அதிகாலை பொழுதிலும்
அந்திசாய்ந்த வேலையிலும்
நடையாய் நடக்கிறார்கள்.
ஒரு சிலரின் கையில் கம்பு
சிலரின் கையில் நாய்க்குட்டி
என அவரவர் விருப்பத்திற்கேற்ப
பிடிமானங்களுடன்
நடையாய் நடக்கிறார்கள்.
பெண்களின் பின்சரியும்
ஜடையைப்போல
முன்சரிந்த வயிறுகளைச் சுமந்தவாறு
நடக்கும் ஆண்களைப் பார்க்கையில்
வினோதமாயிருக்கிறது.
சர்க்கரை குறைக்க
கொழுப்பு குறைக்க
ரத்த அழுத்தம் குறைக்க என
அதிகரித்ததை குறைக்க
பெருங்கவலையோடு
நடக்கிறார்கள்.
அவர்களின் பின்னே
கையேந்தி யாசகம் கேட்டு
சுற்றிவருபவனின்
விலா எலும்புகளை
முறைத்துப் பார்க்கின்றன
நடைபயில்பவர்களின்
பிடியில் உள்ள நாய்கள்.
குறைத்தலாய் விரட்டுகின்றன குரல்கள்
" சில்லரை இல்லை போ"
- ப.கவிதா குமார் (
“பாஸ்ட் புட் “கலாச்சாரத்திற்கு மாறிவிட்ட இன்றைய யுகத்தில் அனைத்து நோய்களும் குறைந்தவயதிலேயே வந்துவிடுகிறது. ஆனாலும், ஒருவேளை உணவு இல்லாமல் உறங்குபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. ஆனாலும், உலகம் ஒளிர்கிறது என்றும், உணவுப்பொருள் கையிருப்பு அதிக அளவில் உள்ளது என்ற சொல்லாடல்களும் தொடர்ந்த வண்ணம் உள்ளது. நடைபயில்பவர்களை வைத்துப் பின்னப்பட்ட இக்கவிதை அருமை.