அக்.2 போராட்டம்: லண்டன் பி.பி.சி.யில் விரிவான செய்தி

திருச்சியில் அக்.2 இல் கழகம் நடத்தும் போராட்டம், சர்வதேச அரங்கிலும் எதிரொலித்துள்ளது. லண்டனிலிருந்து வெளிவரும் ‘பி.பி.சி.’ தமிழ் ஓசை இது தொடர்பான விரிவான செய்திகளையும், பேட்டிகளையும் ஒலிபரப்பியது. பல தமிழக கிறிஸ்தவ பாதிரியார்களின் பேட்டிகளையும், பொதுச்செயலாளர் விடுதலை இராசேந்திரன் கருத்தையும், ஒலிபரப்பியதோடு, அதன் இணையதளத்திலும் விரிவாகப் பதிவு செய்துள்ளது. 

தமிழ்நாட்டில் முக்கிய கத்தோலிக்க சபைகளின் அருட்தந்தைகளுக்கு கழக சார்பில் திருச்சியில் கத்தோலிக்க சுடுகாட்டில் நிலைநாட்டப்பட்டுள்ள தீண்டாமைச் சுவரை அகற்றுமாறு, ஆங்கிலத்தில் கடிதங்கள் அனுப்பப்பட்டுள்ளன. கடித விவரம்: 

திருச்சிராப்பள்ளி நகரத்துக்கு பல வரலாற்றுச் சிறப்புகள் உண்டு. சோழ மன்னன் கரிகாலனின் தலைநகரமாக திருச்சிராப்பள்ளி விளங்கியது. அவன்தான் இரண்டாம் நூற்றாண்டில் பெருமைக்குரிய கல்லணையைக் கட்டினான். பல சமணத் துறவிகள் வாழ்ந்த நகரமும் இதுதான். பழைய பெருமைகள் மட்டுமல்ல, நவீன விஞ்ஞான தொழில்நுட்ப வளர்ச்சிகளும் கொண்டு நிமிர்ந்து நிற்கும் நகரம் திருச்சிராப்பள்ளி. அண்ணா பல்கலைக்கழகம், அய்.அய்.எம். கணினி தொழில்நுட்ப பூங்காக்கள், சர்வதேச தரத்தில் அமைந்து புகழ் பரப்பி வருகின்றன. இத்தகைய சிறப்புகள் அடங்கிய அதே திருச்சிராப் பள்ளியில்தான் மற்றொரு, மனித உரிமைக்கும் மனித மாண்புக்கும் எதிரான அடையாளமும் அடங்கியிருக் கிறது. இதை பெரியார் திராவிடர் கழகம், இப்போது மக்கள் மன்றத்தின் கவனத்துக்குக் கொண்டு வந்திருக்கிறது. ‘வேர்அவுஸ் கல்லறை’ என்று அழைக்கப்படும், கத்தோலிக்கர்களின் கல்லறையில், தீண்டப்படாத மக்களின் பிணங்களை அடக்கம் செய்ய தனி இடம் அமைக்கப்பட்டு, அதனைத் தனியே பிரித்துக் காட்டுவதற்காக குறுக்குச் சுவர் ஒன்றும் எழுப்பப்பட்டுள்ளது. நாம் நாகரிகமுள்ள மனித சமூகத்தில்தான் வாழ்கிறோமா என்ற கேள்வியை, இந்த ‘தீண்டாமைச் சுவர்’ எழுப்பிக் கொண்டிருக்கிறது. 

இந்தக் கல்லறை அமைந்துள்ளதோ, பாலக்கரை என்று அழைக்கப்படும் பகுதியில் மேலப்புதூர் பாலம் அருகே ஆகும். இது திருச்சிராப்பள்ளியின் மய்யமான பகுதி. இந்தக் கல்லறை, பழைய கோயில் என்று அழைக்கப்படும் திருச்சபையின் கட்டுப்பாட்டில் உள்ளது. மறைந்த நகரின் முக்கிய பிரமுகரான திரு. லூர்துசாமி அவர்கள், இந்த இடத்தை, கல்லறை நிறுவுவதற்காக, நன்கொடையாக வழங்கினார். அந்தக் கல்லறைதான், தீண்டாமையை குறுக்குச் சுவர் வழியாக வெளிப்படுத்திக் கொண்டிருக்கிறது. 

உப்புப் பாறை, செங்குளம் தாழ்த்தப்பட்டோர் குடியிருப்பு, மல்லிகைபுரம், ஜெம்ஸ் டவுன், கூனி பசார், காஜாபேட்டை பகுதிகளில் வாழும், தாழ்த்தப்பட்ட பிரிவு மக்களான “பறையர்”, “சக்கிலியர்” சமூகத்தின் பிணங்கள், குறுக்குச் சுவர் அமைக்கப்பட்ட  ஒரு பகுதி கல்லறையிலும், மறுபுறத்தில் உள்ள கல்லறையில், “பழைய கோயில்” பகுதி இருதயபுரம், எடத்தெரு வாழும் பகுதிகளில் உயர்சாதியினர் என்று கூறிக் கொள்ளும், பிள்ளைமார், சாதியைச் சார்ந்த பிணங்கள் புதைக்கப்படுகின்றன. இரண்டு கல்லறை களிலும் யேசுவின் ‘புனித சிலுவை’ச் சின்னம்தான் பொறிக்கப்பட்டுள்ளது. இரண்டு பிரிவினரும், ரோமன் கத்தோலிக்கப் பிரிவைச் சார்ந்தவர்கள்தான். 

இந்துமதம் தான் இப்படி சுடுகாட்டிலும் தீண்டாமையை பின்பற்றி வருகிறது என்றால், கிறிஸ்தவ மதமும், அதே தீண்டாமையைப் பின்பற்றுவது அதிர்ச்சியளிக்கிறது. சாதியும், தீண்டாமையும், இந்து மதத்தின் கேடுகளாக திகழ்கின்றன. பெரியார் இந்து மதத்தின் இழிவுகளையும் கொடுமைகளையும் எதிர்த்து, வாழ்நாள் முழுதும் போராடினார். அதே நேரத்தில் திருச்சிராப்பள்ளியில் வேர் ஹவுஸ் கல்லறையில் இருந்த இந்தத் தீண்டாமையையும் எதிர்த்து பல ஆண்டுகளுக்கு முன்பே குரல் கொடுத் துள்ளார். அதை எதிர்த்து போராட்ட அறிவிப்பையும் வெளியிட்டார். ஆனால், பல்வேறு காரணங்களுக்காக, அந்தப் போராட்டம் தொடராமல் போய்விட்டது. அதே தீண்டாமைச் சுவர், இப்போதும் அப்படியே இருக்கிறது. பெரியார் விட்டுச் சென்ற அந்த இடத்திலிருந்து - பெரியார் திராவிடர் கழகம், இப்போது போராட்டத்தைத் தொடங்கியிருக்கிறது. 

கடந்த மார்ச் மாதம் நகரின் 8 பகுதிகளில் பெரியார் திராவிடர் கழகம் இந்தத் ‘தீண்டாமைச் சுவரை’ அகற்றக் கோரி பரப்புரை நடத்தியது. தொடர்ந்து மாவட்டக் காவல்துறையின் தீண்டாமை ஒழிப்புப் பிரிவான ‘மனித உரிமைப் பாதுகாப்பு’ பிரிவு அதிகாரியை நேரில் சந்தித்து, கடந்த மார்ச் 14 ஆம் தேதி சுவரை அகற்றக் கோரி விண்ணப்பம் ஒன்றும் கையளிக்கப்பட்டது.

 இதுபோன்ற தீண்டாமைக் குற்றங்களைத் தடுப் பதற்காகவே அமைக்கப்பட்டதுதான் காவல்துறையின் இந்த தனிப் பிரிவு. எனவே, இதை அப்புறப்படுத்தி, தீண்டாமையைத் தடுக்க வேண்டிய சட்டப்பூர்வ கடமை, இந்த காவல்துறை பிரிவுக்கு உண்டு. அதனால்தான், அந்தக் கடமையை செய்யத் தவறிய தீண்டாமை ஒழிப்புப் பிரிவை இழுத்து மூடும் போராட்டத்தை, அக்.2 ஆம் தேதி பெரியார் திராவிடர் கழகம் நடத்துகிறது. 

“காவல்துறை நடவடிக்கை ஒரு பக்கம் இருந்தாலும், கிறிஸ்தவ மதத்துக்கு எதிராக, இந்துமத வழியில் தீண்டாமையை நிலைநாட்டும், இந்த சட்டத்துக்கு எதிரான அவமானச் சின்னத்தை அகற்றும் முயற்சிகளில் இறங்க வேண்டும் என்று ரோமன் கத்தோலிக்க மதப் பிரிவுகளை நிர்வகிக்கும் தங்களை வற்புறுத்திக் கேட்டுக் கொள் கிறோம்” இவ்வாறு கடிதத்தில் குறிப்பிட்டுள்ளது.

Pin It