இந்தியாவில் நீண்டகால இடைவெளிக்குப் பின் சாதிவாரிக் கணக்கெடுப்புப் பணி நடைபெறுகிறது. இதில் வேடிக்கை என்னவென்றால், சாதி ஒழிய வேண்டும் என்ற கொள்கையுடையோர் சாதிவாரிக் கணக்கெடுப்பு வேண்டும் என்றனர். சாதி இருக்க வேண்டும் என்ற கொள்கையுடையோர் சாதி வாரிக் கணக்கெடுப்புக் கூடாது என்றனர்.

பலர் இதில் அடங்கியுள்ள நுட்பத்தை அறியாமல் நம்மைப் பார்த்து "சாதி மத பேதமற்ற சமுதாயம் அமைப்போம்' என்று கூறுகிறீர்கள். அதற்கான ஒரு இயக்கத்தையும், ஒரு இதழையும் நடத்துகிறீர்கள். ஆனால் சாதிவாரிக் கணக்கெடுப்பை ஆதரிக்கிறீர்களே அது என்ன நியாயம்'' என்றனர்.

முள்ளை முள்ளால் எடுப்பதுபோல், சாதியை ஒழிக்கச் சாதிவாரிக் கணக்கெடுப்பு நமக்குத் தேவை. இடஒதுக்கீடு கோருவது அல்லது இடஒதுக்கீடு வழங்குவதற்கு அடிப்படையாக இருப்பது சாதி பற்றிய புள்ளி விவரங்களே! இடஒதுக்கீடு தொடர்பான வழக்குகள் நீதிமன்றங்களில் வரும்போது, அவர்கள் கேட்கும் முதல் கேள்வி எந்தப் புள்ளி விவர அடிப்படையில் இட ஒதுக்கீடு கோருகிறீர்கள்? என்பதுதான்.

பாசறையின் சார்பில் கலப்பு மணத் தம்பதியர்களின் வாரிசுகளைச் “சாதியற்றோர்'' என வகைப்படுத்தி 10 விழுக்காடு இட ஒதுக்கீடு வழங்கிட வேண்டும் என்ற கோரிக்கை மத்திய அரசிடம் முன்வைத்தபோது, அரசு அதிகாரிகள் பலர் நம்மிடம் கேட்ட முதல் கேள்வி, என்ன புள்ளி விவரம் வைத்திருக்கிறீர்கள்? என்பதுதான் இந்தக் கேள்விக்கு நம்முடைய மௌனமோ பதிலாக இருந்தது. காரணம் இதுவரை மக்கள் தொகை கணக்கெடுப்பில் “கலப்பு மணத் தம்பதியினர்'' எவ்வளவு பேர் இருக்கிறார்கள் என்ற விவரம் சேகரிக்கப்படவே இல்லை.

கலப்பு மணம் அல்லது சாதி மறுப்பு மணம் என்பது சாதி தோன்றிய காலத்திலிருந்தே நடைபெற்று வருகிறது. நாடு விடுதலை அடைந்ததிலிருந்தே கணக்கெடுத்தாலும் குறைந்த பட்சம் ஒரு கோடி திருமணங்களாவது நடைபெற்று இருக்கும். இவர்களில் மிகச் சிலரே மாநில அரசுகளில் பதிவு செய்து மிகச் சிறிய உதவிகளைப் பெற்றுள்ளனர்.

இதுபோன்ற விவரங்களைச் சேகரிக்க மத்திய அரசு எப்போதும் முன்வருவதில்லை. காரணம் சாதியையும் மதத்தையும் காப்பாற்ற விரும்பும் கட்சிகளே இதுவரை நாட்டை ஆண்டனர், ஆளுகின்றனர்.

இட ஒதுக்கீடு கோரும் நமக்குச் சில ஆதாரங்கள் தேவை. இல்லை என்றால் நம்முடைய இடஒதுக்கீட்டுக் கோரிக்கையை நீதிமன்றங்கள் மிகச் சுலபமாக நிராகரிக்கும்.

எனவே, சாதியை ஒழிக்க இட ஒதுக்கீடு தேவை. இடஒதுக்கீடு பெற்றிட சாதி வாரிப் புள்ளி விவரம் தேவை. இந்தியாவில் சாதி ஒழிக்கப்படவில்லை. சாதி ஒழிக்கப்படாமல் இருக்கும்போது, சாதி வாரிக் கணக்கெடுப்பு தேவை இல்லை என்று சொல்லுவது என்ன நியாயம்?

இந்திய அரசமைப்புச் சட்டம் சாதியைப் பாதுகாக்கிறது என்பதால்தான். தந்தை பெரியார் அதனை ஏற்றுக்கொள்ள முடியாது என்று கூறி, 1957 ஆம் ஆண்டு, அதாவது 55 ஆண்டுகளுக்கு முன்பே கருஞ்சட்டைப் படைகளுடன் அரசமைப்புச் சட்டத்தில் சாதியைப் பாதுகாக்கும் பகுதியைத் தீயிட்டு எரித்த தனது கண்டத்தை பதிவு செய்து 3000 தொண்டர்களுடன் 3 ஆண்டுகள் சிறைத் தண்டனையை அனுபவித்தார் என்பது வரலாறு.

சாதிவாரிக் கணக்கெடுப்பு தொடர்பாகப் பல தலைவர்கள் பலவிதமான அறிக்ககைளை வெளியிட்டுள்ளனர். அதில் சிலர் தன் சாதி உயர்ந்த சாதி எனப் பெருமிதம் கொள்கின்றனர். சிலர் மொழியைப் பதிவு செய்யக் கோருகின்றனர். சிலர் மதத்தைப் பதிவு செய்யக் கோருகின்றனர்.

பாசறை சாதி வாரிக் கணக்கெடுப்பை வரவேற்கிறது. அதோடு கலப்பு மணத் தம்பதியர்களின் விவரத்தையும் சேகரிக்க அரசு முன்வர வேண்டும் என்ற கோரிக்கையையும் முன்வைக்கிறது. அரசு நிறைவேற்றுமா? 

இந்தியாவில் முதல் ஊழல்

“சுதந்திர இந்தியாவில் நேருவின் தலைமையிலான காங்கிரசு கட்சி ஆட்சியில் தான் அவரின் அன்புக்குரிய நண்பர் வி.கே.கிருஷ்ண மேனன் இராணுவத்திற்கு 4000 ஜீப்கள் வாங்குவதில் 216 கோடி ஊழல் செய்து இம்மண்ணில் ஊழலுக்கான பயணத்தை தொடக்கி வைத்தார். அவருக்கு என்ன தண்டனை கிடைத்தது தெரியுமா? எந்தத் துறையில் அவர் ஊழல் செய்தாரோ அதே துறையில் அவர் அமைச்சராக்கப்பட்டார் ஆம், 1956 ஆம் ஆண்டு இராணுவ அமைச்சராக நேரு அவரை நியமித்து, அவர் மீதான ஊழல் தொடர்பான விசாரணைக்கு சமாதி கட்டினார்.

இந்தியாவில் தற்போது ஊழல் இல்லாத துறை இல்லை. அதே நேரத்தில் ஊழலை ஒழிக்க ஒரு துறை உண்டு.

Pin It