வரிப் புகலிடங்கள் உலகம் முழுவதும் அமைந்துள்ளன. பெரும்பாலான வரிப் புகலிடங்கள் சுவிட்சர்லாந்து, இலக்சம்பர்க், பிரிட்டன், அமெரிக்கா போன்ற பணக்கார நாடுகளாகும், அல்லது பிரிட்டிஷ் விர்ஜின் தீவுகள், கேமன் போன்ற பணக்கார நாடுகளின் சார்புப் பகுதிகளாகும்.
எல்லா நாடுகளும் வரிப் புகலிடத்திற்கான அளவுகோலின் வீச்சில் ஏதாவது ஓரிடத்தில் உள்ளன. அவற்றில் சில சிறிய அளவில் உலகளாவிய வரி மோசடியைச் செயல்படுத்துகின்றன, மற்றவை பெரிய அளவில் செயல்படுத்துகின்றன. ஒவ்வொரு நாடும் உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் உலகளாவிய வரி மோசடியைக் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க முடியும் என்ற போதும் கூட, மிக மோசமாகக் குற்றமிழைக்கும் வரிப் புகலிடங்கள் மற்ற நாடுகளை விட உலகளாவிய வரி மோசடியில் மிகப் பெரிய பங்கைச் செயல்படுத்துகின்றன. இந்த மோசமான குற்றவாளிகளை நான்கு குழுக்களாக தொகுக்கலாம்.
முதலாவது குழுவில் ஐக்கிய முடியரசு, அதனைச் சார்ந்த ஜெர்சி, குர்ன்சி மற்றும் ‘ஐல் ஆஃப் மேன்’, அதன் 14 வெளிநாட்டு பிரதேசங்களில் பெரும்பாலும் கரீபியனில் உள்ள ஏழு பகுதிகளான பிரிட்டிஷ் விர்ஜின் தீவுகள், கேமன், பெர்முடா, டர்க்ஸ், கைகோஸ் போன்றவை அடங்கும்.
இரண்டாவது குழுவில், பெருநிறுவன நடவடிக்கைகளுக்குப் பெரிதும் உதவுகிற இலக்சம்பர்க், நெதர்லாந்து, அயர்லாந்து, சுவிட்சர்லாந்து உள்ளிட்ட ஐரோப்பியக் குழுமம், மற்றும் லிச்சென்ஸ்டீன், அன்டோரா போன்ற சிறு பகுதிகள் உள்ளன.
மூன்றாவது குழுவில் அமெரிக்கா முக்கியப் பங்காளராக உள்ளது. கூட்டாட்சி அளவிலும் (குறிப்பாக வங்கிக் கமுக்கத்தை வழங்குகிறது) மாநில அளவிலும் (டெலாவேர், சவுத் டகோட்டா போன்ற மாநிலங்கள்) கமுக்கப் போலி நிறுவனங்கள், அறக்கட்டளைகளைக் கொண்டுள்ளன.
நான்காவது குழுவில் ஆசியப் புகலிடங்கள் உள்ளன, குறிப்பாக ஹாங்காங், சிங்கப்பூர், மக்காவ், மொரிஷியஸ். இவற்றுக்கு அப்பால், துபாய், பனாமா, சீஷெல்ஸ், குக் தீவுகள் ஆகியவையும் இதில் அடங்கும்.
வரிப் புகலிடங்களால் நாடுகள் இழக்கும் மொத்த வரி இழப்புகளில் பாதிக்கும் மேலானதற்கும் காரணமான நான்கு நாடுகளை "வரி ஏய்ப்பின் அச்சு" என்பர். அவை: இங்கிலாந்து, இலக்சம்பர்க், நெதர்லாந்து, சுவிட்சர்லாந்து. 2020ஆம் ஆண்டில் பொருளாதார ஒத்துழைப்பு, வளர்ச்சிக்கான அமைப்பின் (OECD) தரவுகளின் பகுப்பாய்வு, வரி ஏய்ப்பு அச்சு நாடுகளால் ஒவ்வொரு ஆண்டும் மொத்தமாக $237 பில்லியன் வரிவருவாய் இழக்கப்படுகிறது எனக் காட்டுகிறது.
Source: Tax Justice Network
- சமந்தா