மனிதன் சிந்திக்கத் துவங்கிய ஆரம்ப நாட்களில் இயற்கையை விவரிக்க கடவுள்களை உருவாக்கினான். வெயிலுக்கு ஒரு கடவுள், மழைக்கு ஒரு கடவுள், இடி, மின்னலுக்கு ஒருவர், வியாதியை தோற்றுவிக்கும் ஒரு கடவுள் பின் அதனைக் குணப்படுத்த ஒரு கடவுள் - இப்படியாகத் தான் அவன் சிந்தனை இருந்தது.

இயற்பியலிலும், வேதியியலிலும், வானவியலிலும் ஆய்ந்தறிந்து, பல உண்மைகளை வெளிக்கொண்டும் இன்றைய மனிதனுக்கு அத்தகைய கடவுள்கள் தேவைப்படுவதில்லை. பிரபஞ்சத்தின் அனைத்து செயல்பாடுகளுக்கும், நிலையான சில பிரபஞ்ச விதிகள் உள்ளன. இங்கு விதி என்பது பொதுவாக பொருள் கொள்ளப்படும் ‘தலையெழுத்து’ அல்ல. மாறாக Formulas அல்லது Equations எனப்படும் பௌதீக கணித சமன்பாடுகள். நவீன இயற்பியல் விதிகளனைத்தும் இன்று கணித சமன்பாடுகளாக தொகுக்கப்பட்டுள்ளன. இதை யாரும் பரிசோதித்து பார்த்துக் கொள்ள முடியும். எல்லா விதிகளின் உள்நோக்கமும் பிரபஞ்சம் எப்படித் தோன்றியது. இத்தனை உயிரின் பாகுபாடு ஏன்? எப்படி என்று அறிந்து கொள்வதற்கேயாகும்.

கி.மு. 3ம் நூற்றாண்டில் பிறந்ததாகக் கருதப்படும், கேவசேஷிக தத்துவத்தை உருவாக்கிய ‘கணித முனிவர்’ இந்தியாவைச் சேர்ந்தவர். இவர் அப்போதே அணுவைப் பற்றி ஏராளமான ஆய்வுகளை செய்திருப்பதால் இவரை ‘அணு விழுங்கி’ என்றும் அழைக்கின்றனர்.

அணு பிரிக்க முடியாதது, அழிக்க முடியாதது என்று கூறும் கணுதர், அணு என்றால் என்ன என்பதை இவ்வாறு விளக்குகிறார். ஒரு துணி இருக்கிறது அதை துண்டு துண்டாக கிழித்துக் கொண்டே வந்தால் ஒரு கட்டத்தில் அது வெறும் நூலாகி விடும். அந்த நூலையும் துண்டு துண்டாக்கினால், அது மேலும் பகுக்க முடியாத நிலைக்கு வரும். இத்தகைய பகுக்க முடியாத அணுக்களால் ஆனதே அனைத்துப் பொருட்களும் என்பது அவரின் விளக்கம். கேவசேஷிக தத்துவம் இன்றைய விஞ்ஞான முன்னேற்றத்தின் அடிப்படை என்று ஆய்வாளர்கள் போற்றுகின்றனர்.

இந்திய தத்துவ ஞானிகளில் கணுதரை அடுத்து அணுக்கொள்கையை மிகத் தெளிவாகவும், விரிவாகவும் ஆராய்ந்தவர் சாக்கியத்தின் தந்தை எனப்படும் கபிலர். இவர்களைத் தொடர்ந்து பவுத்தர்களும், சமணர்களும் அணுவைக் குறித்து வெகுவாக ஆராய்ந்தனர். அவர்தம் ஆராய்ச்சி குறிப்புகளும் மிகுந்தவை.

இவற்றையெல்லாம் ஆழ்ந்து படிக்குங்கால் மிக நியாயமானதொரு பெருமித உணர்வு நிச்சயம் தோன்றும். இவ்வுலகில், விஞ்ஞான அறிவில் நாம் எவர்க்கும் சளைத்தவர்களல்ல என்ற மகிழ்ச்சியும் இப்பரந்துபட்ட ஞானத்தை எங்கே எப்படித் தொலைத்தோம் என்ற வருத்தமும் ஒருங்கே எழுவது தவிர்க்க முடியாதது.

இந்தியர்களைப் போலவே, கிரேக்கர்களும் அணு ஆராய்ச்சியில் பெருங் கவனம் கொண்டனர். டெமாசிரிடீஸ், எடிகூ§ஸ், அரிஸ்டாட்டில், பிளேட்டோ போன்ற பல பேரறிஞர்கள் அணு ஆராய்ச்சியில் தொடர்ந்து ஈடுபட்டனர். மெல்ல அரேபியர்களும் இதில் நுழைந்தனர்.

அரிஸ்டாட்டிலின் கருத்துக்கள் எதுவும் சுமார் 1500 வருடங்களுக்கு மறுத்து பேசப்படாமல், விமர்சிக்கப்படாமல் தேவலாயங்களால் கட்டி ஆளப்பட்டு வந்ததால், அணு ஆராய்ச்சிகள் விஞ்ஞானிகளின் கையிலிருந்து நழுவி மூட மந்திரவாதிகள் மற்றும் ரசவாதிகள் கையில் சிக்குண்டது.

ஏதுமறியா அப்பாவி மக்களை ஏமாற்றி, பித்தளையை தங்கமாக மாற்றித் தருவதாக கூறிக்கொண்ட பல போலிச் சித்தர்கள் நாட்டில் உலாவந்தனர். உண்மையில் இது சாத்தியமா? என்றால் சாத்தியம்தான். இரும்பை மட்டுமல்ல எந்த பொருளையும் தங்கமாக மாற்ற முடியும். ஆனால் அதற்காகும் செலவில், பல மடங்கு தங்கத்தை நேரடியாகவே கடையில் வாங்கிக் கொள்ள முடியும். அத்தனை பொருட்செலவு பிடிக்கும் சமாச்சாரமது. ஒரு விஞ்ஞான கண்டுபிடிப்பு, தொழில்நுட்பமாக மாறுவதற்கு மிகுந்த பொருளாதாரம் தேவை. அது அத்தனை ‘விலை மிகுந்த’ ஆராய்ச்சியாகும்.

எந்த ஒரு சடப்பொருளுக்கும் திட, திரவ, வாயு என மூன்று நிலைகள் உண்டு. இவைதவிர சமீப காலங்களில் ‘பிளாஸ்மா’ என்றொரு நிலையும் உள்ளதாக விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். நட்சத்திரங்களிலும், அவற்றுக்கு இடையேயும் உள்ள இடத்தில்தான் இந்த பிளாஸ்மா காணப்படுகிறது. அதிவேக இயக்கத்தாலும், மிக அதிக வெப்பத்தினாலும்தான் சடப்பொருள் இந்நான்காவது நிலையை அடைகிறது.

இவற்றைத்தவிர வெப்பம், ஒலி, ஒளி போன்றவை பொதுவாக சக்தி என்று அழைக்கப்படுகின்றன. நமது பூமியும், கிரகங்களும், சூரியனும் மற்ற பல நட்சத்திரங்களும் அடங்கியுள்ள எல்லையற்ற இப்பிரபஞ்சத்தில் அனைத்துப் பொருட்களும் மேலே குறிப்பிட்டுள்ள திட, திரவ, வாயு மற்றும் சக்தி ஆகிய 4 நிலைகளில் உள்ளன. இயற்கையில் காணக்கூடிய அனைத்தும் சடப் பொருட்களால் ஆனவை. இத்தகைய சடப் பொருட்கள் தனிமங்களால் ஆனவை. இத்தனிமங்கள் அனைத்தும் அணுக்களால் ஆனவை. தனிமம் என்றால், தனித்து வாழக்கூடியது.

அணு என்பது மிக மிக மிகச்சிறியது. ஒரு குண்டூசியின் தலையில் பல கோடி அணுக்கள் உள்ளது. வேறு எந்த வேலையும் செய்யாமல், குண்டூசித் தலையின் அணுக்களை மட்டும் ஒருவர் எண்ணுவதாக இருந்தால் ஒருவருக்கு 2 லட்சத்துக்கு 50 ஆயிரம் ஆண்டுகள் ஆகுமாம். குண்டூசி தர நான் தயார்? என்ன நீங்கள் தயாரா?

Pin It