urutheakumaran 300(நாடு கடந்த தமிழீழ அரசாங்கப் பிரதமர் உருத்திரகுமாரன் அறிக்கை)

கடந்த சில தினங்களாகத் தென்னிலங்கையில் மிகத் திட்டமிட்டு அப்பாவி முஸ்லீம் மக்களுக்கு எதிராகக் கட்டவிழ்த்து விடப்பட்டுள்ள இனவன்செயல்கள் இன்றைய தினத்தில் (17.06.2014) மத்திய மலைநாட்டின் பதுளை போன்ற நகரங்களிலும் முஸ்லீம் மக்களின் பாதுகாப்பினை அச்சுறுத்தலுக்கு உள்ளாக்கியுள்ளன.

சிறீலங்காவின் மேல் மாகாணத்தில் உள்ள களுத்துறை மாவட்டத்தில் முஸ்லீம் மக்கள் செறிந்து வாழும் அளுத்கமை, தர்க்காநகர் ஆகிய பகுதிகளில் பௌத்த பல சேனாவின் நேரடி நெறிப்படுத்தலில் முன்னெடுக்கப்பட்டுள்ள முஸ்லீம்களுக்கு எதிரான வன்செயல்களையும் அப்பாவி முஸ்லீம் மக்களின் வழிபாட்டுத் தலங்கள், பொருளாதார மையங்கள், குடியிருப்புக்கள் எல்லாம் நிர்மூலமாக்கப்பட்டு அவர்களை அவர்கள் தலைமுறை தலைமுறையாக வாழ்ந்த பிரதேசங்களிலிருந்து வெளியேற்ற முயல்வதும் சிங்கள பௌத்த மேலாதிக்க அரசின் குறிக்கோளின் ஒரு பகுதியாகவும் 1983இல் தமிழ்மக்களுக்கு எதிரான இனவெறி வன்செயலின் தொடர்ச்சியாகவுமே விளங்க முடிகிறது.

இத்தகைய இனவழிப்பு செயற்பாடுகள் தொடர்வதனையும் தமிழ்மக்களைத் தொடர்ந்து முஸ்லீம் மக்களும் சிறிலங்காவின் இனவழிப்பு திட்டத்திற்கு பலிக்கடாக்களாக்கப்படும் அபாயம் வெளிப்படுவதையும் நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் மிகவன்மையாகக் கண்டிப்பதோடு பாதிக்கப்பட்ட மக்களின் துயரத்திலும் பங்கேற்கிறது.

அதேவேளையில் இலங்கைத்தீவு முழுவதனையும் சிங்கள பௌத்த மேலாதிக்கத்தின் குறியீடாக மாற்ற முயலும் சிங்கள பௌத்த தேசிய வன்முறையாளர்களின் திட்டமிட்ட செயற்பாடுகளுக்கு எதிராகத் தமிழ் மக்களும் முஸ்லீம் மக்களும் ஒன்றாக இணைந்து போராடவேண்டிய உன்னதமான தருணம் வந்துவிட்டது என்பதனையும் நாம் விரைந்து சுட்டிக்காட்ட விரும்புகிறோம்.

இலங்கைத் தீவில் 1880ல் இந்திய வர்த்தகர்களுக்கு எதிராக அனகாரிக தருமபாலாவின் தலைமையிலான எதிர்ப்பும்; 1883ஆம் ஆண்டு சிங்கள கிறித்தவர்களுக்கு எதிரான கொட்டகேனா கலவரமும்; 1915இல் சிங்கள முஸ்லீம் கலவரமும்; 1950இல் மலையகத் தமிழர்களின் வாக்குரிமை, குடியுரிமை பறிப்பும்.

1956ஆம் ஆண்டு ஜூலை தமிழர்களுக்கு எதிரான களனிக் கலவரமும்; 1958, 1977 தமிழர்களுக்கெதிரான இனக்கலவரமும்; 1983 தமிழர்களுக்கெதிரான இனவழிப்பு வன்செயலும்; 2009 முள்ளிவாய்க்கால் இனப்படுகொலையும் காலத்துக்குக் காலம் சிங்கள பௌத்த மேலாதிக்க வெறி கொண்ட தேசியவாதிகளால் சிறிலங்கா தீவினை முழுமையாக சிங்கள பௌத்த நாடாக்கும் இலக்குடன் முன்னெடுக்கப்பட்டன.

முஸ்லீம்களுக்கெதிரான தற்போதைய இனவன்செயல்களும் இந்த வரிசையில்தான் அமைகின்றன.

சிறிலங்கா அரசு கலவரங்களைத் தமது அரசியல் இராணுவ இலக்குகளை அடையும் கருவிகளாகவே வழிநடத்தினர். தமிழர்களுக்கெதிரான 1958, 1977 இனக்கலவரங்களும் 1983 இனவழிப்பு வன்செயல்களும் சிறிலங்கா அரசின் அனுசரணையுடன் நடாத்தப்பட்டவை என்பதும் காலத்தால் நிரூபிக்கப்பட்ட உண்மைகளாகும்.

போதி பல சேனாவின் கூட்டத்தைத் தடுக்குமாறு விடுக்கப்பட்ட கோரிக்கையின் நிராகரிப்பும் போலிசாரின் செயலற்றமையும் தற்போதைய முஸ்லிம்களுக்கெதிரான இன வன்செயல்களும் சிறிலங்கா அரசின் அனுசரணையுடன் மேற்கொள்ளப்படுகின்றன என்பதற்கான சான்றுகளாக அமைகின்றன.

இலங்கைத் தீவு சிங்கள பௌத்த மக்களுக்கு மட்டுமல்லாது தமிழ் மொழியைத் தாய் மொழியாக கொண்ட இந்துக்கள், இசுலாமியர்கள், கிறித்தவர்கள், பௌத்தர்கள் ஆகியோரினதும் பாரம்பரியத் தாயக பூமியாகும். தமிழ்மொழியைத் தாய்மொழியாகக் கொண்ட மக்கள் சிறிலங்கா தீவின் வடக்கு, கிழக்குப் பகுதிகளில் தமக்கென ஆள்புலத்தினையும் வாழ்வாதாரத்தினையும் பண்பாட்டுச் சுவடுகளையும் வரலாற்றுக்கு முற்பட்ட காலத்திலிருந்தே கொண்டிருந்தார்கள்.

காலத்துக்குக் காலம் செல்வாக்கு செலுத்திய சமயக்கோட்பாடுகளையும் மார்க்க நம்பிக்கைகளையும் உள்வாங்கிய மக்கள் மதங்களால் வேறுபட்டிருந்தும் மொழியாலும் மொழிசார் பண்பாட்டினாலும் ஒன்றுபட்டுச் செழுமை பெற்றனர். மதவெறியும் மேலாதிக்க உணர்வும் என்றுமே அவர்களைப் பிரிக்கவில்லை.

பிரித்தாளும் அரசியல் தந்திரோபாயமும் அதிகாரப் போட்டிகளும் பெரும்பான்மை சனநாயகத்தின் தவிர்க்க முடியாத குறைபாடும் காரணிகளாக அமைந்து இன்று தமிழ் மொழியைத் தாய்மொழியாகக் கொண்ட மக்கள் தமது பாரம்பரியத் தாயகத்திலும் மரபுரிமையான வாழ்விடங்களிலும் திட்டமிட்டுப் பிரிக்கப்பட்டுச் சிதைக்கப்படுகிறார்கள்.

அவர்களது பண்பாட்டு அடையாளங்களும் வாழ்வாதார வளங்களும் வழிபாட்டு உரிமைகளும் மேலாதிக்க இனஉணர்வு கொண்ட பெரும்பான்மையினரின் அதிகாரவெறிக்கு பலியாக்கப்படுகின்றன.

இவற்றினைத் தடுத்து நிறுத்துவதற்கும் தன்னம்பிக்கையும் பொருண்மியத் தற்சார்பும் தன்னாட்சியுரிமையும் கொண்ட வலுவான சமூகத்தினைக் கட்டியெழுப்புவதற்கும் தமிழ் மக்களும் முஸ்லீம் மக்களும் தமிழ் மொழிபேசும் மக்கள் என்ற குடையின் கீழ் ஒன்றிணைய வேண்டுமென நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் சார்பாக வேண்டி நிற்கின்றேன். 

Pin It