உற்பத்தி முறையில் தேசிய வருவாயைக் கணக்கிடுவதற்கு மூன்று படிகள் உள்ளன.

1) உற்பத்தி செய்யும் நிறுவனங்களை அடையாளம் கண்டு அவற்றின் தொழில் செயல்பாடுகளின் அடிப்படையில் துறைவாரியாக வகைப்படுத்தப்படுகிறது.

2) ஒரு பொருளாதாரத்தின் உள்நாட்டுப் பகுதியில் உள்ள ஒவ்வொரு உற்பத்தி நிறுவனத்தாலும் சேர்க்கப்பட்ட நிகர மதிப்பு கணக்கிடப்படுகிறது. அதிலிருந்து அனைத்து நிறுவரங்களாலும் சேர்க்கப்பட்ட நிகர மதிப்பைக் கூட்டி நிகர உள்நாட்டு பொருளாக்க மதிப்பு பெறப்படுகிறது.

3) இதனோடு வெளிநாட்டிலிருந்து பெறப்பட்ட நிகர வருவாயை சேர்ப்பதன் மூலம் ஒரு பொருளாதாரத்தின் தேசிய வருவாய் பெறப்படுகிறது.

தொழில்துறைகளை வகைப்படுத்துதல்:

பொதுவாக, தொழில்துறை துறைகள் மூன்று வகைகளாக பிரிக்கப்பட்டுள்ளன:

  1. முதன்மைத் துறை,
  2. இரண்டாம் நிலை துறை, மற்றும்
  3. மூன்றாம் நிலை அல்லது சேவைத் துறை.

முதன்மைத் துறை:

இதில் விவசாயம், அதனுடன் தொடர்புடைய துறைகள், வனத்துறை, மீன்பிடித்துறை, சுரங்கத்துறை, குவாரி. இத்துறையில் இயற்கை வளங்களிலிருந்து நிலக்கரி, இரும்பு தாது மற்றும் பிற கனிமங்கள் மூலப்பொருட்கள் உற்பத்தி செய்யப்படுகிறது. இந்தியாவில் முதன்மைத் துறை (i) விவசாயம், (ii )வனத்துறை, மரம் வெட்டுதல் (iii) மீன்பிடித்துறை (iv) சுரங்கம், குவாரி என வகைபடுத்தப்பட்டுள்ளது. 

இரண்டாம் நிலை துறை:

 இது தொழிலக உற்பத்தித் துறைகளைக் கொண்டுள்ளது. இந்தியாவில், இரண்டாம் நிலை துறை (i) பதிவு செய்யப்பட்ட உற்பத்தி, (ii) பதிவு செய்யப்படாத உற்பத்தி, (iii) கட்டுமானம், (iv) மின்சாரம், எரிவாயு, நீர் வழங்கல் என பிரிக்கப்பட்டுள்ளது.

மூன்றாம் நிலை துறை:

இது சேவைத்துறைகளைக் கொண்டுள்ளது. இந்தியாவில் இந்தத் துறை பின்வருவனவற்றை கொண்டுள்ளது: (i) இரயில்வே, (ii) பிற போக்குவரத்து, கிடங்கு/பண்டசாலைகள், (iii) தகவல் தொடர்பு, (iv) வர்த்தகம், ஹோட்டல்கள், உணவகங்கள், (v) வங்கி, காப்பீடு, (vi) நிலத் தரகு, குடியிருப்புகளின் உடைமை, வணிக சேவைகள், (vii) பொது நிர்வாகம், பாதுகாப்பு மற்றும் (viii) மற்ற சேவைகள்.

நிகர மதிப்புக் கூட்டலின் மதிப்பீடு:

ஒரு பொருளாதாரத்தின் உற்பத்தித் துறைகள் அடையாளம் காணப்பட்ட பிறகு, அடுத்த கட்டமாக இந்த துறைகள் ஒவ்வொன்றாலும் கூட்டப்படும்/சேர்க்கப்படும் நிகர மதிப்பு அளவிடப்படுகிறது. மதிப்புக் கூட்டல் என்ற சொல் உற்பத்தி செயல்பாட்டால் மூலப்பொருட்களுடன் (உள்ளீட்டுப் பொருட்கள்/இடைநிலைப் பொருட்கள் எனக் குறிப்பிடப்படுகிறது) எவ்வளவு மதிப்பு கூட்டப்பட்டுள்ளது என்பதைக் குறிக்கிறது.

ஒரு நிறுவனத்தால் ஓராண்டில் தயாரிக்கப்படும் மொத்தப் பொருட்கள் அனைத்தையும் அதன் வெளியீடு என்று குறிப்பிடலாம். மதிப்பு கூட்டல் என்பது வெளியீட்டின் மதிப்புக்கும், அதை தயாரிக்கத் தேவையான உள்ளீட்டுப்பொருட்கள்/இடைநிலைப்பொருட்களின் விலைக்கும் உள்ள வேறுபாடே ஆகும்.

உதாரணமாக ஒரு நிறுவனம் ஒரு வருடத்தில் 100,000 ரூபாய் மதிப்புள்ள பொருட்களை தயாரிக்கிறது, அப்பொருட்களை ஆக்கத் தேவையான உள்ளீட்டுப் பொருட்களின் விலை 60,000 ரூபாய் என வைத்துக்கொள்வோம், அந்நிறுவனத்தால் சேர்க்கப்பட்ட மதிப்பின் அளவு 100,000 – 60,000 = 40,000. ஆகவே அந்நிறுவனத்தின் மதிப்பு கூட்டலின் அளவு 40,000 ரூபாய் ஆகும்.     

இவ்வாறு ஒரு தேசத்தில் உள்ள அனைத்து உற்பத்தி நிறுவனங்களின் மதிப்புக் கூட்டலின் அளவுகள் கணக்கிடப்பட்டு அவற்றை ஒன்றாகக் கூட்டித் தொகுப்பதன் மூலம் மொத்த மதிப்புக் கூட்டலின் அளவு கண்டறியப்படுகிறது.

ஒரு தேசத்தின் மொத்த உள்நாட்டு உற்பத்தி என்பது அதன் உள்நாட்டு எல்லைக்குள் உள்ள அனைத்து உற்பத்தி அலகுகளாலும் சேர்க்கப்பட்ட மதிப்புக் கூட்டலின் மொத்தக் கூட்டுத்தொகை ஆகும்.

இன்னொரு உதாரணத்தின் மூலம் இதை விரிவாகப் புரிந்து கொள்ள முடியும்.

ஒரு பொருளாதாரம் மூன்று உற்பத்தி நிறுவனங்களை மட்டுமே கொண்டுள்ளது என்று வைத்துக்கொள்வோம், அதில் முதல் நிறுவனம் தானியத்தை உற்பத்தி செய்கிறது, இரண்டாவது நிறுவனம் தானியத்தை மாவாக்குகிறது. மூன்றாவது நிறுவனம் மாவைத் திண்பண்டமாக ஆக்குகிறது.

நிறுவனம்

ஆக்கிய பொருள்

வெளியீட்டுப் பொருளின் மதிப்பு

இடைநிலை நுகர்வின் மதிப்பு

மதிப்புக்கூட்டல்

1

தானியம்

100

10

90

2

மாவு

150

90

60

3

திண்பண்டம்

250

150

100

 

மொத்தம்

500

250

250

       

முதல் நிறுவனம் ஆக்கிய தானியத்தின் மதிப்பு 100 ரூபாய். அந்த தானியம் இரண்டாவது நிறுவனத்தால் மாவாக்கப்பட்ட போது அதன் மதிப்பு 150 ரூபாய். மூன்றாவது நிறுவனம் இந்த மாவை திண்பண்டமாக்கும் போது அதன் மதிப்பு 250 ரூபாய். மூன்று நிறுவனங்களாலும் ஆக்கப்பட்ட வெளியீட்டுப் பொருட்களின் மொத்த மதிப்பு 500 ரூபாய் (100+150+250) ஆகும். ஆனால் இந்த 500 ரூபாயை மொத்த பொருளாக்க மதிப்பாகக் குறிப்பிட முடியாது. ஏனென்றால் மாவு, திண்பண்டம் ஆகிய இரண்டு பொருட்களுக்கும் தானியமே உள்ளீட்டுப் பொருளாக உள்ளது என்பதால் தானியத்தின் மதிப்பு இரு முறை சேர்க்கப்படுகிறது. மூன்று நிறுவனங்களாலும் சேர்க்கப்பட்ட மதிப்புக்கூட்டலின் அளவு முறையே 90, 60, 100 மட்டுமே அவற்றின் மொத்தத்தொகை 250 ரூபாய் மட்டுமே.வெளியீட்டுப் பொருட்களின் மொத்தமதிப்பு 500 ரூபாய். இதில் இடைநிலைப் பொருளின் மதிப்பு இருமுறை சேர்க்கபடுகிறது (double counting). இடைநிலைப் பொருளின் மதிப்பு இருமுறை சேர்க்கப்படுவதை தவிர்க்க ஒவ்வொரு நிறுவனத்தின் வெளியீட்டு மதிப்பையும் அப்படியே பயன்படுத்தாமல் அந்நிறுவனத்தால் சேர்க்கப்பட்ட மதிப்புக்கூட்டலின் அளவு மட்டுமே கணக்கிடப்படுகிறது. அதாவது வெளியீட்டு மதிப்பில் இடைநிலைப் பொருட்களின் மதிப்பு நீக்கப்படுகிறது.

மூன்று நிறுவனங்களால் சேர்க்கப்பட்ட மதிப்புக் கூட்டலின் மொத்தத்தொகையான 90 + 60 + 100 = 250 என்பதே மொத்த உள்நாட்டுப் பொருளாக்க மதிப்பு எனப்படுகிறது.

 ஒரு நாட்டின் அனைத்து உற்பத்தி நிறுவனங்களாலும் கூட்டப்பட்ட மதிப்புகளின் கூடுதலிலிருந்து மொத்த உள்நாட்டுப் பொருளாக்க மதிப்பு எனப்படுகிறது.இதிலிருந்து தேய்மான மதிப்பைக் கழிப்பதன் மூலம் நிகர உள்நாட்டுப் பொருளாக்க மதிப்பு பெறப்படுகிறது. சந்தை விலையில் கணக்கிடப்பட்ட உள்நாட்டுப் பொருளாக்க மதிப்பிலிருந்து நிகர சுற்றடி வரிகளைக் கழிக்கும் போது அடிப்படை விலையில் நிகர உள்நாட்டுப் பொருளாக்க மதிப்பு பெறப்படுகிறது.

மத்திய புள்ளியியல் அலுவலகத்தின் மதிப்பீட்டு முறையின் படி மொத்த உள்நாட்டுப் பொருளாக்க மதிப்பின் வரையறை பின்வருமாறு:

மொத்த மதிப்புக் கூட்டலையும் (GVA), பொருட்கள் மீதான அனைத்து வரிகளின் கூட்டுத்தொகையையும் ஒன்றாகக் கூட்டி அதிலிருந்து மானியங்களை கழிப்பதன் மூலம் மொத்த உள்நாட்டுப் பொருளாக்க மதிப்பு (அடிப்படை விலைகளில்) பெறப்படுகிறது. மொத்த உள்நாட்டுப் பொருளாக்க மதிப்பை தொகுப்பதற்கு பயன்படுத்தப்படும் மொத்த வரி வருவாயில் சரக்கு சேவை அல்லாத வரி வருவாயும், சரக்கு சேவை வரி வருவாயும் அடங்கும்.)

தேசிய வருவாய்:

நிகர உள்நாட்டுப் பொருளாக்க மதிப்புடன் (அடிப்படை விலையில்) நிகர வெளிநாட்டு வருவாயை கூட்டுவதன் மூலம் தேசிய வருவாய் பெறப்படுகிறது.

நிகர வெளிநாட்டு வருவாய்:

 1) நிகர ஊழியர் இழப்பீட்டையும்,

2) சொத்து மற்றும் தொழில்முனைவு மூலம் பெறும் நிகர வருவாயையும்

3) தேசத்தின் வெளிநாட்டு நிறுவனங்களின் நிகர வருவாயையும் கூட்டுவதன் மூலம் பெறப்படுகிறது.

நிகர வெளிநாட்டு ஊழியர் இழப்பீடு:

தற்காலிகமாக ஓராண்டுக்கும் குறைவாக வெளிநாட்டில் தங்கியிருக்கும் அல்லது வேலைபார்க்கும் தேசக்குடிமக்கள் வெளிநாட்டிலிருந்து பெரும் வருவாய்க்கும், தேசத்தில் தற்காலிகமாக ஓராண்டுக்கும் குறைவாக தங்கியிருக்கும் அல்லது வேலைபார்க்கும் வெளிநாட்டினர் தேசத்திலிருந்து பெறும் வருவாய்க்கும் இடையிலான வேறுபாடு.

வெளிநாட்டில் சொத்து, தொழில்முனைவு மூலம் பெறும் நிகர வருவாய்:

தேசக்குடிமக்கள் வெளி நாட்டிலிருந்து வட்டி, வாடகை, ஈவுத்தொகை லாபம் மூலம் பெறும் வருவாய்க்கும், தேசத்திலிருந்து வெளி நாட்டிற்கு வட்டி, வாடகை, ஈவுத்தொகை லாபம் மூலம் அளிக்கப்படும் வருவாய்க்கும் இடையிலான வேறுபாடு.

தேசத்தின் வெளிநாட்டு நிறுவனங்கள் தக்க வைத்துள்ள நிகர வருவாய்:

நிறுவனங்களின் விநியோகிக்கப்படாத லாபம் தக்க வைத்துள்ள வருவாய் என்று குறிப்பிடப்படுகிறது. வெளிநாட்டில் உள்ள ஒரு நாட்டின் நிறுவனங்கள் தக்கவைத்துள்ள லாபத்திற்கும், அந்த நாட்டிலுள்ள வெளி நாட்டு நிறுவனங்கள் தக்கவைத்துள்ள லாபத்திற்கும் இடையிலான வேறுபாடு.

மொத்த உள்நாட்டு பொருளாக்க மதிப்பு (அடிப்படை விலை) + வெளிநாட்டு நிகர வருவாய் = மொத்த தேசிய பொருளாக்க மதிப்பு (அடிப்படை விலை)

மொத்த உள்நாட்டு பொருளாக்க மதிப்பு (சந்தை விலை) + வெளிநாட்டு நிகர வருவாய் = மொத்த தேசிய பொருளாக்க மதிப்பு (சந்தை அடக்க விலை)

நிகர உள்நாட்டு பொருளாக்க மதிப்பு (சந்தை விலை) + வெளிநாட்டு நிகர வருவாய் = நிகர தேசிய பொருளாக்க மதிப்பு (சந்தை விலை)

நிகர உள்நாட்டு பொருளாக்க மதிப்பு (அடிப்படை விலை) + வெளிநாட்டு நிகர வருவாய் = நிகர தேசிய பொருளாக்க மதிப்பு (அடிப்படை விலை)

உற்பத்தி முறை மூலம் பொருளாதாரத்தின் தேசிய வருவாயை மதிப்பிடும் போது பின்வருவனவற்றை கருத்தில் கொள்ள வேண்டும்.

சொந்த நுகர்வுக்காக செய்யப்படும் உற்பத்தியும் தேசிய வருவாயில் சேர்க்கப்பட வேண்டும். உற்பத்தி செய்யப்பட்ட பொருளின் அளவை, சந்தை விலையால் பெருக்கி தேசிய வருவாயில் சேர்க்கவேண்டும்.

அரசு, தனியார் நிறுவனங்கள், குடும்பங்கள் தங்களுக்காக செய்யும் உற்பத்தியும் கணக்கிடப்பட்டு தேசிய வருவாயில் சேர்க்கப்பட வேண்டும்.

உரிமையாளர் வசிக்கும் வீடுகளின் வாடகையும் கணக்கிடப்பட்டு தேசிய வருவாயில் சேர்க்கப்பட வேண்டும்.

இரண்டாம் முறையாக விற்கப்படும் மறு பயன்பாட்டுப் பொருட்களின் வர்த்தக மதிப்பை தேசிய வருவாயின் பகுதியாக சேர்க்கப்படுவதில்லை. ஆனபோதும் அவை இடைத்தரகர்களின் மூலம் வர்த்தகம் செய்யப்பட்டால் அதற்காக பெறப்படும் தரகுசேவைக் கட்டணம் தேசிய வருவாயில் சேர்க்கப்படுகிறது.

- சமந்தா

Pin It