மதிமுக என்கிற கட்சியின் மீதும் வைகோ என்கிற தனி மனித ஆளுமை மீதுமான அக்கறையில், இவ்விதழில் ஆங் காங்கே சில கருத்துகளைச் சொல்லியிருந்தாலும், தொகுப்பாக சில.

* வைகோ திமுகவை விட்டு வெளியேறிய கையோடே மாற்று அணி குறித்து சிந்தித்திருக்கவேண்டும். அப்படி சிந்தித் திருந்தால் தொடக்கத்தில் சில இடர்களைச் சந்தித்திருந்தாலும் இடையில் தமிழீழத்தில் தமிழகத்தில் ஏற்பட்ட வரலாற்று நிகழ்வுகளில் அவரது நிலைப்பாட்டில், செயல்பாட்டில் அவர் மாமனிதராக உயர்ந்திருப்பார். மதிமுக தமிழகத்தில் இன்று மாபெரும் சக்தியாக வளர்ந்திருக்கும். அந்த வாய்ப்பு கைநழுவிப் போயிற்று.

* கூட்டணி அரசியலில் தொடர்ந்து சங்கடமான அனுபவங்கள், கடந்த நாடாளுமன்றத் தேர்தலின் போதே வைகோ, அதிமுகவால் புறக்கணிக்கப்பட்டார். அப்போதே வைகோ சுதாரித்து வெளியே வந்திருந்தாலும் கூட இன்று ஓரளவு தனிப் பெரும் சக்தியாக நின்றிருப்பார். இந்த வாய்ப்பும் போயிற்று.

இப்படி இழந்துபோன வாய்ப்புகளைப் பற்றிக் குறிப்பிடுவது துயரங்களையும் சோகங்களையும் மீட்டு வதற்காக அல்ல. நாம் இதிலிருந்து பாடம் கற்று அனுபவம் பெற்று நம் எதிர்காலத் திசையைத் தீர்மானிக்க வேண்டும் என்பதற்காகத்தான். அந்த அடிப்படையில் சில.

1. வைகோ இனி எந்த அணியிலும் இரண்டாம் நிலை, மூன்றாம் நிலைக் கட்சியாக கூட்டு சேர்வது அர்த்தமற்றது. அது அவருக்கோ கட்சிக்கோ நல்லதல்ல. எல்லோரும் இவரைப் பயன்படுத்திக் கொண்டு தூக்கி எறிவார்களே தவிர, இவருக்கோ கட்சிக்கோ உரிய அங்கீகாரம், இடம் தரமாட்டார்கள். ஆகவே வைகோ இனி அந்த சிந்த னையை விட்டுவிடவேண்டும்.

2. இதற்கு மாற்றாக தன் முயற்சியில், தன் தலைமையில் அல்லது தனக்கு இணையான ஆளுமை கொண்ட தலைவர்களது கூட்டுத் தலைமையில் மூன்றாவது அணி மாற்று அணி என்பதை உருவாக்க வேண்டும். தமிழக அரசியலில் இந்த இடம் இன்றுவரை வெற்றிடமாகத்தான் இருக்கிறது. அந்த வெற்றிடத்தை வைகோவும், அவருக்கு இணையான தலைவர்களும் அவர்கள் சார்ந்த அணிகளும் கூட்டாக நிரப்பி ஒரு வலுமிக்க அணியை உருவாக்கவேண்டும்.

3. இப்படி ஒரு நிலைப்பாட்டை மேற்கொண்டால் சில சிக்கல்களைச் சந்திக்க வேண்டி வருமே. கட்சி அமைப்பில் வேறு சிலதை எதிர்பார்த்து காத்திருந்த ஒரு சிலர், அதற்கான தேடலில் வேறு இடம் நோக்கிப் போக வாய்ப்பாகி விடுமே என்றால் அப்படிப் போகிற யாராவது இருந்தால் போகட்டும், பரவாயில்லை. கட்சியின் புதிய நிலைப்பாட்டில் கட்சிக்குப் புதியதாக பலபேர் வருவார்கள். அந்தப் புதிய சக்திகள் கட்சிக்குப் புது ரத்தம் பாய்ச்சும். கட்சி புதிய வீச்சோடும், புதிய எழுச்சியோடும், புதிய செயல் திட்டத்தோடு மக்களிடையே செல்வாக்கு பெறும். பிறகு அது தமிழகத்தில் புறக்கணிக்கப்பட முடியாத மாபெரும் சக்தியாக வலுப்பெறும்.

எனவே, இவற்றையெல்லாம் கருத்தில் கொண்டு, தேர்தலுக்குப் பிறகு வைகோவும், மதிமுகவும் ஒரு நல்ல முடிவு எடுக்க வேண்டும். தமிழக அரசியலில் மாற்று அணிக்காக நிலவும் வெற்றிடத்தை நிரப்பி, தமிழகத்தில் வரலாறு படைக்கவேண்டும். இதுவே தமிழ் உணர் வாளர்களது தமிழக மக்களது விருப்பமும்.

Pin It