டிசம்பர் 5, 2014 அன்று நடைபெற்ற வீரமான ஆர்பாட்டங்கள், பேரணிகள் மற்றும் கூட்டங்களில் பொருளாதாரத்தின் எல்லா துறைகளையும் சேர்ந்த இலட்சக் கணக்கான தொழிலாளர்கள் பங்கேற்றனர்.

kerala labours

இந்த ஆர்பாட்டங்கள் தலைநகர் தில்லியிலும், எல்லா மாநிலத் தலைநகரங்களிலும், நாட்டின் பிற நகரங்களிலும் நடைபெற்றன. “தொழிலாளர் சட்டச் சீர்திருத்தங்கள்” என்ற பெயரில் தற்போதைய பாஜக தலைமையிலான அரசாங்கம் தொழிலாளர்களுடைய உரிமைகள் மீது நடத்தி வரும் தாக்குதல்களுக்கு எதிராக நமது நாட்டுத் தொழிற் சங்கங்களும், கூட்டமைப்புக்களும் அழைப்பு விடுத்திருந்த அனைத்திந்திய எதிர்ப்பு நாளுடைய ஒரு அங்கமாக இந்தச் செயல்பாடுகள் நடைபெற்றன. தொழிலாளர்களுடைய நலத்தை முழுவதுமாக புறக்கணித்தும், நாட்டினுடைய இறையாண்மையை அச்சுறுத்துகின்ற வகையிலும், பாதுகாப்புத்துறை உற்பத்தி, இரயில்வே, வங்கி, காப்பீடு போன்ற முக்கிய துறைகளை அன்னிய முதலீட்டிற்குத் திறந்து விடுவது போன்ற அரசாங்கத்தின் தனியார் மயப்படுத்தும் திட்டத்தைத் தொழிலாளர்கள் எதிர்த்து வருகின்றனர்.

தலைநகர் பகுதியைச் சேர்ந்த தொழிலாளர்கள், தில்லி ஜன்தர் மன்தரில் நடைபெற்ற ஒரு பொதுக் கூட்டத்தில் தீரத்தோடு பங்கேற்றனர். அதில் வங்கி ஊழியர்கள், காப்பீட்டு ஊழியர்கள், இரயில் இஞ்சின் ஓட்டுனர்கள், இரயில் கார்டுகள், மானேசர், பானிபட், சோனிபட் ஆகிய தொழிற் பேட்டைகளைச் சேர்ந்த தொழிலாளர்கள், தனியார் மயத்தை எதிர்த்துப் போராடி வரும் இந்திய உணவு நிறுவனத் தொழிலாளர்கள், நகராட்சி சேவைகள், தில்லி தண்ணீர் வாரியத் தொழிலாளர்கள், ஓக்லா தொழிற் பேட்டை உட்பட தில்லியின் பல்வேறு தொழிற் பேட்டைகளைச் சேர்ந்த தொழிலாளர்கள் பங்கேற்றனர். ஆங்கன்வாடி, ஆஷா ஆகியவற்றைச் சேர்ந்த பெண் தொழிலாளர்களும் பேரணியில் பங்கேற்றனர்.

இப் பேரணியில் பிஎம்எஸ், ஐஎன்டியுசி, ஏஐடியுசி, எச்எம்எஸ், சிஐடியு, ஏஐயுடியுசி, டியுசிசி, செவா, ஏஐசிசிடியு, யுடியுசி, எல்பிஎப் மற்றும் எம்இசி (தொழிலாளர் ஒற்றுமை இயக்கம்) ஆகியவற்றின் தலைவர்கள் உரையாற்றினர். பேரணியில் உரையாற்றிய இந்த அமைப்புக்களின் மத்தியத் தலைவர்கள், தொழிலாளர்களுடைய உரிமைகளைப் பாதுகாக்கவும், அரசாங்கம் தன்னுடைய தொழிலாளர் விரோத, தேச விரோதப் போக்கை மாற்றுமாறு கட்டாயப்படுத்தவும், போராட்டத்தைத் தீவிரப்படுத்துவோமென உறுதி கூறினர்.

தொழிற் சங்கங்களுடைய கூட்டுக் குழு கொண்டு வந்திருந்த சுவரொட்டிகள் மட்டுமின்றி, இந்திய கம்யூனிஸ்டு கெதர் கட்சியும் சுவரொட்டிகளை வெளியிட்டது. டிசம்பர் 5 ஆர்பாட்டத்தை வெற்றி பெறச் செய்ய வேண்டுமென தொழிலாளர்களைக் கேட்கும் இந்த சுவரொட்டிகளை தில்லியிலும், நாட்டின் பிற தொழில் மையங்களிலும் தொழிற்பேட்டைகளிலும் ஒட்டியிருந்தனர். இந்தச் சுவரொட்டிகள், ஏகபோக முதலாளி வர்க்கத்தின் ஆட்சிக்கு முடிவு கட்டவும், தொழிலாளர்களுடைய ஆட்சியை நிறுவுவதற்கும் போராடுமாறு தொழிலாளர்களைக் கேட்டிருந்தன.

தொழிலாளர் ஒற்றுமை இயக்கத்தின் சார்பாக பேசிய அதன் பொதுச் செயலாளர் தோழர் பிரகாஷ் ராவ், நமது நாட்டில் இரு வர்க்கங்களுக்கு இடையே போராட்டம் தீவிரமடைந்து வருகிறது என்றார். இதில் ஒரு பக்கத்தில் மிகப் பெரிய ஏகபோகங்களுடைய தலைமையில் உள்ள சுரண்டும் வர்க்கம் இருக்கிறது. இன்னொரு பக்கம், தொழிலாளி வர்க்கமும், உழவர்களும் மற்றும் பிற உழைக்கும் மற்றும் ஒடுக்கப்பட்ட மக்களும் இருக்கின்றனர். நமது போராட்டத்தின் நோக்கமானது, ஏகபோக முதலாளி வர்க்கத்தின் ஆட்சியைத் தூக்கியெறிந்துவிட்டு, அதற்கு மாற்றாகத் தொழிலாளர்கள், உழவர்களுடைய ஆட்சியை நிறுவுவதாகும். ஆளும் முதலாளி வர்க்கம் தங்களுடைய திட்டத்தை தெள்ளத் தெளிவாக திட்டமிட்ட முறையில், தற்போது ஆட்சி செய்து வருபவர்கள் மூலம் நிறைவேற்றி வருகிறார்கள். நமது நாட்டையும், உழைப்பையும், இயற்கை வளங்களையும் கொள்ளையடிப்பதையும், திருடுவதையும் தீவிரப்படுத்தும் இத் திட்டத்தை, அன்னிய ஏகபோகங்களின் நெருங்கிய கூட்டுறவோடு தொழிலாளர்களுடைய உரிமைகளைக் காட்டுமிராண்டித் தனமாகத் தாக்கிச் செயல்படுத்தி வருகிறார்கள்.

எந்தக் கட்சி தன்னுடைய திட்டத்தைச் சரியாக நடைமுறைப்படுத்துவார்கள் என்றும், தொழிலாளி வர்க்கத்தையும், உழைக்கும் மக்களையும் நன்றாக முட்டாளாக்குவார்களெனவும் முதலாளி வர்க்கம் நினைப்பதையொட்டி, ஒன்றை மாற்றி வேறு ஒரு கட்சியை மத்தியிலும், மாநிலங்களிலும் முதலாளி வர்க்கம் அதிகாரத்திற்குக் கொண்டு வருகிறது. இந்த அரசாங்கங்கள் மிகப் பெரிய ஏகபோகங்களுடைய மேலாளர்களே தவிர வேறொன்றுமில்லை. நம்முடைய போராட்டமானது ஒரு மேலாளரை மாற்றி வேறொரு மேலாளரைக் கொண்டு வருவதல்ல. நம்முடைய நோக்கம், ஏகபோகங்களுடைய ஆட்சிக்கு முடிவு கட்டுவதாகும்.

நமது வர்க்கம் போராடும் மன நிலையில் இருக்கிறது. ஒரு வேலை நிறுத்தப் போராட்டத்திற்குத் தயாராக வேண்டுமென்ற இரயில்வே தொழிற் சங்கங்களுடைய தீர்மானம், ஆல் இந்தியா லோகோ ரன்னிங் ஸ்டாப் அசோசியேசனுடைய சிட்டோர்கார் மாநாட்டிலும், திருப்பதியில் நடைபெற்ற ஆல் இந்தியா கார்டுகளுடைய கவுன்சில் கூட்டத்திலும் எழுந்த சக்தி வாய்ந்த எதிர்ப்புக் குரல்கள், தனியார்மயத்தை எதிர்த்து வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட வேண்டுமென்ற நிலக்கரி தொழிலாளர்களுடைய தீர்மானம் போன்றவையெல்லாம் நமது போராட்டம் தீவிரமடைந்து வருகிறது என்பதற்கான அறிகுறிகளாகும். எதிர்ப்புக்கான இந்த நாளை, எதிர்ப்புக்கான ஒரு இயக்கமாக மாற்றுவதற்கு நாம் தயாரிக்க வேண்டும். தொழிலாளி வர்க்கத்தின் ஐக்கியக் குழுக்களை மத்திய மட்டத்தில் மட்டுமின்றி, நமது நாட்டின் ஒவ்வொரு தொழிற் பேட்டைகளிலும் மற்றும் எல்லாத் துறைகளிலும் நாம் கட்ட வேண்டும்.

இந்த எதிர்ப்புக்கான அறைகூவலை ஏற்று, நிகழ்ச்சிகளில் கட்சி, தொழிற் சங்க வேறுபாடுகளைக் கடந்த அளவில் தொழிலாளர்கள் பெரும் ஆர்வத்தோடு வந்து பங்கேற்றுள்ளனர். இது, வருகின்ற காலகட்டத்தில் தொழிலாளர்களின் வர்க்கப் போராட்டத்திற்கு சரியான தலைமை கொடுப்பதன் மூலம், அதை வெற்றிக்குக் கொண்டு செல்ல வேண்டிய ஒரு பெரிய பொறுப்பைத் தொழிலாளி வர்க்க தலைவர்கள் மீது சுமத்தியிருக்கிறது. ஆளும் வர்க்கத்தின் தாராளமயம், தனியார்மய திட்டத்திற்கு எதிராகவும், தொழிலாளர்கள் உரிமைகள் மீது நடத்தப்படும் தாக்குதல்களுக்கு எதிராகவும் ஐக்கியப் போராட்டத்தை, ஏகபோகங்களுடைய ஆட்சிக்கு முடிவு கட்டிவிட்டு தொழிலாளர்களுடைய ஆட்சியை நிறுவும் நோக்கத்தோடு தீவிரப்படுத்த வேண்டுமென்ற ஒரு அறைகூவலோடு, தோழர் பிரகாஷ் ராவ் தன் உரையை முடித்தார்.

மும்பை

மத்திய அரசின் தொழிலாளர் விரோத கொள்கைகளையும், தொழிலாளர்களுக்கு எதிராக தொழிற் சட்டங்கள் மாற்றப்படுவதையும் எதிர்த்து மராட்டிய மாநிலத்தில் தொழிலாளர் அமைப்புக்களுடைய கூட்டு இயக்கமான காம்கார் சங்கட்டனா சம்யுக்தா கிர்த்தி ஒரு மாபெரும் பேரணியை ஏற்பாடு செய்திருந்தது. வங்கிகள், காப்பீடு, போக்குவரத்து, இரயில்வே, பொறியியல், ஆசிரியர்கள் மற்றும் அரசாங்க ஊழியர்கள் என 5000-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் இந்தப் பேரணியில் பங்கேற்றனர். பேரணியில் எங்கு பார்த்தாலும் செங்கொடிகளாகவும், அரசாங்கத்தை எதிர்த்த முழக்கங்களாகவும் இருந்தன. ஏஐடியுசி, சிஐடியு, எச்எம்எஸ், பிஎம்எஸ், ஐஎன்டியுசி, தொழிலாளர் ஒற்றுமை இயக்கம் (காம்கார் ஏக்தா கமிட்டி), ஐஎப்டியு, டியுஎஸ்சி, டியுசிஐ, சர்வ சிரமிக் சங், சர்வ சிரமிக் சங்கதனா, எஸ்யுசிஐ, பியுசிடியு, பிஇஎப்ஐ, என்ஆர்எம்யு, ஏஐஐஇஏ மற்றும் பலர் மேடைக்கு அழைக்கப்பட்டனர். ஒருவர் மாற்றி ஒருவர் பேச்சாளர்கள், கோல் இந்தியா, ஓஎன்ஜிசி, வங்கிகள், காப்பீடு ஆகியவற்றை தனியார்மயப்படுத்தும் முயற்சிகளையும், பாதுகாப்பு மற்றும் இரயில்வே துறைகளில் அன்னிய நேரடி முதலீடு போன்ற அரசாங்கத்தின் கொள்கைகளைக் கடுமையாகக் கண்டனம் செய்தனர்.

தொழிலாளி வர்க்கத்தின் சுரண்டலைத் தீவிரப்படுத்தவும், அதன் மூலம் முதலாளிகளுடைய இலாபத்தை அதிகரிக்கவும் கொண்டு வரப்படும் தொழிற் சட்ட திருத்தங்களை எல்லா பேச்சாளர்களும் வன்மையாகக் கண்டித்தனர். ஒரு தொழிற் சாலையைத் தொடங்க வேண்டுமென விண்ணப்பித்த மூன்று நாட்களிலேயே அனுமதி தரப்படும் எனவும், மூன்று நாட்களுக்குள் எந்த பதிலும் வரவில்லையென்றால், அனுமதி கொடுக்கப்பட்டு விட்டதாக கருதிக் கொள்ளலாமெனவும் பாஜக தலைமையில் உள்ள மராட்டிய மாநில அரசாங்கம் அறிவித்துள்ளதை பேச்சாளர்கள் குறிப்பிட்டனர். அது போலவே, (1) தொழிலாளர்களுடைய தொழிற் சங்கத்தைப் பதிவு செய்வதற்கும், (2) தொழிலாளர்களை நிரந்தரப்படுத்துவதற்கும் (3) ஒப்பந்தத் தொழில் முறைக்கு முடிவு கட்டுவதற்கும் விண்ணப்பித்த மூன்று நாட்களிலேயே ஒப்புதல் அளிக்க வேண்டுமென அரசாங்கத்திற்கு அவர்கள் சவால் விடுத்தனர். மும்பை பெருநகராட்சியின் துப்புரவுத் தொழிலாளர்களுடைய மோசமான வேலை நிலைமைகள் குறித்தும் பேச்சாளர்கள் குறிப்பிட்டனர்.

மிகப் பெரிய இடைவேளைக்குப் பின்னர், சங்க, கட்சி வேறுபாடுகளைக் கடந்த அளவில் இப்படிப்பட்ட ஒரு பெரிய, ஐக்கியமான தொழிலாளர்களுடைய கூட்டத்தை மும்பை நகரம் பார்த்தது. அரசாங்கத்தின் “இந்தியாவில் உற்பத்தி செய்யுங்கள்”, “நல்ல காலம் வந்துவிட்டது’ போன்ற முழக்கங்கள், இந்திய மக்களுடைய நிலத்தையும், உழைப்பையும் இந்திய மற்றும் வெளிநாட்டு முதலாளிகள் கொள்ளையடிக்க அனுமதிப்பதன் மூலம், முதலாளிகளுக்குதான் நல்ல காலம் என்பதைத் தொழிலாளர்கள் புரிந்து கொண்டுள்ளதை இது காட்டுகிறது.

தமிழ்நாடு, கேரளா, தெலுங்கானா மற்றும் ஆந்திரா

பெரு முதலாளிகள் ஈவு இரக்கமின்றி தொழிலாளர்களைச் சுரண்டவும், ஒடுக்கவும் மிகவும் உகந்த சூழ்நிலையை அளிப்பதற்காக, தொழிற் சட்டங்களை மத்திய அரசாங்கம் திருத்தி வருவதற்கு எதிராக இந்தியாவெங்கும் நடைபெறும் தொழிலாளர்களின் ஆர்பாட்டங்களின் ஒரு அங்கமாக, தமிழ்நாடு, கேரளா, தெலுங்கானா மற்றும் ஆந்திரப் பிரதேசத் தொழிலாளர்கள் தீரமான ஆர்பாட்டங்களில் பங்கேற்றனர்.

தமிழ்நாட்டில் மதுரை, காஞ்சிபுரம், தேனி, விருதுநகர், இராமநாதபுரம், சிவகங்கை மற்றும் பல நகரங்களிலும், பேரூர்களிலும் புதுச்சேரியிலும் கண்டன ஆர்பாட்டங்கள் நடைபெற்றன. பல்வேறு தொழிற் துறைகளைச் சேர்ந்த தொழிலாளர்களும் இந்தப் பேரணிகளில் பங்கேற்றனர். ஏஐடியுசி, எல்பிஎப், சிஐடியு, ஏஐசிசிடியு, ஐஎன்டியுசி, எச்எம்எஸ், டிஎன்எஸ்டிசி ஊழியர் கூட்டமைப்பு மற்றும் பல தொழிற் சங்கக் கூட்டணிகளும் இந்த ஆர்பாட்டங்களில் அரசுக்கு எதிராக மிகுந்த கோபத்தோடு பங்கேற்றனர்.

கேரளாவில் திருவனந்தபுரத்திலும், இடுக்கி மற்றும் பிற மாவட்டங்களிலும் நகரங்களிலும் எதிர்ப்பு ஆர்பாட்டங்கள் நடைபெற்றன. சிஐடியு, ஏஐடியுசி, பிஎம்எஸ், எச்ஆர்பிஇ சங்கம், கேபிடபிள்யூயு சங்கம், கேஎஸ்இடபிள்யூ சங்கம், எச்ஆர்பிடபிள்யூ சங்கம், யுடியுசி மற்றும் பலர் இந்த எதிர்ப்பு ஆர்பாட்டங்களில் பங்கேற்றனர். திருவனந்தபுரத்தில் நடைபெற்ற பேரணியில் ஆயிரக்கணக்கான தொழிலாளர்களும், தொழிற் சங்க செயல்வீரர்களும் பலாயத்திலுள்ள தியாகிகள் சதுக்கத்திலிருந்து கவர்னர் மாளிகை வரை பேரணியாகச் சென்று கூட்டத்தில் பங்கேற்றனர்.

தெலுங்கானாவில் ஐதிராபாதிலும், ஆந்திர பிரதேசத்தில் விஜயாவாடா மற்றும் விசாகப்பட்டினத்திலும் தொழிலாளர்களுடைய ஆர்பாட்டங்கள் நடைபெற்றன. ஏஐடியுசி, ஐசிடியு, சிஐடியு, ஐஎப்டியு, பிஎம்எஸ், ஏஐடியுசி, ஐஎன்டியுசி, எச்எம்எஸ் ஆகிய சங்கங்களும் மற்றவர்களும் பங்கேற்றனர். எஃகுத் தொழிற்சாலை, துறைமுகம், பிஎச்இஎல் ஆகிவற்றைச் சேர்ந்த தொழிலாளர்களும் எதிர்ப்புக் கூட்டங்களில் பங்கேற்றனர்.

லக்நௌ

பொருளாதாரத்தின் பல்வேறு துறைகளைச் சேர்ந்த 10,000-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் ஒரு வீரமான பேரணியை நடத்தினர். இரயில்வே, போக்குவரத்து, வங்கிகள் மற்றும் பல்வேறு துறைகளைச் சேர்ந்த தொழிலாளர்கள் இதில் பங்கேற்றனர். தொழிலாளர்களுடைய உரிமைகள் பறிக்கப்படுவதற்கு எதிரான இந்த ஐக்கியப் போராட்டத்தைத் தொழிலாளர்கள் தீவிரப்படுத்த வேண்டுமென கோரி ஆயிரக்கணக்கான துண்டறிக்கைகளை ஆல் இந்தியா தொழிலாளர்கள் கவுன்சில் வினியோகித்தனர்.

வதோத்ரா

இரயில்வேயில் 100 சதவிகிதம் அன்னிய நேரடி முதலீட்டைக் கொண்டுவரவும், இரயில்வேவை தனியார் மயப்படுத்தவும், இன்றுள்ள தொழிற் சட்டங்களைத் திருத்தவும் இருக்கும் இந்திய அரசாங்கத்தின் புதிய கொள்கையை எதிர்த்துப் போராடுவதற்காக, வெஸ்டர்ன் இரயில்வே மஸ்தூர் சங் (டபிள்யு ஆர் எம் எஸ்) உட்பட நேஷ்னல் பெடரேசன் ஆப் இந்தியன் இரயில்வே மென் (என்எப்ஐஆர்) ஒரு பேரணியை நடத்தியது. பிரதாப்நகரில் உள்ள வதோத்ரா இரயில்வே நிலைய அலுவலகத்தில் நடைபெற்ற இந்த ஆர்பாட்டத்தில் இரயில்வே ஊழியர்கள் பெரும் எண்ணிக்கையில் பங்கேற்றனர். மும்பை, வதோத்ரா, அமதாபாத், ராஜ்காட், பாவ்நகர், ரட்லம் உட்பட மேற்கு இரயில்வேயின் எல்லா ஆறு கிளைகளிலும் டபிள்யு ஆர் எம் எஸ்-வுடன்  சேர்ந்து என்எப்ஐஆர் ஆர்பாட்டங்களை நடத்தியது என்று டபிள்யு ஆர் எம் எஸ்-இன் தலைவர் ஷரிப் கான் பாதான் கூறினார்.

நமது நாட்டின் மேலும் பல நகரங்களில் டிசம்பர் 5, 2014 அன்று நடைபெற்ற ஆர்பாட்டங்கள் குறித்து செய்திக் குறிப்புகள் மேலும் வந்தவண்ணம் உள்ளன. இந்த சக்தி வாய்ந்த எதிர்ப்பு நடவடிக்கைகளை மேற் கொண்டதற்கு, நமது நாட்டுத் தொழிலாளி வர்க்கத்தைத் “தொழிலாளர் ஒற்றுமைக் குரல்” பாராட்டுகிறது. 

Pin It