தமிழக அரசியல் பண்பாட்டுக்கென சில தனித்துவங்கள் உண்டு. எதிர்க்கட்சித் தலைவர்கள் சட்டமன்றத்துக்குப் போகாதது, பதவி ஏற்பு விழாக்களில் கலந்து கொள்ளாதது, முந்தைய ஆட்சியில் கட்டப்பட்ட நினைவுச் சின்னங்களைப் புறக்கணிப்பது, நல்ல திட்டங்களாயினும் அவற்றை ஊத்தி மூடுவது இவற்றையெல்லாம் இந்தியாவின் வேறு எந்த மாநிலங்களிலும், உலகின் வேறெந்த நாடுகளிலும் காண முடியாது. தமிழர்கள் இப்படியான ஒரு பண்பாட்டை எங்கிருந்து வரிந்துக் கொண்டார்கள்?
சமச்சீர்க் கல்வி அமுலாக்கத்தை நிறுத்தி வைத்து ஆணையிட்ட செயல் செயலலிதாவைப் புரிந்து கொண்டவர்களுக்கு வியப்பளிக்கக் கூடியதல்ல. எனினும் ஆயிரம் கோடிக்கு மேல் செலவு செய்து கட்டப்பட்ட சட்டமன்றத்தைப் புறக்கணித்த செயலைக் காட்டிலும், இது எல்லோரையும் வருத்தத்தில் ஆழ்த்தியது. குழந்தைகளின் கல்வியில் போய் அவர்கள் அதிகாரப் போட்டி நடத்துகிறார்களே என்று மக்கள் கவலைப்பட்டனர். பல காலம் போராடி, அழுத்தம் கொடுத்துக் கொண்டு வந்த பொதுப் பாடத் திட்டத்தை நிறுத்துகிறார்களே என்று சமூக ஆர்வலர்களும் முற்போக்குச் சிந்தனையாளர்களும் கவலை கொண்டனர்.
தமிழக அரசு சென்ற கல்வியாண்டு முதல் நடைமுறைப்படுத்தத் தொடங்கியிருந்த "சமச்சீர்க் கல்வி' என்பது உண்மையான சமச்சீர்க் கல்வி அல்ல. சமச்சீர்க் கல்வி அல்லது "பொதுக் கல்வி' என்பது பல அம்சங்களைக் கொண்டது. குறிப்பான மூன்று அம்சங்களில் ஒன்றுதான் பொதுவான பாடத்திட்டம். மற்றது எல்லோருக்கும் பொதுவான பள்ளி. மூன்றாவது அங்கம் தாய்மொழியிலேயே கல்வி பயிற்றுவிப்பது. "ஜி8' நாடுகள் உட்பட வளர்ச்சியடைந்த பல நாடுகளிலும் இத்தகைய பொதுக் கல்வி முறையே நடைமுறையிலுள்ளது.
பிறந்த குழந்தைக்கு அதற்கருகாமையிலுள்ள ஒரு பள்ளியில் தானாகவே இடம் ஒதுக்கப்படும். உரிய வயது வந்தவுடன் நீங்கள் அங்கே கொண்டு சேர்க்கலாம். ஐரோப்பாவிற்குச் சென்றீர்களேயானால், அகதிகளாகச் சென்றுள்ள நமது ஈழத் தமிழ்க் குழந்தைகளும் உள்நாட்டு வெள்ளைப் பிள்ளைகளும் ஒரே பள்ளிகளில் சமமாகப் பயில்வதைக் காணலாம்.
மனுதர்மம் கோலோச்சிய நமது நாட்டில் இது என்றைக்கும் சாத்தியப்பட்டதில்லை. சனநாயக ஆளுகைக்குள்ளேயே குலக்கல்வித் திட்டத்தைக் கொண்டு வந்தவர்களல்லவா நாம். எனவே வசதியிலும் சாதியிலும் உயர்ந்தவர்களுக்கு ஒரு வகைக் கல்வி, வசதிகள் நிறைந்த பள்ளிகள். மற்றவர்களுக்கு எளிய அரசுப் பள்ளிகள் மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள்.
கடந்த சில பத்தாண்டுகளில் இந்நிலை ரொம்பவும் உச்சத்தை அடைந்தது. சுமார் 50 ஆண்டுகட்கு முன்பு, நாங்களெல்லாம் பள்ளிகளில் படித்த காலத்தில் ஒரு வகையில் பொதுப் பள்ளி முறை நடைமுறையில் இருந்ததெனச் சொல்லலாம். பெரும்பாலும் அரசு அல்லது அரசு உதவி பெறும் பள்ளிகள்தான்.
நானெல்லாம் எம்.ஃபில் வரைக்கும் அரசு நிறுவனங்களிலேயே பயின்றவன். இப்போதுள்ள பத்மா சேஷாத்திரி, டி.ஏ.வி. மாதிரியான பள்ளிகள் அப்போது மிக மிகக் குறைவு.
இருவகைத் தரங்களில் அமைந்த பள்ளிகள் என்பது தவிர பலவகைப் பாடத் திட்டங்கள் என்கிற நிலையும் தமிழகத்தில் ஏற்பட்டது. குறைந்தபட்சம் நான்கு பாடத் திட்டங்கள் என்பது வேறெந்த மாநிலத்திலும் இல்லாத கொடுமை. இதுதவிர பல வகை மத்திய கல்வி வாரியம் பள்ளிகளும் உண்டு. சென்ற சில பத்தாண்டுகளில் புற்றீசல்கள் போல் முளைத்த மெட்ரிகுலேஷன் பள்ளிகள் தமது பாடத்திட்டம் மாநில வாரியப் பாடத் திட்டத்தைக் காட்டிலும் வேறுபட்டது என்கிற சொல்லாடலில் அடிப்படையிலேயே தமது கல்விக் கொள்கையைச் செவ்வனே நடத்த முடியும் என்கிற அடிப்படையில் இயங்கின. எனவே நான்கு பாடத் திட்டங்கள் என்பதில் எந்த வகை மாற்றத்தையும் அனுமதிக்க இவர்கள் தயாராகயில்லை.
1947க்குப் பிந்திய இந்தியாவில் கல்வித் துறையில் வெளிவந்த ஒரு முக்கிய ஆவணம் கோத்தாரி கல்வி ஆணைய அறிக்கை (1964-66). எல்லோருக்குமான பொதுப் பள்ளி என்கிற கருத்தை இது வலிமையாக முன் வைத்தது. இதன் மூலமே "பல்வேறு வர்க்கங்களும், மக்கட் குழுமங்களும் ஒன்றிணைவதும் அதன் மூலம் சமத்துவம் சமூக அமைப்பு உருவாவதும் சாத்தியம் ஆகும்'' என அது தெளிவாகக் கூறியது. "அப்படி இல்லாதபோது கல்வியே சமூகப் பிரிவினைகளை அதிகரிக்கவும், வர்க்க / சமூக வேறுபாடுகளைத் தொடரவும் காரணமாகி விடும்' என அது எச்சரிக்கவும் செய்தது.
“இது ஏழைக் குழந்தைகளுக்கு மட்டுமின்றி வசதி படைத்த முன்னேறிய பிரிவினரின் குழந்தைகளுக்கும் தீங்கானது. ஏனெனில் இவ்வாறு தமது குழந்தைகளைப் பிரித்து வைப்பதன் மூலம் முன்னேறிய பிரிவைச் சேர்ந்த பெற்றோர்கள் தமது பிள்ளைகளை ஏழைக் குழந்தைகளின் வாழ்வையும் அனுபவங்களையும் பகிர்ந்து கொள்வதிலிருந்தும் எதார்த்த வாழ்வைப் புரிந்து கொள்வதிலிருந்தும் தடுக்கின்றனர். இதன் மூலம் தமது சொந்தப் பிள்ளைகளின் கல்வியை முதுமையற்றதாகவும், சோகை பிடித்ததாகவும் ஆக்கி விடுகின்றனர்'' என விளக்கிய கோத்தாரி ஆணையம் நாட்டு வளர்ச்சிக்கும் சமூக ஒற்றுமைக்குமான கருவியாக நமது கல்வி அமைய வேண்டுமானால் பொதுப் பள்ளி முறையை நோக்கி நகர வேண்டும் என முத்தாய்ப்பாக அறிவுறுத்தியது.
1986ல் ராஜீவ் காந்தி அறிமுகப்படுத்திய புதிய கல்விக் கொள்கையிலும் கூட பொதுக் கல்வி முறை வாயளவிலாவது வற்புறுத்தப்பட்டது. ஆனால் அதற்குப் பின் இங்கு அதிவேகமாக நடைமுறைப்படுத்தப்பட்ட உலகமயச் செயல்பாடுகளில் பொதுக் கல்வி என்கிற பேச்சுக்கு இடமில்லாமற் போனது.
பொதுக் கல்வி இல்லாமற் போனாலும் பொதுப் பாடத் திட்டமாவது பிற மாநிலங்களில் நடைமுறையிலிருந்தது. தமிழகத்தில் அதுவுமில்லை. தமிழையே படிக்காமல் கூட இம் மாநிலத்தில் ஒருவர் உயர் படிப்பு வரை படித்துவிட முடியும் என்கிற அவல நிலையும் இங்கு மட்டுமே இருந்தது. பொதுப் பாடத் திட்டம், தமிழைக் கட்டாயப் பாடமாக்குவது, தாய்மொழிக் கல்வி ஆகியவற்றை வற்புறுத்தி அக்கறையுள்ள தமிழர்கள் அழுத்தம் கொடுத்ததன் விளைவாக தி.மு.க. அரசு தனது வாக்குறுதிகளின் அடிப்படையில் 2006ம் ஆண்டு தமிழ்க் கல்விச் சட்டத்தை இயற்றியது. இதன் மூலம் தமிழ் கட்டாயப் பாடமாக்கப்பட்டது.
பொதுக் கல்வி (இதற்கு கருணாநிதி அரசு இட்ட பெயர் தான் சமச்சீர்க் கல்வி) தொடர்பாக கல்வியாளர் முத்துக் குமரன் தலைமையில் ஒன்பது பேர் கொண்ட குழு ஒன்றையும் நியமித்தது. இரண்டாடுகளில் இக்குழு அறிக்கையைச் சமர்ப்பித்தது. பல நல்ல அம்சங்களுடன் கூடிய 109 பரிந்துரைகளை இது செய்திருந்தது. இதனை நடைமுறைப்படுத்துவது தொடர்பாக ஒரு நபர் ஆணையத்தை தமிழக அரசு நியமித்தது. விஜயகுமார் இதற்குப் பொறுப்பேற்று தனது அறிக்கையைச் சமர்ப்பித்தார். அதன்படி 2009ம் ஆண்டு சமச்சீர்க் கல்விச் சட்டம் உருவாக்கப் பட்டது.
முத்துக்குமரன் அறிக்கையின் 109 பரிந்துரைகளில் நான்கு மட்டுமே இதில் ஏற்றுக் கொள்ளப்பட்டன. பொதுப் பள்ளி முறை, தாய்மொழி வழிக் கல்வி ஆகியவை புறக்கணிக்கப்பட்டன. மெட்ரிகுலேஷன், மாநில வாரியம், ஓரியண்டல் மற்றும் ஆங்கிலோ இந்தியன் என்கிற நான்கு விசயங்களை நீக்கி ஒரே பாடத் திட்டம் என்பது மட்டுமே இதில் வரவேற்கத்தக்கதாக இருந்தது.
நாம் கோரியது இதுவல்லவெனினும் சமச்சீர்க் கல்வியை நோக்கிய ஒரு முதற்படி என நாம் இதை வரவேற்றோம். தாய்மொழி வழிக் கல்வி குறித்தெல்லாம் மக்களிடம் ஆதரவில்லாத சூழலில் உடனடியாக அதை நடைமுறைப்படுத்துவதில் அரசுக்குள்ள சிக்கலையும் நாம் புரிந்து கொள்ள வேண்டியதாயிற்று.
சென்ற கல்வியாண்டில் (201011) ஒன்றாவது மற்றும் ஆறாம் வகுப்புகளுக்கும் சமச்சீர்க் கல்விப் பாடத்திட்டம் தொடங்கியது. இந்தக் கல்வி ஆண்டு முதல் பிற 2, 3, 4, 5, 7, 8, 9, 10 வகுப்புகளுக்கும் சமச்சீர்க் கல்வி நடைமுறைப்படுத்தவும் சட்டம் வழி வகுத்தது.
இதுவரையில் இல்லாத அளவிற்குச் சனநாயக முறையில் அக்கறையுள்ள கல்வியாளர்கள் தேர்வு செய்யப்பட்டு பலரும் பங்கேற்ற பாடத்திட்டங்கள் உருவாக்கப்பட்டன. இந்திய அளவில் தரமான பாடத் திட்டங்களுடன் ஒப்பிட்டு, நவீனக் கல்விப் பயிற்சி முறைகளை எல்லாம் உள்ளடக்கி உருவாக்கப்பட்ட இப்பாடத்திட்டம் இணையத் தளங்களில் வெளியிடப்பட்டு பொதுக் கருத்தும் கோரப்பட்டது. திருத்தங்கள் விவாதித்து ஏற்றுக் கொள்ளப்பட்டன.
சுமார் 150 கல்வியாளர்கள், முற்போக்குச் சிந்தனை யாளர்கள் பங்கேற்று ஓராண்டு காலம் உழைத்து பாட நூற்கள் உருவாக்கப்பட்டன. சென்ற ஆண்டு நடைமுறைக்கு வந்த 1, 6ம் வகுப்புப் பாட நூற்களை ஆசிரியைகள் சுடரொளி, மீனா போன்றவர்கள் விமர்சித்து எழுதிய கட்டுரைகள் குறிப்பிடத்தக்கன. சில குறைபாடுகள் இருந்தபோதிலும் இப்பாட நூற்கள் முந்தைய நூற்களைக் காட்டிலும் பல வகைகளில் தரத்தில் உயர்ந்திருந்தன.
தனியார் பள்ளி நிறுவனங்களும் இக் குழுக்களில் பங்கேற்றன. சட்டத்தைச் செல்லாது என அறிவிக்க வேண்டும் என உயர்நீதிமன்றத்தை அணுகியபோது உயர்நீதிமன்றம் அதை அனுமதிக்கவில்லை. உச்சநீதிமன்றத்தை அணுகியபோதும் அதுவும் தனியார் பள்ளிகளின் மனுவைத் தள்ளுபடி செய்தது. வேறு வழியின்றி சட்டத்தை அவர்கள் ஏற்றுக் கொள்ள வேண்டிய தாயிற்று.
எனினும் கருணாநிதி அரசு தனியார் பள்ளி நிர்வாகங்கள், நோட்ஸ் போட்டு விற்பனை செய்யும் வணிகர்கள் ஆகியோரின் அழுத்தத்தை ஏற்று கல்வியாளர்கள் உருவாக்கிய பாட நூற்களில் சில திருத்தங்களையும் செய்தது. 200 கோடி செலவில் ஒன்பது கோடிப் பாட நூற்கள் அச்சிட்டு மாவட்டங்களுக்கு அனுப்பப்பட்டன.
இன்னொன்றைச் சொல்லியாக வேண்டும். தற்புகழ் பாடிக் கொள்வதில் ஆபாசத்தின் உச்சத்தையே எட்டிவிடக் கூடிய கருணாநிதி அவருடைய பாடல்கள், அவரது அரசின் நலத் திட்டங்கள், மகளின் சென்னை சங்கமம் ஆகியவை குறித்த பாடங்களையெல்லாம் பச்சைக் குழந்தைகளின் பள்ளி நூற்களில் இணைத்துக் கொண்டார்.
அதிரடிப் பெரும்பான்மையுடன் செயலலிதா ஆட்சியைப் பிடித்தவுடன் மெட்ரிகுலேஷன் கல்விக் கொள்ளையர் விழித்துக் கொண்டனர். செயலலிதாவை அணுகினர். சோ போன்றோர் இடைத்தரகு வேலை பார்த்தனர். பதவி ஏற்ற கையோடு சமச்சீர்க் கல்வியை இந்த ஆண்டு நடைமுறைப்படுத்த இயலாது என அரசு அறிவித்தது. பாட நூற்கள் தரமாக இல்லை எனவும் இதை மதிப்பிட ஒரு குழு அமைக்கப்படும் எனவும் அடுத்த ஆண்டு முதல் திருத்தப்பட்ட வடிவில் சமச்சீர்க் கல்வி நடைமுறைப்படுத்தப்படும் எனவும் அறிவிக்கப்பட்டது.
மாணவர்கள் நலனைக் கருத்தில் கொண்டு இந்த ஆணையை கைவிட வேண்டுமென நாம் வேண்டினோம். பாடப் பகுதிகள் எதையும் நீக்க வேண்டும் என்றால் நீக்கிக் கொள்ளுங்கள். தரத்தை உயர்த்தும் நோக்கில் எதையும் சேர்க்க வேண்டுமானாலும் சேர்த்துக் கொள்ளுங்கள், இதற்கான முன்னுதாரணங்கள் எல்லாம் நிறையத் தமிழகத்தில் உண்டு. ஆனால் எக்காரணம் கொண்டும் சமச்சீர்க் கல்வி நடைமுறைப்படுத்தப்படுவதை நிறுத்தக் கூடாது எனக் கேட்டுக் கொண்டோம். எல்லாம் செவிடன் காதில் ஊதிய சங்காயிற்று.
தி.மு.க. அரசு உருவாக்கிய சமச்சீர்க் கல்விச் சட்டத்தில் ஒரு புதிய திருத்தத்தை (3ம் பிரிவு) சட்டமன்றத்தில் நிறைவேற்றியது அதிமுக அரசு. சமச்சீர்க் கல்வி நடைமுறையாக்கம் நிறுத்தி வைக்கப்படுவது இதன் மூலம் சட்டப்பூர்வமாக்கப்பட்டது.
வேறு வழியின்றி உயர் நீதிமன்றத்தை நாம் அணுக வேண்டியதாயிற்று. பலரும் (நான் உட்பட) பொதுநல வழக்குகளைத் தொடர்ந்ததன் அடிப்படையில் தலைமை நீதிபதி இக்பால், டி.எஸ். சிவஞானம் ஆகியோர் பங்கு பெற்ற உயர் நீதிமன்ற அமர்வு செயலலிதா அரசின் சட்டத் திருத்தத்திற்கு இடைக்காலத் தடை வழங்கியது. பாட நூற்கள் தரமாக இல்லை என்கிற காரணத்தைக் கூறி சமச்சீர்க் கல்வி அமலாக்கம் நிறுத்தப்பட அவசரக் கோல நடவடிக்கையை விமர்சனமும் செய்தது. தேவையான பகுதிகளை நீக்கிக் கொள்ளுதல், குழு ஒன்றை அமைத்து தரத்தை மதிப்பிடுதல் ஆகியவற்றுக்கான அரசின் உரிமைகளையும் தீர்ப்பு ஏற்றுக் கொண்டது.
மாணவர் நலனைக் கருத்தில் கொண்டு தமிழக அரசு மேல் முறையீடு செய்யாது என நம்பினோம். ஆனால் விடுவாரா செயலலிதா? உச்ச நீதிமன்றத்திற்குச் சென்றார். அரசியல் மாற்றங்களை ஒட்டி நிர்வாக ரீதியாகவோ, சட்டமன்ற முடிவுகளின் அடிப்படையிலோ எடுக்கப்படும் முடிவுகள் மாணவர் நலனைப் பிரதானமாகக் கருதி கொள்ள வேண்டும் எனக் கூறிய நீதிபதிகள் பி.எஸ். சவுகான் மற்றும் சுதந்திரகுமார் 1, 6ம் வகுப்புகளுக்கு சமச்சீர் கல்வியை உடனடியாக நடைமுறைப்படுத்த வேண்டும் எனவும் பிற வகுப்புகளைப் பொறுத்தமட்டில் தமிழக அரசு நிபுணர் குழு ஒன்றை அமைத்து, அக் குழு பாடத் திட்டம் மற்றும் பாட நூற்களை மூன்று வாரங்களுக்குள் மதிப்பிட்டு அறிக்கை அளிக்க வேண்டும், இந்த அறிக்கையின் அடிப்படையில் உயர்நீதிமன்றம் தினசரி அமர்ந்து பொது நல வழக்குகளை விசாரித்து உடனடியாகத் தீர்ப்பளிக்க வேண்டும் எனவும் ஆணையிட்டனர்.
திமுக அரசின் சமச்சீர்க்கல்வி சட்டம் உயர்நீதிமன்றம் மற்றும் உச்ச நீதிமன்றங்களால் ஏற்பளிக்கப்பட்டதால், இக்குழு சமச்சீர்க் கல்வியை மாற்றுவதா இல்லையா என்கிற பிரச்சினைக்குள் செல்லக் கூடாது. ஏப்ரல் 2010ல் உயர் நீதிமன்றம் வழங்கிய சமச்சீர்க் கல்வி அமுலாக்கத் தீர்ப்பை எவ்வாறு செயல்படுத்துவது என்பதையே இக் குழு ஆராய்ந்து பரிந்துரைக்க வேண்டும். அந்த அடிப்படையில் "ரிட்' மனுக்களை நீதிமன்றம் விசாரிக்க வேண்டும் எனவும் உயர்நீதிமன்றம் தெளிவாக ஆணையிட்டது.
எனினும் உச்சநீதி மன்றம் நிபுணர் குழு அமைப்பதில் கொஞ்சம் சொதப்பி விட்டது. நிபுணர் குழுவை அதுவே அமைத்திருக்க வேண்டும். மாறாக சமச்சீர்க் கல்வி அமலாக்கத்தை நிறுத்தும் உரிமை கோரி உச்ச நீதிமன்றத்தை அணுகிய மனுதாரரையே ஒரு குழு அமைக்கச் சொல்வது என்ன நியாயம்? ஆனால் உச்ச நீதிமன்றம் அப்படித்தான் சொன்னது. அக் குழுவிற்கு செயலலிதா அரசின் தலைமைச் செயலர் தலைமை ஏற்பார். பள்ளிக் கல்விச் செயலர், பள்ளிக் கல்வி இயக்குனர் ஆகிய தமிழக அரசு அதிகாரிகள் தவிர, வேறு இருபிரதிநிதிகளையும் தமிழக அரசு நியமித்துக் கொள்ளலாம்.
"தேசிய கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்திலிருந்து இரு உறுப்பினர்களையும் நியமித்துக் கொள்ள வேண்டும். தமிழக அரசு அதிகாரிகளே மூவர் இருக்கும்போது மேலும் இரு தமிழக அரசுப் பிரதிநிதிகள் எதற்கு? தமக்கு வேண்டிய "கல்வியாளர்களை' தேர்வு செய்யும் உரிமையையும் மனுதாரருக்கு அளிப்பது எங்ஙனம்?
நாம் எதிர்பார்த்தது போலவே இன்று பத்மா சேஷாத்திரி, டி.ஏ.வி. லேடி ஆண்டாள் முதலான மெட்ரிகுலேஷன் பள்ளி நிர்வாகிகளும், முதலாளிகளும், கல்வியாளர்கள் என்கிற பெயரில் உள்ளே கொண்டு வரப்பட்டுள்ளனர். கல்வியாளர்களும், வல்லுனர்களும் ஓராண்டு காலம் உழைத்துத் தயாரித்த பாடத் திட்டம் மற்றும் நூல்களை அரசு அதிகாரிகளும் மெட்ரிகுலேஷன் பள்ளி கல்வி வணிகர்களும் எவ்வாறு மதிப்பிட முடியும். அதிகாரிகளுக்கு வேறு தகுதிகள் இருக்கலாம். இந்தத் தகுதி அவர்களுக்கு எப்படி வந்தது?
ஆக சமச்சீர்க் கல்விப் பாடத் திட்டமும் பாட நூல்களும் தரக்குறைவாக உள்ளது எனச் சொல்லி 200 கோடி ரூபாய் செலவிலும் 150 கல்வியாளர்களின் ஓராண்டு உழைப்பிலும் தயாரிக்கப்பட்ட பாடத்திட்டத்தையும் நூல்களையும் நிராகரித்தே இக்குழு அறிக்கை அளிக்கும் என எதிர்பார்க்கலாம். புதிய பாட நூல்களைப் பாடத் திட்டத்தையும் தயாரிக்கக் கால அவகாசம் போதாது என உயர்நீதிமன்றம் ஓராண்டு அமலாக்கத்தை நிறுத்தி வைக்கும் அரசாணைக்கு ஏற்பு வழங்கலாம்., அரசு ஒப்புதலுடன் தனியார் பள்ளிகள் தமது விருப்பத்திற்கும் பாட நூற்களை எழுதிக் கொள்ளலாம் அல்லது தேர்வு செய்து கொள்ளலாம் எனவும் இக்குழுபரிந்துரைக்க வாய்ப்புண்டு.
எனினும் பொதுப் பாடத்திட்டம் என்கிற முடிவில் மாற்றம் கூடாது என்பதைத் தொடர்ந்து நீதிமன்றங்கள் ஏற்றுக் கொண்டு வந்துள்ளதால் அதை முற்றிலும் தவிர்ப்பதற்கு அரசுக்கு வழியில்லை என்றே தோன்றுகிறது.
ஒரு சில அம்சங்கள் சிந்திக்கத்தக்கன.
1. வெறுமனே கருணாநிதியின் கருத்துகளையும், பிரச்சாரங்களையும் பாட நூற்களிலிருந்து நீக்குவது மட்டும் செயலலிதாவின் நோக்கமல்ல. அதற்காக மட்டுமே சமச்சீர்க் கல்வி அமலாக்கம் நிறுத்தி வைக்கப்படவுமில்லை. முற்போக்காளர்கள், தமிழ்ப் பற்றாளர்கள் இணைந்து உருவாக்கியுள்ள இப்பாடத் திட்டம் பார்ப்பனீயத்திற்கு எதிராக அமையும் என செயலலிதா நினைக்கிறார். இப் பாட நூற்களில் பெரியாரின் கருத்துக்கள் மறைமுகமாகப் புகுத்தப்பட்டுள்ளன என்கிற இராமகோபாலனின் அறிக்கை கருதத்தக்கது.
2. பல பண்பாடுகள், மொழிகள், வாழ்க்கைத் தரங்கள் உள்ள ஒரு நாட்டில் எப்படி ஒரே வகைப் பாடத் திட்டம் இருக்க முடியும் என்கிற கேள்வியை எழுப்புகிறார் சோ. என்ன நகைச்சுவை பாருங்கள். இந்தியா முழுக்கவும் இந்துத்துவம் என்கிற ஒரே பண்பாடே இருக்க முடியும் என்கிற அரசியலைப் பேசி வந்த சோ கும்பல் திடீரென பன்மைத்துவம் பற்றிக் கவலைப்படத் தொடங்கியுள்ளது.
முஸ்லிம்களுக்கும் கிறிஸ்தவர்களுக்கும் தனி சிவில் சட்டங்கள் கூடாது, பொது சிவில் சட்டம் கொண்டுவர வேண்டும் எனக் கூவி வந்த துக்ளக் கும்பல் இந்த பொதுக் கல்வி முறை நாட்டுக்குப் பொருந்தாது என்கிறார். இன்னொன்றைச் சொல்லியாக வேண்டும். (அ) பொதுக் கல்வி முறை என்பதன் பொருள் எல்லாப் பள்ளிகளையும் ஒரே அச்சுப் பதிவாக மாற்றுவதல்ல. அவை அவை அவ்வவற்றில் தனித்துவங்களுடன் செயல்படலாம்.
காலச் சூழலுக்குத் தகுந்தாற்போல் பாடத்திட்டங்களில் நெகிழ்ச்சி ஏற்படுத்திக் கொள்ளலாம். எடுத்துக்காட்டாக கைத் தொழில் என ஒரு பாடம் இருக்குமானால் பள்ளி உள்ள பகுதியில் உள்ள உற்பத்தி முறைக்குத் தக்க ஒரு கைத் தொழிலை அவர்கள் தேர்வு செய்து கொள்ளலாம். (ஆ) பொதுக் கல்வி முறையில் தனியார் பள்ளிகள், சிறுபான்மையர் பள்ளிகள் தமது தனித்துவங்களை இழக்க வேண்டிய தில்லை.
ஒரு முஸ்லிம் பள்ளி தனது மாணவர்களுக்குத் திருக்குர்ஆன் ஓதுவதைப் பயிற்றுவிப்பதற்கோ, தமது வழிபாட்டு முறைகளைச் சொல்லித் தருவதற்கோ தடையில்லை. அதேபோல விருப்பப்பட்ட மொழியில் சொல்லித் தருவதின் தடையில்லை. (இ) பொதுப் பள்ளி முறையில் எல்லாப் பள்ளிகளிலும் முழுமையாக அரசுக் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரப்படும் என்பதும் தவறு. அரசின் பொதுவான கல்விக் கொள்கைகள், தனித்துவம் என்கிற பெயரில் மற்றவர்களின் மீது வெறுப்பைப் பரப்புவது முதலியன மட்டும் தடை செய்யப்படும்.
3. முஸ்லிம் உள்ளிட்ட மத மொழி சிறுபான்மையினர் சமச்சீர்க் கல்வியை எதிர்க்கின்றனர். த.மு.மு.க. தலைவர் பேரா.ஜவாஹிருல்லாஹ் சட்டமன்றத்திலேயே இதை எதிர்த்துள்ளார். தமிழகத்தில் மத மொழிச் சிறுபான்மையினர் சுமார் 30 சதவீதத்திற்கு மேல் உள்ள நிலையில் இத்தகைய நிலை உருவாகியுள்ளது வருந்தத்தக்கது.
இதற்கான பின்னணியை நாம் காண வேண்டும். 2006ம் ஆண்டு தமிழ்க் கல்விச் சட்டத்தில் கீழ்க்கண்டவாறு பாடத்திட்டம் வகுக்கப்பட்டது. 1. தமிழ் (கட்டாயம்), 2. ஆங்கிலம் (கட்டா யம்), 3. பிற பாடங்கள் (கணக்கு, அறிவியல், சமூக அறிவியல் முதலியன) 4. தமிழைத் தாய்மொழியாகக் கொள்ளாதவர்கள் வேறு ஒரு மொழியை விருப்பப் பாடமாகக் கொள்ளலாம்.
இச்சட்டத்தைச் சிறுபான்மையினர் ஏற்கவில்லை. காரணம் தமிழைக் கட்டாயமாக்கியதல்ல. தமிழைக் கட்டாயமாகப் படிப்பதை அவர்கள் மறுக்கவில்லை. தமது மொழியையும் கட்டாயமாகப் படிக்க வாய்ப்பு வேண்டும் என்பதே அவர்களின் கோரிக்கை. விருப்பப் பாடம் என்றால் தேர்வுக்கு அது கட்டாயமில்லை. எனவே கொஞ்சம் கொஞ்சமாக இவர்கள் அதைக் கைவிடும் நிலைக்கு வழிவகுக்கும் என்பது அவர்களின் அச்சம்.
இந்நிலையில் முத்துக்குமரன் குழு (சமச்சீர்க் கல்வி அறிக்கை) ஒரு நல்ல தீர்ப்பைச் சொன்னது. மூன்று மொழிகள் கட்டாயமாகக் கற்க வேண்டும். (ஒவ்வொன்றுக்கும் 100 மதிப்பெண்கள்). தமிழும், ஆங்கிலமும் கட்டாயம்.
மூன்றாவது கட்டாய மொழிகள் ஒருவர் விருப்பப்படி தேர்வு செய்து கொள்ளலாம். அது உருதாகவோ, வடமொழியாகவோ அல்லது வேறு ஏதேனும் மொழியாகவோ இருக்கலாம். இது தவிர கணக்கு, அறிவியல், சமூகவியல் மொத்தம் ஆறுபாடங்கள். அருநூறு மதிப்பெண்கள். மூன்றாவது மொழியில் கட்டாயமாகத் தேர்வு பெற வேண்டும். அந்த மதிப்பெண்ணும் மொத்த மதிப்பெண்ணில் சேர்த்துக் கொள்ளப்படும்.
இதைச் சிறுபான்மை மக்கள் மனப்பூர்வமாக ஏற்றனர். பிற தென்னிந்திய மாநிலங்களிலும் இவ்வாறு உள்ளதாகவே அறிகிறோம்.
ஆனால் விஜயகுமார் குழு இதை ஏற்கவில்லை. திமுக அரசு இயற்றிய சமச்சீர்க் கல்விச் சட்டத்திலும் இது இடம் பெறவில்லை. சிறுபான்மை அமைப்பினர் மைய அரசின் சிறுபான்மை ஆணையத்தை அணுகினர்.
அதன் தலையீட்டின் பெயரில் மூன்றாவது மொழியை விருப்பமாகப் படிக்கலாம்; நான்கு மணிகள் வாரத்திற்கு ஒதுக்கப்படும்; பாட நூற்களும் உருவாக்கப்படும். ஆனால் தேர்வு பெறுவது கட்டாயமல்ல. மொத்த மதிப்பெண்களிலும் அது சேர்த்துக் கொள்ளப்பட மாட்டாது என தமிழக அரசு அறிவித்தது.
இது சிறுபான்மையினர் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியது. இதன் விளைவே இன்று அவர்கள் செயலலிதா கொண்டு வந்துள்ள சட்டத் திருத்தத்தை ஆதரிப்பது. எனினும் த.மு.மு.க. போன்ற அமைப்புகள் இப்படி முழுமையாகச் சமச்சீர்க் கல்வியை எதிர்க்கும் நிலை எடுக்காமல் முத்துக்குமரன் ஆணையைப் பரிந்துரை வடிவில் அதை நடைமுறைப்படுத்த வேண்டும் என்றாவது சொல்லியிருக்கலாம்.
சமச்சீர்க் கல்வி ஆதரவாளர்களும் இப்படியான ஒரு பிரச்சினை சிறுபான்மையினருக்கு உள்ளதை இதுவரை கணக்கில் கொள்ளாதிருந்தது தவறு. மும்மொழித் திட்டம் என்பது மறைமுகமாக இந்தியைத் திணிப்பதற்கு வழிவகுக்கலாம் என்கிற நியாயமான அச்சம் எல்லோருக்கும் இருப்பதை சிறுபான்மையினரும் புரிந்து கொள்ள வேண்டும்.
இதுகுறித்து பிற நாட்டு அலுவலர்களுடன் ஒப்பிட்டு ஒரு தீர்வை உருவாக்கியிருக்க வேண்டும். ஒருவேளை எல்லோரும் மூன்றாம் மொழிச் சுமையை ஏற்க வேண்டியதில்லை என்பது நமது கருத்தானால் மூன்றாம் கட்டாய மொழியில் உருது, வடமொழி, தெலுங்கு முதலான மொழிகளோடு மேல்நிலைத் தமிழ் தமிழும் ஆங்கிலமும் போதும் எனக் கருதுபவர்கள் இவற்றில் ஒன்றைத் தேர்வு செய்யலாம்.
இது உரையாடல்களின் மூலம் முடிவுக்கு வரவேண்டிய பிரச்சினை. ஏதோ ஒரு வகையில் புறக்கணிக்கப்படக் கூடிய உணர்வைச் சிறுபான்மையினர் மத்தியில் ஏற்படுத்தினால் பின்னர் அது தமிழ் மக்களின் ஒற்றுமைக்கும் கேடாய் முடியும் ஈழத்தில் நடந்ததைப் போல.
4. செயலலிதா ரொம்பத் தந்திரமாகவே காயை உருட்டுகிறார். இலங்கை மீதான பொருளாதாரத் தடை, ராஜபக்சேவை போர்க் குற்றவாளியாக அறிவித்தல், கச்சத் தீவை மீட்பது என்பது போன்ற தமிழ் மக்களின் விருப்பை உணர்ந்து சட்டமன்றத்தில் தீர்மானங்களை இவற்றில் பெரும் பாராட்டை இன்று அவர் பெற்றுள்ளார். நாமும் அதை வரவேற்கிறோம்.
அதே நேரத்தில் இந்தப் பாராட்டுக் கவசத்திற்குள் நின்று சமச்சீர்க் கல்வி முதலான பிரச்சினைகளில் அவர் தமிழ் மக்களுக்கு எதிரான நடவடிக்கைகளில் இறங்குவதை நாம் அனுமதித்துவிடக் கூடாது. போகப் போக சிறு இயக்கங்களின் மீதான அவரது அடக்குமுறைகள் அதிகமாகும் என்பதை நாம் மறந்துவிடக் கூடாது. ஈழப் பிரச்சினையில் அவரைப் பாராட்டும்போதே இதுபோன்றவற்றை நாம் கண்டிக்கத் தவறக் கூடாது.
நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமான் சமச்சீர்க் கல்வி நிறுத்தத்தை ஆதரித்திருப்பதும் வேறு பல ஈழ ஆதரவுத் தலைவர்கள் சமச்சீர்க் கல்விப் பிரச்சினையில் மௌனம் காப்பதும் வேதனைக்குரியது.