யாகம் அல்லது வேள்வி அல்லது பலி என்பது ஆரியரின் மதத்தில் மிகவும் முக்கியமானதாக இடம் பெற்றிருந்தது. தெய்வீகத் தன்மையை அடைவதற்கும் கடவுளரைக் கட்டுப்படுத்தவும் நீ ஒரு வழியாக இத்தகைய யாக வேள்வி பயன்பட்டது. பாரம்பரியத்தின்படி மொத்தம் 21 பலி ஒவ்வொரு பிரிவுக்கும் ஏழு வீதம் மூன்று பிரிவாகப் பிரிக்கப்பட்டிருந்தது. வெண்ணெய், பால், (மக்காச்) சோளம் முதலானவை முதல் பிரிவில் அடங்கும். இரண்டாவது பிரிவில் சோம பானமும், மூன்றாவது பிரிவில் விலங்குகளும் இடம் பெற்றிருந்தன. ஓராண்டுக்கும் அதற்கு மேலும் நீடிக்கும் நீண்டகால, அல்லது குறுகிய கால இøடைவெளியில் பலி தரப்படும். நீண்டகாலப் பலியிடும் முறை சாத்திரம் எனப்பட்டது. இவ்வாறு பலி தரும் ஒருவன் முடிவற்ற புனிதத்தை அடைவானாம். இதனால் அவனுடைய பிதுர்களும் மகிழ்வார்களாம். புனிதத்தை அடைவார்களாம். அவன் மட்டுமல்ல, பலி தரும் குதிரை முதலான விலங்குகளும் மேலோகத்தில் உயிர் வாழ அவனால் அனுப்பப்படுகின்றனவாம்.
 
மேலுலகப் பேரின்பத்தை அடைவதற்கு மட்டுமின்றி, இந்தப் பூமியில் பலவற்றைப் பெறுவதற்காகவும் பலிதரப்பட்டது. எதையும் எதிர்பாராமல் பலி தர வேண்டும் என்னும் கருத்து நிலவவில்லை. பலன் எதிர்பாராத காணிக்கையைப் பிராமணீய இந்தியா அறியாது. எந்தத் தெய்வத்துக்குப் பலி தரப்படுகிறதோ அந்தத் தெய்வத்திடமிருந்து ஏதேனும் எதிர்பார்த்தே இது செய்யப்படுகிறது. பலிகள் பின்வரும் மந்திரத்துடன் தொடங்குவன: “நீ இதை எனக்குக் கொடு; நான் உனக்கு இதைத் தருவேன்; எனக்கு நீ இதை அளிப்பாயாக; இதை நான் உனக்கு அளிப்பேன்''.
 
பலியிடும் சடங்கு அச்சமும் மதிப்பும் தரும் முறையில் நடத்தப்பட்டது. ஒவ்வொரு சொல்லும் பலனை எதிர்பார்ப்பதாக அமைந்திருந்தது. ஒவ்வொரு சொல்லின் உச்சரிப்பும் அழுத்தமும் முக்கியத்துவமுடையவையாக இருந்தன. எனினும் இப்படிப்பட்ட சடங்குகள் வெறும் ஏமாற்றுவித்தை என்பதையும், வெளிக்குத் தெரிவதுபோல் அத்தனை முக்கியத்துவம் வாய்ந்தவை அல்ல என்பதையும் புரோகிதர்களே உணர்ந்திருந்தனர் என்பதற்கான சான்றுகள் காணக்கிடக்கின்றன.
 
பணம் பெறுவதற்காகத்தான் இத்தகைய பலியிடும் சடங்குகளை வேதியர் நடத்திக் கொடுத்தனர். பசுக்கள், குதிரைகள், தங்கம், உயர்ந்த ஆடைகள் முதலானவை கட்டணமாகச் செலுத்தப்பட்டன. கட்டணம் வாங்குவதில் வேதியர் கண்ணுங் கருத்துமாய் இருந்தனர். இத்தகைய கட்டணம் ஆயிரம் பசுக்கள் என்ற அளவுக்கும் இருந்தது என்றால் பார்த்துக் கொள்ளுங்கள். இப்படிச் செய்தல் – அதாவது ஆயிரம் பசுக்களைக் கொடுத்தால் – அவனுக்கு மோட்சப் பலன் முழுமையாகக் கிடைக்கும் என்று கூறப்பட்டது. மேலோகத்தில் உள்ள கடவுளர், ஒருவருக்கொருவர் உதவும்போது, பரிசுப் பொருள் கேட்பதாகக் கதைகள் கூறுகின்றன. புரோகிதர் இதைப் பயன்படுத்திக் கடவுளுக்குத் தேவைப்படுவதாகக் கூறி, உரிமையாகவே இவ்வாறு கேட்கத் தொடங்கினார்.
 
விலங்குகளைப் பலியிடுவது என்பது முதன்மைப் பலியாக இருந்தது. பலியிடுவது நிறைந்த செலவு செய்வதற்குரியதாகவும் அநாகரிகமானதாகவும் அமைந்தது. பலியிடுவதற்கானவை என ஐந்து விலங்குகள் தெரிவு செய்யப்பட்டன. இந்தப் பட்டியலில் முதலிடம் மனிதனுக்கு. மனிதப் பலி மிகுந்த செலவு செய்வதற்குரியது. இவ்வாறு பலியாக வேண்டியவன் புரோகிதனாகவோ, அடிமையாளாகவோ இருக்கக் கூடாது; ஷத்திரியனாகவோ வைசியனாகவோ இருக்க வேண்டும். ஒரு மனிதனின் விலை ஆயிரம் பசுக்களாகும். பலியிடப்பட்ட மனிதரைப் பலியிடுவோர் தின்ன வேண்டும் என்னும் பழக்கமும் இருந்தது. அடுத்தபடியாக, குதிரை இடம் பெற்றிருந்தது. இதற்கும் அதிகம் செலவாகும். இந்தியாவை வெற்றி கொள்வதற்கு ஆரியர்களுக்குக் குதிரைகள் மிகவும் தேவைப்பட்டன. பலிதரும் ஆடவனின் மனைவியுடன் பலியாகும் குதிரை உடலுறவு கொள்ள வேண்டும் என்பது மகா கொடூரம்.
 
விவசாயத்திற்குப் பயன்பட்ட பசுக்களும் காளைகளும் தான், மிக அதிக அளவு பலி தரப்பட்ட கால்நடைகளாகும்.
 
பலியிடுவதற்கு ஆகும் செலவைக் கணக்கிட்டால் அது தேவையில்லை என்றாகிவிடும்; ஆனால், புரோகிதரின் வருமானத்தைக் கணக்கில் எடுத்த காரணத்தால் அது தேவை எனப்பட்டது. பலி தரப்படவில்லை என்றால், புரோகிதனுக்கு வருமானம் இருக்காது. அவன் பட்டினி கிடக்க நேரிடும். எனவே, மனிதனுக்குப் பதிலாக வைக்கோல் அல்லது உலோகம் அல்லது மண்ணால் செய்யப்பட்ட மனிதனைப் பலிதரலாம் என்று புரோகிதர்கள் தெரிவித்தனர். ஆனாலும் எங்கே யாகம் நடத்தப்படுவது நின்றுபோய், தங்கள் வருமானத்தை இழக்க நேரிடுமோ என அஞ்சி அவர்கள் மனித உயிர்ப்பலியை அறவே நிறுத்தி விடவில்லை. மனித உயிர்ப்பலி அரிதானபோது அதன் இடத்தை மிருக உயிர்ப்பலி நிரப்பியது. பாமர மக்களுக்கு இதுகூடப் பெருஞ் செலவாகத் தோன்றியது. இதனால் சில கால்நடைகளைப் பலிகொடுத்து அவர்கள் ஒப்புக் கொள்ளத் தொடங்கினர். படிப்படியாக, அரிசியே போதும் என்று புரோகிதர்கள் திருப்தியடையலாயினர்.
 
எனினும், பலி தரும் நபரின் நிலையைப் பொறுத்து இந்த ஈட்டுப் பொருள் நிர்ணயிக்கப்பட்டது. ஏழை என்றால் அரிசி; ஓரளவு நல்ல நிலையில் இருப்பவர் என்றால் ஆடு; செல்வந்தர் என்றால் மனிதன். குதிரை, பசு அல்லது காளை. இதனால் பலியிடுவதும் நின்றபாடில்லை; புரோகிதருக்குக் கிடைக்கும் வருமானமும் தொடர்ந்தது. ஆயிரக்கணக்கில் விலங்குகள் பலியாவதும் தொடர்ந்தது.
 
பௌத்த இலக்கியத்தின் வாயிலாக, கசாப்புகாரர்களாகச் செயல்பட்ட அந்தணர் பற்றி அறிய முடிகிறது. சுத்த நிபாதத்தில் வருணித்துள்ளபடி கோசல நாட்டு மன்னன் பசேன்தி கொடுத்த பலியின் விவரம் இது: 500 எருது, 500 காளை, 500 பசு, 500 செம்மறி ஆட்டுக்குட்டி ஆகியவை பலியிடுவதற்காகக் கம்பங்களில் கட்டப்பட்டிருந்தன. அந்தணர் இட்ட கட்டளையை, கண்ணில் நீர் ததும்ப, அரசனின் ஏவலாட்கள் நிறைவேற்றினார்களாம்.
 
இது படுகொலை என்றாலும் கேளிக்கைக் களியாட்டமாகவும் இருந்தது. வறுத்த இறைச்சியை உண்டு, மது அருந்தினர். அந்தணர் சோமபானமும் சுராபானமும் குடித்தனர். மற்றவர்கள் சுராபானம் குடித்தனர். பிறகு, சூதாட்டம். தவிர, திறந்த வெளியில் உடலுறவு கொண்டனர். பலி என்பது ஒழுக்கக்கேடாக மாறிவிட்டது; மதத்துக்கும் அதற்கும் சிறிதளவுகூடத் தொடர்பே இல்லை.
 
நியமம் அல்லது சடங்குகளின் கோவையாக ஆரியர் தம் மதம் இருந்தது. சிறந்த வாழ்க்கை வாழ வேண்டும் என்ற தாகம் எழவில்லை. ஆன்மிக உள்ளடக்கம் இல்லாத மதமாக ஆரியர் மதம் ஆகிவிட்டது. ரிக்வேதத்தில் காணப்படும் பாசுரங்கள் இதற்குச் சிறந்த ஆதாரமாகும். இந்தப் பாசுரங்கள் ஆரியர் தம் கடவுளைப் போற்றிப் பாடியவை. எதைக் கேட்பதற்குப் பிரார்த்தனை செய்தனர்? ஆசைகளிலிருந்து விடுவிக்கும்படி வேண்டினார்களா? தீமையிலிருந்து நீக்குமாறு வேண்டினார்களா? பாவமன்னிப்பு கேட்டார்களா? இந்திரனைப் போற்றிப் புகழ்வதாக அமைந்த இந்தப் பாசுரங்கள் – ஆரியர்களின் எதிரிகளை அழித்ததற்காக – கிருஷ்ணன் எனும் அசுரனின் கர்ப்பிணி மனைவியை அவன் கொன்றதற்காக – அசுரர்களின் நூற்றுக்கணக்கான கிராமங்களை நாசப்படுத்தியதற்காக – பாராட்டு தெரிவிக்கின்றன. இலட்சக்கணக்கான தஸ்யூக்களை அழித்தற்காக இந்திரனை அவை போற்றுகின்றன. அனாரியர்களின் செல்வத்தைக் கவர்ந்து கொள்வதற்காகவும், அவர்களின் தானியங்களைப் பெறுவதற்காகவும் அனாரியர்களுக்கு இந்திரன் அழிவை ஏற்படுத்துவான் என்று இந்திரனைப் புகழ்கின்றன. கொடூரமான எண்ணங்களின், கொடிய செயல்களின் மொத்த உருவமாக ரிக் வேதத்துப் பாசுரங்கள் உள்ளன. நாணயமான – ஒழுக்கம் நிறைந்த வாழ்க்கை குறித்து ஆரிய மதம் எப்போதும் கவலைப்பட்டதே கிடையாது.
 
புத்தர் பிறந்தபோது இருந்த ஆரிய சமூகத்தினர் நிலை இதுதான். இதை மாற்ற அவர் பல முயற்சிகளை மேற்கொண்டார்.
Pin It