சுவீடன் பெற்ற சிட்டுக் குருவி
புவியைக் குளிர்விக்கும் அக்னிக் குஞ்சு
பூமித் தாயின் செல்லக் குட்டி கிரெடா
காலநிலை மாற்றத்தை 8 வயதில் கேள்விப்பட்டாள்
பள்ளியில் பல படங்களைப் பார்த்தவள்
பட்டினியில் பனியிலா பனிக்கரடி பார்த்துருகினாள் நெகிழியால் அழும் கடல் கண்டு நெகிழ்ந்தழுதாள் படங்கள் முடிந்ததும் பலர் அதை மறந்தனர் – எதையும் எளிதில் கடந்துசெல்லும் மனநிலையைக் கடந்தவளான கிரெடா பெருங்கவலையால் பெருங்கோபத்துடன் தங்கினாள் பொம்மைகளோடு விளையாடும் வயதில் போராளியானாள்
பொறுப்பற்ற பெரியோரிடம் பேச மறுத்து 11 வயதில்
பேசுவதை, சாப்பிடுவதை 2 மாதம் நிறுத்தியவள்
பட்டினிப் போராட்டத்தால் பத்து பவுண்டு இழந்தாள்
காலநிலை பற்றியே ஆறாண்டு ஆய்ந்தாள் -- பட்டத்திற்கா?
பதவிக்கா? பணத்திற்கா? இல்லை, புவியைப் பாதுகாக்க
புவியைப் பாதிக்கும் அனைத்தையும் துறந்தாள்
யாருமறியா பேசாச் சிறுமியான தன்னால்
என்ன செய்ய முடியும் என வருந்தியவள்
தன் வாதத்தால் தம் பெற்றோரையே இசைவித்தாள்
வருந்துவதை விட்டு செயலால் சீர்படுத்தலாம்
என்ற முடிவுடன் ஆட்டிசத்தையே ஆயுதமாக்கினாள்
பெருஞ்சினத்தைப் பெருஞ்செயலாக்கினாள்
தாய் தந்தையை தன் வழிக்கு மாற்றினாள்
பசுங்குடில், காய்கறித் தோட்டம், மிதிவண்டி, மின்னுந்து
எனக் குடும்பத்தையே பசுங்குடும்பமாக்கினாள்
சுவீடன் உலகின் முற்போக்கான காலநிலைச் சட்டங்களைக்
கொண்டிருப்பதாக பெருமை கொண்டிருந்த போதும்
தேர்தல் அரசியலில் பேசப்படாத வட ஐரோப்பிய வெப்ப அலை,
அங்கிருந்து பரவிய காட்டுத் தீ கிரெடாவைப் பற்றியது
பார்க்லாந்த் பள்ளிக் குழந்தைகளின் போராட்டத்தைப்
பார்த்தவள் புறப்பட்டாள்! பள்ளிக்கா? அல்ல..
போராட்டத்திற்கு, பதாகையுடன் நாடாளுமன்றத்தின்முன்
மூன்றுவாரத் தொடர் போராட்டத்தைத் தொடங்கினாள்
பாரிஸ் ஒப்பந்தத்தை செயல்படுத்துங்கள் -- 2050ஐத்
தாண்டிப் பார்க்காத சுவீடன் முன்மாதிரியா?
பசுங்குடில் வாயுக்களை 80% குறைக்க வேண்டும்
தலைவர்களே உங்கள் அரசியல் தோற்று விட்டது
காலநிலை நீதிக்கான அரசியலை செயல்படுத்துங்கள்
எங்கள் எதிர்காலத்தில் ஏன் எச்சமிடுகிறீர்கள்
குழந்தைகளை விரும்புவதாகக் கூறி எங்கள் கண் முன்னே ஏன் எதிர்காலத்தைத் திருடுகிறீர்கள் என்று கிரெடா பெரியோரைச் சிறியோராக்கினாள்,
கிரெடாவால் கதிகலங்கிய ஆட்சியர்களிடம்
குழந்தையின் கேள்விகளுக்கு பதிலே இல்லை
தேர்தல் முடிவுக்குப் பின் பள்ளி சென்று
பள்ளிகளையும் போராட்டக் களமாக்கினாள்
சிறியோரைப் பெரியோராக்கினாள், பள்ளிப் படையுடன்
வெள்ளிக் கிழமைகளில் போராட்டங்களைத் தொடர்ந்தாள்
வெள்ளிக் கிழமைகளை வருங்காலத்திற்காக்கினாள்
காலநிலைக்கு நீதிகேட்ட போராட்டம் பனியிலும்
மழையிலும், வெயிலிலும், விடுமுறையிலும் தொடர்ந்தது
பள்ளி வகுப்புகள் வீணாகிறதே என்கிறீர்களே
பல பத்தாண்டுகளை செயலின்மையால் வீணாக்கிய
ஆட்சியாளர்களை நினைவூட்டுகிறேன்
எங்களுக்கு எதிர்காலமே இல்லாத போது
வருங்காலமே வராத காலமாகிய போது
பள்ளிகள் எதற்கு? படிப்பெதற்கு?
படிப்பது ஒன்று நேரில் பார்ப்பது ஒன்று
படித்ததை சமூகம் செயல்படுத்தாத போது
பள்ளி செல்வதில் என்ன பொருள்?
இருக்கையைத் தேய்க்கவா கல்வி?
அறிவியலின் பின்னால் அணி திரளுங்கள்
பள்ளி வாரத்தில் ஓர் நாள் குறைவதால்
பூமி முடிவுக்கு வரப் போவதில்லை -- நாங்கள்
வீட்டுப் பாடத்தை செய்து விட்டே போராடுகிறோம்,
அவர்களோ வீட்டுப் பாடங்களை செய்யவில்லை
அறிவியலுக்கு இணங்கி எதிர்காலத்தைக் கொடுங்கள்
அடுத்த நொடியே பள்ளிக்குத் திரும்புகிறோம்
என வாக்குக் கொடுத்தாள் கிரெடா
செயலையே சிறந்த சொல்லாகக் கருதும்
கிரெடாவின் கவனமெல்லாம் காலநிலையில்
2030க்குள் 50% பசுங்குடில் வாயுக்களை குறைக்கா விடில்
நம் கட்டுப்பாட்டை மீறி அழிவிற்கான மீள முடியாத
தொடர்வினையில் சிக்கிக் கொள்வோம்,
அதுமனிதகுலத்தின் பெரும் தோல்வியாகிவிடும்
நம் சாதனைகள்ஒன்றுமில்லாமல்போகும்
தலைவர்களே, உங்கள் தலைமை தோற்றுவிட்டது
நீங்கள் உரிய காலத்தில் செயல்படவில்லை.
அலட்சியத்தை, செயலின்மையைத் தேர்வு செய்ததால்
எக்காலத்திலும் மாபெரும் வில்லன்களாகவே
நீங்கள் நினைவு கூரப்படுவீர்கள் -- 2030க்குள்.
வளர்ந்து பொறுப்பேற்கும் நிலைக்கு
நாங்கள்வரும் வரை காலம் காத்திருக்குமா
வளரும் குழந்தைகளின் வருங்காலத்தைப்
பாதுகாக்க உங்கள் இலக்குகள் போதாது என்கிறாள்
எதிர்மறை விசயங்களே கூறக் கூடாது என்கிறார்கள்
நேர்நிறை விசயங்களே இல்லையெனில் பொய்யான
நம்பிக்கையைப் பரப்பலாமா? உண்மையையே சொல்ல வேண்டும்.
நெருக்கடிகளை நெருக்கடியாகக் கருதாமல் தீர்வு இல்லை-
என்பவளிடம் இந்திய ஆட்சியாளர்கள் கற்றுக் கொள்வார்களா?
தன்மீது கொட்டப்படும் வெறுப்பையும் மாற்றத்தின் தொடக்கமாகப் பார்ப்பவள் அவர்களை விமர்சிக்கும் போது என்னை அவர்கள் பாராட்டுவது விசித்திரம்தான் எதையுமே செயல்படுத்த வில்லையே? என்பவளை நோபல் பரிசால் ஏமாற்ற முடியாது
எரிபடிமங்களை நிலத்துக்குள்ளே வைப்பதற்கு விதிகளில்லை
விதிகளை மாற்றி பூமியைக் காப்பாற்றுங்கள்
மாற்ற முடியாவிடில் அமைப்பையே மாற்றுவோம் எனும்
அவளைக் கண்டுஒப்பாரி வைக்கிறது ஓபெக்
விமானப் பயணத்தை விலக்க விருதையே விலக்கியவள் காலநிலைக் கருத்தரங்கிற்கு தனி விமானத்தில் வந்தவர்களை சாடியவள் விமானப் பயணத்தை அவமானச் சின்னமாக்கினாள் கிரெடா விளைவால் சுவீடனில் விமானப் பயணங்கள் குறைந்தன சுவீடனில் ஒவ்வொரு வீட்டிலும், அவள் பெயரும், காலநிலை மாற்றமும் பேசுபொருளாகியுள்ளது கரிம வாயுவின் பசுங்குடில் விளைவைக் கண்டறிந்து நோபல் பரிசு பெற்ற சுவந்தே அரீனியஸின் பேத்தி கிரெடா நம் அன்பை ஆளும் ஐயா நம்மாழ்வாரின் பேத்தியும்தானே!
அவர்கள் உருவாக்கிய குப்பைக்கு அவர்களே பொறுப்பேற்கட்டும்
சமூக நாகரிகத்தைபணத்தாசைக்குக் காவு கொடுத்துள்ளனர்
பலரின் இன்னல்களே சிலரின் ஆடம்பரங்களுக்கு விலையானது
விலை மதிக்க முடியாதவை காவு கொடுக்கப்பட்டுக் கொள்ளை
லாபத்திற்கு எங்கள் எதிர்காலம் விற்கப்பட்டுள்ளது என்கிறாள்
நம் அரசியல் தலைவர்கள் நம்மைத் தோற்க வைத்துள்ளனர்.
நம் இருப்பே அச்சுறுத்தப்பட்டுள்ளது, இந்த மடமையான
வழியில் தொடர்ந்து போகக் காலம் இல்லை என
உலகத் தலைவர்களின் செயலின்மையைச் சாடி
ஐநாவையே அதிர வைத்தாள் கிரெடா
பன்னாட்டுஅமைப்புகள், நாடாளுமன்றங்கள்
உதவாக்கரை பொம்மைகளாய் அவள் காலடியில்
எங்கள் எதிர்காலத்தைதொடர்ந்து அச்சுறுத்த முடியாது.
உலகத் தலைவர்களின் ஆதரவுக்குப் பிச்சைகேட்டு
நாங்கள் இங்கு வரவில்லை, நீங்கள்எங்களைப்
புறக்கணித்தீர்கள், மீண்டும் புறக்கணிப்பீர்கள்
உங்கள் சாக்குப்போக்குகள் முடிந்து போயின.
எங்கள் காலமும் முடியவுள்ளது.
விரும்புகிறீர்களோ இல்லையோ மாற்றம் வருகிறது
உண்மையான அதிகாரம் மக்களுக்கே!
மனிதர்களின் விதியை மாற்றப் போகிறோம்,
காலநிலை நீதி கிடைக்கும் வரை மீண்டும் எழுவோம்
நாம் விதிகளின்படி பூமியைக் காப்பாற்ற முடியாது,
ஏனென்றால் விதிகளே மாற்றப்பட வேண்டியவை,
விதிகளை மாற்றி பூமியைப் பேரழிவிலிருந்து காப்போம்
அனைத்தையும் மாற்ற வேண்டும் -- அதை
இன்றிலிருந்தே தொடங்க வேண்டும்.
சினங்கொள்வோம்! செயல்படுவோம்!
விழித்தெழுங்கள் பெரியோரே மாற்றத்தின் வழியில் வேறுபாடுகளைத் தள்ளிவைத்து ஒன்றுபடுங்கள், அறிவியலுக்குப்பின் அணி சேர்ந்து செயல்படுங்கள் எங்கள் கனவுகளை, நம்பிக்கையை மீட்டுத் தாருங்கள்!
படிம எரிபொருள் இல்லாப் புவியைப் பேரழிவிலிருந்து
காக்கும் மக்கள்நல அரசே நம் இலக்கு!
எவரும் மாற்றத்தை ஏற்படுத்த முடியாத அளவிற்கு
சிறியவர் அல்ல என்பதற்கு எடுத்துக்காட்டாக
பள்ளிப் போராட்டத்தைப் பாரியக்கமாக்கினாள்
110 நாடுகளில் 2 கோடி மக்கள் இன்று அவள் வழியில்
உணர்வரசியலில் உலகே ஊறும் போது செயல்படும்
அரசியலை செயலாக்க முன்னணியில் முதல் ஆளாய்
உலகத் தலைவர்களை உலுக்கிப் போடுகிறாள் கிரெடா
மோடியும் அதானியும் டேவோஸில் வழிந்த போது
கார்ப்பரேட்டுகளைக் கஞ்சி காய்ச்சினாள் கிரெடா
இன்றைய பெருமுதலிய அரசியல் தோற்றுவிட்டது
அனைத்து அதிகாரமும் மக்களுக்கே என அறைகூவுகிறாள்
குழந்தைகளை அரசியல்படுத்துவது பெருங்குற்றமாக
கருதப்படுகையில் உலகில் முதன்முறையாக ஒரு குழந்தையாய்
குழந்தைகளை உலகளவில் ஒத்துழையாமை இயக்கத்திற்கு
ஒத்துழைக்கச் செய்து பெரியோர்களையும் ஒருங்கிணைத்து
பெருஞ்சாதனை படைத்த கிரெடா நம்மவள் அல்லவா!
நம்மவளை வாழ்த்துவோம்! வணங்குவோம்!
கிரெடாவிடம் கற்றுக் கொள்வோம்! கடைப்பிடிப்போம்! கிரெடா விளைவால் புவியைக் குளிர்விப்போம்!
நம்பிக்கை நட்சத்திரங்களாய்ப் பள்ளிக் குழந்தைகள்!
வெல்லட்டும் காலநிலைக்கான பள்ளிப் போராட்டம்!
வெள்ளிக் கிழமைகள் வருங்காலத்திற்காக!
நம் அவளின் வழி நம் வழி அல்லவா!