தோழர் வே. ஆனைமுத்து அவர்கள் 17.8.1974 இல் தன் சொந்தப் பொறுப்பில் ‘சிந்தனையாளன்’ கிழமை இதழை திருச்சியிலிருந்து வெளியிட்டு வந்தார். சிந்தனையாளன் இதழை அச்சிட்டு வெளியிடுவதற்கென்றே பாவேந்தர் அச்சகத்தைத் தொடங்கினார். சிந்தனையாளன் அச்சிட்டு வெளியிடும் பொறுப்பை அவரும் அவருடைய மக்களுமே மேற்கொண்டனர். அவருடைய மூத்த மகள் தமிழ்ச்செல்வி அவர்கள் முழுப் பொறுப்பையும் ஏற்று திறம்பட நடத்தினார்.
தோழர் வே.ஆனைமுத்து அவர்கள் 1978 முதல் 1982 வரை இந்திய அரசுப் பணிகளில் பிற்படுத்தப்பட்ட வகுப்பு மக்களுக்கு இடஒதுக்கீடு வேண்டி ஒன்றிய அரசின் கவனத்தை ஈர்க்கவும், இக்கோரிக்கையில் உள்ள நியாயத்தைப் புரிய வைக்கவூம், வட மாநிலங்களில் உள்ள பிற்படுத்தப்பட்ட வகுப்புத் தலைவர்களையும் பிற்படுத்தப்பட்ட வகுப்பு மக்களையும் தூண்டிப் போராடச் செய்யவும் பல மாதங்கள் தில்லியிலும் வட மாநிலங்களிலும் செயல்பட்டுக் கொண்டிருந்தார். அவரின் செயல்பாடுகளை அவ்வப்போமுது எழுதி அஞ்சலில் அனுப்பி, சிந்தனையாளன் ஏட்டில் வெளியிடச் செய்தார். இவை வரலாற்று ஆவணமாக உள்ளது.
1982 இல் தோழர் ஆனைமுத்து அவர்களின் மூத்த மகள் தமிழ்ச்செல்விக்கு திருமணம் நடந்தது. அப்போது சிந்தனையாளன் இதழை சென்னையிலிருந்து வெளியிடுவது என முடிவு செய்யப்பட்டது. சிந்தனையாளன் இதழ் வெளியிடு வதற்காக “பெரியார் அச்சிடுவோர் வெளியிடுவோர் குழுமம்” தொடங்கப்பட்டது. 1983 செப்டம்பர் முதல் சிந்தனையாளன் கிழமை இதழை பெரியார் அச்சிடுவோர் வெளியிடுவோர் குழுமம் வெளியீடாக சென்னையிலிருந்து வெளியிடப்பட்டது. முதலில் கிழமை இதழாகவும் பின் மாதம் இருமுறை இதழாகவும் அதன்பின் மாத இதழாகவும் வெளியிடப்பட்டு வந்தது.
4.02.1984 வரை கிழமை ஏடாக வெளிவந்த சிந்தனையாளன் 15.02.1984 முதல் 1986 டிசம்பர் முடிய மாதம் இருமுறை இதழாக வெளியிடப்பட்டது.
பெரியார் அச்சிடுவோர் வெளியிடுவோர் குழுமத்திற்கு ஏற்பட்ட இழப்பின் காரணமாக சிந்தனையாளன் இதழை கட்சி ஏடாக, வெளியிட முடிவெடுக்கப்பட்டது. அதன்படி 1988 வரை பெரியார் சமஉரிமைக் கழக மாத ஏடாகவும் கட்சியின் பெயர் 13.03. 1988 முதல் மார்க்சியப் பெரியாரியப் பொதுவுடைமைக் கட்சி என மாற்றப்பட்டதனால் 1988 ஏப்ரல் முதல் மா.பெ.பொ.கட்சி ஏடாக வெளியிடப்பட்டு வந்தது.
சென்னை திருவல்லிக்கேணி, இலால்பேகம் தெரு எண்-5யிலிருந்து வெளியிடப்பட்டு, பின் இராயப்பேட்டை, பெருமாள் தெரு முகவரியிலிருந்தும் அதன்பின் சேப்பாக்கம், முருகப்பா தெரு முகவரியில் இருந்தும் வெளியிடப்பட்டு வந்தாலும் புதுதில்லியில் உள்ள இந்திய செய்தியேடுகள் பதிவாளர் அலுவலகத்தில் 1974-இல் உரிமம் பெற்ற முகவரி மாற்றப்படாமலே இருந்தது; தோழர் வே.ஆனைமுத்து அவர்கள் பெயரிலேயே இருந்தது. 2018 இல் சிந்தனையாளன் வெளியீட்டு உரிமையை தோழர் வே.ஆனைமுத்து அவர்கள் மா.பெ பொ.க.வுக்கு ஓர் உறுதிமொழி ஆவணமாக எழுதிக் கொடுத்து விட்டார். அதன் அடிப்படையில் புதுதில்லியில் உள்ள செய்தி ஏடுகள் பதிவாளருக்கு பெயர் மாற்றம் செய்திட விண்ணப்பிக்கப்பட்டது. மா.பெ.பொ.க. ஓர் பதிவு செய்யப்பட்ட கட்சி அன்று என பெயர் மாற்றிட மறுக்கப்பட்டது.
தோழர் வே.ஆனைமுத்து அவர்கள் 6.04.2021 அன்று மறைந்துவிட்டார். புதுதில்லியில் உள்ள செய்தி யேடுகள் பதிவாளர் அலுவலகத்தில் சிந்தனையாளன் இதழ் உரிமம் தோழர் வே.ஆனைமுத்து அவர்கள் பெயரிலேயே உள்ளது. ஆசிரியரும் வெளியீட்டாளருமான தோழர் வே.ஆனைமுத்து அவர்கள் மறைந்து விட்ட நிலையில் சிந்தனையாளன் இதழைத் தொடர்ந்து நடந்த வேண்டுமென்றால், அவரின் சட்ட மரபுரிமையர் இனி இதழை நடத்திட உள்ளவர் பெயருக்கு உரிமத்தை மாற்றித் தர ஒப்புதல் அளித்திட வேண்டும். அவ்வாறு மரபுரிமையர் அனைவரின் ஒப்புதல் பெறுவதில் சில இயலாமைகள் உள்ள படியால் “புதிய சிந்தனை யாளன்” என்ற பெயரில் மாத இதழை வெளியிட புதுதில்லி இந்தியச் செய்தி ஏடுகள் பதிவாளருக்கு விண்ணப்பிக்கப்பட்டுள்ளது.
முறையான உரிமம் பெறப்படும் வரை “புதிய சிந்தனையாளன்” தனிச்சுற்றுக்கு என்ற முறையில் வெளியிடுகிறோம். எங்களின் வழிகாட்டியாகத் திகழ்ந்த தோழர் வே.ஆனைமுத்து அவர்களின் கொள்கை வழிநின்று, மார்க்சியப் பெரியாரிப் பொதுவுடைக் கட்சிக்காக - கட்சி கேட்டுக் கொண்டதற்கு இணங்கி ஆசிரியரும் வெளியீட்டாளருமாக வாலாசா வல்லவன் ஆகிய நான் இதழை வெளியிட முன் வந்துள்ளேன்.
வாசகர்கள் தங்கள் மேலான ஆதரவை நல்கிட வேண்டுகிறோம். கட்டுரையாளர்கள் தொடர்ந்து தங்கள் கட்டுரைகளை அனுப்பி இதழினைப் புரக்க அன்புடன் வேண்டுகிறேன்.
- வாலாசா வல்லவன்