நாடு முழுவதும் மோசமானதொரு சூழல் நிலவுகிறது. பொதுத்துறை நிறுவனங்கள் இழுத்து மூடப்பட்டு பன்னாட்டு நிறுவனங்கள் ரத்தின கம்பளத்துடன் வரவேற்கப்படுகின்றன. இங்குள்ள சிறு சிறு தொழிலகங்கள் நடைபெறுவதற்கு அடிப்படை வசதிகளைக் கூட செய்யாத அரசு, வெளிநாட்டு தொழில் நிறுவனங்கள் தொழில் துவங்குவதற்குத் தேவைப்படும் வசதிகளைச் செய்து தருவதற்கு காத்திருப்பதாக நாடு நாடாகச் சென்று சொல்லிக் கொண்டிருக்கிறது. சிறப்புப் பொருளாதார மண்டலம் என்ற பெயரில், விவசாயிகள் வைத்திருக்கும் காணி நிலங்கள் கூட அபகரிக்கப்பட்டு தொழில் நிறுவனங்களின் ரியல் எஸ்டேட்டுகளாக மாற்றம் செய்யப்படுகின்றன. பன்னாட்டு, உள்நாட்டுத் தொழில் நிறுவனங்களுக்குச் சாதகமாக, தொழிலாளர் சட்டங்களிலிருந்து, விவசாயச் சட்டங்கள், பொருளாதார குற்றத் தடுப்புச் சட்டங்கள் வரை அனைத்துச் சட்டங்களும் எவ்வித விவாதமும் இன்றி ஒட்டுமொத்தமாக மாற்றப்பட்டுக் கொண்டிருக்கின்றன. இவ்வாறு நாடு முழுவதும் வளர்ச்சி என்ற பெயரில் கேள்வியும் இன்றி கேட்பாரும் இன்றி தாரை வார்க்கப்படுகின்றன.

நாடு முழுவதும் இத்தகையதொரு சூழல் நிலவும் பொழுது அனைத்து பெரிய கட்சிகளும், நேரடியாகவும், மறைமுகமாகவும் இதனை ஆதரித்து தங்களது பங்கைத் திறம்பட ஆற்றுகின்றன. பெரும்பான்மை மக்கள் தங்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட சூழ்நிலையிலும் அமைதியாக எவ்வித எதிர்ப்பும் காட்டாமல் வாழ்வதற்கு பழக்கப்படுத்தப்பட்டுள்ளனர். இத்தகையதொரு சூழலில், சிறு சிறு அளவில் ஆங்காங்கே எழும் மாற்றுக் குரலைக் கூட ஆளும் வர்க்கங்கள் ஒடுக்கத் தலைப்பட்டுள்ளனர். அரசின் கொள்கைகளுக்கு எதிராக அரங்கக் கூட்டங்கள், ஆர்ப்பாட்டங்கள், பொதுக்கூட்டங்கள் போன்றவற்றின் மூலம் மட்டுமே மாற்றுக் குரல்களை முன் வைப்பவர்கள் தங்கள் குரலைப் பதிவு செய்ய முடியும். ஆனால் தற்பொழுது அத்தகைய சிறு எதிர்ப்புக் குரலையும் அரசு ஒடுக்க முயல்கிறது.

பொதுவாக அரங்கக் கூட்டம் நடத்துவதற்கு அனுமதி தேவை இல்லை. ஆனால் தற்பொழுது எந்த ஒரு அரங்கக் கூட்டமும் காவல்துறை அனுமதியின்றி நடத்த முடிவது இல்லை. கூட்டத்தில் கலந்து கொள்பவர்களின் பெயர்ப் பட்டியல் அளித்த பின்பும், நிகழ்ச்சியினைப் படம் பிடிக்கவும் அனுமதி அளித்த பின்பே கூட்டத்திற்கு அனுமதி அளிப்பது குறித்து காவல்துறை பரிசீலனையே செய்கிறது. அரங்கக் கூட்டத்திற்கே இந்த நிலை என்றால், ஆர்ப்பாட்டங்கள், பொதுக் கூட்டம் பற்றி சொல்லவே வேண்டியது இல்லை. அனுமதி வாங்குவதே மிகப்பெரிய போராட்டமாகி விடுகிறது. இவ்வாறு பெரும்பாலான கூட்டங்கள் காவல் துறையின் அனுமதி மறுக்கப்பட்டோ, இல்லை உரிய பதில் கூறாமல் இழுத்தடிக்கப்பட்டுக் கொண்டிருக்கும் சூழ்நிலையும் நிலவுகிறது.

இதை எதிர்த்து பாதிக்கப்பட்டவர்கள் நீதிமன்றம் சென்றால் கேட்கவே வேண்டியது இல்லை. தீர்ப்பு எப்படி வருமோ தெரியாது. ஆனால் என்ன நோக்கத்திற்காக வழக்குப் போட்டோமோ அதற்குள் நமக்குத் தீர்ப்புக் கிடைக்காது. எடுத்துக்காட்டாக பெண்கள் அமைப்பு பெண்கள் தினத்தை முன்னிட்டு பாடகர்களை அழைத்து சென்னையில் அரங்க நிகழ்ச்சி மார்ச் 30ல் நடத்த திட்டமிட்டமிட்டிருந்தது. காவல் துறை அனுமதி மறுக்கவே, நீதிமன்றத்தில் அனுமதி வழங்க உத்தரவிடக் கோரி வழக்குத் தாக்கல் செய்யப்பட்டது. ஆனால் இன்று வரை வழக்கு முடிந்தபாடில்லை.

சங்கராச்சாரியின் ஜாமீன் மனு, இட ஒதுக்கீட்டிற்கெதிரான வழக்கு போன்றவற்றில் அதிக அக்கறை காட்டும் நீதிமன்றங்கள் இது போன்ற வழக்குகளில் மெத்தனத்துடன் இயங்குகின்றன. இது ஒரு சிறு எடுத்துக்காட்டு மட்டுமே. இவ்வாறு ஒட்டுமொத்த இந்தியாவும் தாரை வார்க்கப்படும்போது அதனை திட்டமிட்டுச் செய்யும் ஆளும் வர்க்கங்கள் அதற்கு எதிரான சிறு எதிர்ப்புக் குரலையும் சட்டம் ஒழுங்கு என்ற பெயரிலும், பொது அமைதி என்ற பெயரிலும் ஒலிக்கவிடாமல் செய்வதில் முழு முனைப்புடன் இருக்கின்றன. இது பெயரளவில் இருக்கும் ஜனநாயகமும் முற்றுப்பெறும் காலம் நெருங்கிவிட்டதாகவே உணர முடிகிறது.

 

 

 

Pin It