நடிகர் கமலகாசன் நடித்த திரைப்பட நிகழ்ச்சியில் பேசியஅவர், அந்த நிகழ்வில் கலந்துகொண்ட கன்னட திரைப்படநடிகர் சிவராஜ்குமாருக்கும் தனக்குமுள்ள அன்புறவை வெளிப்படுத்துகின்ற தன்மையில் கன்னட மொழிக்கும் தமிழுக்குமான உறவை, தமிழிலிருந்து பிறந்தது கன்னடம் என 27.05.2025 அன்று குறிப்பிட்டார். அவர் அப்படிப் பேசியதில் கன்னட மொழியை குறைத்துக் கூறுவது அவரது நோக்கமல்ல.

கமலகாசனின் இப்பேச்சு கன்னட மொழியை அவமதிப்பதாகும் எனக் கருநாடகத்தில் உள்ள அரசியல் கட்சியினரும் கன்னட மொழிப் பற்றாளர்களும் மிகக் கடுமையான எதிர்வினை புரிந்தனர். இதன் காரணமாக கமலகாசன் நடித்து,05.06.2025 அன்று கருநாடகம் உள்ளிட்ட பல இடங்களிலும் வெளியிடப்பட இருந்த திரைப்படத்தை கன்னடத் திரைப்பட வணிகக் கழகத்தினர், கமலகாசன் கன்னட மொழி குறித்துப் பேசியதற்காக மன்னிப்புக் கேட்காவிட்டால் கருநாடகத்தில் படத்தைத் திரையிட அனுமதி மறுப்பதாக அறிக்கையிட்டனர். இதனால் கமலகாசன் கருநாடகத்தில் திரைப்படத்தை திரையிட காவல் துறையினர் பாதுகாப்பு வேண்டி கருநாடக உயர்நீதிமன்றத்தை நாடினார்.

கமலகாசனின் தன் கருத்தைப் பேசுவதற்கு உரிமை உண்டு. அவரது கருத்தை ஏற்காதவர்கள் அக்கருத்துத் தவறு என மறுக்கலாம்; மாற்றுக் கருத்தைக் கூறலாம். அதை விடுத்து மன்னிப்புக் கேட்க வேண்டும் என வலி யுறுத்துவதும் திரைப்படத்தைத் திரையிடுவதைத் தடுப்பதும் சரியன்று என்றல்லவா நீதிமன்றம் கூறியிருக்க வேண்டும்? கமலகாசன் வேண்டிக் கொண்டவாறு திரைப்படத்தை வெளியிட கருநாடகக் காவல்துறை பாதுகாப்பு அளித்திட வேண்டும் என உத்தரவிட்டிருக்க வேண்டும் அல்லவா? மாறாக வழக்கை விசாரணை செய்த உயர்நீதிமன்றம், கமலகாசனின் கோரிக்கையை ஏற்காமல் அவரை மன்னிப்புக் கேட்குமாறு வலியுறுத்தியது சட்டத்தின்படிதானா? முறைதானா?

நீதிமன்றத்தின் நடவடிக்கை, நீதியை நிர்வகிக்கின்ற நெறியா அல்லது கட்டப்பஞ்சாயத்தா? என்பதை நீதித்துறைதான் தெளிவுபடுத்திட வேண்டும். திரைப்படத்தில் கன்னட மக்கள் ஏற்க முடியாத காட்சிகளோ, உரையாடல்களோ இடம் பெற்றிருப்பதாகக் கூறப்படவில்லை. திரைப்படத்தை வெளியிட திரைப்படத் தணிக்கை வாரியம் சான்று வழங்கியுள்ளது. இந்த நிலையில் திரைப்படத்தைத் திரையிட அனுமதிக்க மறுப்பவர்களை நீதித்துறை ஏற்று ஆதரிப்பது அரசமைப்புச் சட்டம் கூறு 19(1)(a) வழங்கியுள்ள கருத்துரிமையை, பேச்சுரிமையை மறுப்பது என்பது சனநாயகத்திற்கும் சட்டத்திற்கும் எதிரானதாகாதா?

சமற்கிருதம், இந்தி தவிர மற்ற மக்களின் தாய்மொழிகளை ஒடுக்கி, விழுங்கி, அழித்துவிட பா.ச.க.-மோடி தலைமையிலான பார்ப்பன-பனியா பாசிச ஆட்சியாளர்கள் சூழ்ச்சித் திட்டங்கள் பல வகுத்துச் செயல்படுத்திக் கொண்டுள்ளனர்.இப்போது தமிழ்மொழியிலிருந்து கிளைத்தவை கன்னடம்,தெலுங்கு, மலையாளம், துளு ஆகிய தென்னக மொழிகள் என்பதான கருதுகோளும் தமிழே உலகின் முதன்மொழி, உலக மொழிகளுக்கெல்லாம் தாய் என்று தமிழ்நாட்டு தமிழறிஞர்களூடே நிலவி வருகின்ற கருதுகோளும் தமிழ்நாட்டிற்கு - தமிழர்களுக்கு அப்பால் அறிந்தேற்கப்படவில்லை. இத்தகு ஆராய்ச்சி முடிவுகள் தரவுகளுடன் பன்னாட்டு மொழியியல் அறிஞர்கள் அரங்குகளில் விவாதிக்கப்படுவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட வேண்டும்.

தென்னக மொழிகளான தமிழ், கன்னடம், தெலுங்கு, மலையாளம், துளு ஆகிய மொழிகள் ஒரு மூலமொழி ­திராவிட மொழி மூலத்தில் (Proto Dravidian) இருந்து கிளைத்தவை என்ற கருதுகோள் தமிழ்நாட்டிற்கு, தமிழர்களுக்கு அப்பாலும் அறியப்பட்டுள்ளதாகும். தென்னக தேசிய இனங்களுக்கு இடையில் பண்பாட்டு நிலையிலும் அரசியலிலும் இணக்கமான நல்லுறவைப் பேணவும் மேம்படவும் மொழிகளுக்கிடையே சமன்மை என்பதே உதவக் கூடியதாகும்.

தமிழ்மொழியை உயர்த்திப் பேசுவதால் மற்ற மொழிகள் தாழ்த்தப்படுவதாக ஓர் எண்ணம் வளருவது நன்மை பயக்காது. எனவே இவ்வாறு பேசப்படுவது தவிர்த்தல் நன்று. தமிழின் தொன்மை, மேன்மை, இலக்கிய வளமை போற்றப்படல் வேண்டும். இவற்றைத் தமிழ் இளந்தலை முறையினருக்கு உணர்த்துதல் வேண்டும்.

தத்தமது மொழியை உயர்ந்ததெனப் பெருமிதம் கொள்வது என்பது மற்ற மொழிகளைச் சிறுமைப்படுத்துவதாகக் கருதிட இடமளிக்கக் கூடாது என்பதில் கவனமாக இருத்தல் வேண்டும். தேவையற்ற பகைமையை வளர்த்தல், இந்தியத் துணைக்கண்டத்தில் உள்ள அனைத்து மொழிகளும் ஆரிய மொழியான சமற்கிருதத்திலிருந்து கிளைத்தவை என்பதை நிலைநாட்டிட அதிகாரத்தைப் பயன்படுத்திச் செயல்பட்டுக் கொண்டுள்ள பகையாற்றலுக்கு உதவுவதாகி விடும் என்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டும்.

தேசிய இனங்களுக்கிடையில் மோதலை உருவாக்கிட முயலும் வஞ்சகக் கூட்டத்தார் ஆதாயமடைய உதவுவதாகக் கூடியதை நாம் செய்யலாமா?

பாசிச-பார்ப்பனிய பா.ச.க., ஒன்றிய ஆட்சியதிகாரத்திற்கு வந்ததிலிருந்து ஒரே நாடு - ஒரே மொழி என சமற்கிருதம் ­இந்தி மொழித் திணிப்பு முயற்சிகள் அதிகரித்து வருவதன் விளைவாக தத்தமது மொழி பற்றிய விழிப்புணர்வு, பெருமிதம், அக்கறை வளர்ந்து வருகின்றது. இந்த மாற்றம் வரவேற்கத்தக்கதாகும். தேசிய இனங்களின் தன்னுரிமைக்கு வலுசேர்த்திட உதவுவதாகும். அந்தந்த தேசிய இனத்திற்கும் முதன்மை அடையாளம் மொழியே ஆகும். ஆதிக்க மொழியான சமற்கிருதம் - இந்தி தவிர்த்த மொழிகளுக்கிடையே சமத்துவ உணர்வை வளர்ப்போம். தேசிய இனங்களின் ஒடுக்குமுறையை எதிர்த்திட “ஒடுக்கப்பட்ட தேசிய இன மக்களே ஒன்று சேருங்கள்” என முழங்குவோம்!

பின்குறிப்பு : கமலகாசன் மன்னிப்புக் கேட்க வேண்டியதில்லை என்றும் அவருடைய திரைப்படம் திரையிட பாது காப்பு வழங்க வேண்டும் என்றும் 17.6.2025 அன்று உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.

- சா.குப்பன்