வளர்ந்து வரும் பொருளாதாரம், அதைவிட வேகமாக வளர்ந்து வரும் விலைவாசி உயர்வு குறிப்பாக தங்கத்தின் விலை வரதட்சிணை இவற்றால் அடித்தட்டு மக்கள் உரிய காலத்தில் தங்கள் பெண் பிள்ளைகளை திருமணம் செய்து கொடுக்க முடியாமல் தவிக்கிறார்கள்.

வயது கடந்த பெண்கள் ஏழைகள் வீட்டில் ஏராளமாக இருக்கிறார்கள். இவர்கள் திருப்பூர், ஈரோடு, சென்னை கோவை போன்ற தொழில் நகரங்களுக்கு கூலி வேலைக்கு செல்கிறார்கள். இதில் எல்லா சாதியும் அடங்கும். குடும்பத்துடன் செல்கிறவர்களும் உண்டு.

ஒரு பகுதியிலிருந்து சென்ற ஆணும் பெண்ணும் ஒரே இடத்தில் தங்கி வேலை செய்கிறார்கள். இந்த காலகட்டங்களில் யார் என்ன சாதி என்ற கேள்விக்கெல்லாம் இடமில்லாமல் ஏராளமான காதலர்களும் உருவாகி நிறைய இளைஞர்கள் பெண்களை அழைத்து வந்து திருமணம் செய்து கொள்கிறார்கள். அதுபோலவே ஏராளமான பெண்கள், வெவ்வேறு இளைஞர்களோடு சென்று விடுகிறார்கள். சிலர் திருமணமே செய்து கொண்டு வந்து விடுகிறார்கள்.

தஞ்சை நாகை திருவாரூர் கடலூர், பெரம்பலூர் போன்ற மாவட்டங்களில் இது அதிகமாகவே தென்படுகிறது.

ஏழை பெண்களின் பெற்றோர்கள் எப்படியோ தன் பெண்ணிற்கு திருமணம் முடிந்தால் அதாவது ஓர் ஆண்துணை கிடைத்தால் போதும் என்ற திருப்திகொள்ளும் நிலையும் இருந்து வருகிறது.

இதைத்தவிர இன்றைய சினிமா, தொலைக்காட்சி தொடர்களில் வரும் பாலியல் காட்சிகள் பருவவயது வந்தவர்களை கடுமையாக பாதித்துள்ளது.

சாதி ஒழிப்பும் சமூக சீர்திருத்தமும் மிகையாக பேசப்படுகின்ற நமது தமிழகத்தில் குறிப்பாக திராவிடர் கழகம் பெரியார் திராவிட கழகம் கம்யூமிஸ்ட் இயக்கங்கள், தமிழ் தேசிய இயக்கங்கள் தலித் இயக்கங்கள் மற்றும் பெரியாரிய சிந்தனையாளர்ள் இப்படி பலரும் சாதி மறுப்பு சிந்தனையை ஆதரிக்கின்ற இன்றைய நிலையில் வன்னியர் சங்கமும் பாட்டாளி மக்கள் கட்சியும் வன்னியர் பெண்களை பிற சாதியினர் கலப்பு திருமணம் செய்து கொண்டால் வெட்டுங்கள் குத்துங்கள் என்று வன்முறையை தூண்டி வருகின்றனர். (இந்த கலப்பு திருமணங்கள் நாடகத் திருமணங்கள் என்று ராமதாசால் பெயர் சூட்டப்படுகின்றது.)

பாமக நடத்திய சித்திரை திருவிழாவிலும் செப்டம்பர் 19ல் தருமபுரியில் நடந்த பாமக கூட்டத்திலும் வன்னியர் சங்க தலைவர் காடுவெட்டி குரு பேசிய வன்முறை பேச்சு தமிழகத்தின் எல்லா சீர்திருத்த சிந்தனையாளர்களாலும் விமர்சிக்கப்பட்டது.

இந்த சூழ்நிலையில் தான் தருமபுரி மாவட்டத்தில் நாயக்கன் கொட்டாய் நத்தம் காலனியை சேர்ந்த இளங்கோவனின் மகன் இளவரசன் (23) என்கிற தலித் இளைஞனும் செல்லன் கொட்டாயை சேர்ந்த நாகராஜன் படையாச்சி மகள் திவ்யாவும் (21) நீண்டகாலமாக காதலித்து வந்துள்ளார்கள். சென்ற அக்டோபர் மாதம் 14ம் தேதி பதிவுத் திருமணமும் செய்து கொண்டார்கள்.

கலப்பு திருமணத்திற்கு எதிரான பாமகவினரின் பேச்சால் தூண்டப்பட்ட வன்னியர்கள் திரண்டு கட்டை பஞ்சாயத்து பேசி திவ்யாவின் தந்தை நாகராஜனுக்கு நெருக்கடி கொடுத்துள்ளார்கள்.

பாமக இளைஞரணி தலைவர் மதியழகன் தலைமையில் ஏராளமான வன்னியர்கள் கூடி நத்தம் காலனி தலைவர் சக்தி என்பவரை அழைத்து திவ்யாவை தங்கள் பஞ்சாயத்தில் ஒப்படைக்கவேண்டும் என்று கெடு வைத்துள்ளார்கள்.

 திவ்யாவின் தந்தை வன்னியர்களின் நெருக்கடி தாங்காமல் நவம்பர் 7ல் தூக்கிலிட்டு தற்கொலை செய்து கொண்டார். வன்னியர்களின் மிரட்டலால் நத்தம் காலனியில் ஒரு குழப்பம் ஏற்பட்டது. அவர்களால் ஒரு முடிவை எடுக்க முடியவில்லை. திவ்யாவை ஒப்படைத்தால் வன்னியர்கள் கொன்று விடுவார்கள். பழி நம்மீது வந்து விடும் அதே சமயத்தில் திவ்£யவை ஒப்படைக்கவில்லையென்றால் வன்னியர்களால் நமக்கு ஆபத்து நேரிடும் என்ற குழப்பநிலையில் எந்த முடிவையும் எடுக்க முடியாமல் தவித்தார்கள்.

இதற்கிடையில் திவ்யாவும் இளவரசனும் சேர்ந்து சென்று இருக்கின்ற ஆபத்தான நிலையைக் கூறி டி.ஐ.ஜி சஞ்சய் தத்திடமும் எஸ்.பி குமாரிடமும் பாதுகாப்பு கேட்டு மனு செய்துள்ளனர். அவர்களும் பாதுகாப்பு தருவதாக உறுதியளித்துள்ளனர்.

இந்நிலையில் தற்கொலை செய்து கொண்ட நடராஜனின் பிணத்தை பாமக தலைவர் மதியழகன் பஞ்சாயத்து தலைவர் ராஜா மற்றும் ஏராளமானோர் எடுத்துச்சென்று நத்தம் காலனியில் இளவரசனின் வாசலில் போட்டுவிட்டு சாதியை சொல்லி இழிவாக பேசிக்கொண்டே பயங்கர ஆயுதங்களைக் கொண்டு பொருட்களை சேதப்படுத்தியும் வீடுகளை எரித்தும் பெரும் நாசம் விளைவித்துள்ளார்கள்.

ஏறத்தாழ 500 வீடுகள் எரிக்கப்பட்டுள்ளன. இடித்தும் கொளுத்தியும் நாசப்படுத்தப்பட்டுள்ளன. ஏராளமான பொருட்களை அள்ளிச் சென்றுள்ளனர்.

நத்தம்பட்டி காலனி மட்டுமில்லாமல் கொண்டம்பட்டி, அண்ணாநகர் ஆகிய தலித் கிராமங்களையும் கும்பலாக சென்ற இந்த கூட்டம் தாக்கி சர்வ நாசம் விளைவித்துள்ளது. மரங்களை வெட்டி சாலைகளை மறித்து பாதுகாப்புக்கு யாரும் வராத வண்ணம் தடுத்துள்ளனர். தலித்துகளுக்கு சொந்தமான வேன்களும் 50க்கும் மேற்பட்ட இருசக்கர வாகனங்களையும் எரித்து சாம்பலாக்கினர்.

அழிக்கப்பட்ட சொத்தின் மதிப்பு 4 கோடி என்றும் SC/ST ஆணையம் இதன் மதிப்பு 7 கோடி என்றும் எம்.எல்.ஏ தமிழரசன் மற்றும் சிலர் 20 கோடி இருக்குமென்றும் மதிப்பிடுகின்றனர்.

தமிழகத்தில் இதற்கு முன்னால் சிறிய பெரிய கலவரங்கள் பல தலித்துகள் மீது நடந்திருக்கின்றன. ஆனால் அதற்கெல்லாம் வெவ்வேறு காரணங்கள் இருந்துள்ளன. உலகிலேயே தலைசிறந்த சமூக சீர்திருத்தவாதியும் சாதி ஒழிப்பு போராளியுமான தந்தை பெரியார் பிறந்த மாநிலத்தில் கலப்பு திருமணத்தால் இப்படி ஓர் அநீதி இழைக்கப்படடிருக்கிறது என்றால் இது தமிழகத்திற்கே தலைகுனிவு தான்.

தலித்துகளையும் வன்னியர்களையும் உழைக்கும் மக்கள் என்றும் பாட்டாளி மக்கள் என்றும் வர்ணித்த டாக்டர் ராமதாஸ் இச்சமூகங்களை ரயிலை சுமந்து செல்லும் இரண்டு தண்டவாளங்கள் போன்றது என்றார். தனி ஒதுக்கீடு கேட்ட டாக்டர் ராமதாஸ் தலித் மக்கள் மீதான வன்னியர்களின் தாக்குதலை தொடர்ந்து நியாயப்படுத்தி பேசி வருவது வெட்கக்கேடானது.

அவர் என்ன சொல்கிறார் என்றால் தலித்துகள் தங்கள் வீடுகளுக்கு தாங்களே தீவைத்துக் கொண்டனர் என்றும் தாங்கள் கொஞ்சம் தான் சேதம் விளைவித்ததாகவும் அதுவும் எல்லா சாதியும் சேர்ந்து தான் செய்தோம் என்றும் ஒப்புதல் வாக்குமூலம் அளிக்கின்றார். தலித்துகள் தாக்கப்படும்போதும் அழிக்கப்படும் போதும் அவர் இப்படி கூறுவது புதிதல்ல.

1985ல் தனி ஒதுக்கீடு கேட்டு போராடிய வன்னிய சங்கம் தென்னாற்காடு மாவட்டத்தில் மட்டும் 2000 தலித் குடிசைகளை கொளுத்தினார்கள். பின்னர் தலித் குடிசைகள் எரிக்கப்பட்டதற்கு தலித்கள் தான் காரணம் என்று போஸ்டரடித்து ஒட்டினார்.

1996ல் காட்டுமன்னார்குடி தாலுக்கா புளியங்குடி என்ற கிராமத்தில் மரத்தடியில் உறங்கிய மூன்று தலித்துகள் கழத்தறுத்து படுகொலை செய்யப்பட்டார்கள். குற்றவாளி வன்னியர்களை போலிசார் கைது செய்ய முற்பட்டபோது போலிசாரை தடுத்ததோடு கொலையானவர்களின் உறவினர்களே குற்றவாளிகள் என காரணம் கற்பித்தார்.

10 பேர் கூடினாலும் செய்ய முடியாத அந்த மூன்று கொலைகளை ராமதாஸ் குறுக்கிட்டதால ஒரே ஒருவனை மட்டும் போலிஸ் கைது செய்தது. அவனும் ஜாமீனில் வெளிவந்து தற்கொலை செய்து கொண்டான். அந்து மூன்று கொலைகளுக்கும் ஆதாரம் இல்லாமலேயே போய்விட்டது.

1984ல் தஞ்சை மாவட்டம் குடிதாங்கி என்ற கிராமத்தில் 1984ல் இருந்து 1988வரை நான்காண்டுகள் தலித்துகளின் பிணத்தை தார்சாலையில் எடுத்து செல்ல முடியாமல் வன்னியர் சங்கம் தடுத்தது. இதனால் தலித்துகள் தோட்டத்திலும் தெருவிலும் பிணங்களை புதைத்தனர்.

இறுதியாக குடிதாங்கி வன்னியர்கள் அனைவரையும் சிறையில் அடைத்துவிட்டு அதன்பிறகு காவல்துறை தலித்துகள் பிணத்தை சாலையில் எடுத்துச் சென்றது. சிறையில் அடைக்கப்பட்ட வன்னியர்களை காப்பாற்ற வந்த ராமதாசுக்கு தமிழ் குடிதாங்கி என ஏன் திருமாவளவன் பெயரிட்டார் என்பது இன்றுவரை விளங்கவில்லை.

வன்னியர் சங்கம் பாட்டாளி மக்கள் கட்சி என்றால் தலித் மக்களுக்கு எதிரானது என்ற நிலை தமிழகத்தில் தொடர்ந்து இருந்தும் தலித்களின் தலைவரான திருமா தமிழ் குடிதாங்கி, வாழும் பெரியார், வாழும் அம்பேத்கர் என்று ஏன் விருதுகளை அள்ளித்தருகிறார். இதில் ஏதோ ரகசியம் இருக்கிறது.

உழைக்கும் மக்களான இந்த இரு சமூகத்தினரும் மோதிக்கொள்வதில் தான் இந்த இரு தலைவர்களின் அரசியல் இருக்கிறது என்பதே யதார்த்தமான உண்மையாகும்.

இறுதியாக,

தலித்கள் தொடர்ந்து பாதிக்கப்பட்டு வருவது குறித்து தலித் தலைவர்களும் ஆதரவாளர்களும் சிந்திக்கவே இல்லை. இன்றளவும் தாழ்த்தப்பட்ட மக்கள் இந்த தேசத்தில் வாழ்வதற்கு ஒரு தனி பாதுகாப்பு சட்டம் தேவைப்படுகிறது. அந்த சட்டம் மட்டும் இல்லையென்றால் எவ்வளவு தான் அறிவிலும் பொருளிலும் பதவிலும் கல்வியிலும் உயர்ந்திருந்தாலும் இந்த சட்டத்தின் பாதுகாப்பு இல்லையென்றால் இந்துக்கள் தலித்துகளை சுய மரியாதையோடு வாழ விடமாட்டார்கள் என்பது தான் உண்மை.

இந்நிலையில் இந்த சட்டத்தை உடனடியாக நீக்க வேண்டும் என்று ராமதாஸ் சொல்வது, இந்த சட்டத்தை பயன்படுத்தி காவல்துறையினர் பணம் பண்ண நினைப்பதும் இச்சட்டத்தை செயலளவில் பலவீனப்படுத்தி விட்டது. இந்த சட்டத்தின் பாதுகாப்பையும் மீறி தலித்துகள் கொடுமைகளுக்கு உள்ளாக்கப்படும் போது சீர்திருத்தவாதிகள் சென்று ஆறுதல் கூறுவதும் அரசியல் வாதிகள் அணிவகுப்பு செய்து ஆதாயம் தேடுவதும் வாடிக்கையாகிவிட்டது. எதிர்கால இந்தியாவில் இதுபோல் நடக்கும் என்பதை உணர்ந்த அம்பேத்கர் எச்சரித்தே வந்தார்கள்.

“இக்கொடுமைகள் எல்லாம் நீங்கள் சிறுபான்மையினராக இருப்பதால் தான் நடக்கிறது. நீங்கள் பெரும்பான்மை சமூகமாக ஆவதன் மூலம் தான் இதற்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்க முடியும். இந்த பாதுகாப்பு சட்டமோ இட ஒதுக்கீடு முறைகளோ போதும் என்று அவர் ஒருபோதும் கூறிடவில்லை. நீங்கள் பெரும்பான்மை ஆவதற்கு ஒரே வழி நீங்கள் வேறொரு கூட்டத்துடன் இணைந்திட வேண்டும். நீங்கள் இணைகின்ற அந்த கூட்டம் உங்களை சமத்துவமாக நடத்திட வேண்டும். ஏற்றுக்கொள்ள வேண்டும். அதற்கேற்ப உங்கள் கலாச்சாரத்தையும் சமூகத்தையும் மாற்றிக்கொள்ள வேண்டும்” என்று விரிவாக தெளிவாக நிறையவே சொல்லியிருக்கிறார் தேசபிதா அம்பேத்கர்.

ஆனால் தற்போது அரசியல் அதிகாரம் என்கிறார்கள். அரசியல் அதிகாரம் பெறுவது அரசியலில் அங்கம் வகிப்பது என்பதே இவர்கள் கையில் இல்லை. தலித் தலைவர்கள் அனைவரும் ஒன்று கூடி நின்றால் கூட ஒரு தொகுதியிலும் வெற்றிபெற முடியாது. அப்படி இருந்தும் இம்மக்களை இவர்கள் ஏமாற்றுகிறார்கள். அம்பேத்கர் அறிவுரைகளை அறிந்து அவ்வழியில் இவர்கள் செயல்படவில்லையென்றால் தருமபுரிகளும் பரமக்குடிகளும் நடந்து கொண்டுதான் இருக்கும்.

Pin It