உயர் கல்வியும், அரசாங்க வேலைகளும் கேட்டு இலட்சக் கணக்கான இளைஞர்களும், அவர்களுடைய குடும்பங்களும் ஒரு மாபெரும் பேரணியை குஜராத்திலுள்ள அகமதாபாதில் ஆகஸ்டு 25, 2015 அன்று நடத்தினர். மக்களுடைய இந்த நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்றுவதற்குப் பதிலாக, குஜராத் அரசாங்கம் வேண்டுமென்றே நிலைமையை கொழுந்து விட்டு எறியச் செய்வதற்காக பல ஆத்திரமூட்டும் நடவடிக்கைகளை மேற்கொண்டது. அவற்றில், ஆர்பாட்டத்தின் தலைவர்களைக் கைது செய்தல், பேரணி நடைபெரும் மைதானத்தின் விளக்குகளை அணைத்தல், காட்டுமிராண்டித்தனமான தடியடி மற்றும் ஆர்பாட்டக்காரர்கள் மீது துப்பாக்கிச் சூடு ஆகியன அடங்கும்.

மக்களுடைய வீடுகளில் உடைத்து நுழைந்து ஆடவர், பெண்கள், குழந்தைகளை கண்மூடித்தனமாகத் அடிப்பது போன்ற கலவர வெறிச் செயல்களில் காவல்துறை ஈடுபட்டது. அரசு கட்டவிழ்த்து விட்ட இந்த பயங்கரத்தில் குறைந்தது 8 பேர் உயிரிழந்துள்ளனர் என்றும் நூற்றுக்கணக்கானவர்கள் காயமடைந்திருக்கிறார்களென்றும் கூறப்படுகிறது. "சட்டம் ஒழுங்கை"ப் பாதுகாப்பது என்ற பெயரில் மத்திய அரசாங்கம், அகமதாபாதையும், குஜராத்தின் மற்ற பிற நகரங்களையும் இராணுவ மற்றும் பிற துணை இராணுவ ஆட்சியின் கீழ் கொண்டு வந்திருக்கிறது. மீண்டும் ஒரு முறை, ஒரு அரசியல் பிரச்சனையானது, "சட்டம் ஒழுங்கு"ப் பிரச்சனையாக மாற்றப்பட்டிருக்கிறது.

குஜராத் மற்றும் மத்திய அரசாங்கங்கள், மக்கள் மீது கட்டவிழ்த்து விட்டிருக்கும் பயங்கரமான தாக்குதல்களை இந்திய கம்யூனிஸ்டு கெதர் கட்சி வன்மையாகக் கண்டிக்கிறது.

அரசியல் மற்றும் சமூக பிரச்சனைகளை ஒடுக்குமுறையின் மூலம் தீர்க்க முடியாது. உழைக்கும் மக்களுடைய எந்தப் பிரிவினரும் தங்களுடைய பிரச்சனைகளை எழுப்புவதற்காக வீதிகளில் இறங்குவார்களேயானால், ஆளும் வகுப்பினரின் பல்வேறு கட்சிகள் அவற்றை வேண்டுமென்றே திரித்துக் காட்டி வருவதை அனுபவம் காட்டுகிறது. அவர்கள் வெறியைத் தூண்டிவிட்டு, ஒரு பிரிவு மக்களை மற்றவர்களுக்கு எதிராக நிறுத்துகின்றனர். அதே நேரத்தில் "சட்டம் ஒழுங்கை நிலைநாட்டுவதற்காக" இந்திய அரசு முழுவதும் கட்டவிழ்த்து விடப்படுகிறது.

அனைத்துப் பிரிவு மக்களுடைய பிரச்சனைகளுக்கும் மூல காரணம் இந்த முதலாளித்துவ அமைப்பாகும். அதனால் அனைவருடைய தேவைகளையும் நிறைவேற்ற முடியாது. இந்த அமைப்பால், இந்திய மற்றும் அன்னிய ஏகபோக முதலாளிகளுடைய பேராசையை மட்டுமே நிறைவு செய்ய முடியும். பாஜக, காங்கிரசு போன்ற கட்சிகள் இன்றுள்ள அரசியல் மற்றும் பொருளாதார அமைப்பைத் தீவிரமாகக் கட்டிக் காக்கிறார்கள். இந்த முதலாளித்துவ அமைப்பு மிகப் பெரிய, அதிக சக்தி வாய்ந்த, பேராசை கொண்ட முதலாளித்துவ பிரிவினர் அதிகப்படியான செல்வத்தைச் சேர்க்க உதவியும், பெரும்பான்மையான மக்களுடைய நியாயமான கோரிக்கைகளையும், உரிமைகளையும் தொடர்ந்து மறுத்தும் வருகிறது. நம்மைப் பிளவுபடுத்தவும், மிகப் பெரிய ஏகபோகங்கள் மற்றும் ஏகாதிபத்தியர்களுடைய ஆட்சி தொடர்ந்து நீடிக்கவும் மதம், சாதி மற்றும் வட்டார அடிப்படையில் உழைக்கும் மக்களை ஒருவருக்கு எதிராக ஒருவரை வேண்டுமென்றே நிறுத்துகின்றனர்.

குஜராத் மக்கள், எந்த ஆளும் கட்சியினுடைய கண்ணிகளிலும் சிக்கிக் கொள்ளாமல் விழிப்புடன் இருக்க வேண்டும். அனைவருடைய உரிமைகளையும் பாதுகாப்பதற்காக, ஒன்றாக இணைவதன் மூலம் அவர்கள் ஆளும் வகுப்பினருடைய பிரித்தாளும் சூழ்ச்சியை முறியடிக்க வேண்டும். தற்போதைய நிலைமையில், "அனைவருக்கும் கல்வி, அனைவருக்கும் வேலை" என்ற தட்டியை உயர்த்திப் பிடிப்பதன் மூலமும், எந்தப் பிரிவு மக்களுக்கும் எதிராக அரசு ஒடுக்குமுறையைப் பயன்படுத்துவதைக் கண்டிப்பதன் மூலமும் அவர்கள் ஆளும் வகுப்பினரின் பிரித்தாளும் சூழ்ச்சியை முறியடிக்க முடியும்.

ஆளும் வகுப்பு மற்றும் அதனுடைய அரசின் தாக்குதல்களுக்கு எதிராகவும், தங்களுடைய உரிமைகளைப் பாதுகாத்தும், இந்தியாவிலுள்ள அனைத்துப் பிரிவு மக்களும் ஒரு நியாயமான போராட்டத்தை நடத்தி வருகின்றனர். ஒரு புதிய பொருளாதாரப் போக்கைக் கொண்ட, அனைவருடைய பாதுகாப்பிற்கும், வளமைக்கும் உத்திரவாதமளிக்கும் ஒரு புதிய அரசை நிறுவும் கண்ணோட்டத்தோடு நாம் போராட்டத்தைத் தொடர வேண்டும். 

Pin It