத் தடுக்கப்படுகிறது. படிப்பதற்கான நேரம் அதிகரிக்கிறது. நடக்கின்ற ஒலி கூட படிப்பவர்களுக்குத் இடையூறு ஏற்படுத்தக்கூடாது என்று, சிறப்புத் தரைவிரிப்புகள் விரிக்கப்பட்டுள்ளன.

உலக டிஜிட்டல் நூலகத்தோடு கூட்டுச் சேர்ந்துள்ளது அண்ணா நூற்றாண்டு நூலகம். இதன் மூலம் உலகின் எந்த மூலையில் புதிய நூல்கள் வெளிவந்தாலும் அவை உடனே நமது நூலகத்திற்கு வந்துவிடும். 12 இலட்சம் நூல்கள் கொள்ளளவு கொண்ட இந்த அறிவுச் சோலையைப் பயன் படுத்திக் கொள்ள மக்கள் தயாராக வேண்டும். இதைப் பற்றிய செய்திகளை மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டிய கடமை சமூக அக்கறை உள்ள பத்திரிகைகளுக்கும், அமைப்புகளுக்கும் இருக்கின் றது. நூலகத்தைப் பார்வையிட்டு வெளியில் வரும்போது, விலைமதிப்பில்லாத சொத்துக்குச் சொந்தக்காரர்கள் நாம் என்கிற பெருமிதம் எழுகிறது.

Pin It