இன்றைய சிறிலங்கா, பண்டைக் காலத்திய தமிழ் மக்களால் ‘ஈழம்’ என்னும் பெயராலேயே சுட்டப்பட்டது. ‘ஈழத்து உணவும் காழகத்து ஆக்கமும்’ எனும் பட்டினப் பாலையின் அடி (பட்டி. 191) இதற்குச் சான்று பகருகிறது. சங்க காலத்துப் புலவர்களுள் ஈழத்துப் பூதந்தேவ னார் எனும் இலங்கையைச் சேர்ந்த புலவர் மதுரையில் சிறப்புற்று விளங்கியதை, அவர் பாடியுள்ள ஏழு பாடல்களால் (அகநா. 88, 231, 307, குறுந். 189, 343, 360, நற். 366) அறிகிறோம்.
சங்கக் காலத்திற்குப் பிறகு, பல்லவர் ஆட்சிக் காலத்தில் ஓரளவிற்கு அரசியல் பண்பாட்டுத் தொடர்புகள் இவ்விரு நாடுகளுக்கு இடையேயும் நிலவின.
இராசராசனுக்கு முன்னர்...
பேரரசன் இராசராசன் கி.பி. 985-இல் அரசனானான். இதற்கு முன்பே, சோழ வேந்தர்களுக்கும் ஈழத்திற்கும் அரசியல் தொடர்புகளும், பண்பாட்டுத் தொடர்புகளும் உண்டாகி இருந்தமை தெரிகிறது.
முதற் பராந்தக சோழனுடைய ஆட்சிக் காலத்தில் (கி.பி. 910-இல்) பாண்டிய அரசனுக்கு உதவியாக வந்த சிங்களப்படை, பராந்தகனால் ‘வெள்ளூர்’ எனும் இடத்தில் தோற்கடிக்கப்பட்டது.
இராசராசனுடைய தந்தையான இரண்டாம் பராந்தகன் எனப்படும் சுந்தரசோழன் காலத்தில், வீரபாண்டியன், நான்காம் மகிந்தனுடைய படை உதவியோடு, சோழரை எதிர்த்துப் போரிட்டான். வீரபாண்டியன் படையும், அவனுடைய நண்பனின் படையும், படுதோல்வி அடைந்தன. ஆதித்த கரிகாலன் (இராசராசனின் அண்ணன்) கி.பி. 970-இல் வீரபாண்டியனைக் கொன்றான். பிறகு கொடும்பாளூர் சிறிய வேளார் தலைமையில், சோழரின் படை ஈழத்தைத் தாக்கியது. அப்போரில், இராசராசன் கலந்துகொண்டதாகத் தெரிகிறது. ஆனால் அப்போரில், கொடும்பாளூர் சிறிய வேளார் கொலை செய்யப்பட்டார்.
பேரரசனின் படையெடுப்பு
சோழப் பேரரசர்களுள் தலை சிறந்து விளங்கிய இராசராசனும், அவன் மகன் இராசேந்திரனும் ஈழப் படையெடுப்புகளில் ஈடுபட்டனர்.
கி.பி. 982-இல், இலங்கையின் அரசனாக ஐந்தாம் மகிந்தன் முடிசூட்டிக்கொண்டான். இராசராசனுடைய பகைவர்களாகிய பாண்டிய, சேர அரசர்களுக்கு அவன் உதவி செய்யத் தொடங்கினான். இதனால், இராசராசன் ஈழத்தின் மீது படையெடுக்க வேண்டிய நெருக்கடி உண்டா யிற்று. இராசேந்திரனின் தலைமையில் பெரும் படை ஒன்று இலங்கைக்கு அனுப்பப்பட்டது. அந்நிலையில் இலங்கை யில் உள்நாட்டுக் குழப்பம் உண்டாயிற்று. அதை அடக்க முடியாது மகிந்தன் தத்தளித்தான். சோழரின் படை யெடுப்பைப் பற்றிக் கேள்வியுற்ற உடனே, இதுதான் நல்ல சமயம் என்று எண்ணி, தெற்கே உள்ள ரோகண நாட்டிற்கு அவன் ஓடிவிட்டான்; தலைமறைவாகி விட்டான்.
சோழப் படையை எதிர்த்த சில சேனைத் தலைவர்களும், இளவரசனும், கலகக்காரர்களும் எளிதில் முறியடிக்கப்பட்டனர். திருவாலங்காட்டுச் செப்பேடு, இராசராசனின் இலங்கைப் படையெடுப்பைப் பற்றிச் சிறப்பாகப் பேசுகிறது.
‘வானரப் படையின் உதவியைக் கொண்டு அயோத்தி அரசன் இராமன், கடலின் மீது பாலம் அமைத்தான். பிறகு அரும்பாடுபட்டு இலங்கை வேந்தனைத் தன் கூரிய அம்பினால் கொன்றான். அந்த இராமனை விட இந்த இராசராசன் பேராற்றலும் பெருந்திறனும் உடையவன். இராசராசனுடைய பேராற்றல் வாய்ந்த படை மரக்கலங்களைக் கொண்டு அலைகடலைக் கடந்தது; இலங்கை மன்னனைத் தீயிட்டுக் கொளுத்தியது என்பது திருவாலங்காட்டுச் செப்பேட்டின் வாசக (செ 80) மாகும். இதனால் இந்த ஈழத்துப் போர், முகாமை வாய்ந்த போராக அக்காலத்தில் கருதப்பட்டமை புலனாகிறது.
உரோகணம் வரையிலான, ஈழத்தின் வடக்கு, மையப் பகுதிகள் சோழப் பேரரசோடு இணைக்கப்பட்டன. பேரரசின் நேரடி ஆட்சியின் கீழ்க் கொண்டுவரப்பட்டன. ‘மும்முடிச் சோழ மண்டலம்’ எனும் பெயர், அதற்குச் சூட்டப்பட்டது. இராசராசனின் சிறப்புப் பெயர்களுள் ‘மும்முடிச் சோழன்’ என்பதும் ஒன்றாகும்.
சோழரின் தலைநகரம்
நெடுங்காலமாக இலங்கையின் தலைநகராக விளங்கிய அனுராதபுரம் சோழரின் படையெடுப்பால் அழிக்கப்பட்டது. இன்றும் அதன் இடிபாடுகளைக் காணலாம். இதனால், அந்நாட்டின் நடுப்பகுதியில் இருந்த புலத்திய புரியைப் ‘பொலனறுவா’ எனும் பெயருடைய நகரமாகச் செய்து, சோழப் பேரரசின் ஈழத் தலைநகரமாக அதனை அமைத்துக்கொண்டான். பிறகு அதற்குச் ‘சனநாத மங்கலம்’ எனும் புதுப் பெயரிடப் பட்டது. ‘சனநாதன்’ என்பதும் இராசராசனுடைய சிறப்புப் பெயர்களுள் ஒன்று. ‘சனநாதன்’ என்பதற்கு (ஜன-சன=மக்கள்; நாதன் = தலைவன்) ‘மக்கள் தலைவன்’ என்பது பொருளாகும். தமிழரின் அரசியல் சிந்தனையில் அரசனை மக்களின் தலைவனாக’க் கருதுவது சங்கக் காலம் முதற் கொண்டு வளர்ந்து வந்துள்ள ஒரு கருத்தியல் நிலையாகும்.
இராசராசேச்சுரம்
மும்முடிச் சோழ மண்டலமாகிய ஈழத்தில் இருந்த மாதோட்டம் எனும் ஊருக்கு ‘இராசராசபுரம்’ எனும் பெயர் வழங்கியதைக் கல்வெட்டுகள் தெரிவிக்கின்றன. அந்த ஊரில், சோழப் படைத்தலைவன் ஒருவன், ஒரு சிவன் கோயிலை எழுப்பி இருந்தான். அந்தக் கோயிலுக்கு ‘இராசராசேச்சுரம்’ எனும் பெயர் வழங்கியது. அந்தக் கோயிலின் அன்றாட நடுச் சாம வழிபாட்டிற்கும் வைகாசித் திருவிழாவிற்கும் அறக்கட்டளைகளை அவன் நிறுவினான் என்பதையும் அறிகிறோம்.
அந்தப் படைத் தலைவன், “சோழ மண்டலத்துச் சத்திரிய சிகாமணி வளநாட்டு வெளா (விளா) நாட்டுச் சிறுகூற்ற நல்லூர்க் கிழவன் தாழிகுமரன்” (கொழும்பு அரும்பொருள் காட்சியகத்தில் உள்ள கல்வெட்டு) என்பவனாவான்.
வானவன் மாதேவீச்சுரம்
சோழரின் தலைநகரமாக இருந்த பொலனறுவாவில் சிவன் கோவில் ஒன்று கற்றளியாக அமைக்கப்பட்டு இருக்கிறது. கி.பி. பத்து, பதினோராம் நூற்றாண்டுகளில் எடுக்கப்பட்ட சோழர் கோயில்களைப்போல், இக்கோயில் அமைக்கப்பட்டு இருக்கிறது. மேலும், அக்கோயிலை ‘வானவன் மாதேவீச்சுரம்’ எனும் பெயரால் அக்கோயில் கல்வெட்டு ஒன்று குறிப்பிடுகிறது.
இராசராசனுடைய மனைவியும், இராசேந்திரனின் தாயுமான வானவன் மாதேவியின் பெயரால் இந்தக் கோயில் கட்டப்பட்டுள்ளமை, இதன் பெயரால் புலனாகிறது.
பெரியகோயிலுக்கு மானியம்
தான், தஞ்சையில் எடுப்பித்த பெரிய கோயிலுக்கு ஏராளமான பொன்னையும் பொருளையும் மானியமாக வழங்கியதோடு, பல ஊர்களையும் தானமாக இராசராசன் கொடுத்துள்ளான். அவற்றின் வருவாயைக் கொண்டு நாள் பூசையும் சிறப்புமிகு திருவிழாக்களையும் நடத்துவதற்கு இராசராசன் ஏற்பாடு செய்து இருந்தான். (தெ.இந்.கல். தொகுதி. 2; எண். 92)
இராசராசப் பெரும்பள்ளி
பேரரசன் இராசராசனுடைய ஆட்சிக்குட்பட்ட பகுதிகளில் பௌத்த சமய விகாரைகள் பல பழுதுபார்க்கப்பட்டன. புதுப்பிக்கப்பட்டன. சில புதியதாகக் கட்டப்பட்டன. இவற்றிற்குச் சிறந்த எடுத்துக்காட்டாகத் திருக்கோணமலைப் பகுதியில் உள்ள வேளகாம விகாரையைக் குறிப்பிடலாம். இராசராசன் ஆட்சியில், இந்த விகாரைப் புதுபிக்கப்பட்டு விரிவாக்கப்பட்டது. இந்த விகாரையில் உள்ள இராசராசன், இராசேந்திரனுடைய தமிழ்க் கல்வெட்டுகள், இந்தப் பௌத்த விகாரையை ‘இராசராசப் பெரும் பள்ளி’ எனும் தமிழ்ப் பெயரால் சுட்டுகின்றன. (இலங்கைக் கல்வெட்டியல் அறிக்கை (ASCAR) 1953. P.P. 9-12). இதனால் சோழப் பெருவேந்தனது சமயப் பொறையை அறிகிறோம்.
ஆட்சி முறையிலும், ஈழம் தமிழகத்தைப் பின்பற்றத் தொடங்கியது. பல்வேறு குமுகத்தைச் சேர்ந்த தமிழ் மக்கள், இக்காலம் முதற்கொண்டு பேரளவில் அங்குக் குடியேறத் தொடங்கினர்.
இதன் விளைவாக, நீரோடை நிலங்கிழிக்க நெடு மரங்கள் நிறைந்து பெருங்காடாக விளங்கிய அந்த நாடு, தமிழர்களின் அயராத உழைப்பால் பொன் கொழிக்கும் திருநாடாக மாறியது. வாழ்வியல் துறையிலும் கலைத்துறை யிலும் தமிழ்ப் பண்பாட்டின் உந்துதலால், புதியதோர் எழுச்சியைப் பெற்றது.
நன்றி : தமிழ்ப் பொழில், இராசராசசோழன் முடிசூடிய 1000ஆவது ஆண்டு (1984) நினைவுச் சிறப்பிதழ்.
கட்டுரை: 'முதன்மொழி' 2010 அக்டோபர் இதழில் வெளியானது.