மழை நீர் தூய்மையானது. ஆனால் அது சேரும் இடத்திற்குத் தகுந்தவாறு தன்னை மாற்றிக் கொள்கிறது. கிணற்றில் விழும் மழை நீர் குடிநீராகப் பயன்படுகிறது. கடலில் விழும் மழை நீர் உப்பு நீராகிறது, கூவத்தில் விழும் மழைநீர் கழிவு நீராகிறது.

அதுபோல் ஒரு தாயின் வயிற்றில் உருவாகும் கரு மெல்ல மெல்ல வளர்ந்து 9 மாதங்கள் கழித்து வெளிவரும்போது கடவுள், மதம், சாதி, மொழி, மூடநம்பிக்கை ஆகிய எதுவும் இல்லாத பரிசுத்தமான குழந்தையாகத்தான் பிறக்கிறது. ஆனால் அந்தக் குழந்தை வளர்ந்தபின் வளர்ப்பவரின் தன்மையை பிரதிபலிக்கிறது.

ஒரு கிறித்துவ மதத்தைப் பின்பற்றும் குடும்பத்தில் பிறக்கும் குழந்தை ஒரு கிறித்துவனாக உருவாகிறது. யேசுநாதரை வணங்குகிறது. ஒரு இஸ்லாம் மதத்தைப் பின்பற்றும் குடும்பத்தில் பிறக்கும் குழந்தை ஒரு இஸ்லாமியனாக வளர்கிறது. முகமது நபியை இறைவனாக ஏற்றுக் கொள்கிறது. ஒரு இந்து மதத்தில் பிறக்கும் குழந்தை ஒரு இந்துவாக மட்டும் வளராமல் ஒரு சாதி சார்ந்தவனாகவும் வளர்கிறது. பல கடவுள்களைத் தெய்வங்களாக வணங்குகிறது. ஒரு பகுத்தறிவாளர் வீட்டில் பிறக்கும் குழந்தை கடவுள் சாதி, மத பேத உணர்வுகள் இல்லாத, மூடநம்பிக்கைகளுக்கு இடம் கொடுக்காத ஒரு பகுத்தறிவாளனாக வளர்கிறது.

இன்னும் சொல்ல வேண்டுமானால் தமிழகத்தில் தமிழ்மொழி பேசும், இந்த மதத்தைப் பின்பற்றும் குடும்பத்தில் பிறந்த ஒரு குழந்தை, அமெரிக்காவில் ஆங்கிலம் பேசும் கிறித்தவ மதத்தை ஏற்றுக் கொண்ட குடும்பத்தில் வளர்ந்தால், அந்தக் குழந்தை ஆங்கிலம்தான் பேசும்; யோசுநாதரைத்தான் வணங்கும்.

அதே குழந்தை சீன நாட்டில் சீனமொழி பேசும் பௌத்த மதத்தைப் பின்பற்றும் குடும்பத்தில் வளர்ந்தார் அந்தக் குழந்தை சீனமொழிதான் பேசும் புத்தரைத்தான் கடவுளாக வணங்கும்.

அதே குழந்தை ஈராக் நாட்டில், உருது மொழி பேசும். இஸ்லாம் மதத்தை ஏற்றுக்கொண்ட குடும்பத்தில் வளர்ந்தார், அந்தக் குழந்தை உருதுமொழிதான் பேசும்; நபிகள் நாயகத்தைத் தான் இறைவனாக வணங்கும்.

இதில் மாற்றுக் கருத்து இருக்க வாய்ப்பில்லை. இதுதான் உண்மைநிலை. தமிழ்நாட்டில் பல தாய்மார்கள் தான் பெற்ற குழந்தையை வறுமையின் காரணமாக வளர்க்கமுடியாமல் எங்காவது வளரட்டும் என்று கைக்குழந்தையாக இருக்கும்போதே மற்றவர்களிடம் ஒப்படைக்கின்றனர். அப்படி ஒப்படைக்கப்படும் குழந்தைகள் உலகில் ஏதாவதொரு நாட்டில் வளரும் நிலை ஏற்படுகிறது.

அந்தக் குழந்தை தாய் யார், தந்தை யார் என்று தெரியாமல், வளர்ப்பவர்களையே தன் தாயாக, தன் தந்தையாகக் கருதி அவர்கள் பேசும் மொழியையே பேசி அவர்கள் வணங்கும் கடவுளையே வணங்கி அவர்கள் பின்பற்றும் சமூகப் பழக்க வழக்கங்களையே, தன்னுடையதாக்கி வளர்வதை நாம் காணலாம்.

1994 ஆம் ஆண்டு நடந்த ஒரு உண்மை நிகழ்வு. ஆந்திர மாநிலம் கர்னூல் மாவட்டத்தில் ஆலம் பள்ளி கிராமத்தைச் சேர்ந்த 5 வயது ஆண் குழந்தை அங்கு நின்று கொண்டிருந்த விரைவு இரயிலில் ஏறியதும், அந்த இரயில் புறப்பட்டுச் சென்னை சென்ட்ரல் இரயில் நிலையம் வந்து சேர்ந்தது. இரயிலில் குழந்தை தனியாக அழுதுகொண்டே இறங்கியது. தன் பெற்றோரைத் தேடியது.

அதனைப் பார்த்த சிலர் அந்தக் குழந்தையை ஒரு தொண்டு நிறுவனத்தில் சேர்த்தனர். அங்கேயே தங்கி பத்தாம் வகுப்பு வரை படித்து முடித்து இளைஞானாக வெளியேறினான் சென்னையில் கிடைத்த வேலைகளை செய்து தன்னைத்தானே காப்பாற்றிக்கொண்டான். கடைசியாக சென்னை அரும்பாக்கம் எம்.எம்.டி.ஏ. காலனியில் தோல் ஏற்றுமதி நிறுவனத்தில் வேலையில் சேர்ந்தான். தற்போது அவனின் மாதச் சம்பளம் ரூ.3500/– வயது 21 தன் தோழர்களுடன் தங்கி இருக்கிறான்.

தோல் ஏற்றுமதி நிறுவனத்தில் மேலாளராகப் பணிபுரிந்து வந்த சுரேஷ் என்பவரிடம் தனது பெற்றோரைத் தேடி கண்டுபிடிக்க விரும்பியதை தெரிவித்துள்ளான். சுரேஷ் தனது நண்பர்களின் உதவியால் அரிமா சங்கத்தை நாடினார்.

அரிமா சங்க கவர்னர் சிவகுமார், துணைத் தலைவர் பழமலை மாவட்டத்தலைர் மணிலால் ஆகியோரின் உதவியால் அந்த இளைஞன் சொன்ன விவரங்களை வைத்து அவனின் பெற்றோரைக் கண்டுபிடித்தனர். பிறகு அவனின் தந்தை தாயார் ஆகியோரைச் சென்னை சென்ட்ரல் இரயில் நிலையத்திற்கு அழைத்து வந்தனர்.

16 ஆண்டுகளுக்குப் பிறகு மகனைப் பார்த்த பெற்றோரும், பெற்றோரைப் பார்த்த மகனும் உணர்ச்சிப் பெருக்கத்தில் கட்டிப் பிடித்து அழுதனர். ஆனால் பெற்றோர் பேசிய மொழி மகனுக்குப் புரியவில்லை. மகன் பேசிய மொழி பெற்றோருக்குப் புரியவில்லை. மகன் சபீர் சொன்னான் “என் பெற்றோரைக் கண்டு பிடித்ததில் எனக்கு மகிழ்ச்சி. அவர்கள் ஏழ்மையில் வாழ்கின்றனர். அவர்களையும் என் தங்கையையும் காப்பாற்றுவேன். சென்னையிலேயே தங்கி வேலை செய்வேன். மாதம் மாதம் பணம் அனுப்புவேன். அய்யப்பன் கோயிலுக்குச் செல்ல மாலை அணிந்து இருக்கிறேன். போய்வந்தபிறகு என் பெற்றோரைக் காண என் ஊருக்குச் செல்வேன்” என்றான்.

அவனின் பெற்றோர் முராண்பாய் – பேகம் இஸ்லாம் மதத்தைச் சார்ந்தவர்கள். பேசும் மொழி உருது, வணங்குவது நபிகள் நாயகத்தை.

மகன் சபீர் பேசும் மொழி தமிழ், பின்பற்றுவது இந்து மதம். வணங்குவது இந்து மதக் கடவுளர்கள், இதிலிருந்து என்ன தெரிகிறது என்றால் ஒருவன் பிறக்கும் போது அவனுக்குக் கடவுள் இல்லை. மதம் இல்லை, மொழி இல்லை. அவன் வளரும் போதுதான் அவனுக்கு மொழியும், மதமும் கடவுளும் கற்பிக்கப்படுகிறது என்பதை இதன் மூலம் உறுதியாகிறது.

உயிர் தோன்றி 100 கோடி ஆண்டுகள் இருக்கும் உடற்கூறு அடிப்படையிலான மனிதன் ஏறத்தாழ 2 லட்சம் ஆண்டுகளுக்கு முன் தோன்றினான். தற்கால மனிதன் ஏறத்தாழ 50,000 ஆண்டுகளுக்கு முன் தோன்றினான் என்பது பலரின் கருத்து.

மனிதன் பல ஆயிரம் ஆண்டுகள் பேசத் தெரியாதவனாகவே வாழ்ந்தான். அந்தக் காலத்தில் கடவுள் என்ற சொல் இல்லை. மிருகங்களைப் போலவே இயற்கை நிகழ்வுகளைக் கண்டு மனிதன் பயந்து வந்தான். இடியின் ஓசையைக் கேட்டுப் பயந்தான். புயலைக் கண்டு பயந்தான். பெரும் மழையைக் கண்டு பயந்தான், காடுகள் எரிவதைக் கண்டு பயந்தான்.

பேசத் தேவைப்பட்டதும் இந்த பயங்கரமான நிகழ்வுகளை சைகையாலும், சொற்களாலும் ஒருவனுக்கு ஒருவன் தெரிவித்துக் கொண்டான். அந்த கற்பனைக் கர்த்தாக்களுக்கு கடவுள் என்றும் தெய்வம் என்றும் பெயர் சூட்டினான். சொல்வதைச் சொல்லும் கிளிப் பிள்ளையைப் போல இன்றும் இந்தச் சொல் கற்றவர்களாலும் கல்லாதவர்களாலும் பழக்கத்தின் காரணமாக அதிலிருந்து வெளிவர முடியாமல் அதனையே சொல்லிக் கொண்டும் பின்பற்றிக் கொண்டும் வருகின்றனர்.

மக்கள் ஏன் கடவுளைத் தேடுகிறார்கள். தானும் தன் குடும்பம் மட்டும் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும், பொன் வேண்டும், பொருள் வேண்டும், கல்வி வேண்டும் தனக்குத் தேவையான அனைத்தும் சுலபமாகக் கிடைத்திடவேண்டும். நோயற்றவனாய் வாழ வேண்டும். மரணம் இல்லாப் பெருவாழ்வு வாழ வேண்டும் என்பதற்காகவே கடவுளை நாடுகின்றனர். வேண்டுகின்றனர். அதற்காகப் பொருளைச் செலவு செய்வதோடு உடலையும் வறுத்திக் கொள்கின்றனர்.

இல்லாத கடவுளிடம் அதுவும் கற்சிலைகள் முன் நின்று கொண்டு வேண்டுவதால் என்ன பயன் கிடைக்கும், மிருகங்களும், பறவைகளும் நம்மைப் போலவே உயிர் வாழ்கின்றன. நம்மைப் போலவே குடும்பம் நடத்துகின்றன. அவை கோயில் கட்டுவதும் இல்லை, பிற கடவுளை வணங்குவதும் இல்லை. அறிவு படைத்த மனிதனே தன் சுய நலத்திற்காக அறிவை இழக்கிறான். தன் குடும்பத்தையும் மூட நம்பிக்கையில் மூழ்கடிக்கிறான்.

கடவுள் என்று ஒன்று இருந்தால், நோய், வறுமை, பஞ்சம், புயல், வெள்ளம், நிலநடுக்கம் போன்ற இயற்கை நிகழ்வுகளும், மனிதர்களால் செய்யப்படும் கொலை, கொள்ளை கற்பழிப்பு போன்ற கொடிய நிகழ்வுகளும் நடக்க முடியுமா?

1859 ஆம் ஆண்டு சார்லஸ் டார்வின் என்ற அறிஞர் மனிதன் குரங்கிலிருந்து தான் பரிணமித்தான் என்று ஆராய்ச்சி மூலம், நிரூப்பித்துவிட்டார். இதற்குப் பின்னர் கடவுள்தான் மனிதனை படைத்தார் என்று கதைவிடுவது கயமைத்தனம் அல்லவா. மனிதன் தான் கடவுளைப் படைத்தான் என்பதே உண்மை. கோயில்களில் கடவுள் சிலைகளுக்கு முன் நின்று கொண்டு, கடவுளுக்கும் மக்களுக்கும் இடையில் கதைப்பதாக பித்தலாட்டம் செய்யும் கயவர்களையும், போலிச் சாமியார்களையும் நம்புவது மடமை என்று இனியாவது மக்கள் புரிந்து கொள்ள வேண்டும். புரிந்து கொள்வார்களா?

Comments

10 comments

10
திலிப் நாராயணன்
"மனிதன் கடவுளைப்படைத்தான்; அன்று முதல் கடவுள் மனிதனைப்படைத்தான்" என்றொரு கவிதை இருக்கிறது. கற்சிலைகளையே படைப்பது மனிதன் தான். கல்லின் மேல் அமர்ந்து அதை வடிக்கிறான் வியர்வை சிந்த... அந்தக்கல்லைக்கோயிலில் வைத்து அதற்கு சக்தியைஏற்றுகிறான்... பிறகு அதன்முன்னால் நின்று கொண்டு தன்னை மறந்து அதன் கைகளிலிருந்து பலனை வரத்தை நன்மையை எதிர்பார்த்து கெஞ்சுகின்றான். கொஞ்சம் கூட லாஜிக் இல்லாத விஷயம் இது. இதனுடைய வெளிப்பாடுதான் ராக்கெட் ஏவும்போது கூட நல்ல நேரம் பார்த்து கவுண்ட் டவுன் செய்வது எல்லாமே...இந்த உலகத்தில் கிறித்துவர்கள் அதிக ஜனத்தொகையாகவும்( 200 கோடிக்கும் மேல்) இஸ்லாமியர் இரண்டாவது இடத்திலும்(130 கோடிக்கும் மேல்) இருக்கிறார்கள். அடுத்தபடியாக நாத்திகர்கள்தான் (110 கோடிப்பேர்) இந்துக்கள் சுமார் 85 கோடிப்பேர்தான். நான் இந்துவாகப்பிறந்தேன். ஆனால் இந்துவாக சாகமாட்டேன் என்றார் அண்ணல் அம்பேட்கர்.
Riyazahmed.K
எல்லாம் சரி தொழர் ..! முஹம்மெது நபி கடவுல் அல்ல.. அவர் இரைதுதர் ...!
mohan
Well said Dileep Narayanan,before launch of every rocket,chief scientist incharge goes to Thirupathi
ஷாலி
தோழர் பாசறை பாலன் அவர்களுக்கு,தாங்கள் நாத்திகராக இருப்பது உங்கள் விருப்பம்.அதை நான் குறை சொல்ல வர வில்லை.ஆனால் கடவுள் நம்பிக்கை உள்ள மக்களை விமரிசிக்கும்முன் குறைந்த பட்சம் அம்மத நம்பிக்கைகளை தெரிந்துகொண்டு எழுதுவது நல்லது.” இஸ்லாமிய குடும்பத்தில் பிறக்கும் குழந்தை முஹம்மது நபியை இறைவனாக ஏற்றுக்கொள்கிறது.”என்ற தவறான கருத்தை மூன்று முறை குறிப்பிட்டுள்ளீர்கள்.உலகில் உள்ள எந்த முஸ்லிமும் முஹம்மது நபியை-தீர்க்கதரிசியை-தூதரை, இறைவனாக வணங்குவதில்லை. இப்பிரபஞ்சத்தை சிருஷ்டித்த அல்லாஹ் ஒருவனை மட்டுமே வணங்குகின்றனர். மற்றபடி நீங்கள் சொன்னபடி “பிறக்கும் அனைத்து குழந்தைகளும் இயற்கையான இஸ்லாம் மார்க்கத்திலேயே பிறக்கிறது.ஆனால் அதன் பெற்றோர் வளர்ப்பின் மூலமே யூதராகவும் கிருத்தவராகவும் அக்குழந்தை மாற்றப்படுகிறது.” என்று முஹம்மது நபி அவர்கள் 1400 வருடங்களுக்கு முன்பே கூறிவிட்டார்கள். மற்றபடி மனிதன் குரங்கிலிருந்து பிறந்தான் எனும் டார்வினின் பரிணாமம், ஒரு கருத்தியல் கொள்கைதான்.நிரூபிக்கப்பட்ட உண்மையல்ல.நவீன ஜெனட்டிக் ஆய்வுகளின் மூலம் பரிணாமக்கொள்கை படுத்து விட்டது என்பதையும் நீங்கள் தெரிந்துகொள்ளவேண்டும்.
janarthanan
Balan when we want to write any research article we should not write with an imagination, especially when we want to write about religion we should have a knowledge on religion. i think that you should have basic knowledge over muslim religion. you have wrongly mention that muslim and christian religion do not caste. it is entirely wrong. In 1921 according to the govt Gazzett, 133 muslim sub castes are there , especially in tamilnadu. this count is largely high in india and tamilnadu.
msm gani
அன்பான சகோதரர் அவர்களுக்கு நீங்கள் எழுதியதைப்போல நபிகள் பெருமானார் அவர்கள் ஓன்று கடவுள் கிடையாது,அவர் வல்ல இறைவனின் திருத்தூதர் ஆவார்கள் ,,,,இறைவனிடம் இருந்து வரும் தகவல்களை மக்களுக்கு எடுத்து இயம்பும் தூதர் தான்,இந்தக் கட்டுரையை நீங்கள் முஸ்லிம்கள் முஹம்மது நபியை வணங்கு கிறார்கள் என்று வரும் இடத்தில் இறைவனுடைய தூதரை பின்பற்றுகிறார்கள் என திருத்தி வெளியிடவும்,,,,
வே. பாண்டி
"நவீன ஜெனட்டிக் ஆய்வுகளின் மூலம் பரிணாமக்கொள்கை படுத்து விட்டது" என்று கூறும் ஷாலி அவர்களே, அப்படியானால் படைப்புக் கொள்கை தான் சரி என்று சொல்கிறீர்களா?

இன்னொரு கேள்வி.. மத நம்பிக்கை இல்லாத இஸ்லாமியர்கள் இருக்கிறார்களா?
Prakash
"நவீன ஜெனட்டிக் ஆய்வுகளின் மூலம் பரிணாமக்கொள்கை படுத்து விட்டது" என்று கூறும் ஷாலி அவர்களே, மனிதன் குரங்கிலிருந்து பிறந்தான் எனும் டார்வினின் பரிணாமம், ஒரு கருத்தியல் கொள்கைதான் ஆனால் இன்று இது சரி என்று அறிவியல் உலகதால் எற்கப்பட்ட ஒன்று.
தினேஷ்
இறைவனே இல்லன்னு சொல்றோம் அப்பரம் என்ன இறை தூதர்.( முகமதியர் மன்னிக்கவும்)

கடவுள் இல்லை. தயவு செய்து ஆறாவது அறிவான பகுத்தறிவை பயன் படுத்துவீர்.

ராமனும்,கிருஷ்ணனும்,ஏசுவும் அல்லாவும் நம்மால் படைக்க பட்ட கற்பனை காதபாதிரங்கள்
Shirozaan
அன்புள்ள சகோதரரே! இஸ்லாத்தைப் பற்றி ஒரு இறைவன் கொள்கை என்ற புரட்டல்களை மட்டுமே நம்பி உங்கள் அண்டைவீட்டார்தான் உண்மையான இஸ்லாமியர்களின் கொள்கையில் இருப்பதாகவே நம்பி எழுதியிருக்கின்றீர்கள்.

உங்களுக்கு தெளிவான ஆதாரங்களை கட்சிப்பாகுபாடின்றி நடுநிலையுடன் அறிந்துகொள்ள உங்கள் தெளிவான பகுத்தறிவை பயன்படுத்த தயவு செய்து "ஈமானின் உண்மையை நீ அறிவாயா?" (நம்பிக்கையின் உண்மையை நீ அறிவாயா?) என்ற புத்தகத்தை பார்வையிடுங்கள்! நீங்கள் உண்மையில் ஒரு பகுத்தறிவுவாதிதான் என்றால் இந்த புத்தகத்தை முதலில் இருந்து கடைசிவரை ஒன்றுக்கு பலமுறை பார்வையிட்டு தீர்ப்புக்கட்டுங்கள். ஆராய்வில்லாமல் முடிவுக்கு வருவது என்றால் நமக்கெதற்கு அந்த பகுத்தறிவு?

அதில் உங்கள் பகுத்தறிவுக்கு பிழையாக தென்படுமிடத்து என்னை தொடர்பு கொள்ளுங்கள். எனக்கும் வழிகாட்டுங்கள்.

இல்லை நான் எதையும் ஆராய வேண்டியதில்லை என்று நீங்கள் கணித்தால் நீங்கள் ஒரு பகுத்தறிவு வாதியே அல்ல! என்பதுதான் உண்மையாகும். அதில் எனக்கும் எந்தக் கவலையும் இல்லை.

நன்றி.

Leave a comment

Fields marked with * are required.

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.