கோயிலில் வழிபட வந்த அருந்ததியர் சமூக மாணவர்கள் விபூதியைத் தொட்டதால் தாக்கிய பார்ப்பன அர்ச்சகர் ஜம்புநாதன் (49), அவரது மகன் சுகவனம் ஆகியோர் கைது செய்யப்பட்டு கோவை மத்திய சிறையில் அடைக்கப் பட்டனர். ஆனால் தீண்டாமைத் தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குகளைப் பதிவு செய்யாமல், மோசமான வார்த்தைகளால் திட்டியதாகவும் (பிரிவு 294பி), தாக்கியதாகவும் (பிரிவு 32) காவல்துறை வழக்குப் பதிவு செய்துள்ளது. மேட்டுப்பாளையம் பெரியார் திராவிடர் கழகத் தோழர்கள் மற்றும் சாதி ஒழிப்பு முன்னணித் தோழர்கள் இதில் தீவிரமாக செயல்பட்டு, குற்றவாளிகளைத் தண்டிப்பதில் முனைப்பாக செயல்பட்டுள்ளனர்.

கடந்த 28 ஆம் தேதி காலை மேட்டுப்பாளையத்தில் கூட்டுறவு காலனியில் உள்ள சக்தி விநாயகர் கோயிலில் பிளஸ் 2 படித்துள்ள வினித் (17), அவரது தங்கை சுருதி (14), உறவினர் பெண் ஜனனி (6) ஆகியோர் சாமி கும்பிடச் சென்றுள்ளனர். பிளஸ் 2 தேர்வில் வெற்றிப் பெற்ற வினித், தனது தங்கை சுருதியின் 10 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளிவரும் நாளில், தங்கைக்காக சாமி கும்பிட வந்திருந்தார். அந்தக் கோயில் மேல் தட்டுப் பகுதி மக்கள் வாழும் இடத்தில் உள்ளது. கோயிலில் அர்ச்சகர் எவரும் இல்லை. சாமி கும்பிட்ட பிறகு, கைக்கு அருகே இருந்த விபூதி தட்டிலிருந்து விபூதியை எடுத்து வைத்துக் கொண்டு, தனது தங்கையின் நெற்றியில் பூசியுள்ளார்.

அப்போது அங்கு வந்த பார்ப்பன அர்ச்சகர் ஜம்புநாதன் (49) வினித்தைப் பார்த்து, ‘நீ யாரடா? எந்தப் பகுதி?’ என்று கேட்டுள்ளார். வினித் ‘நடுவூர் பகுதி’ என்று கூறியவுடன், ‘சக்கிலியப் பயலா நீ; கோயிலுக்குள் வரவே உனக்கு உரிமை கிடையாது; விபூதி தட்டிலேயே கை வைக்கிறாயா?’ என்று கூறி அடித்தார். அப்போது அங்கே சென்ற பொது மக்கள் சிலர் பார்ப்பன அர்ச்சகர் அடிப்பதைப் பார்த்து, வேதனைப்பட்டு அடிப்பதை நிறுத்துமாறு கண்டித்துள்ளனர். அப்போது, பார்ப்பன அர்ச்சகர் மகன் சுகவனமும் ஓடி வந்து, ‘சக்கிலியப் பயலே; உனக்கு அவ்வளவு திமிரா?” என்று, கன்னத்தில் மாறி மாறி அடித்துள்ளான்.

செய்தியறிந்த பெரியார் திராவிடர் கழகத் தோழர்கள் கழக நகர அமைப்பாளர் சந்திரசேகர் நாகராசு (மாவட்ட செயலாளர்), சண்முகநாதன் (மாவட்ட அமைப்பாளர்), பாபு மற்றும் சாதி ஒழிப்பு முன்னணியைச் சார்ந்த தோழர்கள் நாகேந்திரன், ராமச்சந்திரன், வழக்கறிஞர் அலெக்ஸ் என்கிற கிருட்டிணமூர்த்தி ஆகியோர் காவல் நிலையம் சென்று தாக்கிய பார்ப்பன அர்ச்சகர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தினர். வினித்தின் தந்தை கிருட்டிணன், வேலை முடிந்து வீடு திரும்பியவுடன் நடந்த சம்பவத்தைக் கேட்டு, தனது நண்பர்களுடன் நேராக காவல் நிலையம் சென்று புகார் தந்தார்.

இதற்கிடையே பார்ப்பன அர்ச்சகர்களுக்கு ஆதரவாக கோயில் நிர்வாகியாக உள்ள காங்கிரஸ் பிரமுகர் மற்றும் தி.மு.க. முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் அருண்குமார் மற்றும் கோவில் உள்ள பகுதியைச் சேர்ந்த சாதி ஆதிக்கவாதிகள் காவல்நிலையம் வந்து, பார்ப்பன அர்ச்சகர்கள் மீது வழக்குப் போடக் கூடாது என்று மிரட்டினர்.  தீண்டாமைக் குற்றத்தின் கீழ் நடவடிக்கை எடுக்காவிட்டால், பெரியார் திராவிடர் கழகம் போராட்டத்தில் ஈடுபடும் என்று கழகத் தோழர்கள் எச்சரித்தனர்.

இதனைத் தொடர்ந்து காவல்துறை ஆய்வாளர் சோமசுந்தரம், உதவி ஆய்வாளர் தங்கவேல், தலைமை காவலர் வேலுமணி ஆகியோர் சம்பவம் நடந்த இடத்துக்கு நேரில் சென்று விசாரணை நடத்தி, குற்றம் நடந்தது உண்மையே என்பதை உறுதி செய்து, பார்ப்பன அர்ச்சகரையும் அவரது மகனையும் கைது செய்து மேட்டுப் பாளையம் நகர நீதிமன்றத்தில் நேர் நிறுத்தினர். நீதிபதி 15 நாள் காவலில் வைக்க உத்தரவிட்டார். கோவை மத்திய சிறையில் பார்ப்பன அர்ச்சகர்கள் அடைக்கப்பட்டனர்.  வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்கை விசாரிக்கக் கோரி கழகத் தோழர்கள் வற்புறுத்தி வருகிறார்கள்.

Pin It