ஆண்டுகள் ஐந்து கடந்து ஆட்சி மாற்றம் நடந்திருக்கும் இந்த வேளையில் வாழ்த்துகளுக்கும் விருந்துகளுக்கும் இடையே தமிழக முதல்வருக்கு ஒரு வேண்டுகோள். இந்த தேர்தல் வெற்றியானது என்னுடையதோ/எங்களுடயதோ அல்ல மக்களுடையது என்று கூறிய தங்களின் உணர்தலும் அந்த மனப்பாங்கும் பாராட்டுதலுக்கு உரியது. ஒட்டுமொத்த தமிழக மக்களின் மனநிலையை அவர்கள் வாக்குச் சீட்டில் பதிய முற்பட்டு அது முடியாமல் போக ஒற்றை அழுத்தில் குறியீடாகக் காட்டினர். அது சிறு குறிப்புச் சீட்டாக இங்கே.

தமிழக அரசியல் வரலாற்றில் இதுவரையில் ஐந்து ஆண்டுகள் முடியும் முன்னரே மக்கள் வெறுப்படைந்து முடிவில் மாற்று அரசைத் தேடி ஓடுவதே முறையாகக் காணப்படுகிறது. பொறுப்பை அதிமுகவிடம் பிடுங்கி திமுகவிடமும் திமுகவிடம் பிடுங்கி அதிமுகவிடமும் கொடுப்பது தமிழக மக்களாகிய எங்களின் வாடிக்கை. மக்கள் எந்தக் கட்சி மீதும், தலைவர்கள் மீதும் பற்று கொண்டவர்கள் அல்லர் என்பதோடு ஒவ்வொரு முறையும் அநீதிகளுக்கும் அதர்மங்களுக்கும் ஆளாகும் பொழுது அவற்றிற்கு நிவாரணம் தேடி மாற்றத்தை வேண்டுகின்றனர் என்பதையே தெளிவுபடுத்துகிறது.
கடந்த ஐந்து ஆண்டுகளில் ஒட்டு மொத்த தமிழர்களும் தங்களின் மன உணர்வு, பாதுகாப்பு, நம்பிக்கை, வாழ்வாதாரங்களின் மீதான தேவை மற்றும் எதிர்பார்ப்பு போன்ற அதிமுக்கியன எல்லாவற்றிலும் மிகப்பெரிய ஏமாற்றத்தைச் சந்தித்திருக்கின்றனர். விளங்கக் கூறினால் தமிழக மீனவர்களின் மீதான அடுத்தடுத்த வன்முறை, இலங்கைத் தமிழர்களின் மீதான அக்கறையின்மை, கூட்டு சதி, ஊழல், விவசாயம் மற்றும் இன்ன பிற உழைக்கும் வர்க்கத்தை ஊக்குவிக்காமை, அனுதினமும் கிராமப்புறங்களில் கிட்டத் தட்ட அரை நாளுக்கான மின்வெட்டு இன்னும் பல. இந்த ஏமாற்றங்களுக்கு மாற்றாகவே இன்று மாற்றமாக ஆட்சிப் பொறுப்பு உங்கள் கையில்...

தமிழகத்தை இந்தியாவின் முதல் தர மாநிலமாக உருவாக்குவீர்களோ இல்லையோ நிலையான நீதி வழுவாத ஆட்சி அமைந்தால் அதுவே எங்களின் நிம்மதி மூச்சாக இருக்கும். கடந்த ஆட்சியை அன்றாடம் குறை கூறுவதும் வெறுமனே தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றுவதோடும் வரும் ஐந்தாண்டுகளைக் கடந்தால் நாங்கள் மீண்டும் மாற்றத்தை தேடி ஓடும் அதே நிலைக்குத் தள்ளப்படுவோம் என்பதில் எந்த ஐயமும் இல்லை. அல்லாமல் மேற்கண்டது போன்ற மக்களின் அதி அவசிய தேவைகளைப் போர்க்கால நடவடிக்கையில் பூர்த்தி செய்து மாநிலத்தின் வளர்ச்சிக்கும் வித்திட்டால் அடுத்த தேர்தலில் உங்கள் கட்சி வேட்பாளர்களைப் பரிந்துரைத்து நீங்கள் ஒரு சுவரொட்டி கூட ஒட்ட வேண்டிய அவசியமில்லை!

Comments

4 comments

4
Guest
//தமிழக அரசியல் வரலாற்றில் இதுவரையில் ஐந்து ஆண்டுகள் முடியும் முன்னரே மக்கள் வெறுப்படைந்து முடிவில் மாற்று அரசைத் தேடி ஓடுவதே முறையாகக் காணப்படுகிறது. பொறுப்பை அதிமுகவிடம் பிடுங்கி திமுகவிடமும் திமுகவிடம் பிடுங்கி அதிமுகவிடமும் கொடுப்பது தமிழக மக்களாகிய எங்களின் வாடிக்கை. மக்கள் எந்தக் கட்சி மீதும், தலைவர்கள் மீதும் பற்று கொண்டவர்கள் அல்லர் என்பதோடு ஒவ்வொரு முறையும் அநீதிகளுக்கும் அதர்மங்களுக்கும் ஆளாகும் பொழுது அவற்றிற்கு நிவாரணம் தேடி மாற்றத்தை வேண்டுகின்றனர் என்பதையே தெளிவுபடுத்துகிறது//.
மணற்கொள்ளை, கற்கொள்ளை, டி வி யில் ஏகபோகம், தொலைத்தொடர்பில் நேரடி வரம்பற்ற ஊழல், பத்திரிக்கைத்துறையில் ஆக்கிரமிப்பு, குடும்ப ஆட்சி, விலைவாசி உயர்வை ஒன்றும் செய்ய முடியாது என்ற நிதி அமைச்சரின் வ(வா)தம், பெட்ரோல் விலைக்கெதிராக கடிதமல்லாத கள்ள மௌனம், இலங்கைத்தமிழருக்காக கடிதம் மட்டும், முக்கியமான துறைக்கு மட்டும் டெல்லிக்கு, கலைஞர் என்ற பெயரைத்தவிர ஏதுமே தெரியாது (214 கோடி முதலீட்டில்) என்ற சப்பைக்கட்டு இன்னும் இன்னும் நிறைய இருக்கிறது.
AZHAHUMATHI.
This article correctly pointed out that the Thamzh Naadu peaple's aspirations,protection,hopes,needs of a decent life and expectations were betrayed by the past rulars.Nobody wants this would be repeated again.The DELHIWALLAAS tempted the past D.M.K.Chief Minister's family to involve many corruption activities and secretly recorded thier amazing wealth with the aid of their intellegence agencies. They threatend him and easily made him as their political puppet.It is our duty to bring this to the notice of the present C.M. Hope, Thamizh Naadu would be a Prosperous,Demacretic,Corruption Free state.
சுவாதி ச முகில்
தமிழக முதல்வராகப் பொறுப்பேற்றுள்ள அம்மா அவர்களுக்கு வாழ்த்துக்கள். நீங்கள் ஸ்ரீரங்கத்து தேவதையா? அல்லது கோடநாட்டு தேவதையா? பதில் உங்கள் கையில்.
arshiyaas
பண்பட்ட வார்த்தைகள் உங்கள் பேச்சில் தென்படுகிறது. அதை செயலாக்க முயற்சித்தாலே போதும். விழுந்த ஓட்டுக்களுக்கு பின்னால் எதிர்பார்ப்பு இருக்கிறது.

Leave a comment

Fields marked with * are required.

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.