உண்ணாநிலைப் போராட்டம் இன்று இந்தியாவில் அரசியல்வாதிகள் மற்றும் இளைஞர்களால் அதிகம் உச்சரிக்கப்படும் வார்த்தையாக உள்ளது. செப் 17 முதல் 19 வரை மூன்று நாட்கள் குசராத் முதல்வர் நரேந்திர மோடி மதநல்லிணக்கத்திற்காக உண்ணாநிலை இருந்திருக்கிறார். இவரது இந்த மகத்தான போராட்டத்திற்கு தமிழக முதல்வர் ஜெயலலிதா முதல் ஆளாக வாழ்த்துச் சொல்லியிருக்கிறார். அதே போல், அன்னா அசாரே என்னும் இந்தியன் தாத்தா ஊழலை ஒழிக்க உண்ணாநிலை போராட்டம் மேற்கொண்டார். ரமணா படத்தில் வசனம் பேசி விஜயகாந்தும், ராம்லீலா மைதானத்தில் உண்ணாவிரதமிருந்து அன்னா அசாரேவும் ஊழலை ஒழித்து விடுவார்கள் என்று இளைய தலைமுறை நம்புகிறது என்றால் அதைவிட கேவலம் என்ன இருக்கிறது?

modi_advani_360உண்ணாவிரதம் இருக்கும் இவர்களது யோக்கியதையைப் பற்றி நாம் பேசுவதற்கு முன்னால், உண்ணாநிலை என்கிற போராட்ட வடிவமே சரியான வழிமுறை கிடையாது என்பதே என் கருத்து. உண்மையான போராட்ட குணத்தை மக்கள் பெற்று விடுவதை தடுக்கும் வழிமுறையே உண்ணாநிலைப் போராட்டம். கருத்தியல் வடிவிலும், உடல் உழைப்பின் மூலமும், தங்களது கோரிக்கைகளை, சிந்தனைகளை மக்களிடமும், அரசிடமும் எடுத்துரைத்த போராட்ட வடிவங்களை மறக்கடிக்கச் செய்வதற்கே இந்த உண்ணாநிலை உதவும். ஒரு வேளைச் சாப்பாட்டிற்காக போராடிக் கொண்டிருக்கும் மக்கள் இருக்கும் இந்த நாட்டில் உண்ணா நிலையை போராட்ட வடிவமாக கையிலெடுக்கும் இவர்கள் அடித்தட்டு மக்களின் விடுதலைக்கு எதிரானவர்கள். விவசாயிகள், நெசவாளர்கள் தங்கள் தொழில் முடக்கம் காரணமாக தற்கொலை செய்து கொள்கிற சம்பவம் அன்றாட நிகழ்வாக இருக்கிறது. அவர்களை தற்கொலை செய்யும் அளவிற்கு தூண்டியது எது? பசி.

உணவின்மை இங்கு தீர்க்கப்பட வேண்டிய முக்கியமான பிரச்சனைகளில் ஒன்று. அடித்தட்டு மக்களின் அன்றாட வாழ்வியல் முறையாக இருக்கும் உணவின்மை பிரச்சனையை, வலிந்து ஏற்றுக்கொண்டு அதனை ஒரு போராட்ட வடிவமாக அறிவிப்பது எவ்வளவு பெரிய கயமைத்தனம். அன்னா அசாரே மொழியில் சொல்ல வேண்டும் என்றால், ஒரு வேளை சோற்றுக்கு வழியில்லாத விவசாயிகளும், தொழிலாளர்களும், இனிமேல் உணவு கிடைக்கும் வரை நாங்கள் உண்ணப் போவது இல்லை என்று அறிவித்து உண்ணாநிலை போராட்டம் அறிவிக்க வேண்டும். தங்களுக்கு உணவில்லாமல் செய்துவிட்ட முதலாளித்துவ அமைப்பை எதிர்த்து தொழிலாளர்கள் போராடக் கூடாது. இன்னும் சற்று விரிவாக சொல்ல வேண்டுமானால், ஜார் மன்னர்களின் கொடுங்கோன்மைக்கு எதிராக லெனின் உண்ணாவிரதம் இருந்திருக்க வேண்டும். வன்கொடுமைக்கு எதிராக தாழ்த்தப்பட்டோர்கள், இசுலாமியர்கள் மற்றும் பெண்கள் உண்ணாநிலை போராட்டம் அறிவிக்க வேண்டும். இனி வரும் இளைய தலைமுறையினருக்கு உண்ணாவிரதம் குறித்து உருவாக்கப்படும் கற்பிதம் மிகப்பெரிய ஆபத்தை உருவாக்கக்கூடியது.

உண்ணாவிரத நாடகங்களும், ஊடக மேடையும்:

உண்ணாவிரத நிகழ்ச்சியை வீரியமான போராட்டமாக உருவாக்கப்படுத்துவதில் ஊடகங்கள் அதிக கவனம் செலுத்துகின்றன. கார்ப்ரேட்டுகளின் முகவராக அடையாளப்படும் அன்னா அசாரேவின் உண்ணாவிரத்தையும், மதவெறியர் நரேந்திரமோடியின் உண்ணாவிரதத்தையும் பெருந்திரளான மக்களிடம் கொண்டுப்போய் சேர்த்ததில் ஊடகங்களுக்கு முக்கியப் பங்கு உண்டு. இவர்கள் உண்ணா விரதம் அறிவித்த பிறகு ஊடகங்கள் வருகின்றனவா (அல்லது) ஊடகங்கள் அறிவித்த பிறகு, இவர்கள் உண்ணாநிலை போராட்டத்தை அறிவிக்கின்றார்களா என்று நாம் சந்தேதிக்க வேண்டியுள்ளது. மூவர் தூக்குத் தண்டைக்கு எதிரான போராட்டம், செங்கொடியின் உயிர்த் தியாகம் போன்ற நிகழ்வுகளை திட்டமிட்டு மறைத்த சில ஊடகங்கள், நரேந்திரமோடி, அன்னா அசாரே ஆகியோரின் உண்ணா விரதத்தை மட்டும் பெரிதுபடுத்தி காண்பிக்கின்றன. ஏனென்றால், இவர்களது உண்ணாவிரதம் சமூக மாற்றத்திற்கான நிகழ்வு அன்று; மாறாக சமூகம் விழிப்புணர்வு பெற்றுவிட கூடாது என்பதற்காக நடத்தப்படும் நாடகம். அந்நாடகத்திற்கான மேடையாக இந்த ஊடகங்கள் செயல்பட்டு வருகின்றன. 

உண்ணாவிரதம் என்னும் ஆயுதம்:-

உண்ணாவிரதம் என்பது இவர்கள் குறிப்பிடுவது போல் ஓர் அயுதம்தான். அன்னா அசாரே, நரேந்திரமோடி போன்றோர் உண்ணாநிலை இருக்கும்போது, அவர்களது உண்மையான முகத்தினை மறைத்து, காப்பாற்றும் கவசமாக செயல்படுகிறது. இரோம் சர்மிளா, சானு போன்ற போராளிகள் உண்ணாநிலை இருக்கும்போது அரசு பயங்கரவாதமும், ஊடகங்களும் திட்டமிட்டு மறைக்கின்றன. ஒடுக்கப்பட்டோர் விடுதலைக்காக சிலர் மேற்கொள்ளும் உண்ணாவிரதம் அவர்களைக் கொல்லும் ஆயுதமாக செயல்படுகிறது. வரலாற்றின் பக்கங்களை புரட்டினால் அடித்தட்டு மக்களின் விடுதலைக்கு எதிராகத்தான் உண்ணாநிலை என்னும் ஆயுதத்தை நம் எதிரிகள் பயன்படுத்தியிருக்கிறார்கள் என்பது நமக்கு விளங்கும். தாழ்த்தப்பட்டோரின் இரட்டை வாக்குரிமைக்கு எதிராகத்தான் காந்தி உண்ணாவிரதம் மேற்கொண்டார். 81 வருடங்களுக்கு முன் காந்தி மேற்கொண்ட உண்ணாவிரதம் அம்பேத்கருக்கு விடுத்த மிரட்டல் என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும். தாழ்த்தப்பட்ட மக்களின் அரசியல் அதிகாரத்திற்கு எதிராக காந்தியார் தொடுத்த வன்முறை இன்னும் தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது. 

மதங்களும் உண்ணாநிலையும்:

கடவுளின் அன்பைப் பெறவும், ஏழைகளின் பசியை உணரவும் மதங்கள் உண்ணாவிரதத்தை அறிவுறுத்துகின்றன. இதன் பின்னணி என்ன? பசிக்கான மூல காரணத்தையும் அதை களைவதற்கான சமூகப் பணியினையும் மனிதன் மேற்கொள்ளக் கூடாது என்பதே. பிரார்த்தனை, உண்ணாநோன்பு போன்றவை புரட்சியை மட்டுப்படுத்தும் வடிவங்களே. ஆகவே தான், மதங்களும், அஹிம்சைவாதிகளும் அதனை தூக்கிப் பிடிக்கின்றனர். காந்தியடிகளின் உண்ணாவிரதம் அவரது இந்து மதப்பற்றின் வெளிப்பாடே. 

தமிழர் போராட்டங்களும், உண்ணாவிரதமும்

தமிழ்நாடு என்று பெயர் சூட்டுவதற்காக உண்ணாநிலை இருந்து உயிர் துறந்த சங்கரலிங்கனார், ஈழத்துப் போராளி திலீபன் போன்றோர் கூட உண்ணாநிலை என்னும் ஆயுதத்தை கையியெடுத்தனர்.

ஆனால், அவர்களது உண்ணாவிரதம் அவர்களைக் கொல்வதற்குப் பயன்பட்டதேயொழிய அவர்களது கோரிக்கைகள் வெல்வதற்கு பயன்படவில்லை என்பதை நாம் உணர வேண்டும். நமக்கான வாழ்வாதார உரிமைகளை நாம் எதிரிகளிடம் கேட்டு கொண்டிருக்க முடியாது. மக்களை அரசியல்படுத்துவதன் மூலம் மட்டுமே நம் உரிமைகளை பெற்றுக்கொள்ள முடியும். கோரிக்கைகள் எதுவாக இருந்தாலும், உண்ணாநிலை என்கிற வடிவம் நமக்கானது இல்லை. நமக்கு சாதகமான தீர்வையும் அது தரப் போவதில்லை. ஒருவேளை, உண்ணாவிரதத்தை ஒரு போராட்ட வடிவமாக நாம் உருவகப்படுத்தினால் வருங்காலத்தில் கீழ்க்காணும் ஆபத்துக்கள் ஏற்பட வாய்ப்பிருக்கிறது.

1.    மாட்டிறைச்சி உண்ணும் தலித்துகளை தூக்கிலிட வேண்டும் - பாபா குரு ராம்தேவ் உண்ணாவிரதம்.

2.    இராமர் கோயில் கட்டும் வரை உண்ணாவிரதம் - அத்வானி அறிவிப்பு

3.    சாதிவாரியான இட ஒதுக்கீட்டை நிறுத்தக் கோரி – சோ உண்ணாவிரதம்.

4.    இசுலாமியர்களை மும்பையிலிருந்து விரட்டும் வரை பால்தாக்கரே உண்ணாவிரதம்.

5.    ஓகேனக்கலை கர்நாடகத்திற்கு கொடுக்கும் வரை சதானந்த கவுடா உண்ணாவிரதம்.

மேற்கூறிய உதாரணங்கள் ஏதோ என்னுடைய மிகைப்படுத்தப்பட்ட கற்பனை அல்ல, உண்ணாவிரதம் குறித்த புனிதக் கோட்பாடும், உண்ணாவிரதமிருப்பவர் குறித்த கதாநாயக பிம்பமும் தொடர்ந்து வளர்த்தெடுக்கப்பட்டால், கண்டிப்பாக இது போன்ற சம்பவங்கள் நிகழும். உண்ணாவிரதம் ஒரு சண்டித்தனம் என்ற பெரியாரின் கூற்று எவ்வளவு பெரிய உண்மை என்பதை அம்பேத்கர் தனிப்பட்ட வாழ்க்கையில் உணர்ந்திருப்பார். உண்ணாவிரதம் எதிரிகளை மிரட்ட கோழைகள் பயன்படுத்தும் ஆயுதம் என்பதற்கு காந்தியாரின் வாழ்க்கையே   சாட்சி. நாம் சமூகத்தை மிரட்டுவதற்கான அரசியலை கையிலெடுக்க வேண்டாம். சமூக மாற்றத்திற்கான அரசியலே நமது கொள்கை. அக்கொள்கையின் அடிப்படையில் மக்களை ஆர்ப்பாட்டக்காரர்களாகவும், போராட்டக்காரர்களாவும் உருவாக்க உறுதி எடுப்போம். சுபர்மதி, ராம்லீலா மைதான பிம்பங்களை உடைத்தெறிவோம். மோடி மஸ்தான் முகத்திரையை கிழித்தெறிவோம்.

- ஜீவசகாப்தன் (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)

Comments

10 comments

10
Karuppasamy
Hi Jeeva,

This article is informative. I do not beleive in History. If we need some thing to happen, we ourselves need to take necessary steps from our end. I don't like looking at legends and i also hate fast.
I am 26 years old. If i don't eat three times a day. i feel so tired and vulnerable. I really wonder how these people do not eat continuosly for many days. This needs to be tested.

Note: There are poor people who have been fasting for many days, why are not they crowded with medias?

I look forward to seeing these sort of articles from you

Thanks,
Karuppasamy
VEENASO.
Jeeva sahaapthan,I agree with your reasonable arquaments.But one doubt. A lay man affected eitheir by Govt; or by powerfull institution. He is not belongs to any political party or any fouram.He is a single man. I think this is also a way to protest against the mighty power.The hunger strike may invite the attention of public,meadia and even Govt; Expect explanation.
கி.பிரபா
நமது உணர்வுகளைக் காட்ட, நிலை நாட்ட ஆட்சியாளர்கள் உணர்ந்து செயல்பட எப்படித்தான் வெற்றி காணமுடியும்.கோழைத்தனம் என்பதுவும் பொருத்தமாகாதே.நம்மைக் கேவலமாக,கீழ்த்தரமாக இந்தியன் என்றாலே எதற்கு வேண்டுமானாலும் வளைந்துக் கொடுப்பான் என்பதனை மாற்றுவதற்காக இறுதிமுடிவாக உண்ணாநிலை உயிர் துறத்தல் தானே உச்சக்கட்ட தீர்வு. கூடாது என்பதற்கு வேரெதுவும் வலுவான செயல்பாடுகள் உள்ளனவா? இருந்தால் நாங்கள் இணைந்து செயல்பட வருகிறோம். நன்றி.
அமீர் அப்பாஸ்
உண்மையாகவே உண்ணாவிரதம் இருந்த மொழிப்போர் தியாகி சங்கரலிங்கனார், ஈழத்தில் திலீபன் போன்றோரின் உண்ணாவிரதம் அவர்களை கொல்லவே பயன்பட்டது. கோரிக்கைகளை வெல்ல பயன்படவில்லை.. என்கிற வரிகள் போலிகளின் முகத்திரையை அம்பலப் படுத்தியது.
சர்வசித்தன்
கட்டுரையாளரின் கருத்தில் ஓரளவு உண்மை இருக்கிறது என்றாலும், ஒடுக்கப் பட்டவர்களுக்குத் தங்கள் எதிர்ப்பினை வெளிப்படுத்த இதைத் தவிர வேறெந்த வழியும் கிடையாது என்பதால் இதனை ஆதரிக்கும் நிலைக்கு நாம் தள்ளப்பட்டுள்ளோம் என்பதை மறுக்க இயலாதே? இவை தவிர இன்று, எடுத்ததற்கெல்லாம் உண்ணாநிலை என்பது சற்று வேடிக்கையான விளையாட்டாகவும் தெரிகிறது.அண்மைக் காலங்களில், எதிரியின் மீது முட்டை வீசுவதற்குப் பதிலாகச் சிலர் உண்ணாநிலையினைப் பயன் படுத்த முனைகிறார்களோ என்னும் ஐயமும் எழுகிறது.
வலுவற்றவர்களின் ஆயுதமான இதனை அரசியல் அதிகாரம் மிக்கவர்களும் தங்கள் கைகளில் எடுத்துக் கொள்வதைப் பார்த்தால் இவர்கள் உண்ணாநிலையினைப் பரிகசிப்பதாகவே எடுத்துக் கொள்ளவேண்டும்.
[www.sarvachitthan.wordpress.com]
Karuppasamy
Hi Veenaso,

Well..Anna is figthing against corruption. Offcourse He is a single man. I was realy surpised of seeing Overwhelming response to Anna Hazare's Fast against corruption.

It really tells us how far an ordinay person has been enticed towards so called anna's revolution.

Offcourse everyone has been suffering a lot due to corrupted bodies.

As you said, this could be a way to protest against the mighty power. but This is not the best way i would say. In fact, the PM is vulnerable. and He does not take quick actions. However he is being called innocent by everyone. If he is innocent, why should he become PM to India.?

This issue could have been handled in a better manner , had someone been a PM of India. This is not the only issue that Government mishandled.

what does he force government to do?. He needs Jan Lokpal to be implemented in India which he beleives it can control all government bodies including politicians who have been elected for assembly and parliament.

do you think Jan Lokpal can prevent politicians/government bodies from being corrupted.?

As far as i am concerned, It is absolutely not. alternately it will lead to mishandle democracy of india.

I also do not support the concept of placing PM under Jan Lokpal. It does not mean I am a congress supporter.

If we really need to fight against corruption, we should not join hands with someone like anna, narendra Modi. We all know who narendra Modi is.

Self Discipline and Self respect are the ways to mitigate corruption from india.

Thanks,
Karuppasamy
seyed muhammed
இஸ்லாம் பற்றிய உங்களின் தவறான புரிதல் பிற சாக்கடை கழிசடைகளை பற்றி பேசும் போதோ எழுதும் போதோ இஸ்லாத்தையும் சேர்த்து விடுகிறீர்கள். இஸ்லாம் கூறும் நோன்பு பட்டினி சாவிற்குரிய சாவுமணி.இரவு பகல் உண்ணாமல் பசித்திருப்பதை இஸ்லாம் வெறுக்கிறது.இஸ்லாத்தில் நோன்பு என்பது பயிற்சி.சமுக கொடுமைக்கெதிரான போராட்டத்தை கற்ப்பிக்கும் பயிற்சி. அன்ன ஹசாரே,மோடி,ஜெயலலிதா,காந்தி,ராம் தேவ் போன்ற எண்ணற்ற சமுக விரோதிகளின் நாடகங்களை இஸ்லாத்துடன் இனைத்து இஸ்லாத்தை கொச்சை படுத்தாதீர்கள். உண்ணா நாடகம் நடத்தும் நாடக சபையினர் பலம் பெற்றதின் பின்னனியில் கார்ப்ப்ரேட் நிறுவனங்கள் மட்டுமில்லை.எதிரி யார் என அடையாளம் இடத்தெரியாத போராளிகளின் பரிதாபமும் அடங்கியுள்ளது. அதை சரி செய்யாத வரை இது போன்ற கட்டுரைகளுக்கு பயனுமில்லை.
VEENASO.
Thiru.Karuppasamy, Please see my comment on 23-9-2011, in which I said that I agree with Jeevasahapthan and also accepted his reasonable arquements.I never said any objection over his article.Just I had a doubt.Sorry, my doubt has not been adressed.{In a Jail, a prisioner's weapen is Fast}.In my comment I talked about ' lay man'. But you said - 'of course, He [ANNA] is a single man'. I differ here.ANNA is not a single man.He is backed by Corporate companies and vested interest. U.S.A. Indian and forigne corporate magnetes, Manmohan singh,Advani, and unscrupless persons like Anna Hazare are united themselves and successfully converted India as an imperialistic country. Is these elements eradicate corruption in India? With the overvelming support of medias,they stage managed a ANNA drama to suppress the voice of the commen People.
jeevasagapthan
இந்த கடட்டுரையில் நான் இசுலாம் மதத்தை பேச வில்லை.syed mohammed understand this article.you read my another articles.
ramesh
திரு சர்வசித்தன் அவர்களெ! ஒடுக்கப்பட்டவர்களை போரடுவதிலிருந்து தள்ளிவைக்கவே உண்ணாணிலை ஹைலைட் செய்யப்படுகின்றது.ஆங்கில அரசும் தன் கையை மீறிப்போன இந்திய விடுதலைப்போரட்டத்தை மழுங்கடிக்கவே காந்தியை உண்ணானிலையை இருக்க வைத்தது.இந்திய விடுதலை வரலற்றில் காந்தியார் ஹைலைட் செய்யப்படுவதற்ககும் நாம் ஆளும் வர்க்கங்களை எதிர்த்துப் புரட்சி செய்து விடாமல் தடுக்கவே! ஒரு பக்கம் பரமக்குடி சம்பவங்கள்! காவல் துறை மூலமும் மறுபக்கம் அன்னா ஹசாரே மூலமும் ஒடுக்கப்படுபவர்களின் போராட்டகுணம் மழுங்கடிக்கப்படுகிறது! இளையவர்கள் சினிமாவால் திசை திருப்பப்படுகின்றனர்

Leave a comment

Fields marked with * are required.

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.