இன்று, அரசியல்வாதிகள் நேர்மை, ஊழல் மறுப்பு, யாவர்க்கும் சம வாய்ப்பு என்று மேடைகள் தோறும் நா வற‌ளப் பேசிவிட்டுப் பதவிக்கு வந்ததும் அவற்றுள் ஒன்றினைத்தானும் செயல்படுத்த முன்வருவதில்லை. அதே போன்று, அரசுகளும் மனித உரிமைகள், பயங்கரவாதத்தை ஒழித்தல், மக்களாட்சியை ஏற்படுத்துதல் என்னும் போர்வையில் வலிமை குன்றிய நாடுகளின் தலைமைகளை மிரட்டுவது வழக்கமாகிவிட்டது.

நாடாளுமன்றங்களும், சட்டசபைகளும் அரசியலாளர்களின் சுயலாபங்களுக்கு ஏற்ப சட்ட ஒழுக்காறுகளை இயற்றுவது போன்று, வலிமை மிகுந்த நாடுகளின் ‘வர்த்தக’ லாபங்களுக்குத் துணைசெய்யும் அமைப்பாக உலக நாடுகளின் சபை மாறியிருக்கிறது.

இது போன்ற செயல்கள், சாதாரண மக்களைப் பாதிக்கும் அளவுக்கு, அரசியல்வாதிகளையும், அரசுகளையும் பாதிப்பதில்லை! மாறாகச் சம்பந்தப்பட்ட அரசுகளையும், அரசியலாளர்களையும் மேன்மேலும் வலுவுடையதாக்கவும், வளங்களை வளைத்துப் போடும் வாய்ப்பினை அதிகரித்திடவுமே உதவுகின்றன.

அண்மையில் லிபிய நாட்டின்மீது மேற்குலக நாடுகள் தொடுத்திருக்கும் தாக்குதல்கள், அந்நாடுகள் சென்ற நூற்றாண்டின் நடுப்பகுதிவரை உலகின் வறிய நாடுகளைத் தங்கள் பிடியுள் வைத்திருந்து சுரண்டிப் பிழைத்த வரலாற்றை நினைவூட்டுவதாக உள்ளது!

”ஊருக்குத்தான் உபதேசம், உனக்கல்லடி கண்ணே” என்னுமாப் போன்று, இந்த உலக நாடுகள் ஓயாது குறிப்பிடும் மனிதாபிமானம், இறைமை, மனித உரிமைகள் என்பன எல்லாம், அவற்றைப் பொறுத்த வரை வலிமை குன்றிய, வளரும் அல்லது வறிய நாடுகள் கடைப்பிடிக்க வேண்டிய கோட்பாடுகள் மட்டுமே போலும். இவையனைத்தையும் கடந்த ‘உயர்’நிலையினைத் தாம் எய்திவிட்டிருப்பதாக இவை எண்ணுகின்றனவோ என்னவோ?!

ஈராக்கின் முன்னைய அதிபர் சதாம் ஹுசெய்ன், குவெய்த்தின் மீது படையெடுத்ததைச் சாக்காகக் கொண்டு ஈராக்கைத் தனது எண்ணப்படி ஆட்டுவிக்கும் வாய்ப்பினை உருவாக்கிக் கொண்டது அமெரிக்கா. அதன் ‘உலக சண்டித்தனத்துக்கு’ அந்த வாய்ப்பினை வழங்கியவர் சதாமே ஆவர். அதற்குரிய தண்டனையினை அவர், இந்த நூற்றாண்டின் ஆரம்பத்தில் பெற்றும் விட்டார்.

அன்று, சதாமின் தவறு ஒன்றின் மூலமாக, மற்றொரு நாட்டின் மீது, முன் ஏற்பாட்டுத் தாக்குதலை மேற்கொள்ளும் [pre-emptive attack] அதிகாரத்தினை ஐக்கிய நாடுகள் சபையின் ஒப்புதலோடு பெற்றிருந்த அமெரிக்கா, அதிபர் சாதாமை வீழ்த்துவதற்கும்; அதனைப் பயன்படுத்தி ஈராக்கின் எண்ணெய் வளங்களை மேற்குலக வர்த்தக நிறுவனங்கள் பங்கு போட்டுக் கொள்ளவும் வழி ஏற்படுத்திக் கொடுத்தது.

உண்மையில், இரண்டாம் உலகப் போருக்குப் பின், உலக நாடுகளிடையே நிலவும் சமத்துவமின்மையைப் போக்கவும், ஓர் நாடு மற்றொரு நாட்டின் மீது- அதன் இறைமையை மதியாது- போர் தொடுப்பதைத் தவிர்க்கவும்; உலகின் மானுடத்தின் மேம்பாட்டுக்கான உத்திகளைக் கண்டறியவும் என உருவாக்கப்பட்ட ஐக்கிய நாடுகளின் சபை, காலப் போக்கில் வல்லரசுகளின் ஆசைகளுக்குத் தீனிபோடும் அமைப்பாக மாறிவிட்டிருப்பது வேதனையானது!

உலக மானுடத்தின் காவலர்கள் தாமே என்னும் மேற்குலக நாடுகளின் ‘மேட்டிமைத் தனம்’ அவர்களது முன்னைய நான்கு நூற்றாண்டுகாலக் ‘குடியேற்ற நாட்டுக் கொள்கையின்’ எச்சமே என்பதில் சந்தேகம் இல்லை. ஆனால், அதனை இன்றும் தமது பொருளாதார வளங்களைப் பெருக்கவும், தமக்கு அடங்காத அரசுகளை மிரட்டவும் எனக் குறுகிய எண்ணத்துடன் கையாள்வது, நாகரீக முதிர்ச்சி பெற்றுவிட்டோம் என வீம்பு பேசும் செயலுக்கு முரண்பாடானதல்லவா?

அரசுகளினால் அடக்கி ஒடுக்கப்படும் மக்கட்கூட்டம், எண்ணெய் வளம் மிக்க இஸ்லாமிய நாடுகளிலோ அல்லது முன்பு சோவியத் ஆதரவு நாடுகளாக விளங்கிய சில கம்யூனிஸ நாடுகளிலும் மட்டுந்தானா ?

அமெரிக்கவிற்குப் போட்டியாக ‘வல்லரசு’ப் பட்டத்தைப் பெற்றிருந்த சோவியத் ஒன்றியம் சிதறுண்டு பல நாடுகளாகப் பிளவுற்றதில் இருந்து, கடந்த இருபது வருடங்களில் மேற்கு நாடுகளின் ஆதரவோடு அல்லது தூண்டுதலால் விடுதலை அடைந்த நாடுகளின் பட்டியலை எடுத்துப் பார்த்தால், அவை ஏற்கனவே சோவியத் ஆதரவு நாடுகளாகவோ, அல்லது எண்ணெய் வளம் மிக்க இஸ்லாமிய நாடாகவோ இருப்பதைக் காணலாம்.

சோவியத்தின் ஆதரவு நாடாயிருந்த யூகோஸ்லேவியா; இஸ்லாமிய நாடான இந்தோனேசியாவில் இடம் பெற்றிருந்த கிழக்குத் தீமோர்; அதன் பின்னர் ஈராக் படையெடுப்பு, இந் நூற்றாண்டின் ஆரம்பத்தில் ஏற்பட்ட அமெரிக்காவின் உலக வர்த்தக மையம் தகர்க்கப்பட்டதன் எதிரொலியாக ‘பயங்கரவாதத்துக்கு எதிரான போர்’ என்னும் போர்வையில் சதாமின் அதிகாரத்தில் இருந்த எண்ணெய் வளம் மிக்க இஸ்லாமிய நாடான ஈராக் மீதான போர்; இப்போது மற்றொரு எண்ணெய் வள நாடான லிபியா?!

இதில் வேடிக்கை யாதெனில் சுதந்திரம் அடைந்த நாளில் இருந்து அரசியல் போராட்டமாகவும், பின்னர் முப்பதாண்டுகளுக்கும் மேலாக ஆயுதப் போராட்டமாகவும் தொடர்ந்து கொண்டிருந்த ஈழத் தமிழரின் போராட்டங்களை நசுக்குவதற்கு இலங்கை அரசுக்குப் பெருமளவிலான ஆயுதங்களையும், ஆலோசனைகளையும் இந்த மேற்கு நாடுகள்தாம் பல வருடங்களாக வழங்கிக்கொண்டிருந்தன!

இந்தியா, இறுதிக் காலத்தில் இலங்கை அரசின் இன அழிப்புக்குத் துணை நின்றது உண்மையாயினும், அந் நாட்டில் பல ‘தசாப்த’ங்களாகத் தொடர்ந்த ஓர் தேசியச் சிறுபான்மை இனத்தின் உரிமைக் குரல் இந்த நாடுகளின் செவிகளில் விழாமல் போனதற்கு; இலங்கை ஓர் எண்ணெய வளம் மிக்க இஸ்லாமிய நாடாகவோ, சோவியத் ஒன்றியத்தின் முழு ஆதரவைப் பெற்ற கம்யூனிச நாடாகவோ இல்லாதிருந்தது காரணமாயிருக்கலாம். இப்போது, மனித உரிமை மீறல் தொடர்பாக இலங்கை அரசினை அவை மிரட்டுவதுபோல் பாசாங்கு செய்வது கூட அந் நாட்டின் தலைமையைத் தமது வழிக்குக் கொண்டு வரும் ‘ராஜதந்திர’ நடவடிக்கையே அன்றி வேறில்லை.

மேற்குலகும், அதன் ‘ஊதுகுழல்’ போல் செயல்படும் ஐ.நாவும் மானுட விழுமியங்களுக்கு அளிக்கும் மதிப்பினை விடவும், ‘சுயலாபங்களுக்கு’த் தரும் முக்கியத்துவமே இன்று லிபியாவின் மீதான தாக்குதல்களின் பின்னணி எனலாம்.

இவ்வாறு கருத்துரைப்பது, லிபியாவின் தலைமையின் செயல்பாடுகளை ஆதரிப்பது என்பதல்ல. மாறாக, லிபியாவும், மேற்குலகின் மேய்ச்சல் நிலமாக மாறிக்கொண்டிருக்கிறது என்பதை வலியுறுத்துவதே ஆகும்.

[www.sarvachitthan.wordpress.com]

Pin It