தொடர் கதை

“சூரியன் எழுகிறான்”

art 450எழலாமா... வேண்டாமா... கொஞ்ச நேரம்... நினைத்தபடியே  போர்வையை இழுத்து கழுத்துவரை போட்டபடி உறங்கினான் அரிமா அழகன்.

கடந்த ஒரு வாரமா கடுமையான பணி, அலுவலக வேலைகளுடன் அண்ணன் அறிவேந்தி சொன்ன சில வேலைகளையும் செய்ய வேண்டியிருந்தது. இரவு 2 மணியளவில் தான் படுத்தான். அரிமாவின் உழைப்பும் செயலும் அவனுக்கே ஆச்சரியமாக இருந்தது.

வழக்கமாக வேலை நேரம் போக நண்பர்களுடன் அரட்டை, ஊர்சுற்றல் என சாதாரணமாக எதையும் விளையாட்டாய் எடுத்துக் கொள்ளும் அரிமா, அண்ணன் இட்ட வேளையில் இவ்வளவு ஆர்வமாய் இருப்பதற்குக் காரணம் இதுவரை அவர் சொந்த தனிப்பட்ட வேலையைச் சொன்னதேயில்லை. இது தான் முதன்முறை.

அறிவேந்தி, காலையில் நாளிதழ்களைப் பார்த்துக் கொண்டிருந்தார். சமையலறையில் பொன்மதி, அவசரமாக (சிற்றுண்டி) காலை உணவுத் தயாரிப்பில் இருந்தாள். ஆனால் அவள் சிந்தனை முழுவதும் அரிமாவிடம் அவர் சொன்ன வேலை என்னாயிற்று, ஏதாவது உருப்படியான தகவல் இருக்கா.. இல்லையா? என்பதிலேயே இருந்தது. அப்பொழுது அங்கு வந்த மகன் குணநீதி ஊருக்குக் கிளம்புற அவசரத்தில் இருந்தான். சாப்பிட்டுவிட்டு கிளம்பியவனிடம்  பொன்மதி

“டேய், குணா..... சித்தப்பாவை எழுப்பி விடு.”

“போம்மா, சித்தப்பாவை இப்பதான் அப்பா சொன்னாங்கன்னு எழுப்பிப் பார்த்தேன், ம்...கும்.. அசையவேயில்லை” நான் ஊருக்குப் போறேன். அப்பாவிடம் சொல்லிவிட்டேன்” போகிறேன். பொன்மதிக்கு அரிமாவை ரொம்பப் பிடிக்கும். அண்ணி அண்ணியினு பாசமாயிருப்பான். அவனைச் சொந்த மகனாகவே பொன்மதியும் அவனிடம் அன்பாகவும் உரிமையாகவும் இருப்பாள். அறிவேந்தியும், அரிமாவும் பேசற சத்தம் கேட்க பொன்மதி உடனே அங்கு போனாள்.

அறிவேந்தி கடுகடுத்த முகத்துடன் அரிமாவை பார்த்துக் கொண்டிருந்தார். அரிமா தலைகுனிந்தபடி

“அண்ணே, ஒரு மணி நேரம் காத்திருந்தேன், முத்தையா வரவேயில்லை....”

“எனக்கு கைப்பேசியில் என்ன பண்றதுன்னு கேட்டிருக்கலாம்... ஏன்? பேசலை.’’

“அண்ணே... செல்... சார்ஜ் இல்லை... அங்க போய்தான் பார்த்தேன்... நீ எப்ப சொல்றீயோ... அப்ப” என அரிமா சொல்லும் போதே அறிவேந்தி கடுப்பாக “சொன்னதைச் செய்ய முடியலே....சே... நான் எவ்ளோ... பிரச்சனையில் இருக்கேன்னு உனக்குத் தெரியாது. சரி.. நானே பார்த்துக்குறேன். நீ உன் வேலையைப் பார்” என்றார்.

“அண்ணே முத்தையா வேலையை நானே பாக்குறேன். நீங்க கவலைப்படாதீங்க’’ என்றபடி அவர் என்ன சொல்வாரோ என பயந்தபடி அவரையேப் பார்த்தான்.

இருவரையும் பார்த்த பொன்மதி... மனநிலையை வெளிகாட்டிக் கொள்ளாமல் “காபி குடிங்க அப்புறம் பேசலாம்” என்றபடியே உள்ள போனாள். அவள் அரிமா சொன்னதை முழுவதுமாக நம்பவில்லை. அண்ணன் சொல்லை எப்போதும் சரியாகச் செய்பவன் என்பது மட்டுமில்லை. செல்பேசி சார்ஜ் இல்லை என்பது பொய். பொன்மதி தான் தனது செல்லை சார்ஜ் போட அரிமாவின் செல் முழுவதும் சார்ஜ் ஆகியிருந்ததைப் பார்த்து எடுத்து அவன் கையில் கொடுத்தாள். அதை வாங்கிக் கொண்டு தான் அரிமா போனான். ஆனா அறிவிடம் ஏன் பொய் சொல்கிறான். குழப்பத்தில் அவளுக்கு அச்சமும் இருந்தது.

சற்று நேரத்தில் அறிவேந்தி சிற்றுண்டி முடித்துக் கிளம்பினார். சரியாகப் பேசவில்லை. திராவிடப் பாசறை அலுவலகம் போவதாகவும் மதியம் உணவு வேண்டாம். மாலை அல்லது இரவு வருவதாகவும் சொல்லிவிட்டு பொன்மதியைப் பார்த்து “பயப்படாதே நான் எங்கிருந்தாலும் பேசறேன். நீ நினைச்சப்படி நல்லவிதமா நடக்கும்” சொல்லிவிட்டுப் போனார்.

அவர் போனப்பிறகு அரிமா... வழக்கமான சிரிப்பு இல்லாமல் பொன்மதி முன்னால் பொறுமையாக வந்து நின்றான் வித்தியாசமான சூழல். பொன்மதி கலக்கத்துடன் “தம்பி, இங்க என்ன நடக்குது? நீ ஏன் பொய் சொன்ன? சொல்லு அரிமா, எனக்கு ஒரு மாதிரியா இருக்கு” என்று சொல்லியபடி ஒரு அடி எடுத்து வைத்து கதவைப் பிடித்துக் கொண்டாள்.

“அண்ணி, என்ன இப்படி பேசுறீங்க. கவலைப்படாதீங்க நான் இருக்கிறேன். அண்ணனுக்காக எதையும் செய்வேன். நீங்க எனக்கு அம்மா. கலங்காதீங்க. என்னால் பார்க்க முடியல” என்று அவன் கலங்க, பொன்மதி,

“அரிமா, நீ இப்பவும் ஆறுதல் தான் சொல்ற. அதான் எனக்கு பயத்தை அதிகமாக்குது. அப்படியென்ன எனக்கு தெரியக்கூடாத பிரச்சனை. விருப்பம் இருந்தா சொல்” என்றாள், ”உங்ககிட்ட சொல்லத்தான் அண்ணி வந்தேன். நீங்க ஆலோசனை சொல்லுங்க. உங்க தைரியம் எனக்குத் தெரியும்”

“அதெல்லாம் சரி, முதல்ல நடந்ததைச் சொல்”

“அண்ணி, அண்ணன் தனது அலுவலக உதவியாளர் முத்தையாவைப் பாக்கச் சொல்லிச்சி, அவன் அண்ணனுக்கு நம்பிக்கையாக இருந்திருக்கிறான்”

“எனக்கு தெரியும் வீட்டுக்கும் வருவான். அவனை வர சொன்னா வரான். அவனை உன்ன போய் பாக்கச் சொன்னது. எனக்குப் புரியல அரிமா? அவனைப் பாத்தியா இல்லை?”

“அண்ணி நான் பாத்தேன்”

“அண்ணங்கிட்ட இல்லைனு சொன்ன?”

“அவன் முன்னமாதிரி இல்லை. அண்ணனை மரியாதைக்குறைவா பேசினான். கோபம் வந்து அடிக்க போயிட்டேன். அவனும் கோபமாகவும் அலட்சியமாகவும் “டேய், ஓ அண்ணனை வர சொன்னா.. உன்னை அனுப்பறார். என்ன நினைப்பு. பழைய நினைப்பா... தோ.. பார் நாளைக்குள் என்ன பாக்கலைன்னா நடக்கறதே வேறு. போய் சொல்லுன்னு”... வேகமா போயிட்டான். எனக்கும் என்னனு புரியல,”

“அவருகிட்ட சொல்ல வேண்டியதுதான. என்னவோ, முக்கியமானதா இருந்தா.. அரிமா. இதுநாள் வரை அவரை நான் இப்படி பாத்ததில்லை. எதாயிருந்தாலும் அவர்கிட்ட சொல்லிடு, நீ மறைச்சது தப்பு”.

அரிமா தலையசைத்து விட்டு ‘நான் பொய் சொன்னதுக்கு காரணம் முத்தையா மேல அண்ணனுக்கு இருந்த நம்பிக்கை. அவரால் தான் அவன் வாழ்க்கையில மாற்றம். ‘‘அய்யா, அய்யா”, என்பவன் அவர் இவர் என்று பேசியதை சகிக்க முடியல அண்ணி. அவனை நான் சும்மா விடறதாயில்லை.அவனே அண்ணனைச் சந்திச்சு கால்ல விழுந்து கதற வைக்கணும்னு முடிவு பண்ணிட்டு தான் வந்தேன். அண்ணனுக்குத் தெரிஞ்சா வருத்தப்படுவாறு திட்டுவாறு. நாளைக்கு காலைல பாருங்க அந்த நாய் நம்ம வீட்டு வாசல்ல நிக்கும்” என்று அரிமா சொன்ன வேகம் மேலும் பொன்மதியை அச்சதிற்குள்ளாக்கியது. எதுவும் அவனிடம் சொல்லாமல் அறிவேந்தி போனது, அவளுக்குள் பெரும் கலக்கத்தை உண்டாக்கியது    

“அரிமா, உடனே அண்ணனைப் போய்ப் பார். பொறுமையா நடந்ததைச் சொல். அதான் நல்லது. நீ எதுவும் அவசரப்பட்டு செய்து விடாதே. ஒண்ணு கிடக்க ஒண்ணு ஆயிடப்போவுது.உடனே போ... அவர் வந்ததும் விபரத்தைக் கேட்டுக்கலாம். அதுக்குள்ள செம்மொழி வந்துட்டா என்கிட்டப் பேசச் சொல்லு” என்று சொல்லிவிட்டு செல்லில் அறிவேந்தியிடம் தொடர்புக் கொள்ள முயற்சித்து “தொடர்பு எல்லைக்கு அப்பால்” உள்ளதாகத் தகவல் வந்ததும் இடிந்து போய்விட்டாள்.

“அண்ணி, நான் உடனே போறேன். நீங்க சொன்னமாரி நடந்துக்கிறேன்” என்று சொல்லிவிட்டுப் போனான். திடீர்னு செம்மொழியை பேச சொல்றது எதுக்கு? அரிமாவுக்கு குழப்பமாயிருந்தது.

‘திராவிடப் பாசறை’ அலுவலகத்தில் அறிவேந்தியில்லாததால் அவர் நெருங்கிய நண்பர் தமிழ் ஆசிரியர் நல்லதம்பி வீட்டுக்குப் போனான்.

பெரும்பாலான நாட்கள் கூட்டம், கருத்தரங்கு என வெளியூர் சுற்றுப்பயணத்தில் இருக்கும் நல்லதம்பி , வீட்டில் இருந்தது அரிமாவுக்கு மகிழ்வைத் தந்தது.

“வா...அரிமா.. என்ன திடீர்னு வந்திருக்க. நானே அறிவைப் பாக்க வரணும்னு இருந்தேன். ஏதாவது அறிவு சொன்னானா? வா.. உட்காந்து பேசலாம்... பூவரசி அரிமா வந்திருக்கு தேநீர்...” சொல்லி முடிப்பதற்குள் பூவரசி வந்து,

‘‘எவ்வளோ நாளாயிடுச்சி அரிமா, அண்ணி எப்டியிருக்காங்க.அண்ணனும் வரவேயில்லை. ரெண்டு பேர்கிட்டயும் நான் கோபமாயிருக்கேன்னு சொல்லு” சிரித்துக் கொண்டே உள்ளே போனாள்.

“என்ன விபரம் சொல்லு” - நல்லதம்பி

“அண்ணே, நேற்றிலிருந்து அண்ணன் வழக்கமாயிருக்கிற மாதிரியில்லே... அண்ணிகிட்ட கூட, ஏன்? குணாக்கிட்ட கூட சரியா பேசலே... அவர்கிட்ட வேலைப் பார்த்த முத்தையாவை என்னைப் பார்க்கச் சொன்னார், போனேன். அவனைப் பாக்க முடியலைன்னு சொன்னேன். அப்புறம் திராவிடப் பாசறைக்குப் போறதா சொல்லிட்டு போனார்” வந்துட்டு உடனே போயிட்டாருன்னு அங்க சொன்னாங்க” -– அரிமா.

“அப்படியா அரிமா, எனக்கே என்னனு தெரியல. சரி, அவர் அலுவலகம் போய் பாத்தியா” என நல்லதம்பி கேட்க, அரிமா “பாத்தேன்ணே அங்கேயும் இல்லை. எப்படியும் உங்களை பாக்கவருவார்னு நம்பிக்கையா வந்தேன். இப்ப என்னாண்ணே பண்றதுன்னு “ கலங்கிட்டான்.

“ஒண்ணும் ஆகாது. அந்த முத்தையா பய வீட்டுக்கு போலாம். நானும் வரேன்”.

“தேநீர் குடிச்சிட்டு போங்க... ஏம்பா அரிமா, வீர அரசு ஒங்கிட்ட பேசுறானா? என்று தன் மகனைப்  பற்றிக் கேட்டாள் பூவரசி.

‘‘இல்லண்ணி, எப்பவாவது பேசுவான். பேசி பத்து நாள் இருக்கும். என்னண்ணி எதாவது நல்லசேதியா?’’ அரிமா ஆவலுடன் கேட்க

‘‘ஆமாம்பா... நீங்க போயிட்டு வாங்க பேசலாம்” என்று சிரித்தபடியே உள்ளே போனாள்.

- தொடரும்

Pin It