பாவம்! நம்முடைய பார்ப்பன ஆதிக்க இந்திய அரசு பார்ப்பன ஆதிக்கத்தைத்தான் தூக்கிப் பிடிப்போம் என்றும், சூத்திரர்கள் படும் துன்பங்களைப் பற்றி எள் முனையளவும் கவலைப்பட மாட்டோம் என்றும் எவ்வளவு தெளிவாகச் சொன்னாலும், இந்த சூத்திரர்கள் பார்ப்பன ஆதிக்க இந்திய அரசையே நம்பி இருப்போம் என்ற அடம்பிடித்தால், பாவம், பார்ப்பனர்கள் இதற்கு மேல் என்னதான் செய்ய முடியும்? அதுவும் சூத்திர மக்களின் தலைவர்கள் என்று சொல்லிக் கொள்கிற வர்களும் பார்ப்பனர்களுடன் சேர்ந்து ஒத்து ஊதினால்....?

இந்தப் பீடிகை எதற்கு? செய்தி என்ன? என்று கேட்கிறீர்கள்? ஒன்றுமில்லை. இரஷ்யாவில் உள்ள சைபீரியா பகுதியில் உள்ள ஒரு நீதிமன்றம் பகவத் கீதை நூலைத் தடை செய்யப் போவதாகக் கேள்விப் பட்டு, 19.12.2011 அன்று இந்திய நாடாளுமன்றமே அமளி துமளி பட்டுப் போனது. இந்த அமளி துமளியில் கட்சி எல்லைகளைக் கடந்து காங்கிரஸ், பா.ஜ.க., லல்லுபிரசாத் யாதவின் ராஷ்ட்டிரிய ஜனதாதளம், முலாயம் சிங் யாதவின் சமாஜ்வாடி கட்சி, மாயா வதியின் பகுஜன் சமாஜ் கட்சி, மற்றும் பிற கட்சிகளைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள், உலகில் பெரிய பிரளயம் ஏற்பட்டு விட்டதைப் போன்ற அவசர கோலத் தில் இதற்கு எதிராக இந்திய அரசு உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று துள்ளிக் குதித்தனர். மறு நாளே (20.12.2011 அன்று) இந்திய அரசு இரஷ்ய அரசிடம் சைபீரிய நீதிமன்றத்தின் இந்நடவடிக்கையைப் பற்றித்தனது தீவிரமான எதிர்ப்பைத் தெரிவித்தது.

இந்த எதிர்ப்புப் பற்றிய விவரத்தைத் தெரிந்து கொண்ட சைபீரிய நீதிமன்றம் தனது தடை உத்தரவை முழுமையாகப் பார்க்கும்படியும், பகவத் கீதையையோ, அதன் மொழி பெயர்ப்பையோ தடைசெய்யவில்லை என்றும், அதற்கு உரை எழுதியவர்கள், மாற்றுக் கருத் தினரை அவமதிப்பாக எழுதியுள்ள விளக்க உரைகளை மட்டுமே தடை செய்து இருப்பதாகவும் 23.12.2011 அன்று தன்னிலை விளக்கம் அளித்துள்ளது.

சரியான விளக்கங்களை எல்லாம் ஏற்றுக்கொண்டே இருந்தால் இறுதியில் பார்ப்பன ஆதிக்கப் பிடிப்பு தளர்வதில் கொண்டு போய் விட்டுவிடும் என்பதை அறியாதவர்களா பார்ப்பனர்கள்? சைபீரிய நீதிமன்றத்தின் விளக்கத்தைச் சிறிதும் பொருட்படுத்தாத இந்தியப் பார்ப்பன அரசு 27.12.2011 அன்று சைபீரிய நீதி மன்றத்தின் நடவடிக்கை இந்திய மக்களின் உணர்வு களைப் புண்படுத்துவதாகவும், இதற்கு முறையான தீர்வு காணப்பட வேண்டும் என்றும் இரஷ்ய அரசிடம் உறுதியாகத் தெரிவித்தது.

இதன் தொடர் விளைவாக 28.12.2011 அன்று சைபீரிய நீதிமன்றம், பகவத் கீதையின் மீதல்ல; அதன் மொழிபெயர்ப்பின் மீதுமல்ல; அதற்கு எழுதப்பட்ட மாற்றுக் கருத்தினரின் மீது வன்முறையை ஏவிவிடும் விளக்க உரைக்கு எதிரான வழக்கைத் தள்ளுபடி செய்து தீர்ப்பளித்தது. மாற்றுக் கருத்தினர் மீதான வன்முறைக்கு எதிரான வழக்கில் வெற்றி கண்ட பெருமிதத்தில் இந்திய அரசு 29.12.2011 அன்று தனது முழு மகிழ்ச்சியைத் தெரிவித்துக் கொண்டது.

தங்களை நாத்திகர்கள் என்ற பிரகடனம் செய்து கொண்டவர்கள் இந்திய அரசின் இந்த அடாவடிச் செயலைக் கண்டிப்பதற்குப் பதிலாக, பகவத் கீதை மக்கள் விரோதக் கருத்தைக் கொண்டுள்ளது என்று ஏற்கெனவே தாங்கள் கூறியுள்ள கருத்துகளையே மீண்டும் மறுபதிப்பு செய்துள்ளார்கள். சைபீரிய நீதி மன்றம் பகவத் கீதை மீதும், அதன் மொழிபெயர்ப்பின் மீதும் தடைவிதிக்கவில்லை என்றும் ‘ஹரே கிருஷ்ணா’ அமைப்பின் நிறுவனர் எழுதிய வன்முறையைத் தூண்டும் விளக்க உரைக்குத் தான் தடை விதித்துள்ளதையும் சுட்டிக்காட்டி, வன்முறையைத் தூண்டும் ஒரு தனி நபரின் விளக்க உரைக்கு அரசு வக்காலத்து வாங்கு வதைச் சுட்டிக்காட்டி மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத் தத் தவறிவிட்டனர்.

இது ஒருபுறம் இருக்க, நமது மீனவர்கள் இலங்கைக் கடற்படையினரால் தாக்கப்படுவதும், அவர்கள் ஒவ் வொரு நாளும் செத்துப் பிழைப்பதும், ஐம்புலன்களும் அவிந்துபோன ஒரு சதைப் பிண்டத்தினால் கூட அறிந்து கொள்ள முடியக் கூடிய அளவிற்கு, ஒரு கெட்டியான உண்மையாக இருக்கிறது. ஆனால் நமது இந்திய அரசினால் அதை நம்ப முடியவில்லையாம். தமிழக மீனவர்களுக்கு இந்தியக் கடற்படை பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரைக் கிளையில் தொடரப்பட்ட பொதுநல வழக்கு ஒன்றிற்கு 6.1.2012 அன்று பதிலளித்த இந்திய அரசு, தமிழக மீனவர்கள் தாக்கப்படுவதாகக் குற்றச்சாட்டுத் தான் உள்ளதாகவும், இதை மெய்ப்பிப்பதற்கு ஆதாரம் எதுவும் இல்லை என்றும் கூறியுள்ளது. மேலும் அப்படி ஏதாவது தாக்குதல் நடந்து இருந்தால் அது இலங்கைக் கடல் பகுதியில்தான் என்றும், ஆகவே இதில் இந்திய அரசு தiயிடும் படியான காரணம் எதுவும் இல்லை என்றும் இந்திய அரசு கூறியுள்ளது. இதுமட்டுமல் லாமல் தமிழக மீனவர்கள் இலங்கைக் கடலுக்குள் செல்வதும் சிங்கள மீனவர்கள் தமிழகக் கடற்பகுதிக்குள் வருவதும் தான் மோதலுக்குக் காரணம் என்பதையும் ஒப்புக்கொண்டுள்ளது.

மக்கள் கொஞ்சம் சிந்தித்துப் பார்க்க வேண்டும். பகவத் கீதைக்கு ஒரு தனிமனிதர் எழுதிய வன்முறை நோக்கங் கொண்ட விளக்க உரைக்கு வெகு தொலைவிலுள்ள அயல்நாட்டைச் சேர்த்த ஒரு நீதிமன்றம் தடைவிதித்ததினால் யாரும் எவ்விதப் பாதிப்பும் அடைய வில்லை. ஆனால் ஏதோ பிரளயமே ஏற்பட்டுவிட்டது போல் இந்திய அரசு துள்ளிக் குதிக்கிறது. பகவத் கீதைக்கு எத்தனையோ பேர்கள் விளக்க உரை எழுதி இருக்கிறார்கள். அவற்றில் ‘ஹரே கிருஷ்ணா’ இயக்க நிறுவனரின் உரைக்குத் தான் தடைவிதிக்கப்பட்டது. தேவைப்பட்டால் அவ்வுரைக்கு மாற்று உரை எழுதி, தடையை நீக்க மனு செய்யும்படி அவ்வியக்கத்தி னருக்கு இந்திய அரசு அறிவுறுத்தி இருக்கலாம். அதை விட்டுவிட்டு அரசு உறவிலேயே விரிசல் ஏற்பட்டு விடும்படியான அளவில் வெகுண்டு எழுந்தது.

ஆனால் தமிழக மீனவர்கள் இலங்கைக் கடற்படையினரால் தாக்கப்படும் விவகாரத்தில், இரு நாட்டு மீனவர்களும் எல்லை தாண்டுவதைப் பற்றிக் குறிப்பிட்டு, அதனால் தமிழக மீனவர்கள் தாக்கப்பட்டு இருக்கலாம் என்றும் கூறிவிட்டு, தாக்கப்படுவதற்கான ஆதாரம் ஏதும் இல்லை என்று இந்திய அரசு கூசாமல் கூறுகிறது. சிங்கள மீனவர்கள் எல்லை தாண்டினாலும் பாதுகாப்பாகத் திரும்பி செல்வது போல, தமிழக மீனவர்களும் எல்லை தாண்டினாலும் பாதுகாப்பாகத் திரும்ப வேண்டிய ஏற்பாட்டைச் செய்ய வேண்டும் என்று இந்திய அரசு இம்மியளவும் அக்கறை கொள்ளவில்லை.

இந்த இரு நிகழ்வுகளிலும், பார்ப்பன இந்திய அரசை மக்கள் பிரதிநிதிகள் யாரும் கண்டிக்கவில்லை. முக்கியமாக ஒடுக்கப்பட்ட மக்களின் பிரதிநிதிகள் என்று சொல்லிக் கொண்டு பதவிச் சுகம் அனுபவிக்கும் அரசியல் கட்சிகள் அனைத்தும் பார்ப்பன இந்திய அரசுடன் இணைந்து கூத்தடித்துக் கொண்டு இருக்கின்றன.

பார்ப்பனர்கள்தான் என்ன செய்வார்கள்? உழைக்கும் மக்கள் எவ்வளவு துன்பங்களுக்கு உட்பட்டாலும் அதைப்பற்றி அக்கறை கொள்ளமாட்டோம் என்றும், பார்ப்பன ஆதிக்கத்திற்கு எதிராக ஏதாவது நடந்து விடுமோ என்று இம்மியளவு சந்தேகம் வந்தாலும், அதை ஒழித்துவிட்டுத்தான் மறுவேலை பார்ப்போம் என்றும் தெளிவாகத் தெரிவிக்கவே செய்கின்றனர். நாம் அச்சத்தினாலோ, எச்சில் பொறுக்கும் ஆசையினாலோ, அல்லது மௌடீகத்தினாலேயோ இதைப் புரிந்து கொள்ளவில்லை என்றால் பாவம் பார்ப்பனர்கள் என்னதான் செய்வார்கள்?

Pin It