கூடங்குளம் போராட்டத்தின் மையப் பிரதேசமான இடிந்தக்கரையின் பேரெழுச்சியை நேரில் பார்க்கும் வாய்ப்பு கிட்டியது. இந்தியக் கம்யூனிஸ்டு கட்சியின் குழுவில் நானும் சென்றிருந்தேன். கம்யூனிஸ்டு இயக்கத்தின் மூத்த தோழர்.ஆர்.நல்லகண்ணு குழுவிற்கு தலைமையேற்றிருந்தார். மாநிலத்தின் முன்னணித் தலைவர்கள் பலரும் இதில் பங்கேற்றிருந்தார்கள். போராட்டப் பிரதேசத்தில் தோன்றிய உணர்வை அப்படியே ஒரு தலையங்கமாக எழுத வேண்டும் என்ற எண்ணம் அங்கேயே பிறந்து விட்டது.

தேரிகாடு காட்டுக்குள் இந்த இடிந்தக்கரை அமைந்திக்கிறது. தேரிகாடு என்பது, செம்மண் குவிந்து கிடக்கும் நிலப்பரப்பு. இதில் மறைந்துள்ள உயர்ந்த தாதுப் பொருட்கள் இன்றைய உலகத்தில் விலைமதிப்பற்றவை. இதனால் நவீனக் கொள்ளைக்காரர்களின் முக்கிய இலக்குகளில் ஒன்றாக இந்த செம்மண் நிலப்பரப்பும் மாறிப் போனது. கூடங்குளப் போராட்டமும் இங்கு தான், கொழுந்துவிட்டு எரிந்து கொண்டிருக்கிறது.

முழுத் தமிழகமும், அனல்கால வியர்வையில் மின்சாரம் இன்றி தவியாய் தவிக்கும் வேளையில், அணுஉலையால் அனைத்து பிரச்சனைகளும் தீர்ந்து போகும் என்பதைப் போல, பிரமையை உருவாக்க மத்திய அரசு பெரிதும் முயற்சி செய்கிறது. ஆனால் இடிந்தகரை மக்கள், தங்கள் வாழ்வு குறித்தும் தங்கள் எதிர்கால சந்ததியினரின் வாழ்க்கைக் குறித்தும் சில அடிப்படையானக் கேள்விகளை முன் வைத்துள்ளனர். போராட்டம், தீயைப்போல அவர்களிடம் தீவிரம் கொண்டு இருக்கிறது.

எட்டு மாதங்களுக்கு மேலாகப் போராட்டம் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. சாகும் வரை உண்ணாவிரதம், உண்ணாவிரதம், கவன ஈர்ப்பு என்று பலவடிவத்திலும் இவர்களின் போராட்டம் அமைந்து போனது. போராட்டத்தில் ஈடுபட்ட மக்களில் 2 ஆயிரத்திற்கும் அதிகமான மக்கள் மீது வழக்குத் தொடரப்பட்டுள்ளது. இதில் வேடிக்கை என்னவென்றால், வெளிநாடுகளில் பணிகளில் இருப்பவர்கள் மீதும் வழக்குத் தொடரப்பட்டுள்ளது. காவல்துறையின் பொறுப்பற்ற கண்மூடித் தனத்தை இதன் மூலம் புரிந்து கொள்ள முடிகிறது.

போராட்டத்திற்கு தலைமையேற்றுள்ள சுப.உதயக்குமார். மண்ணினின் மீதும், மக்கள் மீதும் கொண்ட பிடிப்பு ஆழமானது. இவர் சிறந்த கல்வியாளர். யாராலும் பெறமுடியாத அடித்தள மக்களின் நம்பிக்கையை பெற்றவர். இவர் மீது 98 வழங்குகள் போடப்பட்டுள்ளன. ம.புஷ்பராயன், மை.பா.ஜேசுராஜன் ஆகிய போராட்டத்தின் முன்னணி தளபதிகள். இவர்கள் அனைவரின் மீதும் தேச துரோகம் குற்றமாக சாட்டப்பட்டுள்ளது. மிக அருவெறுப்பான அவதூறுகள் அவர்கள் மீது சுமத்தப்பட்டது.

அச்சமற்றவர்களை, யாரால் தான் என்ன செய்துவிட முடியும்? வழக்குகளைப் போட்டுப் பார்த்த ஆட்சியாளர்கள், 6 ஆயிரத்திற்கும் அதிகமான காவல்துறை, மற்றும் துணை ராணுவப்படையினரைத் தருவித்து, இடிந்தக்கரையையும் முற்றுகையிட்டுப் பார்த்தனர். அவர்களால் யாரையும் பணியவைக்க முடியவில்லை. வெகுமக்களின் போர்க்குணம் எத்தகையது என்பது மீண்டும் ஒருமுறை வரலாற்றில் நிரூபிக்கப்பட்டுள்ளது.

அரசு போராடும் உழைக்கும் மக்களின் மீது தொடுக்கப்பட்டுள்ள அடக்குமுறையை உடன் நிறுத்தி, அவர்கள் மீது போடப்பட்ட வழக்குகளை திரும்பப் பெற வேண்டும் என்று தாமரையின் சார்பில் வேண்டுகோளை முன்வைக்கிறோம். 

- சி.மகேந்திரன்

Pin It