சேலம் மாவட்டம், ஓமலூர் அருகே தீவட்டிப்பட்டியில் நடைபெற்றுள்ள ஜாதிய வன்முறையானது, தமிழ்ச்சமூகம் ஜாதி என்ற கொடுமையின் பிடியில் இருந்து மீண்டு வர இன்னும் எத்தனை காலம் ஆகுமோ என்ற கேள்வியுடன் கூடிய துயரத்தைத் தந்து சென்றுள்ளது.
அங்கு நடைபெற்ற கோயில் திருவிழாவில் பட்டியலின மக்கள் கலந்து கொள்வதற்குத் தடை செய்ததோடு, அவர்கள் தாக்கப்பட்டுமிருக்கின்றனர்.
கடவுளின் பெயரால் முட்டாள்தனங்களும், மூடநம்பிக்கைகளும் பெருகுவதோடு இதுபோல மனிதனை மனிதன் தாழ்த்துவதைக் கண்டித்துத்தானே ஜாதி ஒழிய வேண்டும், மதம் ஒழிய வேண்டும் என்று பிரச்சாரம் செய்தார் பெரியார். கடைசியில் மனிதனைக் காக்க, கடவுளும் வர மாட்டார்; ஏனென்றால் கடவுளுக்கே இங்கு பாதுகாப்பு இல்லை என்பதை விளக்கத்தானே “கருப்பண்ணசாமி யோசிக்கிறார்” என்ற அருமையான சிறுகதை ஒன்றை அறிஞர் அண்ணா எழுதினார்.
அரசியலமைப்புச் சட்டத்தின் மூலம் தீண்டாமையை மட்டும் ஒழித்தால் போதாது, ஜாதியும் ஒழிக்கப்பட வேண்டும் என்று முழக்கமிட்டு, அச்சட்டத்தைத் தீயிலிட்டுக் கொளுத்திய பெரியாரின் வார்த்தைகள், கோரிக்கைகள் எவ்வளவு முக்கியமானவை. அவை நிறைவேற்றப்பட வேண்டுமா இல்லையா?
இந்த நேரத்தில் குற்றவாளிகளை அடையாளம் கண்டு அவர்களைச் சட்டத்தின் முன்பாக நிறுத்துவதுதான் திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமையிலான அரசின் தலையாய கடமை. அதே நேரம், தமிழகத்தின் முற்போக்கு இயக்கங்கள், குறிப்பாக திராவிட இயக்கங்கள், பெரியார், அண்ணா, கலைஞர் ஆகியோரின் பகுத்தறிவுக் கருத்துகளை இன்னும் தீவிரமாக மக்களிடையே கொண்டு சேர்க்க முனைந்து பணியாற்ற வேண்டும். சமூகத்தில் மாற்றம் ஏற்படாமல் வெறும் சட்டங்களைக் கொண்டு சமூகத்தில் மாற்றத்தைக் கொண்டு வர இயலாது.
- கருஞ்சட்டைத் தமிழர்