உலகம் முழுவதுமே சுற்றுச்சூழல் ஆர்வலர்களுக்கு பன்னாட்டு மற்றும் உள்நாட்டு தொழில் கழகங்களாலும், அரசு அமைப்புகளாலும் ஆபத்து ஏற்படுவது அன்றாட நிகழ்வாகி வருகிறது.

இதற்கு இந்தியாவும் விதிவிலக்கல்ல என்பதை, சத்தீஸ்கர் பழங்குடியினருக்கு ஆதரவாக செயல்பட்ட மருத்துவர் விநாயக் சென் அவர்களின் கைதும், இரண்டு ஆண்டுகளாக அவரை விடுவிக்காமல் சிறைத் தண்டனையை நீட்டிக்க அம்மாநில அரசு மேற்கொண்ட நடவடிக்கைகள் விளக்கும்.

பன்னாட்டு தொழில் கழகங்களின் பார்வை தமிழ்நாட்டின் மீதும் விழுந்துள்ளது. குறிப்பாக சேலம், திருவண்ணாமலை போன்ற பகுதிகளில் உள்ள கனிமவளம் நிறைந்த மலைப்பகுதிகள் ஜிண்டால் போன்ற நிறுவனங்களின் கண்ணையும், கவனத்தையும் ஈர்த்துள்ளன. எவ்வித முறைகேடுகளையும் செய்து இந்தியாவின் இயற்கை வளங்களை சூறையாட இதுபோன்ற நிறுவனங்கள் முயற்சித்து வருகின்றன.

சேலம் கஞ்சமலையை சூறையாட ஜிண்டால் நிறுவனம் முயற்சித்தபோது, ஸ்பீக் அவுட் சேலம் என்ற அமைப்பு மூலம் மக்களை திரட்டியும், சட்டரீதியான நடவடிக்கைகள் மூலமாகவும் ஜிண்டால் நிறுவனத்தின் முயற்சிகளை தடுத்தி நிறுத்தியவர் பியுஷ் (மனுஷ்) சேத்தியா என்ற இளைஞர். வட இந்தியாவைச் சேர்ந்த இவர் சேலத்திலேயே தங்கி இயற்கை சார்ந்த விவசாயம், தொழில்கள், சூழல் பாதுகாப்பு போன்றவற்றில் ஆர்வமுடன் செயல்பட்டு வருகிறார்.

அரசின் உதவியுடனும், தனியார் நிறுவனங்களின் ஆதரவுடனும் சேலம் மற்றும் அருகாமைப் பகுதியில் இயற்கைக்கு எதிராக செயல்பட்டு வருபவர்களை மக்களுக்கு அடையாளம் காட்டி போராடுவதை தமது வாழ்க்கை நெறியாகவே ஏற்றுக்கொண்டு இருப்பவர் பியுஷ் சேத்தியா.

இதன் காரணமாக சேலத்தில் சக்திமிக்க மனிதர்களின் எதிர்ப்புகளையும் சந்திக்க வேண்டி இருந்தது. எனினும் சற்றும் மனம் தளராமல் தனது மக்கள் நேயப்பணியை பியுஷ் சேத்தியா தொடர்ந்து செய்து வந்தார்.

சத்தீஸ்கர் மாநிலத்தில் உள்ள இயற்கை வளங்களை சூறையாட அரசுப்படைகளின் உதவியுடன் அப்பகுதி மண்ணின் மைந்தர்கள், சொந்த மண்ணிலேயே அகதியாக்கப்பட்ட அவலத்தை தமிழகத்து மக்களிடம் தொடர்ந்து எடுத்துச் செல்லும் பணியிலும் அவர் ஈடுபட்டு வந்தார்.

இதற்கான துண்டறிக்கையை கடந்த ஜனவரி 26ம் தேதி குடியரசு தினத்தன்று நடைபெற்ற அணிவகுப்பு நிகழ்ச்சிக்கு வந்திருந்த பொதுமக்களிடம் விநியோகிப்பதற்காக சென்ற அவரை, சேலம் மாநகர காவல்துறை அதிகாரிகள் கொடூரமாக தாக்கி கைது செய்தனர். அத்துடன் நாட்டிற்கெதிராக சதி செய்ததாகவும் அவர்மீது குற்றவியல் வழக்கு தொடரப்பட்டது. சேலம் மாவட்ட குற்றவியல் நீதிமன்றம் அவருக்கு பிணை வழங்க மறுத்ததைத் தொடர்ந்து, சுமார் 20 நாட்கள் சிறையிலிருந்த பின்னர் அவருக்கு சென்னை உயர் நீதிமன்றம் நிபந்தனையுடன் கூடிய பிணை வழங்கியது.

இந்திய அரசியல் சட்டம் வழங்கும் பேச்சுரிமைக்கு உட்பட்டு ஜனநாயக ரீதியில் மக்களிடம் பிரசாரம் செய்த பியுஷ் சேத்தியா மீது தேசத்துரோக வழக்கு தொடர்வது என்பது அப்பட்டமான மனித உரிமை மீறல். இவ்வளவுக்கும் ஜனவரி 26ஆம் தேதிதான் இந்திய அரசியல் சாசனம் நடைமுறைக்கு வந்தது. அன்றுதான் பியுஷ் கைது செய்யப்பட்டார் என்பதை நாம் பொருத்திப் பார்க்க தவறக்கூடாது.

இது பியுஷ் சேத்தியா என்ற தனிமனிதர் மீது ஏவப்படும் ஆயுதம் அல்ல. இந்திய மக்களுக்காகவும், இயற்கை மற்றும் சூழலை பாதுகாக்கவும் போராடும் அனைவருக்கும் அரசு விடுக்கும் அச்சுறுத்தல்.

இதை உணர்ந்து, இத்தகைய சமூக அநீதிகளுக்கு எதிராக குரல் கொடுப்பது சூழல் குறித்த ஆர்வம் கொண்ட அனைவரது கடமை.

இல்லாவிட்டால் நாஜி வதை முகாமில் கொல்லப்பட்ட தத்துவமேதை மார்ட்டின் நீய் முல்லரைப் போல, “அவர்கள் யூதர்களையும், தொழிற்சங்கவாதிகளையும், கம்யூனிஸ்டுகளையும் பிடிக்கவந்தபோது நான் பேசவில்லை. இறுதியில் அவர்கள் என்னைப் பிடிக்கவந்தபோது எனக்காக பேச யாருமே இல்லை” என்று புலம்ப வேண்டியிருக்கும்.

Pin It