“அய்யோ இது சாமி குத்தமாயிடுமுங்க.''

“எது சாமி குத்தம்?''
 
“இப்படிச் சாமி முன்னாலேயே நம்ம கட்டில் போட்டிருக்கிறது''
 
“பின்னே எங்கே போடச் சொல்றே? வெளியிலே போடுவோமா?''
 
“உங்களுக்கு எல்லாம் விளையாட்டுத்தான்.''
 
அவள் கட்டிலில் ஏறி உட்கார்ந்து காலை எந்தப் பக்கமா நீட்டுவது என்று யோசித்துக் கொண்டிருந்தாள்.
 
“இப்போ என்ன சிந்தனை ஓடுது...?''
 
“ஒண்ணுமில்லே. இந்தப் பக்கம் நம்ம வீட்டிலே சாமி போட்டோ வச்சிருக்கோம். அப்போ இங்க காலை நீட்டக் கூடாது.''
 
“சரி அப்போ தலையணையை இங்கே எடுத்து வை. எதிர்த்தாப்போலக் காலை நீட்டு.''
 
“அது எப்படி...?'' அந்தப் பக்கம் தானே மாரியம்மன் கோவில் வாசல் இருக்கு.
 
“அம்மா தாயே.. அந்தப் பக்கம் மாரியம்மன் கோயில்... கீழ்ப்பக்கம் அன்னை மாதா கோவில். மேல் பக்கம் பள்ளிவாசல்.. தலைமாட்டிலே நீ ஊரிலேருந்து சுமந்துட்டு வந்த பழநி ஆண்டவர்...
 
“இங்கே பாரு அனிதா... இந்த சாஸ்திரமெல்லாம் நம்ம மும்பை அப்பார்ட்மெண்ட் ஸ்டைலுக்கு ஒத்து வராதும்மா... பிளீஸ்.. இப்போ எந்த திசையிலாவது தலையை வச்சி என்னைப் படுக்க விடும்மா.. காலையிலே நான் இந்த மும்பை டிரையினில் கூட்டம் நிரம்பி வழிந்து குட்டி போடறதுக்கு முந்தியே டிரையினைப் பிடிச்சாத்தான் சட்டை கிழியாம ஆபீஸ் போய்ச் சேர முடியும் ப்ளீஸ்...''
 
“இதுதான்.. நான் அப்பவே சொன்னேன். இன்னும்கூட இரண்டு மாசம் எங்க அம்மா வீட்டிலே இருந்திட்டு வாரேன். நீங்க நல்ல பெரிய வீடா பார்த்தபின் மும்பைக்கு வர்றேன்னேன். கேட்டாத்தானே...''
 
“இதைச் சாக்கு வச்சே அம்மா வீட்டிலே உனக்கு "டேரா' போடணும். வருஷத்திலே பாதி நாளு இப்படி ஏதாவது காரணம் காட்டி அம்மா வீட்டிலே இருந்தா உங்க வீட்டிலே என்னை எப்படி மதிப்பாங்க.''
 
“என்ன முணகறீங்க.. எங்க அம்மா வீட்டைப்பத்தி நான் பேசினாலே இந்த முணுமுணுப்பு ஆரம்பிச்சிடுமே...''
 
“இல்ல அனிதா... நான் என்ன சொன்னேன்னா...
 
கடவுள் தூணிலும் இருக்கார், துரும்பிலும் இருக்கார். எல்லாத் திசைகளிலும் இருக்கார்னு சொல்லிட்டு.. இந்தத் திசையிலே இந்தச் சாமி இருக்காரு.. இந்தத் திசையிலே இந்தக் கோவிலிருக்குன்னு படுக்கிறதுக்குக் கூட இத்தனை சாஸ்திரம் பார்க்கிறோமேனு சொன்னேன்...''
“இந்த மாதிரி மட்டும் "எடக்கு மடக்கா' நல்ல சிந்திப்பீங்களே..''
 
இந்த அரசாங்க உத்தியோகம் "போதும்டா சாமினு' இருந்தது அவனுக்கு. மூன்று வருஷத்திற்கு ஒருமுறை மாற்றல். அதுவும் அனிதாவுக்கு பூஜை அறை தனியா, படுக்கை அறை தனியா, ஹால் விஸ்தாராமா, எப்போதும் தண்ணீர் வசதியோட வீடு வேணும். அவள் எதிர்பார்ப்பில் ஏதாவது ஒன்று குறைந்தால்கூட தினமும் அவள் “தொண தொணப்பில்'' வாழ்க்கை வெறுத்துடும்.. இதுவரை எப்படியோ சமாளிச்சாச்சு.. இந்த மும்பையில் எப்படிச் சமாளிக்கப் போறோமோ தெரியலை. வீடு கொஞ்சம் பெரிசா இருந்தா "நோ வாட்டர்'. தண்ணி இருந்தா இப்படி வத்திப்பெட்டி மாதிரி வீடு. அவள் எதிர்பார்க்கிற மாதிரி வீடு பார்த்தா ஹெச்.ஆர்.ஏ மட்டுமில்லே கையிலே வர்ற எல்லாத்தையும் வாடகையா கொடுத்திட்டுக் கைச்செலவுக்கு மாமனாரைத் தான் மணியார்டர் பண்ணச் சொல்ல வேண்டி வரும்.. எப்படி அனிதாவைச் சமாளிக்கப் போறேனோ தெரியலை.. என்ற கவலையில் அவன் தூங்குவது போல நடித்துக் கொண்டிருந்தான்.
 
ச்சே.. அவருக்குப் பாம்பே டிரான்ஸ்பர் ஆயாச்சு.. எல்லோரும் லீவில் பாம்பே வாங்கனு. அண்ணன், தங்கை, அம்மா, அப்பா.. எல்லோர்கிட்டேயும் சொல்லியாச்சு.. அவுங்க எல்லாம் வந்தா எப்படிச் சமாளிப்பேன்? ச்சே.. என் தங்கையின் கணவர் எல்லாம் என்னைப் பற்றி என்ன நினைப்பார்? ஏற்öகனவே அவுங்க எல்லாம் சொந்தமா கார், பங்களானு.. இப்போ இந்த வீட்டையும் வாசலையும் வந்து பார்த்தா அவ்வளவுதான். என்னை இனிமே யாருமே எங்க பேமிலி சர்க்கிளில் மதிக்கமாட்டாங்க.. என்ற கவலையுடன் அவள் தூங்குவது போல் புரண்டு படுத்தாள்.
 
அவரவர் கவலையுடன் பொழுது விடிந்தது. “பாபி.. ஆவ் நா...'' எதிர்வீட்டு கல்பேஷின் மனைவி அழைத்தாள். குஜராத்திக் குடும்பம்.. அதுவும் கூட்டுக் குடும்பம்.
 
உள்ளே நுழைந்தாள். வீடு.. அவர்களைப் போலவே சின்ன ரூம்தான். அதில் கூட்டுக் குடும்பம்.. அண்ணன் – தம்பி.. இருவரின் குடும்பம்.. கூடவே அம்மா – அப்பா.. ஒரே கடை. அவளால் நம்பவே முடியலை. கல்பேஷின் மனைவி மூத்தவள். மூன்று குழந்தைகள். கல்பேஷின் தம்பி திருமணமாகி சில மாதங்கள்தான் ஆகியிருக்கும் போலிருக்கிறது. சின்னவள் வயிற்றைத் தள்ளிக்கொண்டு கீழே உட்கார முடியாமல் உட்கார்ந்திருந்தாள்...
 
அம்மாடீ... எல்லாம் இந்த ஒரே வீட்டில். எப்படி? எப்படி? அவளால் நம்பவே முடியவில்லை.
 
அன்று அனிதா தன் கணவனிடம் கல்பேஷ் வீட்டுக்குப் போனதைப் பற்றிச் சொல்லிவிட்டு.. ரகசியக் குரலில்..”இதெல்லாம் எப்படீங்க...?'' என்று கேட்டாள்.
 
“அட.. இதெல்லாம் இங்க ரொம்ப சிம்பிள்.. கட்டிலுக்கு மேலே ஒரு குடும்பம், கீழே ஒரு குடும்பம். சின்னக் கயிறு கட்டி திரைபோட்டு அந்தப் பக்கம் ஒரு குடும்பம். இந்தப் பக்கம் ஒரு குடும்பம்...'' என்று சிரித்துக் கொண்டே சொல்லி அவளைப் பின்பக்கமாகக் கட்டிப் பிடித்தான்.
 
விடுங்க... விடுங்க... இன்னிக்கி வெள்ளிக்கிழமைங்க.. இந்த வம்பெல்லாம் வேண்டாம் என்று விலகியவளை எட்டிப் பிடிக்கக் கட்டிலைச் சுற்றி அவன் ஓடிக்கொண்டிருந்தான். 
 
Pin It